உயிர்மை பதிப்பகம் சார்பாக என்னுடைய நூலான ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ வெளியீட்டு விழா சென்னையில் 1.1.2012 அன்று நடைபெற்றது. திரு அசோகமித்திரன் வெளியிட திரு சு.கி.ஜெயகரன் நூலை பெற்றுக்கொண்டார். திரு எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் கிடைக்கும்.
கீழே வருவது நூலின் சமர்ப்பணமும் முன்னுரையும்.
சமர்ப்பணம்
புறநானூறில் ஒரு வாழ்த்து வரும். அதுவே நாங்கள் ஒருவருக்கு சொல்லக்கூடிய ஆகச் சிறந்த வாழ்த்து. ‘என்னுடைய வாழ்நாளும் சேர்த்து நீ வாழவேண்டும்.’ ஆனால் வாழ்த்தை பெறுபவர் பெருவலியுடன் வாழ்பவராய் இருந்தால் அவருடைய ஆயுளை நீட்டி என்ன பயன்? ஆர்மினியர்களிடம் ஒரு வாழ்த்து இருக்கிறது. ‘சானெட் ரானெம்.’ உன் வலியை நான் எடுத்துக் கொள்கிறேன். அது இன்னும் சிறந்ததாகப் படுகிறது.
மருத்துவரின் வரவேற்பறையில் நானும், தீராத முதுகு வலியுடன் அவதிப்படும் என் மனைவியும் காத்திருந்தோம். எங்களுக்குப் பக்கத்தில் ஒரு ரஸ்யப் பெண் உட்கார்ந்திருந்தார். புருவங்கள் செதுக்கி, நகங்கள் பூசப்பட்டு, அளவான ஒப்பனையுடன் காணப்பட்ட அவர் புகழ்பெற்ற பாலே நடனக்காரி. ரொறொன்ரோவில் 20 வருடங்களாக பாலே நடன பயிற்சிக்கூடத்தை நடத்தி வருகிறார். இரண்டு வருடங்களாக அவருக்கு தாங்க முடியாத முதுகு வலி. பல நாடுகளில் பல மருத்துவர்களிடம் பலவிதமான சிகிச்சைகள் பெற்றாகிவிட்டது. இப்பொழுது வலி நிவாரணம் என்பதை மறக்கச் சொல்லிவிட்டு ’வலியுடன் வாழ்வது எப்படி’ என்று அவருக்கு பயிற்சியளிக்கிறார்கள். 24 மணி நேரமும் வலி அவருடன் வாழ்கிறது.
இந்தப் புத்தகம் என் மனைவி ரஞ்சனிக்கும், வலியோடு வாழும் அத்தனை உலகத்து சீவன்களுக்கும். அவர்கள் வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்.
முன்னுரை
என்னுடைய எழுத்தாள நண்பருக்கு பேராசை. அது எப்படியாவது சில நாட்களை சிறையிலே கழிப்பது. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துபோனார். ஏன் சிறைவாசம் முக்கியம் என்று அவரிடம் கேட்டபோது ‘நல்ல நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் சிறைவாசம் அனுபவித்தவர்கள்தான். ஓ ஹென்றி, ஜீன் ஜெனே, ஒஸ்கார் வைல்டு, டோஸ்ரோவ்ஸ்கி அனைவரும் சிறை சென்றவர்களே. எழுத்தாளர் கல்கிகூட சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்தானே. சிறைக்கூட அனுபவம்தான் ஒருவர் வாழ்க்கையை பூரணமாக்கும். அவர்கள் எழுத்து உன்னதமாக அமைந்ததற்கு அதுதான் காரணம்’ என்று சொல்வார்.
அனுபவத்தை தேடி அலைவதுதான் எழுத்தாளர்களுக்கு வேலை. அதில் முக்கியமானவர் ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ். இவர் யூலிசிஸ் நாவல் எழுதிய காலகட்டத்தில் தன் மனைவி நோராவை வேறு ஆண்மேல் காதல் வயப்படச் சொல்லி வற்புறுத்தினார். அப்பொழுதுதான் ஒரு கணவன் மனதில் ஏற்படக்கூடிய குரூரமான பொறாமை உணர்ச்சியை தன்னால் நாவலில் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்று நினைத்தார். ஒரு முறை ஜோய்ஸும், அவர் மனைவி நோராவும் எழுத்தாளர் ஹெமிங்வேயை சந்தித்தார்கள். அப்பொழுது ஹெமிங்வேயிடம் நோரா அவர் அடுத்த தடவை சிங்க வேட்டையாடுவதற்கு ஆப்பிரிக்காவுக்கு செல்லும்போது தன் கணவரையும் அழைத்துப் போகும்படி வேண்டினார். ஹெமிங்வே ஏனென்று கேட்க ‘அந்த அனுபவம் என் கணவரின் எழுத்துக்கு உபயோகமாயிருக்கும் அல்லவா?’ என்று சொன்னாராம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜோய்ஸினால் வேட்டைக்கு போக முடியவில்லை. அவருடைய கண்பார்வை மங்கிக்கொண்டு வந்தது. ‘இந்தக் கண்களால் நான் எப்படி சிங்கத்தை பார்ப்பேன்’ என்று சொல்லிவிட்டார்.
வித்தியாசமான அனுபவங்களை தேடிப் போவது எழுத்தாளர்களின் இயற்கை. பல எழுத்தாளர்கள் இதற்காகவே தொடர்ந்து பயணம் செய்வார்கள். சமீபத்தில் டேவிட் ஒவன் என்ற எழுத்தாளர் நியூயோர்க்கர் வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவரை நான் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு விழாவில் சந்தித்திருந்தேன். பின்னர் அவரை நேர்காணல் செய்து ஒரு கட்டுரையும் எழுதினேன். அவர் நியூயோர்க்கரில் எழுதிய கட்டுரை எனக்கு பிரமிப்பூட்டியது. சாகசத்தை தேடிப் போவது அவர் வழக்கம். எனினும் அவர் வர்ணித்தது மாதிரியான அனுபவத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
துப்பாக்கி குண்டுகளைத் தடுக்கும் ஆடைகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் கொலம்பியாவில் இருக்கிறது. இந்த நிறுவனம்தான் உலகத்து பிரபலர்களுக்கு ( செல்வந்தர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் ) ரவை தடுப்பு ஆடைகளை தயாரிக்கும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவியேற்பு விழா அன்று அவருக்கு இந்த நிறுவனம்தான் ரவை தடுப்பு ஆடையை தயாரித்துக் கொடுத்தது என்பது உறுதிசெய்யப் படாத தகவல். டேவிட் இந்த தொழிற்சாலைக்கு சென்று அதைப் பார்வையிட்டு, அதன் உரிமையாளரையும் ஊழியர்களையும் சந்தித்த பின்னர் கட்டுரையை எழுதியிருந்தார்.
பல வருடங்களுக்கு முன்னர் A Fistful of Dollars படம் வெளிவந்திருந்தது. அதில் பெயரில்லாத கதாநாயகனாக கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்திருப்பார். ஓர் இடத்தில் கதாநாயகன் எதிரியிடம் ‘இங்கே சுடு’ என்று சொல்லி நெஞ்சைக் காட்டுவார். அவன் சுடுவான் ஆனால் குண்டு தெறித்துப் போய்விடும். கதாநாயகன் ஆடைக்குள் மறைத்து இரும்புத் தகடு ஒன்றை வைத்திருந்ததுதான் காரணம். ரவை தடுப்பு ஆடைகள் தயாரிக்கும்போதும் இது போன்ற இரும்புத் தகடுகள் ஆடைகளுக்கு ஏற்றமாதிரி பொருத்தப் பட்டிருக்கும். ஆடைகளின் தரத்தை நிர்ணயிக்க அவர்கள் உருவாக்கியிருக்கும் விபரீதமான முறைதான் இந்த ஆடைகள் உலகப் பிரபலமானதற்கு காரணம். அந்த தொழிற்சாலையில் 200 பேர் வேலை செய்தார்கள். ஆடைகளை சோதிக்க அவர்களில் ஒருவர் ஆடையை அணிந்துகொள்வார்; இன்னொருவர் சுடுவார். இந்த முறையில் ஆடையின் தரம் நூறு சத வீதம் உத்தரவாதம் தரும் விதமாக பாதுகாக்கப்பட்டது.
டேவிட் ஒவன் தொழிற்சாலையை பார்வையிடச் சென்றபோது இவர்களின் தரக்கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்தார். அவர்கள் தயாரித்த ஆடை ஒன்றை அணிந்து நிற்க, தொழிற்சாலையின் உரிமையாளர் அவருடைய நடுநெஞ்சில் சுட்டார். பின்னர் தீர்ந்துபோன ரவையை எடுத்து பரிசோதித்தார். ‘அது சப்பளிந்த காளான்போல இருந்தது’ என்று டேவிட் பின்னர் தன் கட்டுரையில் எழுதினார். நான் டேவிட்டை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ’உண்மையிலேயே நீங்கள் உங்கள் நெஞ்சில் சுட அனுமதித்தீர்களா?’ என்றேன். அதற்கு அவர் ’மிகவும் மகிழ்ச்சியாக அனுமதித்தேன்’ என்று சொல்லிவிட்டு அதை நிரூபிப்பதற்கு அப்போது எடுத்த காணொளி படம் ஒன்றை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பிவைத்தார். நான் சொன்னேன். ’நீங்கள் பெரிய எழுத்தாளர். இப்படி அபாயத்தை வரவேற்பது உண்மையில் அவசியமா?’ ‘எழுத்தாளருக்கு அனுபவம் முக்கியம். அது இல்லாமல் நான் எப்படி உண்மைத்தன்மையுடன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கக்கூடும்?’ என்றார்.
ஓர் அனுபவத்துக்காக உயிரை தூசிபோல மதிக்கும் எழுத்தாளர்கள் நிறைய இருக்கிறார்கள். என்னிடம், சக எழுத்தாளர்களும் வாசகர்களும் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. ’நீங்கள் எழுதும் கட்டுரைச் சம்பவங்கள் உண்மையானவையா, அல்லது அவை உங்கள் மூளையில் உதித்த கற்பனைக் கதைகளா?’ நான் கற்பனை என்று சொன்னால் கேட்டவர் முகம் விழுந்துவிடும். அவர் உண்மையை எதிர்பார்க்கிறார். நான் உண்மை என்று சொன்னால் என் முகம் விழுந்து போகிறது. முற்றிலும் உண்மையான ஒரு சம்பவத்தை எழுதுவதற்கு எழுத்தாளர் எதற்கு? ஆகவே நான் சொல்வேன் ‘உண்மையும் கற்பனையும் கலந்தது’ என்று. வாசகருக்கு மகிழ்ச்சி, எனக்கும் திருப்தி.
நான் அனுபவங்களைத் தேடிப்போனது குறைவு. சாகசங்களில் ஆசை இருக்கும் அளவுக்கு துணிச்சல் கிடையாது. ஆனால் அனுபவங்கள் என்னைத் தேடி வரும். இந்த நூலில் நான் எழுதியிருப்பவை அப்படியான சொந்த அனுபவங்களைத்தான். சமையல் குறிப்புகளில் உப்பு ‘தேவையான அளவு’ என்று எழுதியிருக்கும். அதுபோல கற்பனை ‘தேவையான அளவு.’ சில கட்டுரைகளை பத்திரிகைகளுக்கு எழுதினேன். சில என் இணையதளத்தில் வெளியாகின. இன்னும் சில நாட்குறிப்புகளாக நான் அவ்வப்போது எழுதியவை. இவை காலம், உயிர்மை, தமிழர் தகவல், தீராநதி, குமுதம், ஆனந்த விகடன், கூர், தாய் வீடு, விளம்பரம் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமானவை. இந்த ஆசிரியர்களுக்கு என் நன்றி.
நூலை சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகம் மனுஷ்ய புத்திரனையும், நூலை வடிவமைத்த செல்வியையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
13 ஒக்டோபர் 2011 அ.முத்துலிங்கம்
ரொறொன்ரோ