அதிகாலையில் கண்ட அந்தக் காட்சி விசித்திரமானதாக இருந்தது. இதற்கு முன்னர் அப்படியான ஒன்றை நான் பார்த்ததில்லை. வழக்கமாகக் காணும் வெண்நங்கை நேற்றையைப் போலவே கறுப்பு நிறதேகப்பியாச ஆடை அணிந்திருந்தாள். அவளுக்கு வயது 21, 22 இருக்கும். அவளுடன் காணப்படும் கபிலநிற அவுஸ்திரேலியன் செப்பார்ட் நாய் இன்றும் அவள் பக்கத்தில் நின்றது. சாப்பிடுவதற்கு முன்னர் அணில் இரண்டு பக்கமும் பார்ப்பதுபோல அவள் பார்த்தாள். அதிலே கள்ளம் இருந்தது. சிறிது பதற்றமாக நாயை இழுத்துக்கொண்டு கடந்து போனாள்.
அவளைத் தொடர்ந்து பெரியவர் ஒருவர் தன் வயதுக்கு மீறிய வேகத்தில் ஓடிச்சென்று மறித்தார். அவரும் வழக்கமாக அதிகாலையில் பூங்காவில் உலாத்துவதற்காக வருபவர்தான். அவர் கைகளை நீட்டி ஆவேசமாக அந்தப் பெண்ணிடம் என்னவோ சொன்னார். பெண் ஏதோ சமாதானம் சொல்வதை அவள் உடல் மொழியில் உணர முடிந்தது, ஆனால் அவர் அசையவில்லை. நாய் அவரைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது. அவள் நாயை சமாதானப்படுத்திய நேரம் நடைப்பயிற்சிக்கு வந்த மேலும் ஒருவர் சேர்ந்துகொண்டு தன்னுடைய அபிப்பிராயத்தை சொன்னார். பெண் அவதிப்பட்டாள். கையை நீட்டி ஏதோ சொன்னதும் விவகாரம் முடிவுக்கு வந்தது.
இவ்வளவையும் நான் என் வீட்டிலிருந்தபடியே யன்னல் வழியாகப் பார்த்தேன். பூங்கா என் வீட்டுக்கு சரி நேர் எதிரில் இருந்தது. காலையில் நடை போகாவிட்டாலும் நான் நடை போகிறவர்களைப் பார்ப்பேன். பிறகு விசாரித்ததில் அந்தப் பெரியவர் கோபப் பட்டதின் காரணம் புரிந்தது. நாய் கழிவுகளை அதன் சொந்தக்காரரே அள்ளி சுத்தமாக்க வேண்டும், பூங்காவில் அப்படியே விட்டுவிட்டு போவது குற்றமாகும். மண் அள்ளும் கரண்டியோ, பிளாஸ்டிக் பையோ பெண்ணிடம் இல்லை. நாய் கழிவை தான் திரும்பவும் வந்து அகற்றுவதாக பெரியவரிடம் வாக்குறுதி கொடுத்த பிறகுதான் அவர் அவளை போகவிட்டார்.
பூங்காவுக்கு முன்னால் உட்கார்ந்து அங்கே நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பது நல்ல அனுபவம். சரியாக காலை ஆறுமணிக்கு ஒரு கட்டையான குண்டு மனிதர் இரண்டு அல்சேஷன் நாய்களை இரண்டு கைகளிலும் பிடித்தபடி வேகமாக கடிகார முள் சுழரும் திசையில் பூங்காவை சுற்றி வருவார். அவர்தான் காலையில் இரண்டாவது காட்சி. அவருடைய வேகம் காணாது என்பதுபோல எப்பவும் நாய்கள் இழுத்தபடியே ஒடும். ஓட்டப் பந்தயத்தில் துப்பாக்கி சுட்டதும் புறப்படும் வேகம். நாய் கட்டிய சங்கிலி தொய்வதில்லை. அபூர்வமாக சில சமயம் ஒரு நாய் புற்களுக்கிடையில் எதையோ கண்டு கால்களைப் பரப்பி முகர்ந்துகொண்டு நகராமல் நிற்கும். அந்தக் குண்டு மனிதர் தேர் இழுப்பதுபோல தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து நாயை இழுத்துச் செல்வார். அவரிடம் பிளாஸ்டிக் பையும் கரண்டியும் கட்டாயம் இருக்கும். சரியாக 6.30 க்கு மறைந்துபோவார்.
குண்டு மனிதரை தொடர்ந்து இன்னும் பலர் நாயோடு அல்லது தனித்தனியாக வந்து நடை போவார்கள். பளிங்குபோல தோல் மினுங்கும் ஒரு வெள்ளை நாயை பிடித்துக்கொண்டு ஒரு முதிய பெண் காலை பத்து மணியளவில் வருவார். நாய் தலையை திருப்பி பார்க்கும் அழகு தனி. காலை எடுத்து வைத்து நடப்பது ஒரு குதிரையினுடையதைப் போல வசீகரமாக இருக்கும். அந்தப் பெண் அதை நல்லாகப் பராமரிக்கிறார். பார்க்கும்போது அவருடைய முழுநேர வேலையே அதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றும். பனிக்காலங்களில் அதற்கு மேலாடை அணிந்து, கால்களுக்கு தோல் சப்பாத்துகள் பூட்டி வெளியிலே புறப்படுவார். சிகரெட் பிடிப்பதுபோல மூக்குக்கு மேலே புகை எழும்ப நடக்கும் நாயைப் பார்த்தால் சிரிப்பு வரும். ஒரு விலங்குக்கும் மனிதனுக்கும் இடையிலான தூரம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கும்.
மாலையில் இன்னொரு கூட்டம் வரும். அதிலே நாலு மணிக்கு ஒரு பையன் லாப்ரடோர் நாய் ஒன்றை பிடித்து வருவான். இந்தப் பையனின் முடியிலும் பார்க்க அவன் உடம்பு கறுப்பு, நாயோ அதனிலும் கறுப்பு. அதன் முதுகில் நீளமாக ஒரு கோடு விழுந்திருக்கும். நாயுடைய அனுமதியில்லாமலே அதன் வால் ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. நாய் வேகமாக வால் ஆட்டும்; வால் இல்லாதபடியால் அது முளைத்த இடம் மட்டுமே அசைந்து கொடுக்கும். பையன் நாயைப் பிடித்துக்கொண்டு பூங்காவை கடிகார முள் திசைக்கு எதிர் திசையில் சுற்றுவான். நாயின் சங்கிலியை கழற்றிவிட்டு விளையாடுவான். அது இவனிடம் ஓடிவருவதும் இவன் ஒரு தடியை எறிய அதை துள்ளிக் குதித்துக்கொண்டு கவ்வி வருவதும் நடக்கும். ஆனால் பொறுப்பு மிகுந்தவன். நாய் கழிவை ஒரு பொக்கிசம்போல சேகரித்து தன்னுடன் எடுத்துச் செல்ல மறக்கமாட்டான். பையன் போன பிறகு காதலர்கள் வருவார்கள். பிறகு பூங்கா அவர்களுக்கு சொந்தமாகிவிடும். எல்லாம் ஒருவித ஒழுங்கோடும் கிரமத்தோடும் நடக்கும்.
காதலர்களில் தினமும் வருவது செம்பட்டை முடிப் பெண்ணும் அந்தப் பையனும்தான். அவர்களுக்கு 15, 16 வயதுதான் இருக்கும். அந்த வயதுக்கே உரிய சேட்டையோடும் பிரியத்தோடும் பழகுவார்கள். அவன் நாயை கவனிப்பதே இல்லை. அது சுருண்ட முடி கொண்ட கறுப்பு நாய். அது தன் பாட்டுக்கு வண்ணத்துப் பூச்சிகளை துரத்திப் பிடித்து விளையாடும். நாயை கொண்டு வரும் சாக்கில் அவன் அவளைப் பார்க்கத்தான் வருகிறான். என்னத்தையோ எட்டிப் பார்ப்பதுபோல சற்று முன்னுக்கு நீண்ட கழுத்தில் அவளுக்கு முகம். சிலவேளைகளில் உடம்பு நிறத்தில் இறுக்கமாக ஒட்டிப்பிடிக்கும் உடையணிந்து வருவாள். அசப்பில் பார்த்தால் அவள் ஒன்றுமே உடுக்காதது போலத் தோன்றும். எட்டி எட்டி அவனை லேசாக நுனிக்கையால் அடித்தபடி இருப்பாள். சமயங்களில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதுபோல சிறிது சிறிதாக ஒருவரை ஒருவர் ருசிப்பார்கள். அவன் நாயை தேடிப் போவதே இல்லை. அதுவாகவே திரும்பி வந்து அவனுக்கு முன்னால் இரண்டு முன்னங் கால்களையும் நிமிர்த்தி வைத்து உட்காரும். அவன் கையிலே பிளாஸ்டிக் பையையோ கரண்டியையோ காணமுடியாது.
மாலையில் இருளமுன்னர் ஒரு 50 வயது சீனாக்காரர் வருவார். இவர் என் பக்கத்து வீட்டுக்காரர்தான். மனிதர் உத்தியோகத்துக்கு போய்வந்த அதே உடுப்பில் நாயை கடனே என்று கூட்டி வருவார். யாரோ தூக்கத்தை பாதியில் கெடுத்துவிட்டதுபோல முகம் எரிச்சலில் இருக்கும். பஞ்சிப்பட்டுக்கொண்டு நாய் இழுத்த இடத்துக்கு எல்லாம் பின்னால் போவார். எப்பொழுது வீட்டுக்கு போவோம் என்ற சிந்தனையில் இருப்பதை முகம் காட்டிக் கொடுத்துவிடும். இவர் கையில் அள்ளும் கரண்டியோ, பிளாஸ்டிக் பையோ இருக்காது. இவர் வீட்டுக்கு போனதும் இவருடைய மனைவி அதே கதவு வழியாக வெளிக்கிட்டு வேகமாக ஓடுவார். அவர் கையிலே மண் கரண்டியும் பிளாஸ்டிக் பையும் இருக்கும். நாயின் கழிவை தேடிப்பிடித்து அள்ளிக்கொண்டு வீடுதிரும்புவார். கணவனும் மனைவியும் இப்படி விசித்திரமாக நாய் பராமரிப்பு வேலையை சரிசமமாக பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சில வேளைகளில் அலங்கார முடியுடன், உயர்ரக ஆடையணிந்த ஒரு பெண் தன் அழகான நாய்க் குட்டியை கொண்டு வருவாள். வந்ததும் உயரமான குதிவைத்த சப்பாத்தில் இருந்து இறங்குவாள். அவளுடைய உயரம் கால்வாசி குறைந்துவிடும். நாயின் சங்கிலியை அவிழ்த்து அதை ஓடவிடுவாள். அது சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பிவந்து அவள் மேல் தொங்கிப் பாயும். உயர்தரமான அவளுடைய ஆடை அழுக்காகிவிடும். அது ஏதோ உபகாரம் செய்துவிட்டதுபோல கலகலவென்று சிரிப்பாள். தண்ணீர் குடத்தை தூக்குவதற்கு குனிவதுபோல குனிந்து இரண்டு கைகளாலும் நாயை முகத்துக்கு நேராகத் தூக்கி கொஞ்சுவாள். விஞ்ஞானி ஐசாக் நியூட்டனின் ஞாபகம் வரும். பத்து வருடகால ஆராய்ச்சிக்குறிப்புகளை அவருடைய செல்ல நாய் டைமண்ட் மெழுகுவர்த்தியை தட்டி விழுத்தி எரித்துவிட்டது. நியூட்டன் நாயை அன்புடன் தூக்கி கொஞ்சினாராம். இந்தப் பெண்ணும் அப்படித்தான். அவள் போனதும் பூங்காவுக்கு அதுவரை கிடைத்த பிரகாசமும் போய்விடும்.
ஒருமுறை ஜேர்மன் நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். அவர் வளர்க்கும் செல்ல நாயில் மிக்க பிரியம் கொண்டவர். தன்னுடைய பையில் இருந்து அந்த நாயின் படத்தை எடுத்துக் காண்பித்தார். அது சவ்சவ் என்ற இனத்தைச் சேர்ந்தது. அதன் மூதாதையர்கள் நாலாயிரம் வருடத்திற்கு முன்பு மொங்கோலியாவில் இருந்து வந்தவை. நாக்கு நீலமாகவும் வாய் கறுப்பாகவும் இருக்கும். குட்டைக் கால்களும் நிறைய முடியுமாக படத்தில் அழகாக தெரிந்தது. உதிர்ந்த அதன் முடிகளை சேகரித்து தான் அணிவதற்கு ஒரு மேலங்கி செய்துவைத்திருப்பதாகக் கூறினார். அவர் ஆச்சரியமான ஒரு தகவல் சொன்னார். ஜேர்மனியில் நாய் வளர்ப்பதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும்போது அந்த நாயினுடைய டிஎன்ஏயையும் உரிம எண்ணுடன் கணினியில் பதிந்து வைப்பார்கள். வீதி, பூங்கா போன்ற பொது இடங்களில் நாய் கழிவு காணப்பட்டால் அதை டிஎன்ஏ மூலம் பரிசோதித்து சொந்தக்காரரை கண்டுபிடித்து அபராதம் விதித்துவிடுவார்களாம். அது ஓர் அருமையான ஏற்பாடாக எனக்கு பட்டது.
இப்படி ஒரு சட்டம் கனடாவிலும் வந்தால் நல்லாயிருக்கும். பெரியவரிடம் பிடிபட்ட அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்து என்னை சங்கடப்படுத்தியது. ஒரு தலைமையாசிரியர் முன்பு கள்ளம் செய்துபிடிபட்ட மாணவி போல அவர் நின்ற காட்சி பரிதாபகரமானது. பக்கத்து வீட்டு சீனாக்காரரின் மனைவியின் பிரச்சினையும் பெரிய பிரச்சினைதான். கனடாவுக்கு இந்தச் சட்டம் நன்மை பயக்கும் என்பதில் இரண்டு பேச்சு இல்லை. யோசித்துப் பார்த்தால் இப்படியான சட்டம் உண்மையில் சில நகரங்களில் வசிக்கும் மனிதருக்கும் தேவை. அவர்களுடைய டிஎன்ஏதான் பாதுகாக்கப்படவேண்டும். இது நடைமுறைக்கு வந்தால் நகரத்துக்கு பூங்கா தேவையில்லை. ஓர் இரவில் நகரமே பூங்காவாக மாறிவிடும்.