பேன் பொறுக்கிகள்

நண்பர் அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். யாரோ துரத்துகிறார்கள் என்று நான் நினைத்தேன். தலைமுடி சீவாமல் பறந்தது. முகம் வியர்த்துக் கிடந்தது. வணக்கம் சொல்லவில்லை. கோட்டை கழற்றவில்லை. நீலமேனி நெடியோன்போல எனக்கு முன்னே உயரமாக நின்றார். பெட்டியிலே வந்த புது சேர்ட்டில் இரண்டு கைகளையும் பின்னுக்கு மடித்து ஊசி குத்தியிருப்பார்கள். அதுபோல கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நான் முதலில் வணக்கம் சொல்லவேண்டும் என எதிர்பார்த்து நின்றார். நான் உட்காருங்கள் என்று சொல்ல முன்னரே உட்கார்ந்து ‘நீங்கள் நம்ப மாட்டீர்கள்’ என்றார். ‘முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். சொல்லுங்கள்’ என்றேன். ‘தலைமையாசிரியரிடம் இருந்து மறுபடியும் கடிதம் வந்திருக்கிறது’ என்றார்.

நண்பர் நடுத்தர வயதுக்காரர். அமெரிக்காவின் வங்கி ஒன்றில் உயர் பதவி வகிக்கிறார். அவருடைய மூன்று மகள்களும் பிரபலமான தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்தார்கள். அவர் மாதாமாதம் கட்டும் வீட்டுக் கடனிலும் பார்க்க மூன்று மகள்களின் படிப்புச் செலவுக்கு அவர் கட்டும் பணம் அதிகம் என்று சொல்லியிருந்தார். அந்தப் பள்ளிக்கூடம் எப்ப பார்த்தாலும் அதற்கு இதற்கு என்று அவரிடம் பணம் கேட்டுக்கொண்டே இருந்தது.

’பள்ளிக்கூடக் கட்டணத்தை கூட்டிவிட்டார்களா?’ என்று கேட்டேன். ’இல்லை, அதனிலும் மோசம்’ என்றார். ’என்னுடைய மகள்களின் தலையில் பேன் பிடித்திருக்கிறது என்று சொல்லி தலைமையாசிரியர் முறைப்பாடு கொடுத்திருக்கிறார். என்னுடைய மகள்கள் தலையில் பேன் கிடையாது. யாரோ ஒரு பிள்ளை கொண்டுவந்து மற்றவர்களுக்கும் கொடுத்துவிடுகிறது’ என்றார். ‘அப்படி தலைமையாசிரியருக்கு சொல்ல வேண்டியதுதானே?’ அவர் சொல்கிறார் ’எல்லா பெற்றோர்களும் அதையேதான் சொல்கிறார்கள். நீங்கள் ஒத்துழைக்கவேண்டும். அது இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.’
‘என்ன செய்தீர்கள்?
’இனித்தான் அதிசயம். உங்கள் தலையில் பேன் பார்ப்பதற்கென்று ஓரு கம்பனி இருக்கிறது, தெரியுமா? அவர்கள் ஓர் இணையதளம்கூட வைத்திருக்கிறார்கள்.’
’இணையதளமா?’
‘மீதியையும் கேளுங்கள். ஒரு பிள்ளைக்கு வீட்டிலே வந்து பேன் பார்க்க கட்டணம் 200 டொலர். எனக்கு மூன்று பிள்ளைகள் என்றபடியால் 100 டொலர் கழிவு தந்தார்கள். ஒருநாள் முழுக்க பேன் பார்த்தார்கள். நான் அவர்களுக்கு 500 டொலர் கொடுத்தேன்.’
‘பள்ளிக்கூட தலைமையாசிரியரை பிழை சொல்ல முடியாது. பிள்ளைகளையும் பிழை சொல்ல முடியாது. பேனையும் பிழை சொல்ல முடியாது. பெற்றோருடைய கவனக்குறைவுதான் இதற்கு காரணம்’ என்றேன். நண்பருக்கு நான் சொன்னது அவ்வளவு பிடிக்கவில்லை.

இது நடந்தது மூன்று மாதத்துக்கு முன்னர். இரண்டு நாள் முன்பு மறுபடியும் நண்பர் வந்தார். அவர் கையில் தலைமையாசிரியர் எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. ’பாருங்கள், இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. நான் என்ன பேன் பண்ணை ஒன்று நடத்தி பேன் உற்பத்தி செய்கிறேனா? யாரோ பிள்ளை பேனை பள்ளிக்கு கொண்டு வருகிறது. நாங்கள்தான் அவஸ்தைப்பட வேண்டும்.’
’கடிதம் என்ன சொல்கிறது?’ என்று கேட்டேன்.
’அதேதான். ஆனால் இம்முறை ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது. யாராவது பிள்ளையின் தலையில் இனிமேல் பேன் காணப்படுமானால் அந்தப் பிள்ளையை இரண்டு வாரம் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவார்களாம். நம்பமுடிகிறதா?’
‘என்ன செய்தீர்கள்?’
‘மறுபடியும் பேன் பொறுக்கிகளைக் கூப்பிட்டேன். அவர்கள் உண்மையான பொறுக்கிகள்தான். இம்முறை 100 டொலர் கழிவு தர மறுத்துவிட்டார்கள். இப்பொழுதான் அவர்களுக்கு 600 டொலர் செக் எழுதி கொடுத்துவிட்டு வருகிறேன். போகிறபோக்கை பார்த்தால் பள்ளிக்கூட கட்டணத்தைவிட பேன் செலவு கூடிவிடும்போல தெரிகிறது.’
‘இது என்ன தேசிய ரகஸ்யமா? நீங்களே பேன் பார்க்கலாம். உங்கள் பிள்ளைகளும் ஒருவர் தலையை ஒருவர் சோதிக்கலாம்.’ நான் பாரதிராஜாவின் பழைய திரைப்படம் ஒன்றை நினைத்துக்கொண்டேன். அதிலே மூன்று பெண்கள் நிரையாக இருந்து ஒருவருக்கொருவர் பேன் பார்ப்பார்கள்.
‘செய்யலாம்தான், ஆனால் ஒரு பேனைத் தவறவிட்டாலும் அவர்கள் என் மகளை இரண்டு வாரகாலம் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்திவிடுவார்கள். நான் தினம் நடுங்கிக்கொண்டிருக்கிறேன். அப்படி நிறுத்தினால் நானும் அல்லவா இரண்டு வாரகாலம் விடுப்பு எடுக்க வேண்டி வரும்.’ 
’பேனை ஒழிக்க வேறு வழியே கிடையாதா?’
‘எப்படி ஒழிக்கிறது? ஒரு பேன் செத்தால் அதன் செத்த வீட்டுக்கு இருபது பேன் அல்லவோ வருகிறது.’
‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’
‘இந்த வருடம், இந்த தேதி, இந்த நேரத்தை உங்கள் டையரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நான் பேன் பொறுக்கிகளைத்தான் சந்தேகிக்கிறேன். அவர்கள் ஒரு பிள்ளைமூலம் பள்ளிக்கூடத்துக்கு பேனை ஏற்றுமதி செய்யலாம் அல்லவா? இது எவ்வளவு லாபகரமான தொழில்.’ நான் திகைத்துப் போய் நின்றேன்.
’இனி என்ன செய்யப் போகிறீர்கள்?’
நீலமேனி நெடியோன் வீட்டிலேயிருந்து கொண்டுவந்த நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டார்.
‘அடுத்த கடிதத்துக்காக காத்திருக்கப் போகிறேன்’என்றார்.

[இதை ஒருவருமே நம்ப மாட்டீர்கள் என்பது தெரியும். அதுதான் கீழே கொழுவியை கொடுத்திருக்கிறேன்.]

http://www.thenit-picker.net

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta