நான் உதவமுடியாது

ஒவ்வொரு முறையும் பொஸ்டனுக்கு போகும்போது இப்படித்தான் ஏதாவது ஒன்று நடந்துவிடுகிறது. இம்முறை கம்புயூட்டர் பழுதாகிவிட்டது; ஆகவே எழுத முடியவில்லை. மின்பதில்கள் போட வேண்டிய அவசியமும் இல்லை. நல்லகாலமாக வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றை இரவு பகலாக தொடர்ந்து வாசித்தேன். அதனால் கண்களுக்கு நிறைய வேலை கொடுத்தேன் என நினைக்கிறேன். அதுதான் காரணமோ என்னவோ என் இடது கண்ணில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. கண் சிவப்பாகியது. நீர் வடிந்தது. ஓர் இரவு முழுக்க ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தேன். ஒன்றுமே சரிவரவில்லை.

 

விடிந்ததும் அயலில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு போய் என் பிரச்சினையை சொன்னேன். கண் வலி தாங்க முடியவில்லை. கண்ணை அமைதியாக்குவதற்கு ஏதாவது சொட்டு மருந்து இருக்கிறதா என்று கேட்டேன். அந்தப் பெண்மணி இதற்கு ஏன் பதறவேண்டும் என எனக்கு தெரியவில்லை. ‘மன்னிக்கவேண்டும், நான் உதவமுடியாது’ என்றார்.

 

கண்வேதனையுடன் காரை ஓட்டுவதும் கடினமாகிக்கொண்டு வந்தது. போகும் வழியில் தற்செயலாக கண்ணாடிக்கு கண் பரிசோதிக்கும் இடம் ஒன்று தென்பட்டது. அங்கே போனேன். வரவேற்பறைப் பெண்ணிடம் என் பிரச்சினையை சொல்லி கண் பரிசோதிப்பவரை பார்க்க முடியுமா? என்று கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். கண் நோய்க்கு அங்கே வைத்தியம் இல்லை நான் குடும்ப வைத்தியரிடம் போகவேண்டும் என்றார். மீண்டும் ஒருமுறை கேட்டபோது ‘மன்னியுங்கள், என்னால் உதவமுடியாது’ என்று பிடிவாதமாகச் சொன்னார்.

 

முன்பொருமுறை குடும்ப வைத்தியரிடம் போயிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அங்கே போனேன். எங்கே சென்றாலும் ஒரு வரவேற்பாளினி இருப்பார். அவரைத் தாண்டுவதுதான் பெரிய காரியம். இந்தப் பெண் பொய் நகம் ஒட்டி நகத்தை நீளமாக்கியிருந்தார். பொய் இமைகளை ஒட்டி கண்களை கறுப்பு பூச்சிகள்போல மாற்றியிருந்தார். உதட்டிலே பொய்ச் சிரிப்பு. தலையை தூக்கி நான் அங்கே ஏன் வந்தேன் என்பதுபோல பார்த்தார். நான் என் கண் விருத்தாந்தத்தைக் கூறி மருத்துவரை பார்க்கமுடியுமா? என வினவினேன். அவர் மறுத்து கண் மருத்துவரைப் பார்ப்பதுதான் உசிதம் என அபிப்பிராயம் சொன்னார். நான் கனடாவில் இருந்து வந்திருக்கிறேன். ஒரு நிமிடம் அவர் என் கண்னைப் பார்த்து அறிவுரை சொன்னால் நான் அதன்படி நடப்பேன் என்றேன். அந்தப் பெண் அன்று கல் நெஞ்சத்தை அணிந்து வந்திருந்தார். ’மன்னிக்கவேண்டும். நான் உங்களுக்கு உதவ முடியாது’ என்றார். நான் சொன்னேன். ’நீங்கள் எப்போதாவது கனடாவுக்கு வந்து உங்களுக்கு இப்படியான பிரச்சினை ஏற்பட்டால் தாராளமாக என்னை தொடர்புகொள்ளலாம். நான் உதவி செய்வேன்.’

அவர் பொய் கண்மடல்களை பலதடவை அடித்து திகைத்துப்போய் என்னைப் பார்த்தார். அவர் வாய் கொஞ்சம் திறந்திருந்தது. அவர் அதை மூடுவதற்கிடையில் நான் புறப்பட்டேன். அன்று அவர் படுக்கமுன்னர் என்னைப்பற்றி குறைந்தது நாலு தடவையாவது நினைத்திருப்பார்.

 

 

இறுதியில் அவசரப் பிரிவு மருத்துவ மனைக்கு ஒருவாறு வழி விசாரித்து போய்ச் சேர்ந்தேன். புது இடம், புது மருத்துவமனை, புதிய ஆட்கள். வரவேற்பாளினி ஆதரவுடன் வரவேற்று தகவல்களை நிரப்பிக்கொண்டார். பின்னர் காத்திருக்கத் தொடங்கினேன். அவசரப்பிரிவு என்பது நோயாளிகளுக்குத்தான். மருத்துவருக்கு அல்ல. நான் காத்திருக்கும்போதே ஆம்புலன்ஸ் விபத்தில் அகப்பட்டவர்களை கொண்டு வந்து சேர்த்தது. அவர்களை எல்லாம் முதலில் பார்த்து முடிந்த பிறகு என் முறை வந்தது. உள்ளே அழைத்தார்கள்.

 

இவர் பொது மருத்துவர். பெயர் ஜாஸ்மின் கென்னடி. நடுத்தர வயதுப் பெண். கண்ணை பல கருவிகளால் சோதனை செய்தார். படம் எடுத்து அதை ஆராய்ந்துவிட்டு சொன்னார், ‘எனக்கு ஒரு நோய் அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் என் மனம் சமாதானம் அடையவில்லை. நீங்கள் உடனே ஒரு கண் மருத்துவ நிபுணரைப் பார்க்கவேண்டும்’ என்றார். சரி என்று நான் புறப்பட்டபோது தடுத்துவிட்டார். நிபுணரைத் தொலைபேசியில் அழைத்து ’என்னை உடனே பார்க்கவேண்டும்’ என்றார். அப்பொழுது மணி நாலை நெருங்கிக்கொண்டு வந்தது. நாலு மணிக்கு அவர்கள் மருத்துவ மனை மூடிவிடும். ஆனால் நிபுணர் எனக்காக காத்திருப்பதாகக் கூறினார். ஜாஸ்மின் அத்துடன் நிற்கவில்லை. நீங்கள் கண் வலியுடன் காரோட்ட முடியாது என்று சொல்லி அவராகவே ஒரு வாடகைக் காரையும் அழைத்து என்னை அனுப்பிவைத்தார்.

 

நான் மருத்துவ நிபுணரிடம் போய்ச் சேர்ந்தபோது மணி 4.30. அங்கே ஒருவரும் இல்லை. மருத்துவர் மாத்திரம் எனக்காக காத்திருந்தார். கருணை நிறைந்த மனிதர் அவர். வேண்டிய சோதனைகளைச் செய்தார். மூன்றுவிதமான மருந்துகளைத் தந்தார். அவற்றுக்கு கட்டணம் கூட எடுக்கவில்லை. எந்த நேரம் வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என்று அவருடைய செல்பேசி எண்ணைத் தந்தார். மருத்துவ நிபுணர்கள் கடவுளுக்குச் சரி. அவர் அன்று விதிகளுக்கு அப்பால், தன் கடமை எல்லையைத் தாண்டி செயல்பட்டார். அவர் என்மீது காட்டிய அன்பும், கரிசனையும் என்னால் வாழ்நாளில்  மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது..

 

இருபது வருடங்கள் இருக்கும். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழா. மண்டபத்தில் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என ஓர் இருக்கை விடாமல் குழுமியிருந்தார்கள். மாணவ மாணவிகள் கறுப்பு அங்கி அணிந்து பட்டம் பெறுவதற்காக வரிசையாக நின்றார்கள். நான் இருந்த வரிசையிலிருந்து மூன்றாவதாகவோ நாலாவதாகவோ முன்னுக்கு இருந்த வரிசை. அதிலே ஒரு குடும்பம்  மகிழ்ச்சிபொங்க உட்கார்ந்த்திருந்தது. அவர்களுடைய மகனோ மகளோ பட்டம் பெறும் நாள். ஒருவருடன் ஒருவர் உரத்து பேசிக்கொண்டும், படங்கள் எடுத்துக்கொண்டும் ஏதோ உணவை உண்டுகொண்டும் சத்தமாக விழாவை அனுபவித்தார்கள். குடும்பத்தலைவர் போலத் தோன்றியவர் கடுதாசிப் பையில் சுருட்டி எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார். திடீரென்று சாப்பாடு தொண்டையில் சிக்கி அவஸ்தையில் கைகளை ஆட்டி ஏதோ சொல்ல முயன்றார். பின்னர் மூச்சுவிடமுடியாமல் மயக்கநிலைக்கு சரிந்துவிட்டார். இன்னும் சிறிது நேரம் கழிந்தால் இறந்திருப்பார். எங்கள் வரிசையில் இருந்து ஓர் ஒல்லியான மனிதர் அவரை நோக்கி விரைந்து போனார். அந்த மனிதரின் பின்னால் நின்று இரண்டு கைகளையும் அவருடைய விலா எலும்புகளுக்கு கீழே கோர்த்து இறுக்கி அணைத்து மூன்று நாலு தரம் தன் மெல்லிய உடம்பினால் அவரை தூக்கி தூக்கி உதறினார். வாயிலே மாட்டுப்பட்டிருந்த உணவு வெளியே துள்ளி விழுந்தது. உயிர் காப்பாற்றிய மனிதர் ஒன்றுமே செய்யாததுபோல மறுபடியும் தன் இருக்கையில் போய் அமர்ந்தார். பட்டமளிப்பு விழா ஒரு தடங்கலுமின்றி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

 

ஒருவித ஆரவாரமும் செய்யாமல், பிரதி பலன் எதிர்பார்க்காமல், உதவி செய்வதால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிப்பதற்காக  உதவுபவர்கள் உலகத்தில் உண்டு.

’மன்னிக்கவேண்டும், நான் உங்களுக்கு உதவமுடியாது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். உதவமுடியாது என்று சொல்பவர்களே உலகில் அதிகம். ‘நான் உங்களுக்கு எப்படி உதவமுடியும்’ என்று கேட்பவர்கள் குறைவு, ஆனால் இருக்கிறார்கள். முதலாமவர்கள் விதிகளுக்கு கட்டுப்படுபவர்கள். அவர்களுக்கு விதிகள்தான் முக்கியம். ஒருவர் ஏதாவது உதவி கேட்டால் அவரை எப்படி அங்கிருந்து அகற்ற முடியும் என்றே யோசிப்பார்கள். இரண்டாம் வகையினர் விதிகளைப் பற்றி கவலைப்படாதவர்கள். அவர்களுக்கு மனிதநேயமே முக்கியம்.

 

இரண்டாமவர்கள் இன்னும் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது.

 

END

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta