கையெழுத்து

இன்று, 2 ஜூலை 2011, ஏர்னெஸ்ட் ஹெமிங்வே இறந்து 50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. உலகத்தின் பல பாகங்களிலும் இருந்து உலகப் பிரபலமான இந்த அமெரிக்க எழுத்தாளரை பல எழுத்தாளர்களும் வாசகர்களும் நினைவுகூர்வார்கள்.

  

ஹெமிங்வே அவருடைய கடைசிக் காலங்களில் அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் கெச்சம் என்ற சிறு நகரத்தில் வாழ்ந்தார். ஒருநாள் அதிகாலை அவருடைய துப்பாக்கியுடன் ஒருவித காரணமும் இன்றி அவர் நின்றதைக் கண்ட அவர் மனைவி மேரி பதறிப்போய் குடும்ப மருத்துவரை அழைத்தார். உடனேயே ஹெமிங்வேயை ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவருக்கு மின்சார அதிர்ச்சி வைத்தியம் செய்தார்கள். ஜூன் 30ம் தேதி ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பவும் ஹெமிங்வே வீட்டுக்கு வந்தார். ஜூலை 2 அதிகாலை ஹெமிங்வே தன்னிடமிருந்த பல துப்பாக்கிகளில் அவருக்கு மிகவும் பிடித்தமான பொஸ் துப்பாக்கியை எடுத்து அதற்குள் இரண்டு ரவைகளைப் போட்டு நிறைத்தார். துப்பாக்கி குழலை வாய்க்குள் விட்டு விசையை அழுத்தி தற்கொலை செய்துகொண்டார். ஹெமிங்வே தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்டவர் என்று தெரிந்திருந்தும் அவர் மனைவி துப்பாக்கிகளை ஒளித்து வைக்காதது ஏன் என்பதுதான் ஒருவருக்கும் இன்றுவரை புரியாத மர்மம்.

  

கடைசிக் காலங்களில் ஹெமிங்வேக்கு எழுதுவதற்கு சிரமமாகி வந்தது. ஒரு கார் பழசாவதுபோல, ஒரு சைக்கிள் பழசாவதுபோல, ஒரு பேனா பழசாவதுபோல மூளையும் பழசாகக்கூடும் என்பதை ஹெமிங்வே நம்ப மறுத்தார். முதுமை நெருங்க நெருங்க புது சிந்தனைகள் மூளையில் தோன்றுவது அவ்வளவு இலகுவாயிராது என்பதை அவர் உணரவில்லை. ’ஒரு நல்ல வசனம் வேண்டும். ஒரு நல்ல வசனம் வேண்டும்’ என்பதே அவரது பிரார்த்தனை. ஹெமிங்வேக்கு  திகில் வாழ்க்கையும் சாகசமும், அச்சமும், மரண பயமும் படைப்பூக்கிகளாக இருந்தன. விளையாட்டாக துப்பாக்கி குழலை எடுத்து வாய்க்குள் நுழைத்து விசையை மெல்ல மெல்ல அழுத்தி பயமூட்டுவது அவர் பழக்கம். அந்த நேரம் ஏதாவது புது சிந்தனை வெடிப்பு அவருக்கு நிகழும். அப்படி ஏதாவது சோதனை செய்தபோது துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்து அவர் இறந்து போனார் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

  

வயது செல்லச் செல்ல அறிவு கொழுந்துவிட்டு வீசும் என்று ஹெமிங்வே  நினைத்தார். புத்தி மழுங்கும் என்பதை அவர் அறியவில்லையா அல்லது தான் விதிவிலக்கு என எண்ணினாரா  தெரியவில்லை. ‘ஒவ்வொரு முறையும் ஒரு வார்த்தையை பார்க்கும்போது அது ஒரு புது வார்த்தையாகவே எனக்கு தெரிகிறது’ என்று சொன்னவர் எந்த ஒரு வார்த்தையை பார்த்தும் அகத்தூண்டல் பெறாமல் அவதியுற்றார். இன்னும் பெரிய படைப்பு ஒன்றை படைக்கலாம் என நினைத்தார். படைப்புச்சம் இளமையில் ஏற்படுவது. ஐஸாக் அஸிமோவ் தன்னுடைய ஆகச் சிறந்த படைப்பான Nightfall சிறுகதையை அவருடைய 21 வது வயதிலே எழுதினார். அதற்கு பிறகு அவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் ஒன்றேனும் அந்தச் சிறுகதையை தாண்டவில்லை. ஐன்ஸ்டைன் தன் உச்சமான கண்டுபிடிப்புகளை தன்னுடைய 26வது வயதிலேயே நிகழ்த்திவிட்டார். கற்பனையூற்று அடைத்து மூளை பாலைவனம்போல ஆகியிருந்த காரணம்தான் ஹெமிங்வேயை துப்பாக்கியை தூக்க வைத்தது போலும். 

  

பல வருடங்களுக்கு முன்னர் ஹெமிங்வே மெக்ஸிக்கோவுக்கு பயணம் போன இடத்தில் அவரைத் தொடர்ந்து துரத்திய இரண்டு ஏழைச் சிறுவர்கள் அவரிடம் பிச்சை கேட்டனர். ஹெமிங்வேக்கு தொந்திரவு பொறுக்க முடியவில்லை. அவர்களுக்கு அவர் ஒரு சதமும் கொடுக்க விரும்பவில்லை. தன்னிடமிருந்த ஒரு பேப்பரையும் பேனாவையும் தூக்கி கொடுத்து ‘ஏதாவது எழுதி பெரிதாக சம்பாதியுங்கள்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். பாவம், அந்தச் சிறுவர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? அந்தப் பேப்பரில் கடன் பத்திரம் எழுதிக் கொடுப்பார்களா அல்லது சத்தியக் கடுதாசி தயாரிப்பார்களா?

  

ஒரு நல்ல வசனம் தோன்றாமல் தற்கொலை செய்துகொண்டவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெமிங்வே. எழுத்தறிவில்லாத அந்த ஏழைச் சிறுவர்களுக்கு ஒரு நல்ல வசனம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்த்தார்?  வெற்றுப் பேப்பரைக் கொடுக்காமல் அதிலே தன்னுடைய கையெழுத்தை வைத்து கொடுத்திருக்கலாம் என்று அவருக்கு தோன்றவில்லை. பிச்சை எடுத்த  சிறுவர்கள் இன்று பெரிய பணக்காரர்கள் ஆகியிருப்பார்கள்.

  

ஹெமிங்வேயின் கையெழுத்து நல்ல விலைக்கு போகிறதாம்.

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta