தூக்கத்திற்கான நேரம்

 

ஒரு சாது மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்கு நாலு வேதங்களையும் கரைத்துக்குடித்த மகாபண்டிதரை சிலர் அழைத்து வந்திருந்தார்கள். பண்டிதருக்கு பன்னிரெண்டு மொழிகள் தெரியும். அவர் ஆடம்பரமாக ஆடையணிந்திருந்தார். சரிகைத் தலைப்பாவும் கைத்தடியுமாக இறுமாப்புடன் நின்றவரை கூட்டிவந்தவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ‘இவர் சகலதும் அறிந்தவர். நிறையப் படித்தவர். உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்.’ அதற்கு அந்தச் சாது இப்படி பதிலளித்தார். ‘You may know everything in this world, Sir. Tomorrow is the only thing you will never know.'

நான் பொஸ்டனில் இருக்கிறேன். ஈழத்து பூராடனார் ரொறொன்ரோவில் இறந்துபோன செய்தி எனக்கு இன்று டிசெம்பர் 22, 2010 கிடைத்தது. அப்பொழுது நான் மேலே சொன்ன கதையை நினைத்துக்கொண்டேன். சில மாதங்களுக்கு முன்னர்தான் நானும் சில நண்பர்களும் ஈழத்து பூராடனாரைச் சென்று சந்தித்தோம். பலவருடங்களாக அவரைப் பார்க்கவேண்டும் என நினைத்திருந்தாலும் வாய்ப்பு கிட்டவில்லை. அவருடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு நாங்கள் விடைபெறும் தருணம் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று. அவர் அதுவரை அந்த வருடத்தில் தான் செய்த வேலைகளை சொல்லிவிட்டு வருடம் முடிவதற்கிடையில் மூன்று புத்தகங்களின் தலைப்புகளைக் கூறி அவற்றை முடிக்கவேண்டும் என்று சொன்னார். வருடம் இன்னும் முடிவுக்கு வரவில்லை ஆனால் அவருடைய ஆயுள் முடிந்துவிட்டது. எனக்கு சொன்னமாதிரி அந்த மூன்று புத்தகங்களையும் முடித்தாரோ என்னவோ தெரியாது.

ஈழத்து பூராடனாரைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் நான் ஆச்சரியப்பட்டுக்கொண்டே வந்தேன். நாங்கள் அவரைப் பார்ப்பதற்கு சில வாரங்கள் முன்னர்தான் அவர் ஆஸ்பத்திரியில் தீவிரசிகிச்சை பகுதியில் இருந்து வெளியே வந்திருந்தார். உடல் பலவீனமாக இருந்தது. ஆனால் அவர் மனம் முழுக்க அந்தப் புத்தகங்களை முடிக்கவேண்டும் என்ற வேட்கை நிறைந்திருந்தது. 250 புத்தகங்களுக்கு மேல் எழுதிவிட்டார். ஆனாலும் அவருக்கு போதவில்லை. ’எழுத்தாளர் ஓய்வதில்லை’ என்ற கூற்றை நிரூபித்துக்கொண்டு இருந்தார்.

நான் விடைபெற்று வந்த காட்சி இப்பொழுதும் மனதில் நிற்கிறது. நான் கைகொடுத்தபோது எனக்குத் தெரியும் அதுவே அவரைப் பார்ப்பது கடைசி என்று. அவர் சுழல் நாற்காலியில் உட்கார்ந்தபடியே கையை நீட்டினார். ஒரு குழந்தைப் பிள்ளையின் கைபோல அது மிருதுவாக இருந்தது.  அவர் முன் உள்ள புத்தகத் தட்டில் அவர் எழுதிய அத்தனை புத்தகங்களும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. 250 புத்தகங்களுக்கும் மேலே. எத்தனை எத்தனை லட்சம் வார்த்தைகள். அவர் மொழிபெயர்த்த ஹோமரின் ஒடிசி காவியத்தில் ஓர் இடம் வரும். நாயகன் ஒடிசியஸ் அல்சினஸிடம் பேசுகிறான். ‘வார்த்தைகளுக்கு ஒரு நேரம் இருக்கிறது. தூக்கத்துக்கும் ஒரு நேரம் இருக்கிறது.’

வார்த்தைகளுக்கான நேரம் முடிந்துவிட்டது. நீண்ட தூக்கத்துக்கான நேரம் இது. தூங்குங்கள் நண்பரே, தூங்குங்கள்.

http://amuttu.com/index.php?view=pages&id=226
 

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta