நைரோபியில் Isak Dinesen வாழ்ந்த வீட்டை அருங்காட்சியமாக மாற்றியிருக்கிறார்கள். நான் அங்கே வாழ்ந்த நாட்களில் இந்த மியூசியத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். ஐஸக் டெனிஸனின் படுக்கை அறையையும், அவர் எழுதிய மேசையையும், உட்கார்ந்த கதிரையையும், எழுதிய பேனையயும், படித்த புத்தகங்களையும் அவர்கள் பாதுகாத்தார்கள். நான் அவருடைய ‘Out of Africa’ நாவலை படித்திருந்தேன். நாவலைப் படித்தபோது பலதடவை இவருக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை என நினைத்திருக்கிறேன். அப்படி உலகத்தைப் புரட்டிப்போடும் எழுத்து. 1954ல் ஏர்னஸ்ட் ஹெமிங்வேக்கு இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைத்தது. அப்போது அவர் ‘இந்தப் பரிசை ஐஸக் டெனிஸனுக்கு கொடுத்திருந்தால் நான் இன்னும் மேலாக மகிழ்ச்சியடைந்திருப்பேன்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார்.
ஐஸக் டெனிஸனுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை என்ற மர்மம் சமீபத்தில் விடுபட்டிருக்கிறது. 1959ல் நோபல் நடுவர் குழு இவரை பரிசுக்கு தேர்ந்தெடுத்தது. ஆனால் அவர் டென்மார்க் தேசத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அந்தப் பரிசை கொடுக்கமுடியவில்லை. டென்மார்க், ஸ்வீடன், நோர்வே மூன்று நாடுகளும் ’ஸ்காண்டினேவியா’ என்று அறியப்படும். டென்மார்க்கில் பிறந்த ஒருவருக்கு பரிசு வழங்கினால் அந்த பரிசு உலகத்தன்மையை இழந்துவிடும் என்று கருதினார்கள். டென்மார்க் நாட்டில் பிறந்திருந்த காரணத்தால் ஐஸக் டெனிஸனுக்கு தகுதி இருந்தும் பரிசு வழங்கப்படவில்லை.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட என்னுடைய ‘அமெரிக்க உளவாளி’ நூல் 2010ல் வெளிவந்தது. அதற்கு சமீபத்தில் திருப்பூர் தமிழ்ச் சங்கம் பரிசளித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, பல நாடுகளில் அலைந்து, கனடாவில் வசிக்கும் எனக்கு இந்தப் பரிசை வழங்கியது என்னை ஆச்சரியப்படுத்தியது. எங்கே பிறந்தார் என்பதை பார்க்காமல் தகுதியை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு வழங்கிய இந்தப் பரிசு எனக்கு மிக உயர்ந்ததாகத் தெரிவதோடு மகிழ்ச்சியையும் அளித்தது. ஐஸக் டெனிஸனுக்கு நடந்தது எனக்கு நடக்கவில்லை. நடுவுநிலையில் உறுதியாக நின்ற திருப்பூர் தமிழ்ச் சங்கத்துக்கு என்னுடைய நன்றி.
’அமெரிக்க உளவாளி’ நூலைப் பற்றி நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய திரு மாலன் இப்படிச் சொல்கிறார்:
’நாள் காட்டியில் தேதி கிழிப்பது போன்ற உப்புச்சப்பற்ற ஒரு விஷயத்தைக் கூட (இந்த டிஜிட்டல் நாள்களில் நாள் காட்டிகள் ஏது?) இதழ்க் கடையில் புன்னகை நிரந்தரமாய் ஒதுங்கியிருக்க சுவாரஸ்யமாகச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் பாணி. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு மொழியின் மீது ஆளுமை, நுட்பமான பார்வை, வரலாற்று அறிவு, உலக அனுபவம், நகைச்சுவை உணர்வு என்ற பல ஆற்றல்கள் தேவை. முத்துலிங்கத்திடம் அவை ஏராளம். ஆங்கிலத்தில் ஓட்ஹவுஸ், மார்க்ட்வைன், ஆஸ்கார் ஒயில்ட், ஆர்ட் புக்வால்ட் என டஜன் கணக்கில் புன்னகைக்க வைக்கும் மன்னன்கள் இருக்கிறார்கள். தமிழில் முத்துலிங்கம் ஒருவர்தான்.
அவரது அமெரிக்க உளவாளி அதற்கோர் உதாரணம். என்னை நம்ப வேண்டாம், அந்தத் தலைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புன்னகைக்கச் செய்வது மட்டுமல்ல, மழை பெய்யத் துவங்கும் முன் கிளம்பும் மண் வாசனை கண்ணுக்குத் தெரியாமல் மனதை நிறைத்துவிடுவது போல, முத்துலிங்கத்தின் எந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு மூடி வைத்தாலும் மனசு கொஞ்ச நேரம் விண்ணென்று நெரி கட்டிக் கொண்டு விம்மும். கைலாசபதி பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நாள் முழுக்க அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். எப்பேர்பட்ட வாழ்க்கை! எப்பேர்பட்ட சாவு! அதை நினைவூட்டிக் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் எழுத்து!
ஒரு நல்ல புத்தகத்தைக் கெளரவிக்க திருப்பூர் தமிழ்ச் சங்கம் வாய்ப்புக் கொடுத்தது. நடுவர் நாற்காலியில் அமர நேர்ந்த எல்லா நேரங்களிலும் இப்படிப் பொருத்தமான புத்தகம் அகப்படுவதில்லை. இந்த முறை வாய்த்தது. அதற்கு நான்தான் சந்தோஷப்பட வேண்டும்.’
“முத்துலிங்கத்தின் எந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு மூடி வைத்தாலும் மனசு கொஞ்ச நேரம் விண்ணென்று நெரி கட்டிக் கொண்டு விம்மும். ” Well said and True. I agree!