காசு இல்லை

திங்கட்கிழமை என்றால் லொத்தரி டிக்கட் வாங்கும் நாள். அவர் தன் தயாரைக் கூட்டிக்கொண்டு பல்கடை அங்காடிக்கு போவார். அங்கே  தாயார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை பார்வையிட்டுவிட்டு இறுதியில் ஆறு இலக்கங்களை தெரிவு செய்வார். நண்பர் பொறுமையாக  காத்திருப்பார். தெரிவு முடிந்ததும் காசை கொடுத்து, டிக்கட்டை வாங்கி தாயாரின் கைப்பையை திறந்து அதற்குள் வைத்து கிளிக் என்று சத்தம் வர பூட்டி கொடுப்பார். தாயாருடைய  முகத்தில் அந்த வாரத்து சிரிப்பு நிறையும். முழங்கையை பிடித்து அவரை மெதுவாக நடத்திச் செல்வார். கால்கள்  தரையை உராய்ந்தபடி நடக்கும். காரில் தாயாரை இருத்தி, இருக்கைப் பட்டியை கட்டிவிடுவார். மறுபடியும் அடுத்த திங்கட்கிழமை காலைதான் தாயார் வீட்டைவிட்டு வெளிக்கிடுவார்.

தாயாருக்கு வயது 90. அவருடைய சருமம் வெங்காயச் சருகுபோல இருக்கும். முகத்தில் கோடுகள் எங்கேயோவெல்லாம் ஆரம்பித்து எங்கேயோவெல்லாம் முடியும். நான் நண்பரை கேட்பதுண்டு, எதற்காக இத்தனை சிரமப்பட்டு தாயாரை அழைத்துச் செல்லவேண்டும். அவராகவே ஒரு டிக்கட்டை வாங்கி கொடுக்கலாம்தானே என்று. நண்பருடைய பதில் விசித்திரமானதாக இருக்கும். ’அம்மாவின் மனம் முழுக்க 649 டிக்கட் பற்றிய சிந்தனைதான். பரிசு அறிவிக்கும் தினம் நெருங்க அவருக்கு படபடப்பு கூடிவிடும். முடிவு தெரிந்ததும் டிக்கட்டை கிழித்துப் போட்டுவிட்டு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு காத்திருப்பார். அவருடைய ஒரே சந்தோசம் இதுதான். இதை நிறுத்த எப்படி எனக்கு மனம் வரும்?’ என்பார். ’போனவாரம் ரொறொன்ரோவில் ஒருவருக்கு 10 மில்லியன் டொலர் பரிசு விழுந்ததே? அப்படி கிடைத்தால்  என்ன செய்வார்?’ என்று கேட்டேன். ’அவ்வளவு தூரத்துக்கு அவரால் சிந்திக்க முடியாது. அவருக்கு உலகத்தில் மகிழ்ச்சி தருவது லொத்தரி டிக்கட் வாங்குவதுதான்.  பரிசு விழுந்தாலும் அடுத்த திங்கட்கிழமை அவர் லொத்தரி டிக்கட் வாங்கப் புறப்படுவார், அதில் சந்தேகம் இல்லை’ என்றார்.

நண்பருக்கு அப்படியென்றால் எனக்கு திங்கட்கிழமை ஆரம்பித்தால் ஒரே பிரச்சினை. வேலை செய்ய முடியாது. டெலிபோன் அடித்தபடியே இருக்கும். எல்லாம் சந்தை அழைப்புகள். மனிதக்குரல் என்றால் பரவாயில்லை, மெசின் குரல். முதலில் வந்தது வீட்டை சுத்தம் செய்து தருவதற்கான அழைப்பு. பாதி விலைக்கு செய்து தருவார்களாம். பாதி வீடா என்பதை சொல்லவில்லை. அடுத்து வந்தது தோட்டக் கலை ஆலோசனை. மூன்றாவது கொஞ்சம் சுவாரஸ்யமானது. மெசின் குரல்தான் ஆனால் அடிக்கடி ‘முழுவதையும் கேளுங்கள். இடையில் டெலிபோனை வைக்கவேண்டாம்’ என்று கெஞ்சியது. ஒரு வாரத்தில் வீட்டில் இருந்தபடியே 2000 டொலர் சம்பாதிக்கலாமாம். நான் உலகத்து நாடுகளின் மழை வீழ்ச்சி அளவுகளை படித்துக்கொண்டிருந்தேன். டெலிபோன் தொல்லை போதாதென்று இப்போது கதவு மணி அடித்தது.

நண்பர் நல்ல உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். நிறையப் பணமும் நிறைய நேரமும் அவரிடம் இருந்தது.  அதைவைத்து என்ன செய்வது என்றுதான் அவருக்கு தெரியவில்லை. தாயாரின் லொத்தரி டிக்கட்  வேலையை முடித்தபிறகு என் வீட்டுக்கு வந்து என்றுமில்லாத வழக்கமாக படிப்பதற்கு ஒரு புத்தகம் கொடுக்க முடியுமா எனக் கேட்டார். அவருடைய கைகள் கண்ணுக்கு தெரியாத சோப்பை போடுவதுபோல ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்தன. கேட்கக்கூடாததை கேட்டதுபோல அவர் முகம் இருந்தது. திடீரென்று ஏன் அவருக்கு வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. அவர் புத்தகம் படித்து நான் பார்த்ததில்லை. ’எங்கள் நாட்டை விட்டுப் புறப்பட்டபோது எங்கள் ரூபாயை நான் எடுத்து வரவில்லை. அது இங்கே பயன்படாது. என் மொழியையும் எடுத்து வரவில்லை. அதுவும்  இங்கே பயன்படாது. இப்பொழுதுதான் நேரம் நிறையக் கிடைக்கிறதே. விட்ட இடத்திலிருந்து தொடங்கப் போறேன்.’

ஆங்கிலப் புத்தகம் என நினைத்தேன். அவர் திட்டவட்டமாக தமிழ் புத்தகம் என்று சொன்னார். நான் அதிர்ச்சியடையலாமா என யோசித்துக்கொண்டு நின்றேன். அவர் தொடர்ந்து ’நீங்கள் எழுதுவதாகச் சொல்கிறார்கள். உங்களுடைய புத்தகம் ஒன்றைத் தாருங்கள்’ என்றார். தமிழ் இலக்கியத்துக்கு வந்த சோதனையை மனதுக்குள் நினைத்துக்கொண்டு ’நீங்கள் கடைசியாகப் படித்த தமிழ் புத்தகம் என்ன?’ என்று கேட்டேன். புது மாணவனை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முன்னர் தலைமையாசிரியர்  பரீட்சார்த்தமாகக் கேள்வி கேட்பதுபோல அவருடைய வாசிப்பு தரத்தை தீர்மானிப்பதற்காக அப்படிக் கேட்டேன். அவர் சாண்டில்யன் எழுதிய ’கடல் புறா’ என்றார். ’கடல் புறாவா? அது மூன்று பாகமல்லவா?’ என்றேன். ’அந்தக் காலத்தில் நான் வாரம் முழுவதும் காத்திருந்து தொடராகப் படித்தது கடல் புறாதான். குமுதத்தின் பக்கங்களைக் கிழித்து சேகரித்து மூன்று புத்தகங்களாக பைண்ட் செய்து வைத்திருக்கிறேன். கனடா வந்தபோதுகூட கொண்டுவந்தேன்’ என்றார். நானும் விடாமல் ’வேறு என்ன புத்தகம் படித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் ’வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்’ என்றார். ‘அவர் பழங்காலத்து ஆள் அல்லவா? என்ன புத்தகம் படித்தீர்கள்? ’திகம்பர சாமியார். அதிலே பக்கத்துக்கு பக்கம் சாமியார் புது வேடம் போட்டுக்கொண்டு வந்து துப்பறிவார். வாசகர்கள் ஊகிக்கவே முடியாது.’  எப்படி முயன்றாலும் இவர் 20ம் நூற்றாண்டுக்கு இந்தப் பக்கம் வரமாட்டார் போலத் தோன்றியது. இப்போது 19ம் நூற்றாண்டுக்கு போய்விட்டார். சமீபத்தில் ஏதாவது படித்திருக்கிறாரா என்று கேட்டதற்கு தன் வாழ்நாளிலேயே முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை படித்தது அந்த இரண்டு புத்தகங்களும்தான் என மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்.

எனக்கு புத்தகம் இரவல் தர விருப்பமில்லை. அதுவும் நான் எழுதிய புத்தகத்தை அவர் கேட்டிருந்தார். என்னிடமிருந்தது ஒன்றே ஒன்றுதான். அது தொலைந்தால் அதை ஈடு செய்ய முடியாது. நூற்றாண்டுக்கு ஒன்று என இரண்டே இரண்டு தமிழ் புத்தகம் படித்தவரிடம் புத்தகம் இரவல் தருவது ஆபத்தானது. அவர் தன்னுடைய வீட்டு புத்தகத் தட்டில் அடுக்கி வைத்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை மூன்றாக உயர வாய்ப்பிருந்தது. ’கனடா புத்தகக் கடையில் புத்தகம் கிடைக்கிறது. நீங்கள் வாங்கலாமே?’ என்றேன். ’அவர்கள் காசு கேட்பார்கள்’ என்று யோசிக்காமல் பதில் இறுத்தார். வாசலிலே பார்க்கும் தூரத்தில் அவருடைய நீளமான கறுப்பு கார் நின்றது. அவர் அணிந்திருந்த கண்ணாடியை நாலாக மடித்து சுருட்டினாலும் மறுபடியும் நிமிர்ந்து பழைய நிலையை எட்டிவிடும். அத்தனை விலை உயர்ந்த கண்ணாடி. க்ரோம் ஹார்ட்ஸ் கறுப்பு கண்ணாடிதான் அணிவார். அவருடைய கண்ணாடிகளை விற்றால் ஒரு கிராமத்துக்கு இரண்டு மாதம் சாப்பாடு போடலாம்.

என்னிடம் புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு இரண்டு இருந்தது. ஒன்று பழையது மற்றது திருத்திய புதிய பதிப்பு. அதில் ஒன்றைத் தருவதாகச் சொன்னேன். அவர் தன் முடிவில் தெளிவாக இருந்தார். எங்கே சம்பாசணையை தொடங்கினாலும் அது யூதர்களின் வட்ட நடனம்போல தொடங்கிய இடத்துக்கே திரும்பவும் வந்தது. இனியும் கடத்த முடியாது என்று பட்டது. வேறு வழி இல்லாமல் அரை மனதுடன் 21ம் நூற்றாண்டில் வெளிவந்த என்னுடைய புத்தகம் ஒன்றைக் கொடுத்தேன். படித்து முடித்துவிட்டு உடனேயே திருப்பித் தாருங்கள் என இரண்டு தடவை சொல்ல நான் மறக்கவில்லை. புத்தகத்தை கையில் எடுத்ததும் அவர் செய்த காரியம் ஆச்சரியமளித்தது. ஒரு பூச்சி பிடிகாரன் புதுப் பூச்சியை ஆராய்வதுபோல கிட்டக் குனிந்து தலைப்பை கூர்ந்து கவனித்தார். பின்னர் அட்டைப் படத்தை தடவிப் பார்த்தார். நடுப்பக்கத்தை திறந்து மணந்தார். ஒருவேளை கெட்ட மணமாயிருந்தால் நிராகரித்திருப்பாரோ தெரியாது. பட்டுத்துணி வாங்கும்போது இரண்டு விரலால் உரசிப் பார்ப்பதுபோல ஒற்றையை உரசிப் பார்த்தார். பிடித்திருக்கவேண்டும். அங்கேயே படிக்க ஆரம்பித்து கண்களைச் சுருக்கி உதடுகளை அசைத்து ஒவ்வொரு எழுத்தாக எழுத்துக் கூட்டினார். அவருடைய தலைக்கும் புத்தகத்துக்கும் இடைப்பட்ட தூரம் வரவரக் குறைந்து கொண்டுவந்தது. அதை நீடிக்க விடாமல் ’வீட்டுக்கு எடுத்துச் சென்று படியுங்கள்’ என்றேன்.

இரண்டு நாள் சுமுகமாகக் கழிந்தது. மூன்றாவது நாள் அவரிடமிருந்து தொலைபேசி வந்தபோது திடுக்கென்றது. இவ்வளவு சீக்கிரத்தில் படித்துவிட்டாரா? என்னுடைய திகைப்பு முடிய முன்னர் அவர் குரல் கேட்டது. ’நிறைய எழுத்துப் பிழைகள்’ என்றார். அவர் வசனங்களை முடிப்பதில்லை. நான்தான் சரியான வினைச் சொற்களைப் போட்டு முடிக்கவேண்டும். இரண்டே இரண்டு தமிழ் புத்தகங்கள் மட்டும் எழுத்துக்கூட்டி படித்திருந்தாலும் எழுத்துப் பிழையை சட்டென்று கண்டுபிடித்துவிட்டாரே. ‘வாசிக்க கஷ்டமாய் இருக்கு. லை, ளை எழுத்தெல்லாம் வேறமாதிரி மாறிப்போச்சு. பாம்பு படமெடுக்கிறமாதிரி எழுத்து இருக்கவேணும்’ என்று கோபமான முறைப்பாடு வைத்தார். தமிழ் எழுத்துருக்கள் மாறி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டன என்று எவ்வளவு விளங்கப்படுத்தினாலும் அவர் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. ஏதோ நான்தான் எழுத்துக்களை மாற்றிவிட்டதுபோல என்னிலே குற்றம் கண்டார்.   

இரண்டு வாரம் கழிந்தது, மறுபடியும் திங்கட்கிழமை தொலைபேசியில் அழைத்தார். நான் இலக்கணப் பிழை கண்டுபிடித்துவிட்டார் என நினைத்தேன். அவர் ’23ம் பக்கத்தில் நிற்கிறேன்’ என்றார். நான் ’ம்’ என்று சொல்லி பாராட்டை ஏற்கத் தயாராக இருந்தேன். அவர் வேறு ஒன்றுமே பேசவில்லை. ஒருவேளை அவர் புத்தகத்தை தரையிலே போட்டு அதன்மீது 23ம் பக்கத்தில் ஏறி நிற்கிறாரோ என்ற சந்தேகம் வந்தது. மறுபடியும் ’ம்’ என்றேன். கிரிக்கெட் நேர்முக வர்ணனைபோல  புத்தகத்தில் எத்தனை பக்கங்களை தான் முடித்துவிட்டார் என்ற செய்தியை சொல்வதற்காகத்தான் அந்த அழைப்பு என்பது தெரிந்தது. அதாவது தன் சாதனையை சொல்கிறாராம்.

மறுபடியும் திங்கட்கிழமை ஒரு தொலைபேசி வந்தது, இரண்டு வாரங்கள் கழிந்த பிறகு. ஒவ்வொரு இரண்டு வாரமும் கூப்பிடவேண்டும் என்பது அவர் கணக்கு. ‘நான் 45வது பக்கத்தில் நிற்கிறேன்’ என்றார். நான் ’ம்’ என்று சொல்லாமல் ‘நல்ல முன்னேற்றம்’ என்றேன். ‘அநபாயன் போன்ற ஒரு பாத்திரத்தை யாரும் லேசில் படைக்கமுடியாது’ என்றார். நான் திடுக்கிட்டுபோய் நின்றதில் மூளை வேலை செய்ய மறந்துவிட்டது. என்னுடைய கதை மாந்தர்களில் ஒருவர் பெயரும் அநபாயன் இல்லை. அவர் தொடர்ந்து ‘ஒரு சோழ இளவரசனை அப்படியே கண்முன்னால் கொண்டுவந்து’ என்றார். வழக்கம்போல ’நிறுத்துகிறது’ என்ற வினைச்சொல்லை போட்டு வசனத்தை முடித்தேன். எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவர் சாண்டில்யனின் கடல் புறா பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். ‘நீங்கள் கடல் புறாவா படிக்கிறீர்கள்?’ என பதற்றத்துடன் கேட்டேன். ‘இல்லை, இல்லை உங்கள் புத்தகத்தைத்தான் படிக்கிறேன். கடல் புறா ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது. வைக்கிறேன்’ என்று சொல்லி டக்கென்று டெலிபோனை வைத்துவிட்டார்.

இந்த மனிதர் பெரும் புதிராக மாறிக்கொண்டு வந்தார். இதைச் சொல்வதற்கா என்னை தொலைபேசியில் அழைத்தார் என்று எரிச்சல் வந்தது. இரவல் வாங்கிய புத்தகம் பற்றி ஒரு வசனம், ஒரு சொல் சொல்லியிருக்கலாமே என்று பட்டது .இரண்டு வாரம் கழிந்தது. அவர் இப்போது 63ம் பக்கத்தில் நிற்கவேண்டும். ஆனால் தொலைபேசி வரவில்லை. மேலும் இரண்டு வாரம் ஓடியது. சத்தம் இல்லை. ஒருவேளை தாயாருக்கு 10 மில்லியன் டொலர் பரிசு விழுந்து இருவரும் உலகம் சுற்றக் கிளம்பிவிட்டார்களோ, என்னவோ? புத்தகம் திரும்பக் கிடைக்கவில்லை. நண்பரையும் காணவில்லை. புத்தகத்தை விடுங்கள். நண்பர் என்ன சாதாரணமானவரா? தமிழ் இலக்கியத்தின் நெடுங் கதவுகளை மூன்று நூற்றாண்டுகளாக ஓங்கித் தட்டியவர்.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta