ரொறொன்ரோவில் இப்படியான ஒரு போஸ்டரை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை. ஆகவே நின்று வாசித்தேன். அங்காடித்தெரு திரைப்படத்தின் போஸ்டர். இயக்கம் வசந்தபாலன் என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. அதே அளவு எழுத்தில் உரையாடல் ஜெயமோகன் என்றும் இருந்தது. வசனம் இன்னார் என்று சிலவேளைகளில் போடுவதுண்டு ஆனால் உரையாடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. மனைவியிடம் அங்காடித்தெரு சினிமாவை தியேட்டரில் போய் பார்க்கலாம் என்று சொன்னேன். அவர் நடிக நடிகைகளின் பெயர்களைக் கேட்டுவிட்டு வர மறுத்துவிட்டார். நான் 'வசந்தபாலன் இன்றைக்கு இயக்குனர் வரிசையில் முதல் வரிசையில் இருப்பவர். உச்சமான இலக்கியப் படைப்புகளை தருபவர் ஜெயமோகன். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்குவது அபூர்வமானதாக இருக்கும், நிச்சயம் பார்க்கவேண்டும்' என்று சொன்னேன். அப்படித்தான் இருவரும் படம் பார்க்கப்போனோம். பள்ளிக்கூட பிள்ளைகள் மணியடித்ததும் வெளியே ஓடுவதுபோல படம் முடிந்ததும் மனைவி முதல் ஆளாக வெளியேறிவிடுவார். ஆனால் அன்றைக்கு படம் முடிந்த பின்னரும் அவர் ஒரு நிமிடம் அசையாமல் உட்கார்ந்திருந்தார். படத்துக்கு கிடைத்த ஆகப்பெரிய விருது என்று நான் அதை நினைக்கிறேன்.
வழக்கமான தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் முழுப்படத்தையும் ஆக்கிரமித்து இருப்பார். கதாநாயகி, பெரும்பாலும் இரண்டு நாயகிகள், 33 வீதம் இடஒதுக்கீட்டில் வந்து போவார்கள். இதிலே அப்படியில்லை. படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை இருவருமே வருகிறார்கள். வெறுப்பில் தொடங்கிய அவர்கள் அறிமுகம் காதலாக மாறி ஒரு கட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் உயிரைக் கொடுப்பதற்கும் தயாரான தீவிரமான காதலாக மாறுகிறது. இறுதிக் காட்சியில் அவர்களுக்கு ஒரு பாட்டைக் கொடுத்து அது முடிவதற்கிடையில் அவர்கள் கம்புயூட்டர் நிபுணர் உருவாக்கிய பெரும் தொழில்சாலைக்கு உரிமையாளர்களாகி நிறைந்த செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள் என்று திரையில் காட்டவில்லை. அது பெரும் ஆறுதலை தந்தது. இதுதான் யதார்த்தம்; உண்மை வாழ்க்கையில் இப்படித்தான் நடக்கும்.
இதற்கு முதல்நாள் நான் Precious திரைப்படத்தை பார்த்திருந்தேன். இந்தப் படத்துக்கு 2010ம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள் இரண்டு கிடைத்திருந்தன. 300 றாத்தல் எடையுள்ள 19 வயது கறுப்பின பெண்தான் கதாநாயகி. வீட்டிலே அவளுடைய தாயும் தகப்பனும் அவளுக்கு இழைக்கும் கொடுமைகள் விவரிக்க முடியாதவை. தாயார் அவளை துன்புறுத்துவதை ஒரு கலையாகவே செய்கிறாள். தகப்பனின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய மகள் ஏற்கனவே ஓர் ஊனமுற்ற பிள்ளையை பெற்றிருந்தாள். இரண்டாவது தடவையும் தகப்பனால் கர்ப்பமானபோது பள்ளிக்கூடத்திலிருந்து அவளை துரத்துகிறார்கள். ஆனால் தலைமையாசிரியர் மாற்றுக்கல்வி திட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறார். வறுமை, வன்முறை, இகழ்ச்சி எல்லாத்தையும் எதிர்கொண்டு தன் சொந்த முயற்சியில் முன்னேறிய அந்தப் பெண் தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்வதுதான் கதை. இதிலே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது வில்லன்களாக வருபவர்கள் படத்தின் இறுதியில் தண்டிக்கப்படாமல் போவதுதான்.
அங்காடித்தெரு படத்தை பார்த்தபோது அந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்துகொண்டிருக்கிறது. உயிர் வாழ அந்த திறமை போதுமானது. எல்லோரும் யானையாக இருக்கமுடியாது. ஒரு யானை இருந்தால் ஒரு கோடி எறும்புகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு படத்தின் முடிவில் வழக்கமாக வில்லன் பிடிபடுவான்; கதாநாயகன் தன் வெற்றியை கொண்டாடுவான். இங்கே அப்படியெல்லாம் இல்லை. வில்லன் வில்லனாகவே தொடர்கிறான். நாயகனும் நாயகியும் உலகப் பெரும் இயக்கத்தில் ஒரு துளிதான். அவர்கள் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். வில்லனைத் தண்டிக்க முயற்சிக்கவில்லை. உலகத்தை திருப்பிபோடவில்லை. அதுவே நிஜம். அதைத்தான் திரையில் காட்டியிருக்கிறார்கள்.
செந்தில் முருகன் ஸ்டோர் அங்காடித்தெருவில் உள்ள மிகப் பெரிய நிறுவனம். ஆயிரக்கணக்கானவர்கள் ஊழியம் செய்கிறார்கள். கதாநாயகனும் கதாநாயகியும் இங்கேதான் வேலை பார்க்கிறார்கள். நிறுவனம் தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுகிறது. தினமும் 12 மணிநேர வேலை. சிறைச்சாலையை விட பயங்கரமான வாழ்க்கை. ஆனாலும் வேலையை விட்டு நீக்கிவிடக்கூடும் என்ற பயத்தில் நடுங்கி நடுங்கி வாழ்கிறார்கள். கண்டியில் தேயிலைத் தொழிலாளியின் வாழ்க்கையை உருக்கமாக எழுதினார் புதுமைப்பித்தன். பீஜித்தீவின் அடிமைகளுக்காக கண்ணீர் விட்டார் பாரதியார். ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டின் தலைநகரத்தில் பெரிய நிறுவனங்கள் தொழிலாளிகளை அடிமைகளிலும் கேவலமாக நடத்துவதை திரையில் காணும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
ஒரு பெரிய மரம் இருந்தால் அதிலே படரும் பல கொடிகளும் இருக்கும். படம் நிறைய சின்னச்சின்ன கதைகள். ஒரு நிமிடம் மட்டுமே வந்துபோகும் அந்தக் காட்சிகள் மனதிலே அப்படியே நிற்கின்றன:
– குழந்தை ஊனமாகப் பிறந்ததை எண்ணி மகிழும் தாய்.
– வேலைபோய்விடும் என்று காதலை மறுத்து காலில் விழுந்து கதறும் காதலன்.
– பெரிய பிள்ளையான வேலைக்காரச் சிறுமியை வீட்டுக்காரர்கள் நாய்கூண்டில் அடைத்து வைப்பது.
– பொதுக் கழிப்பறையை கட்டணக் கழிப்பறையாக மாற்றும் பிழைக்கத் தெரிந்தவன்.
இப்படி படம் முழுக்க நிறைய வருகிறது.
'அவன் உன்னை என்ன செய்தான்?'
'கட்டயமாய் சொல்லணுமோ?'
'ம்'
'என் மார்பைக் கசக்கினான். போதுமா?'
படத்தின் திருப்பமே இந்த உரையாடல்தான். விளையாட்டாக ஆரம்பித்த அவர்கள் சண்டை தீவிரமான காதலாக மாறும் இடம் இதுதான். நெஞ்சை உலுக்கிவிடும் காட்சி.
ஒருகாலத்தில் அடுக்கு வசனத்துக்கு கைதட்டல் கிடைத்தது. அந்தக் காலம் போய்விட்டது. உரையாடல்கள் நறுக்கென்று கூராக விழுகின்றன. உண்மை பேசுகின்றன. அதிகப்படியான ஒரு வசனம்கூட கிடையாது. ஒவ்வொரு வசனமும் கதையை மேலுக்கு நகர்த்துகிறது. காட்சிக்கு வசனமும் வசனத்துக்கு காட்சியுமாக இணைந்துபோன திரைப்படம் என்பது தமிழில் மிக அபூர்வமானது. ஒரு நடிகருக்காகவோ நடிகைக்காகவோ இயக்குனருக்காகவோ ஒரு படம் ஓடலாம். ஆனால் ஓர் இலக்கியக்காரரின் பங்களிப்புக்காக படம் ஓடினால் அது எவ்வளவு பெருமை. ரசிகர்கள் சினிமாவை உண்டாக்குகிறார்கள் என்பதை பொய்ப்பித்து கலாபூர்வமான ஒரு படைப்பு நல்ல ரசிகர்களை உருவாக்குகிறது என்ற உண்மை உறுதியாக்கப்படுகிறது. படத்திலே எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதல் கம்பிகளில் தொங்கி பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள் இல்லாதது. எது எது யதார்த்தமாக நடக்குமோ அதுவே காட்டப்படுகிறது.
படம் முடியும்போது அங்காடித்தெருவில் செந்தில் முருகன் ஸ்டோர் பிரம்மாண்டமான காட்டு யானைபோல நிற்கிறது. அதன் இருப்பை யாருமே ஒன்றும் செய்யமுடியாது. எறும்புகள்போல நடைபாதை வியாபாரிகள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். நாயகனும் நாயகியும் சாமான்களை விற்பதற்கு அடுக்கிவைத்து ஒரு புது நாளை தொடங்குகிறார்கள். உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது. யானையோ எறும்போ அதற்கு விற்கத் தெரியவேண்டும். தெரிந்தால் வாழ்ந்துவிடலாம்.