ஒரு காலத்தில் தசாவதானி, அட்டாவதானி என்றெல்லாம் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கக்கூடும், நான் சந்தித்ததில்லை. அட்டாவதானி ஒரே நேரத்தில் எட்டு விசயங்களில் கவனம் செலுத்துவார். தசாவதானியால் ஒரே நேரத்தில் பத்து விசயங்களில் கவனம் செலுத்தமுடியும். அவர்களுக்கு பரீட்சைகூட இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் சொல்லும் பொருளில் அவர் ஒரு வெண்பா இயற்றுவார். அதே சமயம் நான்கு தானத்தை நான்கு தானத்தால் மனதினால் பெருக்கி விடையை சொல்வார். அவர் முதுகிலே ஒருவர் பூக்களை எறிவார். எத்தனை பூக்கள் என்று அவர் கணக்கு வைக்கவேண்டும். கையிலே ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டே இருப்பார். என்ன படித்தார் என்பதை அவர் பின்னர் சொல்லவேண்டும். கூட்டத்தில் இருந்து ஒருவர் சைகை காட்டுவார், இன்னொருவர் வாத்தியத்தில் ஒரு ராகத்தை வாசிப்பார், அவை என்னவென்றெல்லாம் சொன்னால்தான் இவர் தசாவதானி. இப்படி பல விசயத்தை ஒரே நேரத்தில் செய்யும் திறமை பெற்றவர்கள் அரிது.
இப்பொழுது தசாவதானம் என்று ஒருவரும் சொல்வதில்லை, அதற்கு multitasking என்று பெயர். இதற்கான பயிற்சிகளும், விளையாட்டுகளும் வந்துவிட்டன. வளரும் நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் பன்செயல்திறன் கொண்டவர்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது. நேர்முகத்தேர்வில் அவர்களுக்கு multitasking பயிற்சி உண்டா என்றுகூட கேட்கிறார்கள். அது இல்லாவிட்டால் வேலை கிடைப்பது கடினம்.
பெண்கள் இதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். இயல்பாகவே அவர்களுக்கு அந்த திறமை உண்டு. நேற்று ஒரு பெண்ணை சுப்பர்மார்க்கட்டில் பார்த்தேன். ஓடிப்பிடித்து விளையாடும் அவருடைய இரண்டு பிள்ளைகளை அதட்டியபடியே தள்ளு வண்டிலில் ஒவ்வொரு சாமானாக எடுத்துப்போட்டு அதை நிரப்பிக்கொண்டிருந்தார். செல்பேசியில் பேச்சு நடந்தது. அங்கே வேலை செய்யும் பணியாளரிடம் ஏன் இன்னும் 'குவினோவா' பக்கட்டுகள் வரவில்லை என விசாரித்தார். கடன் அட்டையை எடுத்து உரசி காசாளரிடம் பணத்தை கட்டிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல காரை நோக்கி அசைந்தபடி, பிள்ளைகள் பின்னால் இழுபட போனார். செல்பேசியை காதில் இருந்து அவர் எடுக்கவே இல்லை.
எனக்கு தெரிந்த ஒருவர் அமெரிக்காவில் ஒரு பில்லியனரை பார்க்கச் சென்றார். பில்லியன் என்றால் ஆயிரம் மில்லியன். இவரோ பல பில்லியன்களுக்கு சொந்தக்காரர். ஆறுமாத முயற்சிக்கு பின்னர் நண்பருக்கு ஐந்து நிமிடம் அவருடன் தனிய சந்திப்பதற்கு அவகாசம் கிடைத்திருந்தது. அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்த நண்பர் திகைத்துவிட்டார். பில்லியனர் நாலு திரைகள் வைத்த கம்புயூட்டருக்கு முன் உட்கார்ந்திருந்தார். அவருடைய விரல்கள் விசைப்பலகையில் விளையாடியபடி இருந்தன. நண்பர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை கொடுத்தார். அவர் புத்திக்கூர்மையான சில கேள்விகளை நண்பரிடமும் கேட்டார். அவர் விரல்கள் கம்புயூட்டர் விசைப்பலகையில் ஓடியபடியே இருந்தன.
ஐந்து நிமிடம் முடிந்ததும் நண்பர் எழுந்து விடைபெற்றுக்கொண்டு, நின்ற நிலையிலேயே ஒரு கேள்வி கேட்டார். எப்படி அவரால் ஒரே நேரத்தில் பல காரியங்களை ஆற்ற முடிகிறது. பில்லியனர் இப்படி பதில் சொன்னார்:
'ஒருநாளில் 24 மணிநேரம்தான். அதை நாங்கள் மாற்றமுடியாது. ஆனால் ஒரு நிமிடத்தில் ஒரு வேலைதான் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்றலாம். உங்களுடன் பேசிக்கொண்டே இரண்டு முக்கியமான வேலைகளை நான் முடித்துவிட்டேன். 5 நிமிடத்தில் 10 நிமிட வேலையை செய்கிறேன். எனக்கு ஒரு நாளில் 48 மணி நேரம் கிடைக்கிறது.'