இந்த வார விகடனில் எழுத்தாளர் ராஜு முருகன் எழுதியது. இதை நண்பர் வேல்முருகன் எனக்கு பொஸ்டனில் இருந்து அனுப்பியிருக்கிறார். நன்றி.
அ.முத்துலிங்கத்தின் கதைகள் எனக்குப் புலம்பெயர்வின் சிலிர்க்கச் செய்யும் ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டே இருக்கின்றன. தாய் நிலத்தின் தீராத நினைவுகளைச் சதா மீட்டிக் கொண்டே, இளைப்பாற ஒரு நிழல் இன்றி, சிறகுகள் வலிக்க வலிக்கப் பறந்து கொண்டே இருக்கும் ஓர் ஏதிலிப் பறவை யின் அபாரமான பாடல்கள் அவை. எத்தனை தேசங்கள்… எத்தனை மனிதர் கள்… எத்தனை கதைகள்… புலம்பெயர்வின் பாதை எங்கும் முத்துலிங்கம் திறந்து காட்டிக்கொண்டே போகும் மனித உணர்ச்சிகள் நாம் கண்டு உணராதவை. அவரது 'அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா? இவர் சூடானில் இருந்தபோது அங்கே இவருக்கு அலி என்ற நண்பர் இருப்பார். அலிக்குப் பல நாடுகளில் சுற்றிக்கொண்டு இருக்கிற வேலை. அதனால் நியூயார்க், டோக்கியோ என எதாவது ஒரு ஊரில் இருந்து இவர் வீட்டுக்குப் போன் பண்ணி 'அங்கே இப்ப என்ன நேரம்?’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார். பெரும்பாலும் அது நள்ளிரவாக இருப்பதால் இவர் டென்ஷனாவார். ஒருமுறை அவர் போன் செய்து தனக்கு ஜப்பானுக்கு மாற்றலாகிவிட்ட தால் அங்கேயே போகப்போகிறோம் என்பார்.
வீட்டைக் காலி பண்ணிக்கொண்டு போகும்போது அலியின் மகள் நுஸ்ரத், முத்துலிங்கத்தின் வீட்டில் இருந்து ஒரு முக்கியமான சரித்திரப் புத்தகத்தை எடுத் துப் போய்விடுவாள். இது சில நாட்கள் கழித்துத்தான் இவர்களுக்குத் தெரியும். 'புத்தகத்தைத் திருடிப் போய்விட்டாள். திரும்ப போன் பண்ணும்போது அதைக் கேட்க வேண்டும்’ எனக் கோபமாக இருப் பார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு அலி போன் பண்ணும்போது 'அங்கே இப்ப என்ன நேரம்’ என ஆரம்பிக்க மாட்டார். குரல் தடுமாற அவர் பேசும்போதே 'புத்தகத்தைக் கேளுங்க’ என இங்கே மனைவி சைகை செய்வார். அதற்குள் அலி அழுதபடி நுஸ்ரத் மூளையில் ரத்த நாளம் வெடித்துச் செத்துப்போன தகவலைச் சொல்வார். இதன் பிறகு அந்தக் கதையின் இறுதி வரிகளை முத்து லிங்கம் இப்படி முடிக்கிறார்… 'திருட்டுப்போன அதே அளவுக்கு வேறு ஒரு புத்தகத்தை என் மனைவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனபடியால், என்னுடைய புத்தக செல்ஃபில் செவ்வக வடிவான ஓட்டையன்று, நாங்கள் சூடானை விடும் வரைக்கும் அப்படியே நிரப்பப்படாமல் இருந்தது, உதிர்ந்துபோன கிழவரின் முன்பல்லைப் போல, எப்பவும் ஞாபகப்படுத்தியபடி!’ அட… எவ்வளவு உண்மை!
தொலைத்துவிட்டு வந்திருக்கும் நிலங்களும் வீடுகளும் மனிதர்களுமாக நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன நிரப் பப்படாத ஒரு புத்தக செல்ஃப்… உதிர்ந்து போன ஒரு கிழவனின் பல்!