முகமாறாட்டம்

 

ஆங்கில சினிமா ஒன்று பார்ப்பதற்காக டிக்கட் வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஓர் இளம் பெண் என்னைப் பார்த்து சிரித்தார். வெள்ளைக்காரப் பெண். ஒரு மாமனாருக்கு மருமகள் கொடுக்கும் சிரிப்புபோல அந்தச் சிரிப்பில் மரியாதை இருந்தது. அல்லது ஒரு மேலதிகாரிக்கு அவர் கீழ் வேலை செய்யும் பெண் எதிர்பாராத விதமாக சந்தித்தபோது கொடுக்கும் சிரிப்பு என்றும்  சொல்லலாம். சில நொடிகளில் அவள் தவறு செய்தது அவளுக்கு தெரிந்துவிட்டது. அப்படியே நகர்ந்து சினிமா பார்க்க வந்த கூட்டத்தில் கலந்துவிட்டார். சிரிப்பை திரும்ப பெறவில்லை. தவறாகக் கிடைத்த சிரிப்பு என்னுடனேயே தங்கிவிட்டது.

வெள்ளைக்காரர்களுக்கு எங்கள் முகங்கள் ஞாபகம் இருப்பதில்லை. ரொறொன்ரோவில் நான் இதை பல தடவை அனுபவித்திருக்கிறேன். அவர்களுக்கு வெள்ளை அல்லாத எல்லா முகமும் ஒன்றுதான். இந்தக் குழப்பம் அவர்களுக்கு மாத்திரமில்லை. எனக்கும் பல தடவை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் நான் அதிலிருந்து மீண்டபாடில்லை. அப்ஸராவுடன் விளையாடுவதற்கு பிள்ளைகள் வருவார்கள். எல்லோருக்கும் ஆறு, ஏழு வயதுதானிருக்கும். பழுப்பு தலை மயிர், நீலக் கண்கள். மேல் தோலை உரித்துவிட்டதுபோல நிறம். அவர்கள் பெயரையும் முகத்தையும் பாடமாக்குவேன். அப்படியும் குழம்பிப்போய் சமயத்தில் பெயரை மாற்றிச் சொல்லிவிடுவேன். அப்ஸரா விழுந்து விழுந்து சிரிப்பாள்.

பாகிஸ்தானின் பெசாவார் நகரில் வேலை செய்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அது நடந்து இப்போது பல வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் இன்றுபோல் நினைவிருக்கிறது. நான் வேலை செய்த நிறுவனத்தின் மேலதிகாரி நியூயோர்க்கில் இருந்தார். அப்படிச் சொன்னால் அவருடைய அறிமுகம் சரியாக இராது. எங்கள் நிறுவனத்தில் அவருடைய இடம் கடவுளுக்கு கீழே இரண்டு படியும், எனக்கு மேலே மூன்று படியும் என சொல்லலாம். எங்களுக்குள் அவரை 'பெருந்தலைவர்' என்றே குறிப்பிட்டுக்கொள்வோம். 

நியூயோர்க்கில் இருந்து வரும் அதிகாரி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நிலத்திலேதான் நடப்பார். தோளில் கைபோட்டு பேசுவார். முதல் பெயர் சொல்லி அழைப்பார். பெருந்தலைவர் பெசாவாரில் வந்து மூன்று நாட்கள் தங்கினார். பல கூட்டங்கள், கலந்துரையாடல்கள் என்று பங்கு பற்றினார். பட்ஜெட் மேலாய்வு நீண்டநேரம் நடந்தது. நிறுவன நிர்வாக அறிக்கையிலும், நிதி அறிக்கையிலும் பல விமர்சனங்களை வைத்தார். நாட்கள் விரைந்து ஓடியது தெரியவில்லை. அத்தனை நேர நெருக்கடியிலும் அவருக்கு யாரையாவது பார்க்க தேவைப்பட்டால் ஆள் அனுப்பமாட்டார், அந்த ஆளைத்தேடி அவரே செல்வார்.

மாலிக் என்று ஒரு என்ஜினியர் எங்களுடன் வேலை செய்தார். அடுத்தடுத்து நாலு பஸ்ஸை தவறவிட்டதுபோல எப்பொழுது பார்த்தாலும் கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளிப்பார். அவருக்கு அதிர்ஷ்டச் சீட்டில் 50,000 டொலர் பரிசு விழுந்தது என்று யாராவது சொன்னாலும் முகத்தில் பெரிய மாற்றமிருக்காது. அப்படித்தான் நினைக்கிறேன். அவர் மேல் படிப்புக்கு வெளிநாடு போக விண்ணப்பித்திருந்தார். பட்ஜெட்டில் போதிய நிதியில்லாததால் பெருந்தலைவருக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தது. மாலிக் தினமும் காலையும் மாலையும் என் அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதா என்று வினவுவார். ஒரே பதிலைச் சொல்லுவேன். அவர் முகத்தில் மாற்றமிராது, திரும்பிச் செல்வார். விண்ணப்பம் வெற்றிபெற்றது என்று சொன்னால் அவருடைய முகம் எப்படிப் போகும்? அதை பார்ப்பதற்கு எனக்கும் ஆவல் இருந்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பம்  கிடைக்கவே இல்லை.

கணினிப் பகுதிக்கு அம்ஜட் என்பவர் பொறுப்பாக இருந்தார். அப்பொழுதுதான் கணினிப் பகுதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  புதிது புதிதாக கம்புயூட்டர்கள் வந்து பெட்டிகளில் இறங்கின. அம்ஜட் கம்புயூட்டர் விஞ்ஞானம் படித்தவர். என்னிலும் பார்க்க அவருக்கு 20 வயது குறைவாக இருக்கும். தக்காளிப்பழ நிறத்தில் உயரமாக இருப்பார். கணினித்துறையை பெருப்பிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாக ஓயாமல் உழைத்தார். ஒருநாள் பெருந்தலைவர் என்னைத் தேடி வந்த இடத்தில் அலுவலக நடை ஓடையில் அம்ஜட்டைச் சந்தித்திருக்கிறார். நான்தான் அவர் என நினைத்து மாலிக்கின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதைச் சொல்லிவிட்டு போய்விட்டார்.

அம்ஜட்டுக்கு பெருந்தலைவர் தன்னை பாதிவழியில் மறித்து இவ்வளவு சிநேகமாகப் பேசியதில் உலகம் சுழலத் தொடங்கிவிட்டது. அந்தச் சத்தத்தில் அவர் உச்சரிப்பும் புரியவில்லை; சொன்னதும் சரியாகக் கேட்கவில்லை. சும்மா நலம் விசாரிக்கிறார் என்றுதான் எண்ணினார். சினிமாவில் வடிவேலு ஆங்கிலம் பேசுவதுபோல எல்லாவற்றுக்கும் 'யேஸ் யேஸ்' என்று சொல்லி தன்னை விட்டால் போதும் என்று தப்பி ஓடிவிட்டார். பெருந்தலைவர் திகைத்துப்போய் அம்ஜட் நின்ற இடத்தை பார்த்தபடி சில நிமிடம் நின்றதாக பார்த்தவர்கள் பின்னால் சொன்னார்கள்.

பெருந்தலைவர் அம்ஜட்டிடம் என்ன சொன்னர், அப்போது என்ன நடந்தது போன்ற விவரங்கள் எனக்கு இரண்டு மாதம் கழித்துதான்  தெரியவந்தது. அம்ஜட்டுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். மாறாக சந்தோசம் தாங்கமுடியவில்லை. தன்னை பெரிய அதிகாரி என்று நினைத்து பெருந்தலைவர் பேசியதை நினைத்து நினைத்து மகிழ்ந்தார். உண்மையைச் சொன்னால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஏனென்றால் பெருந்தலைவர் என்னை இருபது வயது குறைத்து அல்லவா மதிப்பிட்டிருக்கிறார். மகிழ்ச்சி வரத்தானே செய்யும்.

இந்த விவகாரத்தில் நட்டப்பட்டது என்ஜினியர் மாலிக்தான். அவர் அப்போது வெறுத்துப்போய் இன்னொரு நிறுவனத்தில் ஏற்கனவே வேலைக்கு சேர்ந்துவிட்டார். ஆகவே அவருக்கு தவறு நடந்ததும் தான் அநியாயமாக நட்டப்பட்டதும் தெரியாது. அந்தப் புது நிறுவனத்திலாவது அவருடைய பெருந்தலைவர் முகமாறாட்டம் இல்லாதவராக இருந்திருப்பார் என நான் நம்புகிறேன்.
 

  

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta