நான் அனுப்பிய செக் திரும்பி வந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என் வாழ்நாளில் நான் எழுதிய ஆயிரக்கணக்கான காசோலைகளில் ஒன்றுகூட திரும்பியது கிடையாது. இது எனக்கு பெரும் அவமானமாகப் பட்டது. நண்பர் ஏன் சொன்னோம் என்பதுபோல எனக்கு முன் மியூசியத்தில் நிறுத்திவைத்த உருவம்போல நின்றார். அவருக்கு இது பெரிய காசு அல்ல. சொல்வதா வேண்டாமா என்று நீண்ட நேரம் விவாதித்த பின்னர்தான் என்னிடம் வந்திருக்கிறார். வங்கியை பற்றி நான் அறியவேண்டும் என நினைத்தார். அது மனதை புண்படுத்தும் என்பது அவருக்கு தெரியும். ஏனென்றால் விசயம் அந்த மாதிரி.
நண்பர் தன் மகனின் திருமணத்தை சமீபத்தில் கொழும்புக்கு சென்று அங்கு நடத்தினார். நான் வாழ்த்து அட்டையும், அதனுள் கொழும்பு வங்கி காசோலை ஒன்றையும் வைத்து திருமணப் பரிசாக அனுப்பியிருந்தேன். பரிசாக கொடுத்த காசோலைதான் திரும்பியிருந்தது. நண்பரும் மகனும் ரொறொன்ரோ திரும்பிவிட்டார்கள். புதுமணப்பெண் விசா அனுமதி பெற்று கனடா வருவதற்கு ஒருவருடமாகும் என்று சொன்னார்கள். காசோலை திரும்பிய விசயத்தை நண்பர் சொன்னபோது திகைப்பாயிருந்தது. இந்த அவமானத்தை எப்படி துடைக்கலாம் என்ற யோசனையில் அன்றைய நாளை கடத்தினேன்.
2010ம் ஆண்டு முழுக்க என்னை வங்கிகளுக்கு பிடிக்காத வருடம். நான் கணக்கு வைத்திருக்கும் எல்லா வங்கிகளும் ஏதோ ஒரு வகையில் எனக்கு பிரச்சினை கொடுத்தன. ஒரு வங்கி தவறாக பணத்தை இரண்டு தரம் அறவிட்டது. அதை நேராக்க நான் பத்து கடிதங்கள் எழுதவேண்டி நேர்ந்தது. இன்னொரு வங்கி நான் செலுத்த வந்த பணத்தை ஏற்க மறுத்தது. இப்பொழுது என்னுடைய செக்கை கொழும்பு வங்கி திருப்பிவிட்டது. அதுவும் திருமணப் பரிசாக கொடுத்த ஒரு செக்கை. இந்த வங்கி கொழும்பில் கிளை தொடங்கியபோது முதல் வாடிக்கையாளராகச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். நான் வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்தாலும் வங்கிக் கணக்கை மூடவில்லை. ரொறொன்ரோ வந்தபின்னரும் அது தொடர்ந்தது. காரணம் வேறு ஒன்றுமில்லை, என்னுடைய முதல் வங்கி என்ற ஒருவிதமான பற்றுத்தான்.
நான் கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு உதவி செய்தவர் என்னுடைய நண்பர்தான். அவருடைய புத்திமதிகள் கேட்டுத்தான் என் முடிவுகள் இருக்கும். என்ன தேவையாயிருந்தாலும், எங்கே போகவேண்டுமென்றாலும் அவர்தான் என்னை அழைத்துச் செல்வார். சமூக நல அட்டை எடுப்பதற்கு உதவி செய்தார். என்னுடைய பெயர், அப்பா பெயர், முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கேட்டார்கள். சுகாதார அட்டை விண்ணப்பித்தபோதும் அதே விவரங்களை நிரப்பவேண்டி இருந்தது. குடிவரவு அட்டைக்கும் அதேதான். நான் நண்பரை அப்போது கேட்டது நினைவுக்கு வந்தது. ’எல்லா விவரங்களும் கேட்கிறார்கள். அம்மாவின் பெயர் கேட்பதில்லையே. அது ஏன்?’ ’அம்மா உங்களை பெறமட்டும் செய்கிறார். மீதி எல்லாப் புகழும் உங்கள் அப்பாவுக்குத்தான். உலகமெங்கும் அப்படித்தான்’ என்றார்.
நண்பர் காசோலை விசயத்தை மறக்கச் சொல்லிவிட்டார். வங்கியில் போதிய பணம் இருந்தது. ஆகவே செக் திரும்பியதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் நான் குழம்பியிருந்தேன். வங்கி முகவரிக்கு கடிதம் எழுதலாம். ஆனால் அது போய்ச் சேர இரண்டு வாரம் எடுக்கும். பதில் வர மேலும் இரண்டு வாரம். கதவு மணி இருக்கும்போது ஏன் கதவைத் தட்டவேண்டும்? வங்கியின் இணையதளம் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். பதில் இல்லை. மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவதில்லை என்று ஒரு கொள்கை அவர்கள் வைத்திருக்கலாம். ஒரு வாரம் கழிந்தது. தொலைபேசியில் அழைக்கலாம் என நினைத்தால் ஒரு பிரச்சினை இருந்தது. ரொறொன்ரோவுக்கும் கொழும்புக்கும் இடையை 11 மணிநேர வித்தியாசம். எனக்கு பகல் அவர்களுக்கு இரவு; எனக்கு இரவு அவர்களுக்கு பகல். இரண்டு பேருக்கும் பொதுவான நேரம் கிடைக்கவில்லை. ஒருநாள் காலை கொழும்பு வங்கிக்கு டெலிபோன் செய்தபோது மறுபக்கம் அது எடுக்கப்பட்டது. பேசியவர் தன்னுடைய பெயர் ஜெயசேன என்றார். தான் தனியாக இரவு ஓவர்டைம் செய்வதாகவும் வங்கியில் வேறு ஒருவரும் அப்போது இல்லை என்றும் சொன்னார். ஆனால் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருப்பதுபோல பின்னால் பெரிய சத்தம் கேட்டபடியே இருந்தது. அது என்ன சத்தம் என்று கேட்டேன். அவர் ரேடியோவில் கிரிக்கெட் மாட்ச் கேட்பதாகச் சொன்னார். இலங்கை அணி வருடம் முழுக்க ஏதோ ஒரு நாட்டுடன் ஏதோ ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டுதானே இருந்தது. என்ன பிரச்சினை என்று கேட்டார். சொன்னேன். அவர் மேலாளருடைய பெயரையும் அவருடைய மின்னஞ்சலையும் தந்து அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதச் சொன்னார். நான் நன்றி கூறிவிட்டு போனை வைத்தேன்.
நான் மனேஜருக்கு என் பிரச்சினையை விளக்கி விவரமாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். என்னுடைய கணக்கில் போதிய பணம் இருக்கிறது. திருமணப் பரிசாக அனுப்பிய காசோலை திரும்பியது எனக்கு மானக்கேடாக இருக்கிறது. 50 வருடங்களாக நான் வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் முன்னொருபோதும் இப்படியான தவறு நேர்ந்தது கிடையாது. இதற்கான காரணத்தை எனக்கு உடனடியாகத் தெரிவிக்கவேண்டும். இப்படியெல்லாம் நீண்ட கடிதம் எழுதினேன். வங்கியிடமிருந்து மன்னிப்பு கேட்டு அதனிலும் நீளமான கடிதம் வருமென நினைத்தேன். ஆனால் பதில் ஒரு வரியில் வந்தது. எழுதியவருடைய பெயரையும் சேர்த்தால் ஒன்றரை வரி. அதைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சொல்ல முடியாது. என் உடம்பு ரத்தம் உடலைவிட்டு வெளியேற விரும்புவதுபோல சுழலத் தொடங்கியது. நின்றபடியே மின்னஞ்சலைப் படித்த நான் உட்கார்ந்தேன்.
புத்திகா என்பவர் கடிதத்தை எழுதியிருந்தார். கன்னிகா, சிநேகா, மல்லிகா, சரிகா போல ஒரு தமிழ் பெயர் என முதலில் நினைத்தேன். ஆனால் அவருடைய முழுப்பெயர் புத்திகா விஜயசிரீவர்த்தனா. சிங்களப் பெண். சிக்கனமானவராக இருக்கவேண்டும். இவ்வளவு வார்த்தைச் சிக்கனமாக அலுவலக கடிதம் ஒன்றை எழுத முடியாது. ’உங்கள் வங்கிக் கணக்கு உறைய வைக்கப்பட்டுவிட்டது.’ ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்ட பதில் அது. நான் அணிந்திருந்த பனியன், அதன் மேல் போட்டிருந்த சேர்ட், அதற்குமேல் தரித்த ஸ்வெட்டர் எல்லாத்தையும் தாண்டி என் இருதயம் துடிப்பது வெளியே கேட்டது. கடிதத்தின் அடியில் புத்திகாவின் நேரடி தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்ததால் நடுச் சாமம் வரைக்கும் காத்திருந்து டெலிபோனை எடுத்தேன். என்னுடைய கோபம் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டிருந்தது. ஆனாலும் மனக்கொதிப்பு அடங்கவில்லை. மறுமுனையில் புத்திகாதான் பேசினார். கொதிக்கும் தண்ணீரில் ஐஸ் கட்டியைபோட்டதுபோல அவர் குரல் இருந்தது. எனக்கே என் மனம் இத்தனை விரைவில் இவ்வளவு சாந்தம் அடைந்தது வியப்பளித்தது. ஒரு கட்டத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிடுவேனோ என்று கூடப் பயந்தேன்.
வங்கிகளில் பொதுசனத் தொடர்பு அதிகாரிகளை தேர்வு செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அநேகமாக குரல் இனிமையான பெண்களைத்தான் நியமிக்கிறார்கள். பயிற்சியின்போது மூன்று விசயங்களில் அவர்களுடைய திறன் அதிகரிக்கப்படுகிறது. பேசும் தோரணை வாடிக்கையாளர் இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்க வைக்கும் உச்சரிப்பில் இருக்கவேண்டும். வார்த்தைகளில் d வரும் இடங்களில் எல்லாம் th என உச்சரிக்க பயிற்றப்படுகிறார்கள். இரண்டாவதாக அவர்கள் கைவசம் ஒரு பதில் முன்கூட்டியே தயாராக இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும் பொருந்தக்கூடிய பொதுவான பதில். கடைசியாக விதி, விதி, விதி. அவர்கள் சொல்வது வங்கியின் சட்டதிட்டங்கள். நீங்கள் நினைப்பது தலைவிதி.
புத்திகா சொன்னது இதுதான். ’உங்களுடைய வங்கி கடந்த ஒருவருடமாக பயன்படுத்தப்படாத படியால் அந்தக் கணக்கை உறையவைத்துவிட்டார்கள். அதுதான் விதி’ என்றார். ’ஆனால் எனக்கு கடந்த ஐம்பது வருடங்களாக இப்படி ஒரு விதி இருப்பதே தெரியாது’ என்றேன். ’நீங்கள் எங்களுக்கு மிக வேண்டிய வாடிக்கையாளர். இதைச் சரிசெய்துவிடலாம்’ என்றார் புத்திகா.
நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன். ‘மருமகன் தன் மாமியாருக்கு ஒரு பிறந்தநாள் பரிசு கொடுத்தார். மாமியார் இறந்துபோனால் அவரைப் புதைப்பதற்கான சவக்குழி இடம். மதிப்பான ஓர் இடுகாட்டில் நல்ல விலை கொடுத்து அந்த இடத்தை வாங்கி பரிசாகக் கொடுத்திருந்தார். மாமியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அடுத்த பிறந்தநாள் வந்தபோது மருமகன் ஒரு பரிசும் மாமியாருக்கு தரவில்லை. மாமியார் முகத்தை நீட்டிக்கொண்டு தனக்கு பரிசு தர மறந்துவிட்டதை நினைவூட்டினார். மருமகன் சொன்னார் நான் போன பிறந்தநாளுக்கு ஒரு பரிசு வாங்கித் தந்தேன். நீங்கள் ஒரு வருடமாக அதை பயன்படுத்தவில்லை. ஆகவே திரும்ப எடுத்துக்கொண்டேன். நீங்கள் செய்வதும் இந்தக் கதைபோலத்தான் இருக்கிறது. நான் பாவிக்காவிட்டால் என் பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா?’ ’ஐயா, நாங்கள் கணக்கை மூடவில்லை. உங்கள் காசை அபகரிக்கவுமில்லை. நீங்கள் தற்போதைக்கு அதை பயன்படுத்த முடியாது. யோசிக்கவேண்டாம். இப்போது என்ன வேலை செய்கிறீர்கள்? என்றார். ‘ஒன்றுமே செய்வதில்லை. என்னுடைய வங்கிக் கணக்குகளை யார் யார் எங்கே எங்கே மூடுகிறார்களோ அவர்களை அழைத்து பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றேன். ‘ஐயா, கோபம் வேண்டாம். இந்த விவரம் எங்களுக்கு தேவை. தயவுசெய்து ஒத்துழையுங்கள்?’ நான் சொன்னேன். ‘சும்மாதான் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் வயதை கூட்டிக்கொண்டு.’ ‘கவலையை விடுங்கள். விரைவில் உங்களுக்கு ஒரு கடிதம் வரும். விஜயசிரீவர்த்தனா கையொப்பம் வைப்பார்.’ ‘அது யார்?’ ‘நான்தான்.’ என்றார்.
நான் புத்திகாவுடன் பேசி ஒரு வாரம் ஆகிவிட்டது என்றாலும் ஒன்றுமே நடக்கவில்லை. ஒருநாள் தபாலில் நீளமான, பாரமான மஞ்சள் கடித உறை வந்தது. ஒரு மனிதனை வதைப்பது என்று ஒரு வங்கி தீர்மானித்துவிட்டால் அதைச் செய்வதற்கு எத்தனை வழிவகைகள் இருக்கின்றன என்று பார்க்கும்போது பிரமிப்புத்தான் ஏற்படும். ஒரு நீளமான படிவத்தை முதலில் நான் நிரப்ப வேண்டும். ஒரு சட்டத்தரணியின் முன்னால் கையெழுத்து வைத்த சத்தியக்கடதாசி ஒன்று தயாரிக்கவேண்டும். என்னுடைய கடவுச்சீட்டுகளின் ஒளிநகல்கள் உண்மையானவை என்று கனடா வங்கி மனேஜரின் கையொப்பம் பெறவேண்டும். இவை எல்லாவற்றையும் செய்து அனுப்பினால் வங்கிக் கணக்கை மீண்டும் உயிர்ப்பித்துவிடுவார்கள். இத்தனை அலுவல்களையும் செய்து முடிப்பதற்கு எனக்கு குறைந்தது இரண்டு முழுநாட்கள் தேவையாக இருக்கும். படிவங்களை எப்படி எப்படி நிரப்பவேண்டும் என விளக்கி ஒரு நீண்ட கடிதமும் இணைத்திருந்தது. அதில் கையொப்பமிட்டவர் பெயர் புத்திகா விஜயசிரீவர்த்தனா. அவருடைய கையொப்பம் ஒற்றையின் எல்லையை தாண்டி நீண்டுபோய் கிடந்தது.
என் ஐந்தாவது விலா எலும்புக்கு கீழே யாரோ ஓங்கிக் குத்தியதுபோல வலித்தது. இனிமையாகப் பேசிய புத்திகா என்ற வங்கிப்பெண் தன் புத்தியை காட்டிவிட்டார். மீண்டும் அவருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் அனுப்பினேன். அதன் சுருக்கம் இப்படி இருந்தது. ‘நான் உங்களுடைய ஐம்பது வருட வாடிக்கையாளன். வங்கி தொடங்கியதும் கணக்கு ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். இந்த வங்கி கணக்கு எனக்கு தேவையில்லாத ஒன்று. நான் அதை நீடித்திருப்பதற்கு காரணம் ஒருவித பற்றுதான். என்னுடைய வங்கிப் பணத்தை மீட்பதற்கு நீங்கள் கூறிய வழிமுறைகளை என்னால் பின்பற்ற இயலாது. நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. ஆனால் என் பணத்தை அபகரித்து உங்கள் வங்கி கொழுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். என் கணக்கில் வங்கியில் மீந்திருக்கும் பணத்தை ஒரு தர்ம ஸ்தாபனத்திற்கு நன்கொடையாக அளித்து கணக்கை மூடிவிடுங்கள். கிழே கொடுக்கும் கையெழுத்தினால் என் முழுச் சம்மதத்தை உறுதிசெய்கிறேன்.’
சில நாட்கள் சென்றபின் இரவு பத்து மணிக்கு ஒரு தொலைபேசி வந்தது. புத்திகாதான் பேசினார். ’உங்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டது. நீங்கள் ஒரு படிவமும் நிரப்பத் தேவையில்லை. வங்கிக் கணக்கு மறுபடியும் திறக்கப்பட்டுவிட்டது. புது மணமகளுக்கு அவருடைய பரிசுப் பணத்தை கொடுத்துவிடுவோம்’ என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார். ’நான் என்ன செய்யவேண்டும்?’ என்றேன். ’வேறொன்றுமில்லை. நீங்கள் நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்’ என்றார். சரி என்றேன். ’உங்கள் பெயர்?’ சொன்னேன். ’உங்கள் அப்பா பெயர்?’ சொன்னேன். ’உங்கள் முகவரி?’ சொன்னேன். ’உங்கள் தொலைபேசி இலக்கம்?’ இப்படியாக அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியாப் பதில் இறுத்து ஒவ்வொரு பூட்டாகத் திறந்துகொண்டே வந்தேன். இன்னும் ஒரேயொரு கேள்வி. இதையும் தாண்டினால் நான் நான்தான் என்பதை நிரூபித்துவிடுவேன். இதுதான் கடைசி கடவு வார்த்தை.
’உங்கள் அம்மா பெயர்?’
அங்கேதான் ஒரு பிரச்சினை எழுந்தது. அம்மாவின் உத்தியோகபூர்வமான பெயரை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. எங்கள் ஊரில் அவரை எல்லோரும் குஞ்சியம்மா என்று செல்லப் பெயர் சொல்லித்தான் அழைத்தார்கள். ’குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்’ என்ற நாலடியார் பாடல் எனக்கு அப்போது தெரியாது. அம்மாவுக்கு நீண்ட தலைமுடி இருந்ததால் அப்படி அழைத்திருப்பார்களோ என இப்பொழுது நினைக்கிறேன். ஐயா ‘எங்க நிக்கிறீர்?’ என்றுதான் கூப்பிடுவார். எனக்கு திடுக்கென்றது. அம்மாவின் பெயர் தமிழில் நாலு எழுத்துக்கள்தான்; அதை ஆங்கிலத்தில் எழுதும்போது ஏழு எழுத்துக்கள். அதை பலவிதமாக எழுத்துக் கூட்டலாம். நான் மூன்றாவது முயற்சியில் சரியாக எழுத்துக்கூட்டி சொன்னதும் வங்கி கணக்கு திறந்துகொண்டது. புதிய மணப்பெண்ணுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டார்கள் என்ற தகவல் எனக்கு அடுத்த நாளே கிடைத்தது.
போனை வைப்பதற்கு முன்னர் கடைசியாக புத்திகா சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஐயா, ஏதோ தவறு நடந்துவிட்டது. இதை மேலே எடுக்க வேண்டாம். வேறு வேறு நாட்டில் இருந்தாலும் நாங்கள் ஒன்றுதானே?’ என்றார். ‘நாங்கள் எப்படி ஒன்றாக முடியும்? எங்களை இரண்டு சமுத்திரங்களும், ஒரு மொழியும், 11 மணித்தியாலங்களும், பத்தாயிரம் ரூபாய் செக்கும் பிரிக்கிறதே’ என்றேன். அதைக் கூறிய அந்தக் கணமே ஏன் அப்படிச் சொன்னேன் என வருந்தினேன். என் சிறுவயதிலே அம்மா இறந்துவிட்டாலும் அம்மாவை நினைக்காத நாள் கிடையாது. வங்கிப் பெண் அம்மாவை மட்டுமல்லாமல் அவர் பெயரையும் ஞாபகத்துக்கு கொண்டுவந்திருந்தார். என் முழுப்பெயரை எழுதும் ஒவ்வொரு தடவையும் அப்பாவின் பெயரையும் எழுதுகிறேன். வாழ்க்கையில் முதன் முறையாக அம்மாவின் பெயரை எழுத்துக்கூட்டியிருப்பது நினைவுக்கு வந்தது.
END