எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.
இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.
’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.