பல் வேலைக்கு வசந்த காலம் சிறந்த காலம். பல் வைத்தியரின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தட்டையான பெண் தட்டையான சிரிப்புடன் என்னை வரவேற்றாள். என் பெயர் நோயாளிகள் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு என்னை உட்காரச் சொன்னாள். என்னுடைய முறைக்காக வழக்கம்போல காத்திருக்கவேண்டும். யாரோ படித்துவிட்டு போன அன்றைய பேப்பர் அங்கே கிடந்தது. அதைக் கையில் தூக்கிக்கொண்டு நோயாளிகள் தங்கும் அறையை நோக்கி நடந்தேன்.
அந்த அறையை நெருங்கிய நான் திடுக்கிட்டுப்போய் நின்றேன். நெருக்கமாக அடுக்கியிருந்த ஆசனங்கள் அத்தனையிலும் கிழவிகள். பள்ளிச் சிறுமிகள்போல பெரிய சத்தம் வைத்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். எனக்கு முதலில் கண்ணில் பட்டது பற்கள். அவை என்னை நெருக்கிக்கொண்டு பார்த்தன. ஒடிந்த பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். உடனே அந்தக் காட்சி தி.ஜானகிராமனை நினைவுக்கு கொண்டு வந்தது. அவருடைய மறக்க முடியாத பாயசம் என்ற சிறுகதையிலும் ஒரு காட்சி வரும். ஒரே வரியில் கல்யாண சந்தடியையும், விருந்தினரையும், கிழவிகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் சூழலையும் கொண்டுவந்துவிடுவார். அது அவருடைய எழுத்து மேதமை.
தி.ஜானகிராமன் எழுதிய அனைத்து சிறுகதைகளிலும் அவருடைய பாயசம் சிறுகதை பிரபலமானது. பல விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. பலமுறை அதை படித்திருந்தும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஏதாவது புது விசயம் அகப்படும். பல அடுக்குகள் கொண்ட சிறுகதை என்றபடியால் ஒவ்வொரு அடுக்காகப் பிரியும்போதும் முன்பு கவனிக்காத ஏதோ ஒன்று கண்ணில் படும். அதில் மணமக்களை ஊஞ்சலில் வைத்து தள்ளும் காட்சி வரும். திருமணத்தின்போது முன்னுக்கு நிற்கமுடியாத ஊர் விதவைகள் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு ஊஞ்சல் காட்சியை பார்க்க காத்திருப்பார்கள். முக்காடு போட்டு நார்மடி கட்டிய பெண்கள் ஊஞ்சல் வைபவத்தின்போது சூழ்ந்துகொள்வார்கள். தி.ஜா அந்த இடம் வரும்போது இப்படி வர்ணிப்பார். ‘எங்கு பார்த்தாலும் பல். அழுக்கிடுக்கு பல். தேய்ந்த பல். விதவைப் பல். பொக்கைப் பல்.’ இவ்வளவுதான். வாசகன் மனதில் அழியாத சித்திரம் ஒன்று பதிந்துவிடும். தி.ஜா அந்த இடத்தை வெகு இலகுவாகத் தண்டிப் போய்விடுவார். வாசகர் மட்டும் அங்கேயே நிற்பார்.
மற்றவர்களைப்போல பல்வைத்தியரிடம் போவதற்கு நான் தயங்குவதில்லை. ரொறொன்ரோவுக்கு வந்த நாளில் இருந்து நான் ஒரே பல்வைத்தியரிடம்தான் போகிறேன். வருடத்தில் இரண்டு, சிலவேளை மூன்று தடவை அவரைப் பார்ப்பேன். பல் நிரப்புவது, சுத்தமாக்குவது, மினுக்குவது, திருத்த வேலைகள் இப்படி ஏதாவது ஒன்று. அவர் வாயிலே வேலை செய்யும்போது வருடுவதுபோல இருக்குமே ஒழிய நோகாது. இன்னொரு பிடித்த விடயம் நேரம் தவறாமை. 2.00 மணி என நேரம் குறித்து தந்தால் சரியாக இரண்டு மணிக்கு அழைப்பார். காத்திருக்க வைக்க மாட்டார். வாயை திறந்தபடி சாய்ந்திருக்க இவர் பேசியபடியே வேலை செய்வார். சில வேளைகளில் நல்ல அழகான, கூரான, கைக்கு வாகான பல் அகப்பட்டால் மெல்லிய குரலில் பாடத்தொடங்கிவிடுவார். எல்லாம் நான் எழும்பி ஓடமாட்டேன் என்ற துணிச்சல்தான்.
அன்று என் நேரம் வந்து போய் அரை மணியாகியும் என்னை அவர் அழைக்கவில்லை. அன்றைய பேப்பரில் கிடந்த அத்தனை விசயங்களையும் படித்து முடித்துவிட்டேன். எனக்கு பக்கத்தில் இருந்த கிழவிக்கு வட்டமான முகத்தில் வரைந்த ஓட்டை போல ஒரு சின்ன வாய். ஆயிரம் தடவை உபயோகித்த முகம். பெரிய எதிர்பார்ப்பு கண்களில் தெரிய சின்னப் புன்னகையுடன் காத்திருந்தார். அவரிடம் பேச ஆரம்பித்தபோது பல் வைத்தியர் என்னை அழைக்க வந்துவிட்டார். 40 வயது சீனாக்காரர். கிரமமாக உடல் பயிற்சி செய்வதால் வெள்ளைக் கோட்டு அணிந்திருந்தாலும் உள்ளே இரண்டு கைகளிலும் அழகாக உருளும் தசையை ஊகிக்க முடிந்தது. பற்களை ஒரே திருப்பில் பிடுங்குவதற்காக கைகளுக்கு பிரத்தியேக பயிற்சி கொடுத்திருந்தார் போலும். கைகளும் உடம்பும் ஒரே வேகத்தில் வளரவில்லை. அவருடைய நடையில் வழக்கமான துள்ளல் இல்லை. சிந்தனையை முடிக்காத முகம். என்னை உள்ளே அழைத்துப் போய் ஒரே அசைவில் மருத்துவ நாற்காலியில் உட்காரவைத்து, பின்னுக்கு சரித்து அதே நேரத்தில் உயரத் தொங்கிய விளக்கையும் முகத்துக்கு கிட்டவாக இழுத்துவிட்டார்.
’இன்றைக்கு என்ன கிழவிகள் வாரமா? தங்கும் அறையில் கிழவிகளாகவே நிறைந்திருக்கிறார்கள்’ என்றேன். அவர் சிரிக்கவில்லை. பல்வைத்தியர் நோயாளியிடம் பல்லைக் காட்டக்கூடாது என்று விதி ஏதாவது இருக்கிறதோ, என்னவோ. ‘அவர்கள் முதியோர் காப்பகத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைக்கு 25 வீதம் தள்ளுபடி உண்டு. வருடத்தில் இரண்டு நாட்கள் அவர்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன். அதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காப்பகத்தை விட்டு வெளியே வருவதென்றால் கொண்டாட்டம்தான்.’ ’இன்றைக்கு நேரம் பிந்திவிட்டதே’ என்றேன். ’ இப்பொழுது வெளியே போனாரே. அவரைக் கவனித்தீர்களா? அவர் என்னுடைய புது நோயாளி. பற்களை சோதிக்க வந்திருந்தார்.’ ஓர் உயரமான கறுப்பு முடி மனிதர் எங்கும் பார்க்காத ஒரு பார்வையோடு, முதல் நாள் இரவு படுத்து எழும்பிய அதே உடுப்போடு, குதிரை பாய்வது போல பாய்ந்து போனது நினைவுக்கு வந்தது. ‘அவரால்தான் அரை மணித்தியாலம் பிந்திவிட்டது. அவருக்கு 34 பற்கள்’ என்றார் அவர். ’முப்பத்து நாலா? மனிதர்களுக்கு 32 தானே. குதிரைகளுக்கு 34 என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.’
’குதிரைகளுக்கு 34, 36, சிலவேளை 40 பற்கள்கூட இருக்கும். மனிதர்களுக்கு 34 பற்கள் அபூர்வமாக அமைவதுண்டு. இவருடைய கடைசி இரண்டு பற்களும் கொடுப்பின் அடி ஆழத்தில் புதைந்து கிடந்தன. பார்க்கவும் முடியாது தொட்டு சோதிக்கவும் இயலாது. சுரங்கத்துகுள் தலைகீழாக தொங்கி வேலை செய்ததுபோல இடுப்பு ஒடிந்து, அரைமணி நேரம் கூடுதலாகவும் செலழிந்துவிட்டது. சரி, வாயை திறவுங்கள்’ என்றார். நான், மக்டொனால்டு இரட்டை பேர்கர் சாப்பிட ஆயத்தம் செய்வதுபோல, அசைக்க முடியாத கீழ்படிதலோடு, வாயை ஆவென்று பிளந்து 32 பற்களையும் காட்டியபடி படுத்துக் கிடந்தேன். பல் வைத்தியரின் மெசின் கிர்ர்ர் கிர்ர்ர் என இனிமையான சத்தம் எழுப்பியபடி தன் வேலையை தொடங்கியது. சினிமாவில் சக்கரம் சுழல்வதுபோல என் மனம் தி.ஜானகிராமனை நோக்கி திரும்பியது.
தி.ஜானகிராமனுடைய எழுத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கதவு திறக்கும். ’பாயசம்’ என்ற சிறுகதை. அவருடைய பல சிறுகதைகளைப்போல காவேரியில் ஆரம்பிக்கிறது. சுப்பராயன் கிராமத்தில் பெரிய பணக்காரர். வயது 66, செல்வாக்குள்ளவர், 4 பிள்ளைகள், 7 பெண்கள். கடைசிப் பெண்ணுக்கு கல்யாணம் விமரிசையாக நடக்கிறது. சாமநாது வயது 77, சுப்பராயனுக்கு சித்தப்பா முறை. பக்கத்துப் பக்கத்து வீடு. அவர் மனைவி இறந்துவிட்டார், இளம் விதவை மகள் அவருடன் வசிக்கிறாள்.
கல்யாண ஆரவாரமும், சனக் கூட்டமும், நாயனமும், தவிலும் சாமநாதுவை என்னவோ செய்கின்றன. பிரம்மாண்டமான தவலையில் 500 பேருக்கு பாயசம், திராட்சை முந்திரிப்பருப்பு மிதக்க, மணம் வீசிக்கொண்டு கொதிக்கிறது. கூடத்தில் மணமக்களுக்கு ஊஞ்சல் வைபோகம் நடக்கிறது. மேலும் கீழும் ஊஞ்சல் போய்வருவது கண்கொள்ளாக் காட்சி. சாமநாது பார்க்கிறார் அந்த நேரம் சமையல் கட்டை ஒருவரும் கவனிக்கவில்லை. பாயசம் பொங்கும் தவலையை அப்படியே நெம்பித் தள்ளி கீழே கொட்டிவிடுகிறார். பெருச்சாளி விழுந்த பாயசத்தை யார் சாப்பிடுவான் என்று சொல்லி தப்பித்து விடுகிறார். ஆனால் அவருடைய இளம் விதவை மகளின் நெருப்பு பார்வை அவரை சுட்டுக்கொண்டு போகிறது. இதுதான் கதை.
கதையின் ஆரம்பத்தில் சாமநாது தன்னைத்தானே தேற்றிக் கொள்வார். இத்தனை பேர் வந்து கொண்டாடி விருந்து சாப்பிட்டு போகிறார்கள். ஆனால் பாவம் சுப்பராயன். அவனுக்கு மூட்டு வலி, கிறுகிறுப்பு, ரத்த அழுத்தம் எல்லாம் உண்டு. சாப்பாடு கோதுமை கஞ்சியும் மருந்து மாத்திரைகளும்தான். சாமநாதுபோல அவனால் காவிரியில் குளிக்க முடியாது. அவருக்கு வயது 77 என்றுகூட ஒருவராலும் சொல்லமுடியாது. அவருடைய நெஞ்சு இன்றைக்கும் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமாய்தான் இருக்கிறது. எத்தனை பணம் இருந்தாலும் என்ன, தன்னுடைய வாழ்க்கைக்கு ஈடாகுமா என்றெல்லாம் நினைப்பார். ஆனாலும் பொறாமைத்தீ நெஞ்சில் எழும்பி சுழன்று அவரை தின்கிறது.
தி.ஜாவின் எழுத்தின் சிறப்பு அது. ஒவ்வொரு வசனத்துக்கும் ஒரு தேவை இருக்கும். ஒரேயொரு வசனத்தை நீக்கினாலும் கதையில் உள்ள எதோவொன்று வெளியே போய்விடும். ஒவ்வொரு வார்த்தையிலும் கதை ஓர் அலகு முன்னேறும். கதையின் இறுதிப் புள்ளியை நோக்கி மெல்லிய நகர்வு நிகழ்ந்தபடியே இருக்கும். ஆனால் அது கண்ணுக்கு புலப்படாது. நுட்பமாக கதைகூறும் திறனும் கவித்துவ நடையும் அவருடைய முத்திரை. விருந்து மண்டபம் ஒன்றுக்கு ஓர் அழகி நேர்த்தியாக உடையணிந்து, அலங்கரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறாள். உடனே அங்கிருக்கும் அத்தனை பெண்களும் தங்கள் தங்கள் உடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறார்கள். அப்படித்தான். தி.ஜாவின் எழுத்தை படிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஒருமுறை திரும்பவும் பார்த்துக் கொள்வார்கள்.
இன்னொரு சிறப்பு அவர் எழுதுவது அந்நியமாயிராது. உங்கள் வாழ்க்கையில் எப்பவோ அனுபவித்த ஓரு சம்பவம் அவர் வார்த்தைகளில் வெளிவந்திருக்கும். மனிதர்களின் உறவையும் , மனங்களின் சலனங்களையும் உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்வார். சாமநாதுவின் மகள் வருகிறாள். மொட்டைத்தலை. முக்காடு, பழுப்பு நார்மடி. 31 வயதுதான் ஆகிறது. கன்னத்திலும் கண்ணிலும் இருபது வயது பாலாக வடிகிறது. ‘அப்பா, மாப்பிள்ளை அழைச்சு மாலை மாத்தப் போறா. போங்களேன்.’ அவசரப்படுத்துகிறாள். சாமநாதுவுக்கு அவளைப் பார்க்கும்போதெல்லாம் என்னவோ செய்கிறது. போகப் பிரியப்படாத இடத்துக்கு போகவேண்டிய தயக்கம். காரிலே பின் பார்க்கும் கண்ணாடியில் தெரிவதுபோல உங்கள் வாழ்க்கையில் எப்பவோ பின்னால் நடந்த சம்பவம் முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
சிறுகதைகளில் ஏதாவது ஓர் உணர்வை எடுத்து அதை கூர்மைப்படுத்திக்கொண்டே போவார் தி.ஜா. ’சிலிர்ப்பு’ என்று ஒரு கதை. ரயிலிலே தற்செயலாகச் சந்தித்த ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையில் நிமிடங்களில் ஏற்படும் அன்பு முன்னெப்போதும் கண்டிராத விதமாக பிஞ்சு உள்ளங்களில் முளைக்கிறது. பெரியவர்களுக்கு அன்பைக் காட்ட பல வழிகள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு பிடித்தது ஒருவழிதான். ரயிலிலே நடக்கும் சம்பாசணைகள் மூலம் முழுக்க முழுக்க நுட்பமாக நகர்த்தப்பட்ட இந்தச் சிறுகதையின் முடிவில் ஏற்படும் சிலிர்ப்பில் இருந்து வாசகர்கள் தப்பவே முடியாது.
பல வாசகர்களுக்குப் பிடித்தது அவருடைய கண்டாமணி சிறுகதை. சில விமர்சகர்கள் அதையே தி.ஜாவின் சிறந்த சிறுகதையாகச் சொல்வார்கள். மெஸ் நடத்தும் மார்க்கம் என்பவர் தற்செயலாக குழம்பில் பாம்பு விழுந்து கிடப்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்கிடையில் அங்கு வந்த கிழவர் ஒருவர் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு போவார். மார்க்கம் நடுங்கிப்போய் விட்டார். சாமி படத்துக்கு முன்னேபோய் நின்று வேண்டுகிறார். ’ஆண்டவனே சேதி பரவாமல் காப்பாற்று. என் மெஸ் மூடினால் எனக்கு வேறு வழி கிடையாது. உனக்கு பஞ்சலோகத்தில் கண்டாமணி செய்து போடுவே.ன்.’ சேதி பரவாமல் காப்பாற்று என்று பிரார்த்திக்கிறாரே ஒழிய கிழவர் இறக்கக்கூடாது என்று வேண்டவில்லை. கிழவர் இறந்துவிடுகிறார். நேர்ந்துகொண்டபடி கோயிலுக்கு கண்டாமணி செய்து கொடுக்கிறார் மார்க்கம். தன் குற்றவுணர்வை அது தீர்த்துவிடும் என்று நினைக்கிறார். மாறாக கோயில் மணி அடிக்கும் ஒவ்வொரு முறையும் அவர் குற்றத்தை நினைந்து நினைந்து வாழ்நாள் முழுக்க அவஸ்தையுறுகிறார்.
அதே போல பாயசம் கதையில் பொறாமைதான் உணர்வு. தி.ஜா இந்தக் கதையில் மனிதனின் ஆதி உணர்வான பொறாமையை எடுத்துக் கொள்கிறார். மனிதனுடன் கூடப் பிறந்தது பொறாமை. மனித குலத்தின் முதல் கொலை பற்றி பைபிள் பேசுகிறது. ஆதாம் ஏவாளின் மூத்த மகன் காயின் சகோதரன் ஆபெலைக் கொன்றுவிடுகிறான். காரணம் வேறு ஒன்றுமில்லை, பொறாமை. சாமநாதுவை குடும்பத்தில் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அவருக்கு சுப்பராயன் ஒரு கெடுதலுமே செய்யவில்லை, செய்ததெல்லாம் ’சித்தப்பா சித்தப்பா’ என்று அன்போடு அழைத்தபடி இருந்ததுதான். காரணமே இல்லாமல் வருவதுதான் பொறாமை. சுப்பராயனுக்கு வாழ்க்கையில் செல்வம் கொட்டியது. இருபது வருடத்தில் இருபது லட்சம். சாமநாதுவுக்கு உருப்படாத குடும்பம். அவருடைய மகன் ஓவியம் வரைகிறானாம். பெரிய தாளில் முழு முழங்கால் ஒன்று கீறி அதில் கண் வரைந்திருக்கிறான். மகள் இளவயதிலேயே விதவையாகி வீட்டோடு இருக்கிறாள். சுப்பராயனின் கடைசி மகள், ஏழாவது பெண் அவளுக்கு கோலாகலமாக திருமணம் நடக்கிறது. ஊஞ்சலில் வைத்து அவளை ஆட்டுகிறார்கள். ’கண்ணூஞ்சலாடி நின்றார்’ என்று நாயனக்காரன் ஊதுகிறான். சாமநாதுவை பொறாமை தீப்போல எரிக்கிறது. அதை அணைக்கவேண்டும். 500 பேர் குடிக்கும் பாயசத்தை கவிழ்த்து கொட்டுகிறார்.
காவேரி ஆற்றில் குளித்துவிட்டு சாமநாதுக் கிழவர் திரும்பும்போது ஓர் இளைஞன் ஏதோ கேட்கிறான். சாமநாது ’ஏன் கத்துறே, நான் என்ன செவிடா?’ என்பார். ’என்னைத் தெரியவில்லையா? நான்தான் சீதாவின் மச்சினன்’ என்பான் இளைஞன். உடனேயே கிழவர் சமாளித்துக்கொண்டு ’அப்படியா? சட்டுனு தெரியல. இப்ப தெரியறது’ என்பார். சாமநாதுவுக்கு தான் முதுமையை எட்டவில்லை, இன்னும் இளமையாகத்தான் இருப்பதாக ஓர் எண்ணம். ஆனால் அது கதையில் நேராகச் சொல்லப்படவில்லை. வேறு ஏதொ சொல்ல வந்ததுபோல இன்னொன்றைச் சொல்வது தி.ஜாவின் உத்தி. இப்படி நுண்மையாக கதை மாந்தர்களுடைய மனதுக்குள் புகுந்து வெளியே வந்துவிடுகிறார்.
நான் வாயை ஆவென்று வைத்துக்கொண்டு சிறுகதையில் இந்தச் சம்பவம் வரும் இடத்தை நினைத்து சிரித்தேன். எப்படியோ அதைக் கண்டுபிடித்துவிட்டார் பல்வைத்தியர். என்னை நிமிர்த்தி உட்காரவைத்துவிட்டு ‘என்ன சிரிக்கிறீர்கள்? என்றார். நான் பாயசம் கதையை அவருக்கு நாலு வரியில் சொன்னேன். அவர் கதையை கேட்டுவிட்டு ‘jealousy is the worst of all evils’ என்றார். தீயவற்றில் ஆகத் தீயது பொறாமை. ராமாயண யுத்தம் பெண்ணாசையால் ஏற்பட்டது என்று சொல்வார்கள். மகாபாரத யுத்தம் மண்ணாசையால் நடந்தது என்பார்கள். உண்மையில் ஆழமான காரணம் பொறாமைதான். கைகேயியின் பொறாமை. துரியோதனனின் பொறாமை. பாயசம் கதையில்கூட ’குடும்பத்து பெரியவாள்’ சாமநாதுவால் பொறாமையை வெல்ல முடியவில்லை.
பல் மருத்துவர் ஒவ்வொரு பல்லாக மினுக்கத் தொடங்கினர். நான் மறுபடியும் கண்களை மூடி தி.ஜாவின் படைப்புகளுக்குள் நுழைந்தேன். அப்படியென்ன மாயம் செய்கிறார். ஒவ்வொரு சிறுகதையின் பெறுமானமும் அதற்கு முன்னர் அவர் எழுதிய ஒன்றினும் பார்க்க அதிகமாக இருக்கும். வாசகருடைய அனுபவம் சேராமல் அவர் கதைகள் பூர்த்தியாவதில்லை. எந்தச் சிறுகதையை எடுத்தாலும் ஏதோ ஓர் உணர்வின் உச்சத்துக்கு உங்களை தூக்கிச் சென்றுவிடுகிறார். அன்பு, பொறாமை, குற்றவுணர்வு எதுவாக இருந்தாலும் அதன் எல்லையை தொட்டுவிடும் முயற்சிதான். ஒருமுறை படித்துவிட்டு மறக்கும் சிறுகதைகள் அல்ல. நீங்கள் விட்டு விலகினாலும் அவை கிளப்பும் உணர்வுகள் உங்களை விடுவதில்லை. கவ்விப் பிடித்துவிடும்.
மருத்துவர் வேலையை முடித்ததும் நிமிர்ந்து நின்று ‘சரி, ஆறு மாதத்திற்கு பின்னர் மறுபடியும் சந்திப்போம். உங்கள் பற்கள் சேமம்’ என்றுகூறி விடை தந்தார். ’இன்று அரை மணி நேரம் பிந்தியதை எப்படி சரிக்கட்டப் போகிறீர்கள்? நிறைய மூதாட்டிகள் அறையை நிறைத்து காத்திருக்கிறார்களே’ என்றேன். அவர் மர்மமாகச் சிரித்தார். ’அவர்களுக்கு இது ஒரு கொண்டாட்ட நாள். நீங்கள் வெளியே போகும்போது உங்களுக்கு விடை கிடைக்கும்’ என்றார். நான் வெளியே வந்ததும் அத்தனை முகங்களும் யாரோ எனக்கு பின்னால் நின்று அவற்றை புகைப்படம் எடுப்பதுபோல ஒரே நேரத்தில் சிரித்தன. 16 பல், 18 பல், 21 பல், 24 பல். தி.ஜா எழுதியதுபோல தேய்ந்த பல், ஒடிந்த பல் என்று எனக்குத் தோன்றவில்லை. எண்ணிக்கைதான் தெரிந்தது.
அந்த அறையை விட்டும், தி.ஜானகிராமனை விட்டும் நான் வெளியேறினேன்.