விருந்தாளி

ஏப்ரல் மாதம் வந்ததும் அதிகாலையிலேயே ரொபினின் சத்தம் கேட்கத் தொடங்கும். வசந்தம் வரும்போது பறவையும் வந்துவிடும். பனிக்காலங்களில் ஒரேயடியாக மறைந்துபோன பறவை அதன் இருப்பை அறிவிப்பதற்கு எழுப்பும் இனிய ஒலி காலை வேளைகளை நிரப்பும். அதன் பாடல் ஏற்ற இறக்கத்துடன் அதன் மொழியில் அதன் ஸ்வரத்தில் இருக்கும்.

 

எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு வருடமும் ரொபின் வரும். கடந்த மூன்று வருடங்களாக அவை வருவது தவறுவதில்லை. மஞ்சள் சொண்டு, செம்மஞ்சள் மார்பு, கறுப்பு தலை, இறகும் வாலும் சாம்பல் நிறத்தில் இருக்கும் பெண் குருவி. அதன் நிறம் தண்ணீல் கலந்ததுபோல சற்று மங்கலாக இருக்கும். ஆண் குருவியின் நிறம் இன்னும் கொஞ்சம் அதிகம் பளிச்செனத் தெரியும்.  எங்கள் வாசல் கதவிலிருந்து மூன்றடிக்கும் குறைவான தூரத்தில் தூணுக்கும் சுவருக்கும் கூரைக்கும் இடைப்பட்ட முக்கோணத்தில் உள்ள கதகதப்பான இடம் அதற்கு சொந்தமானது. போன வருடம் கட்டிய கூடு முற்றிலும் சிதைந்துபோய் கிடந்தது. அதை இழுத்து அப்புறப்படுத்திவிட்டு புதுக்கூடு கட்டத் தொடங்கின. பெண்குருவி தும்பு, களிமண், புல், குச்சி என்று ஒவ்வொன்றாக கொண்டுவந்து பொறுமையாக கட்டியது. ஆண் குருவி அவ்வப்போது ஒரு குச்சியை தூக்கிக்கொண்டுவந்து கொடுக்கும், ஆனால் பெண்குருவிதான் கூட்டை முழு அக்கறையோடும் பொறுப்போடும் கட்டியது.

நான் வாசல் கதவை பூட்டிவிட்டு முன்னுக்கு ஓர் அறிவித்தலை தொங்கவிட்டேன். 'இந்த வாசல் மூடப்பட்டுவிட்டது. விருந்தாளிகள் பின்பக்க வாசலை பயன்படுத்தவும்.' கதவிலே ஒரு கண்ணாடி இருந்தது. அதன் வழியாக குருவியின் நடமாட்டத்தை தினமும் கண்காணிக்கக்கூடியதாக இருந்தது. போன வருடம் போல இந்த வருடமும் குருவி நாலு முட்டைகளை இட்டது. பச்சை நிறத்தில் இருந்த முட்டைகளின்மேல் உட்கார்ந்து  குருவி பகலும் இரவும்  அடைகாத்தது. காலையிலும் மாலையிலும் அது போய் இரை தேடும். மீதி நேரத்தில் நான் எப்பொழுது எட்டிப் பார்த்தாலும் யோசனையான  முகத்துடன் முட்டைகளின்மேல் அசையாமல் உட்கார்ந்திருக்கும்.

ஒருநாள் காலை நான் பார்த்தபோது வழக்கம்போல கூட்டுக்கு நடுவில் உட்காராமல் கூட்டு விளிம்பில் உடகார்ந்திருந்தது. இத்தனை காலம் உழைத்தது வீணாகிவிட்டதே. முட்டை பொரிக்கவில்லை போலிருக்கிறது, விரைவில் போய்விடும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள் அப்படியே உட்கார்ந்திருந்தது. நாலாவது நாள் மர்மம் துலங்கியது. முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளியே வந்துவிட்டன அதுதான் குஞ்சுகளின்மேல் இருக்காமல் கூட்டின் விளிம்பில் அமர்ந்திருந்தது. குஞ்சுகள் எப்பவும் சொண்டை விரித்தபடி தலையை வெளியே நீட்டிக்கொண்டு காத்திருந்தன. தாய்க்குருவி வெளியே போய் இரைதேடி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிட்டது. தாய் குருவி நிலத்திலே நடப்பது பார்க்க வேடிக்கையாக இருந்தது. இரண்டு மூன்று அடிவைத்து நடந்து நிமிர்ந்து  நிற்கும். மேலும் சில அடி நடக்கும்போது விழும். குடித்துவிட்டு நடப்பது போல பல தடவை நின்று தலையை சாய்த்து பார்க்கும். நீண்ட புழுவை பிடித்து அப்படியே தலையை ஆட்டி முழுங்கிவிடும். ஒரு குருவிக்கு ஒரு நாளைக்கு 14 அடி புழு தேவை. நாள் முழுக்க திரும்ப திரும்ப புழுக்களை பிடித்து வந்து ஊட்டும். சிலசமயம் ஆண் குருவி வரும். ஒருமுறை ஆண்பறவை குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும்போது அங்கேயிருந்த தாய் பறவைக்கும் கொடுத்தது.

வட அமெரிக்காவில் எவ்வளவு சனத்தொகை உண்டோ அதே அளவுக்கு ரொபின்களும் அங்கே இருப்பதாக புள்ளிவிவரம் சொன்னது. அவை அழிந்துவிடும் அபாயத்தில் இல்லை. முன்புபோல் ரொபின்களை இப்போது யாரும் வேட்டையாடுவதில்லை. பருந்து, வல்லூறு, பூனை போன்ற எதிரிகளால் ஆபத்தும் குறைவு. சரியாக 14 நாள் கழிந்ததும் குஞ்சுகள் செட்டை வலுவாகி பறக்கத் தொடங்கின,. இவற்றினுடைய அந்நியோன்யமான குடும்ப வாழ்க்கை இந்த 14 நாட்கள்தான். அதன் பின்னர் குஞ்சுகள் பறந்துபோய் தனி வாழ்க்கை ஆரம்பித்துவிடும். இவ்வளவு அன்பாகவும், கரிசனையாகவும், ஆதரவாகவும் கூடு கட்டி, முட்டையிட்டு, பொரித்து, உணவூட்டி காப்பாற்றி குஞ்சுகள் வளர்ந்ததும் அவை யாரோ இவை யாரோ என்றாகிவிடும். குருவிகள் பறந்ததும் என் வீட்டு வாசல் கதவு திறக்கப்பட்டு அறிவிப்பும் அகற்றப்பட்டது.

ஆகஸ்டு மாதம் முடியும் தறுவாயில் ரொபின்கள் நீண்ட பயணத்துக்கு தம்மை தயார் செய்யும். 2200 மைல் பயணம் செய்து மெக்ஸிக்கோவுக்கு போகும். மெக்ஸிக்கோ எல்லைக்குள் நுழைந்ததும்  அவை பெயரை பெற்றிரோஜோ என மாற்றிக்கொள்ளும். அவற்றின் சங்கீதமும், மொழியும், ஸ்வரமும்  மட்டும் மாறுவதில்லை.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பெற்றிரோஜோ மறுபடியும் 2200 மைல் பயணம்செய்து என் வீட்டுக்கு வரும். அதே தூண், அதே சுவர், அதே கூரை, அதே முக்கோணத்தை கண்டுபிடித்து இன்னொரு புதுக்கூடு கட்டும். இப்பொழுது அதன் பெயர் பழையபடி ரொபின் ஆகிவிடும். முன்பு பாடிய அதே பாடலை அதே மொழியில் அதே ஸ்வரங்களுடன் பாடும். நான் வாசல் கதவை பூட்டுவேன். 'இந்த வாசல் மூடப்பட்டுவிட்டது. விருந்தாளிகள் பின்பக்க வாசலை பயன்படுத்தவும்.' என்ற அறிவித்தலை தொங்கவிடுவேன்.

ரொபினிலும் பார்க்க முக்கியமான விருந்தாளி யார் எனக்கு வரப்போகிறார்கள்.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta