சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புத்தகப் பார்சல் வந்தது. நான் அமேஸன்.கொம்மில் ஆணை கொடுத்த புத்தகங்கள்தான். அவசரமாகப் பார்சலைப் பிரித்து புத்தகங்களை எடுத்து கையிலே பிடித்து தடவி, விரித்து. முகர்ந்து பார்த்து அவற்றை படிப்பதற்கு தயாரானேன். ஆனால் வழக்கம்போல எதை முதலில் படிப்பது என்பதில் குழப்பம். ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அது நான் ஆணை கொடுக்காத புத்தகம், எப்படியோ தவறுதலாக பொதியில் சேர்க்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருமுறையும் முன்பு நடந்ததில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்சநேரம் விழித்தேன். தொலைபேசியில் புத்தகம் அனுப்பியவர்களை அழைத்து இப்படி நடந்துவிட்டது என்று சொன்னதும் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். ‘உங்களுக்கு சிரமம் தந்துவிட்டோம்,. இனிமேல் இதுபோல தவறு நேராமல் பார்த்துக்கொள்வோம். நீங்கள் புத்தகத்துக்கு கட்டிய பணத்தை திரும்பவும் உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுகிறோம்’ என்றார்கள்.
‘அது எல்லாம் சரி. ஆனால் புத்தகத்தை நான் என்ன செய்வது?’ சிறிது நேரம் மறுபக்கத்தில் ஒரு பேச்சும் இல்லை. ‘அது எங்கள் தவறுதான். அதை திருப்பி அனுப்புவதானால் உங்களுக்கு வேண்டாத தபால் செலவு ஏற்படும். நீங்களே அதை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பதில் வந்தது. இலவசமாகக் கிடைத்த புத்தகத்தை திறந்து பார்த்தேன். எட்கார் அலன்போ என்ற அமெரிக்க எழுத்தாளருடைய புத்தகத்தில் அவருடைய புகழ்பெற்ற The Raven கவிதை இருந்தது. அமெரிக்காவில் அதிகம் படிக்கப்பட்ட கவிதை இதுதான் என நினைக்கிறேன். அமெரிக்க பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் இந்தக் கவிதை அநேகமாக இருக்கும். அதை ஒரு முறை படித்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. எட்கார் அலன்போ இந்தக் கவிதையை தான் எழுதிய வரலாற்றை கட்டுரையாக எழுதியிருக்கிறார். எப்படி கவிதைக்கான உத்வேகம் தோன்றியது, எப்படி திட்டமிட்டார், எப்படி வார்த்தைகளை தேர்வு செய்தார், எப்படி வரி வரியாக உயிர் கொடுத்தார் போன்ற விவரங்கள் வெளிப்படையாகக் கொடுக்கப்பட்டிருந்தன. அதைப் படித்த நான் திடுக்கிட்டேன்.
அவருடைய திட்டமிடல் இப்படி நடந்தது. முதலில் சோகமாக ஏதாவது எழுதவேண்டும் என தீர்மானிக்கிறார். அதைத் தொடர்ந்து ஒரு வார்த்தை அந்தக் கவிதையில் திருப்பி திருப்பி வந்தால் நல்லாயிருக்கும் என்று யோசனை போகிறது. அடுத்து தேர்வு செய்யப்படும் வார்த்தையில் என்ன உயிரெழுத்தும் என்ன மெய்யெழுத்தும் இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யமுடியாமல் தடுமாறுகிறார். பின்னர் அந்த எழுத்துக்கள் o மற்றும் r எனத் தீர்மானிக்கிறார். அவை இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் எழுகிறது. nevermore என்பதுதான் வார்த்தை. கவிதையை எழுதுகிறார். அதில் nevermore என்ற வார்த்தை 11 தடவை வருகிறது. கவிதை வெளிவந்ததும் உலகப் புகழ் பெறுகிறது. ( விரும்புகிறவர்கள் கூகிளில் தேடி கவிதையை படித்துக்கொள்ளலாம்.)
அவர் எழுதிய கட்டுரையை படித்தபின் கவிதையை மறுபடியும் படித்துப் பார்த்தேன். அது சாதாரணமானதாகவே இருந்தது. ஒரு கட்டடம் கட்டுவது, ரோட்டுப் போடுவது, திருமண விருந்துக்கு ஆயத்தம் செய்வதுபோல திட்டமிட்டு கவிதை படைப்பதை நான் கேள்விப் பட்டதே இல்லை. கவிதை படைக்கும்போது எழுத்தாளரையும் மீறி ஏதாவது நடக்கவேண்டும். ஏமாற்றமாக இருந்தது.
ஒரு பாலஸ்தீனியக் குழந்தையின் கல்லறையில் எழுதிய கவிதை இப்படி போகிறது. இதை எழுதியவர் மைக்கேல் பேர்ச் ( Michael Burch) என்ற கவிஞர்.
I lived as best as I could
then I died.
Be careful where you step
the grave is wide.
நான் எத்தனை சிறப்பாக வாழமுடியுமோ
அப்படி வாழ்ந்தேன்.
பின்னர் இறந்தேன்.
உங்கள் காலடிகளை கவனமாக வையுங்கள்.
கல்லறை மிக அகலமானது.
இந்தக் கவிதை இறந்துபோன பாலஸ்தீனியக் குழந்தைக்காக மட்டும் எழுதப்படவில்லை. ஈழத்துக் குழந்தைக்கும் பொருந்தும். பொஸ்னியக் குழந்தைக்கும் பொருந்தும். ஆப்பிரிக்கக் குழந்தைக்கும் பொருந்தும். ஒரு கிராமத்துக் குழந்தைக்கு நேர்ந்ததை எடுத்து உலகத்துக்கு பொதுவானதாக ஆக்குவதுதான் சிறந்த கவிதை. திட்டமிடாத கவிதை.
பிரபல எழுத்தாளர் சு.ராவின் மனைவி கமலா எழுதிய ’நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலை சமீபத்தில் படித்தேன். அதில் அவர் தனது சின்ன வயதுச் சம்பவங்களை நினைவு மீட்டிருக்கிறார். தினமும் அவருக்கும் அவருடைய அண்ணன்மாருக்கும் இடையில் சண்டை மூளும். ’விளக்கு இழுக்கும்’ சண்டை. படிக்கும்போது யார் பக்கம் அதிக வெளிச்சம் விழவேண்டும் என்பதற்கான போராட்டம். ஆப்பிரிக்காவில் நான் இருந்தபோது இந்தச் சண்டையை பார்த்திருக்கிறேன். சிறு வயதில் எங்கள் வீட்டில் விளக்கு வைத்ததும் இந்தச் சண்டை தொடங்கிவிடும். அண்ணன் தங்கைகளுக்கு இடையில் மட்டுமே இந்தச் சண்டை விருத்தி அடையும். யோசித்து பார்க்கும்போது இது சண்டையே அல்ல. அன்பின் வெளிப்பாடு.
ஈழத்துப் பெண்ணான மயூ மனோவின் கவிதை ஒன்று இதைச் சொல்கிறது. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் விளக்கு இழுப்பு சண்டை படிப்பு மேசையில் ஆரம்பித்து படுக்கையிலும் தொடர்கிறது, அம்மாவின்மேல் யார் கால் போடுவது என்று. கவிதை இப்படி முடிவுக்கு வருகிறது.
ஆனாலும் பார்
அம்மாவின் காலுக்காய்
மாறி மாறி உதைபட்டு
பின்னிரவில்
அவளுக்கு அங்காலும் இங்காலுமாய்
உறங்கிவிடும் நமக்கிடையே
அப்போது விழுந்து கிடந்திருக்க வேண்டும்
நாம் கவனித்தேயிராத
இந்த மௌனம்.
http://mayoomano.blogspot.com/ என்ற அவருடைய வலைப்பூவில் முழுக்கவிதையையும் படிக்கலாம். மனதின் அடியிலிருந்து அப்படியே முகிழ்த்து வருவது.
திட்டமிடாத கவிதை.
END