மனுஷ்யபுத்திரனின் கேள்வி.

சமீபத்தில் உயிர்மை பத்திரிகையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் என்னிடம் உயிர்மை பத்திரிகைக்காக ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி இதுதான்.

புலம்பெயர் எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தா அல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா?

என்னுடைய பதில் இது.

பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த எழுத்தாளர்’ என்று ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. நான் திடுக்கிட்டுவிட்டேன். அப்பொழுது அந்தச் சொல்கூட எனக்கு பரிச்சயமாக இருக்கவில்லை. நான் இலங்கையில் இருந்தபோது எழுதினேன்; பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் எழுதினேன். எனவே நண்பர் என்னை எப்படி அந்த வகைப்பாட்டுக்குள் அடக்கினார் என்பது தெரியவில்லை. நான் மறுபடியும் இலங்கைக்கு போய் அங்கேயிருந்து எழுதினால் நான் யார் என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. புலம் பெயர்ந்தவர் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் என்றால் அது தமிழில் பல நூறு வருடங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. சத்திமுற்றப் புலவரின் ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ பாடலில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் ’செலவழுங்குதல்’ என்ற துறைகூட இருக்கிறது. பொருள்தேட வெளியூருக்குப் புறப்பட்ட தலைவன், தலைவியின் துயரத்தை தாங்கமுடியாமல்  பயணத்தை நிறுத்திவிடுவது.

அகில் சர்மா என்ற இந்திய அமெரிக்கர் ஆங்கிலத்தில் எழுதுகிறார். இவர் ஒரு மில்லியன் டொலர் சம்பள உத்தியோகத்தை துறந்துவிட்டு முழுநேர எழுத்தாளராகி பிரபலமானவர். இவரிடம் ஒருமுறை ’நீங்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளரா?’ என்று கேட்டேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. ’புலம்பெயர்ந்துவிட்டபடியால் ஒருவர் எழுதுவது புலம்பெயர் இலக்கியமா? பத்திரிகைகள் வசதிக்காக ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டுவார்கள். மருத்துவர் வியாதிகளுக்கு பெயர் சூட்டுவதுபோல. எழுத்தாளர் இதுபற்றி அலட்டிக்கொள்ளக் கூடாது. அவர் எழுதுவது உலகத்துக்கு பொதுவான மனித உணர்வுகளை பிரதிபலிப்பதுதான் முக்கியம்,’ என்றார்.

புலம்பெயர்ந்து எழுதியவர்களில் உடனே நினைவுக்கு வருபவர் நோபல் பரிசு பெற்ற ஐஸாக் பஸிவிஸ் சிங்கர் என்ற போலந்து யூத எழுத்தாளர். அவர் 33 வயதிலேயே அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தாலும்  வாழ்நாள் முழுக்க போலந்து யூதர்களைப்பற்றியே எழுதினார். இவரால் தன்னைச் சுற்றி வாழும் மற்றைய மக்களைப்பற்றி நினைக்க முடியவில்லை. மைக்கேல் ஒண்டாச்சி இலங்கையில் பிறந்து 12 வயதில் இலங்கையை விட்டு வெளியேறியவர். அவர் கடைசியாக எழுதிய The Cat’s Table என்ற நாவல் பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை விட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்ட கப்பல் பயணத்தைப் பற்றி சொல்கிறது. இலங்கையில் அவர் அனுபவித்த அந்தக் கால வாழ்க்கையை வர்ணிக்கிறார். இலங்கையைவிட்டு 56 வருடங்களுக்கு முன்னர் இவர் வெளியேறிவிட்டாலும் இலங்கை இவரை விட்டு இன்னும் வெளியேறவில்லை.

எழுத்திலே புலம்பெயர்ந்த எழுத்து புலம்பெயராத எழுத்து என்ற வகைப்பாடு கிடையாது. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என இரண்டு பிரிவுதான். புதுமைப்பித்தன் இலங்கைக்கு போனது கிடையாது. ஆனால் அவர் துன்பக்கேணி என்றொரு அருமையான சிறுகதையை இலங்கைப் பின்னணியில் புனைந்திருக்கிறார். காஃப்கா அமெரிக்கா போனது கிடையாது, ஆனால் அவர் ’அமெரிக்கா’ என்றொரு  நாவல் எழுதியிருக்கிறார். நல்ல எழுத்துக்கு தேவை கற்பனைவளம். ஐம்பது வருடங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தன்னைச்சுற்றி வாழும் மக்களை சட்டை செய்யாமல் தன் மக்களைப் பற்றியே சிலர் எழுதுகிறார்கள். அதே சமயம் புலம் பெயராமலேயே உலக மக்களை நினைத்து எழுதுபவர்களும் உண்டு. எழுத்து என்பது இவை எல்லாவற்றையும் தாண்டி மனித குலத்தை நோக்கி முன்னேறுவது.

ஸ்வீடனில் உள்ள ஒரு தச்சு வேலைக்காரர் பைன் மரத்திலே தளபாடங்கள் செய்வார்; அமெரிக்கர் ஓக் மரத்தில் செய்வார்; இந்தியர் தேக்கு மரத்தில் செய்வார். இவர்களை ’பைன்மர தச்சுவேலைக்காரர்’, ’ஓக் மர தச்சுவேலைக்காரர்’, ’தேக்குமர தச்சுவேலைக்காரர்’ என நாங்கள் விளிப்பதில்லை. எல்லோரையும் ’தச்சுவேலைக்காரர்’ என்றுதான் சொல்லுவோம். அதேமாதிரி ஈழத்து எழுத்தாளர், தலித் எழுத்தாளர், பெண்ணிய எழுத்தாளர், புலம்பெயர் எழுத்தாளர் என்பதெல்லாம் ஒருவிதமான வகைப்படுத்தல்தான். அமெரிக்காவில் நான் என்னை ’எழுத்தாளர்’ என்று அறிமுகம் செய்து கொள்வேன். என்ன மொழியில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் ’தமிழ்’ என்று சொல்வேன். செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒருவரை சந்திக்கும்போது என்னை ’பூமி எழுத்தாளர்’ என்று அறிமுகப்படுத்திக்கொள்வேன். இலக்கியம் என்பது உண்மைக்கான தேடுதல். பூமியில் எங்கேயிருந்தும் அதை ஆரம்பிக்கலாம்.  

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta