பெரிய இருதயம்

 

காதலர்கள் ஒருவருக்கொருவர் எழுதிய சில கடிதங்களைப் பார்த்த்கேன். முழுக்க முழுக்க வன்முறையாகத்தான் இருந்தது. யார் பெண், யார் ஆண் என்பதுகூட தெரியவில்லை. ஒருவருடைய பெயர் தக்காளி, மற்றவருடையது முயல்குட்டி. இருவருமே ஒருவரை ஒருவர் 'டா' போட்டு அழைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு தெரியுமே ஒழிய இன்னொருவர் அவர்கள் எழுதிய கடிதங்களிலிருந்து யார் காதலன் யார் காதலி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. 'ஏ, தக்காளி உன்னைக் கடித்து தின்னணும்போல இருக்குடா.' 'என்னைவிட்டுட்டு போவியாடா முயல்குட்டி, உன்னைக் கொல்லுவேன்.' இப்படியான வசனங்கள் கடிதங்களில் காணப்பட்டன. தமிழ் படம் ஒன்றில் காதல் உச்சத்தில் காதலி 'என்னைக் கொல்லேண்டா, என்னைக் கொல்லேண்டா' என்று கத்துவார்.

 

வன்முறை இல்லாத காதல் இல்லையென்றுதான் நினைக்கிறேன். வின்செண்ட் வான்கோ ஒரு விதவைப் பெண்ணைக் காதலித்தார். அவளோ அவர் காதலை திருப்பி தரவில்லை. அவளிடம் கெஞ்சியபடியே இருப்பார், அவள் உதாசீனமாக இருந்தாள். ஒருமுறை அவளுக்கு கடிதம் எழுதினார். 'நான் நெருப்பின்மீது  எவ்வளவு நேரம் என் கையை வைத்திருக்கக்கூடுமோ அவ்வளவு நேரத்துக்காவது உன் முகத்தை நீ எனக்கு காட்டினால் அதுவே போதும்.'   

குறுந்தொகையில் வரும் ஒரு பாடலில் அவ்வையார் இரவு காதல் நோயால் தூங்கமுடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணைப்பற்றி சொல்கிறார். ஊரோ நிம்மதியாக உறங்குகிறது, அவளோ நோய்  தாங்கமுடியாமல் 'மூட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்'   என்று பிதற்றுகிறாள். சேக்ஸ்பியருடைய ரோமியோ ஜூலியட்டில் வரும் ஜூலியட் சொல்வாள் :
 என்னுடைய ரோமியோவை
 என்னிடம் கொடுங்கள்
 நான் இறக்கும்போது அவன் உடலை
 சின்னச்சின்ன நடசந்திரங்களாக வெட்டுங்கள்.
காதலும் வன்முறையும் பிரிக்கமுடியாதபடி பழைய இலக்கியங்களில் கிடக்கும். பற்குறிகளையும் நகக்குறிகளையும் தடவிக்கொண்டு காதலர்கள் நாட்களை கழிப்பார்கள்.

ஒரு கதை.

இரண்டு வருடமாக அந்தப் பெண்ணை அவன் காதலித்தான். இரண்டு வருடத்துக்கு பிறகுதான் அவள் பெயரை அவனால் அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் அவன் காதலிப்பது அவளுக்கு தெரியாது. தினமும் பஸ்சிலிருந்து அவள் இறங்கியவுடன் அவளை வீடுமட்டும் கொண்டுவந்து விடுவான். எப்பொழுதும் பத்தடி பின்னாலாலேதான் நடப்பான். ஒருநாள் அவன் அப்படி தொடர்ந்தபோது அவள் நின்று திரும்பி தன் கால் செருப்பை கழற்றிக் காட்டினாள். அவனுக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. எல்லோரும் நினைத்தார்கள் அந்தச் சம்பவத்துக்கு பிறகு அவன் அவளை மறந்துவிடுவான் என்று. அப்படியொன்றும் நடக்கவில்லை. அவன் தூரத்தை அதிகரித்துக் கொண்டான். 20 அடி தூரத்தில் அவளை பின்தொடர்ந்தான்.

அவனுடைய நண்பர்கள் அவளை ஒருநாள் பார்த்தார்கள். அவள் மிகச் சாதாரணமான தோற்றத்துடன்  இருந்தாள். பார்த்ததும் மறந்துவிடக்கூடிய முகம். ஒரு பெண்கள் கூட்டத்தில் அவளைக் கலந்துவிட்டால் திரும்பவும் கண்டுபிடிக்க முடியாது. நண்பர்கள் தங்கள் அதிர்ச்சியை காட்டாமல்  'நீ எப்போது அவளைக் காதலிப்பதை நிறுத்துவாய்?' என்று கேட்டார்கள். அவன் சொன்ன பதில் பிரசித்தமானது. இன்றுவரை நினைவில் வைத்துக்கொள்ளத் தக்கது. 'அவள் உள்ளே வரும்வரைக்கும் என் இருதயத்தை பெருப்பித்துக்கொண்டே இருப்பேன்.' அவனுடைய பிடிவாதம் கடைசியில் வெற்றிபெற்றது. ஆறு வருடங்கள் கழித்து அவனுடைய இருதயம் போதுமான அளவு விசாலமானதும் அவள் உள்ளே வந்தாள். அவர்களுக்கு திருமணம் ஆனது.

சில மாதங்கள் சென்றபின்னர் ஒருநாள் நண்பர்கள் அவன் வீட்டுக்கு விருந்துக்கு வந்தனர். சாதாரண தோற்றத்தில் இருந்த பெண் இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு  மகாராணியின் தோரணையில் இருந்தாள். அசைந்து அசைந்து வித்தியாசமாக நடந்தாள். மூளை பாதி வேலைசெய்பவள்போல  தேவையில்லாத இடத்தில் சிரித்தாள். வேறு யாரோ வற்புறுத்திக்கட்டிவிட்டதுபோல பெரிய பெரிய பூக்கள்போட்ட ஒரு சேலையை அணிந்திருந்தாள். வீட்டில் எங்கே நின்று அவளிடம் பேசினாலும் அந்த பூக்களிடம் பேசுவதுபோலத்தான் இருந்தது. அந்த வீட்டில் அவனுடைய இடம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவன் இருதயத்தை பெரிதாக்கிக்கொண்டே இருந்தான்.

இருதயம் மிகப்பெரியதாக ஆகியதும் ஒருநாள் அவள் வெளியே வந்துவிட்டாள். மணவிலக்கின்போது அவள் அவளுடைய சாமான்களை எடுத்துக்கொண்டாள்,. அவன் அவனுடைய சாமான்களை எடுத்துக்கொண்டான். பொதுவான சாமான்களை இருவரும் சமமாகப் பிரித்துக்கொண்டார்கள். அப்படி பிரித்தபோது அவளுடைய செருப்பு அவனுக்கு எப்படியோ வந்துவிட்டது. அவள் கவனிக்கவில்லையோ அல்லது வேண்டுமென்றே அந்தத் தவறைச் செய்தாளோ தெரியாது. அவன் அதை தன்னுடன் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.

அந்தச் செருப்பு அவனுடைய காதலை நினைவூட்டலாம்; அல்லது வன்முறையையும் நினைவூட்டலாம். இருதயத்தை பெருப்பிப்பதை மட்டும் அவன் நிறுத்தவில்லை.

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta