ரயில் போய்விடும்

நான் ஆப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அங்கேயிருந்த கிழவர் ஒருவரிடம் என்னை அழைத்துப்போனார்கள். சுருட்டையான வெள்ளைத் தலைமுடி.. கண்களும் உள்ளங்கைகளும் மஞ்சள் நிறம். அவர்தான் அந்தக் கிராமத்து கணக்காளர். கிராமத்தில் என்ன கணக்கு பிணக்கு வந்தாலும் அவர்தான் தீர்த்து வைப்பார். நான் போனபோது வாயில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார். வயல் கணக்குகள், ஆடு மாடு கணக்குகள், குழந்தைகள் கணக்குகள் எல்லாம் அவரிடம்தான் இருந்தன. முக்கியமாக பெண்சாதிக் கணக்குகள். ஒருவருக்கு நாலு பெண்சாதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒருத்தியை விலக்கிவிட்டு இன்னொரு பெண்ணை மணமுடிப்பார்கள். அந்தப் பெண் வேறு ஒருவரை மணந்துகொள்வாள். மறுபடியும் விலக்கு ஆகலாம். ஆகவே அந்தக் கணக்குகள் முக்கியம். உண்மையில் அவர்தான் கிராமத்து புள்ளிவிவர திணைக்களம். அப்பொழுதே கல்குலேட்டரும் கணினிகளும் வந்துவிட்டன. இருந்தும் கிழவரிடம்தான் அதிகாரம் இருந்தது. அவரிடம் ’என்ன முணுமுணுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.  அவர் இருபது வருடங்களாக வாய்ப்பாடுகள் பாடமாக்குவதாகக் கூறினார். அப்பொழுது 67ம் வாய்ப்பாட்டில் நின்றார். ’எதற்காக 67ம் வாய்ப்பாடு?’ என்று கேட்டேன். ’ஒரு காலத்தில் அது உதவலாம் அல்லவா?’ என்றுவிட்டு மறுபடியும் முணுமுணுப்பை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

 

உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் பழமையை விடமுடியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். பழமை உயர்ந்தது என்று வாதிடுபவர்களும் உண்டு. அதுவும் இலக்கியத்தில் நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. உலகின் ஆகப் பழைய இலக்கியம் என்றால் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கில்காமேஷ் அரசன் பற்றிய காவியம் என்று சொல்வார்கள். 12 களிமண் ஓடுகளில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட அந்தக் காவியம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இன்றுவரை அதை மிஞ்சிய ஒரு காவியம் படைக்கப்படவில்லை என்கிறார்கள். சேக்ஸ்பியர் 400 வருடங்களுக்கு முன்னர் 38 நாடகங்களை  எழுதினார். இன்றைக்கும் அந்த இலக்கியத்தை தாண்டி வேறு ஒரு படைப்பும் ஆங்கிலத்தில் வரவில்லை என்று சொல்கிறார்கள். 2000 வருடம் பழமையான சங்க இலக்கியத்தின் உயர்வை நாங்கள் அறிவோம். ஏ.கே ராமானுஜன் சங்க இலக்கியம் பற்றி இப்படிச் சொல்கிறார். ‘These poems are not just the earliest evidence of the Tamil genius. The Tamils, in all their 2000 years of literary effort, wrote nothing better.’ (இந்தப் பாடல்கள் தமிழரின் மேதமையை சொல்லும் சாட்சியம் மட்டுமல்ல. கடந்த 2000 ஆண்டுகளில் தமிழர்கள் அவர்கள் முயற்சியில் இவற்றிலும் மேலான ஒன்றை படைத்ததில்லை.) விஞ்ஞானிகள் ஒருவர் தோளுக்குமேல் இன்னொருவர் ஏறி நிற்பார்கள். விஞ்ஞானம் வளர்ந்தது அப்படித்தான். ஜொஹனெஸ் கெப்ளருடைய புவியீர்ப்பு தேற்றத்தை நியூட்டன் விரிவாக்கினார். நியூட்டனுடைய கண்டுபிடிப்பை ஐன்ஸ்டையின் மேம்படுத்தினார். இப்பொழுது ஐன்ஸ்டைனின் தேற்றத்தை சீன விஞ்ஞானி ஒருவர் மேலும் கூர்மைப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். இது ஏன் இலக்கியத்தில் நிகழ்வதில்லை. எத்தனை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்தாலும், களிமண் ஓடுகளிலிருந்து பேப்பருக்கு மாறினாலும், இறகுப் பேனாவில் தொடங்கி கம்புயூட்டருக்கு முன்னேறியிருந்தாலும், பழைய இலக்கியங்களை நவீன இலக்கியங்களால் முந்த முடியவில்லை.

 

எழுதுவது இன்று முந்திய காலத்தைப்போல சிரமமான காரியம் அல்ல. நிறைய வசதிகள் வந்துவிட்டன. தகவல்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. வேகமாக எழுதலாம், அழிக்கலாம், வெட்டலாம், ஒட்டலாம், திருத்தலாம். வெளியிடலாம். அகராதிகூடக் கம்புயூட்டரிலேயே கிடைக்கிறது. ஆனாலும் இலக்கியம் இந்த வசதிகளால் உயர்வது கிடையாது. சமீபத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவர் கண் மருத்துவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். நான் படிக்கவென்று கையிலே கொண்டுபோயிருந்த புத்தகத்தை பார்த்துவிட்டு ஆர்வத்துடன் அது என்ன புத்தகம் என்று கேட்டார். நான் பதில் பேசாமல் புத்தகத்தை தூக்கி முன் அட்டையை காட்டினேன். அவர் தன்னால் எழுத்தைப் படிக்க முடியவில்லை, கண் பார்வை மங்கி வருவதாகக் கூறினார். நான் புத்தகத்தின் தலைப்பைச் சொன்னதும் அதன் ஆசிரியரின் பெயரையும், அவர் எழுதிய நூல்களின் தலைப்புகளையும் வரிசையாகக் கூறினார். சிறிது நேரம் அந்த நாவலாசிரியர் பற்றி பேசியபோது அந்தப் பெண் முக்கியமான ஒரு பதிப்பகத்தில் எடிட்டராகப் பணியாற்றியிருப்பது தெரிந்தது. இப்பொழுது அவருக்கு வேலை போய்விட்டது. அவரால் வாசிக்க முடியாது.

 

’எடிட்டர் வேலை மிகவும் சிரமமானது அல்லவா? ஒருவாரத்தில் எத்தனை பிரதிகளை படித்து முடிப்பீர்கள்?’ என்று கேட்டேன். அவர் வாரத்தில் 20 பிரதிகள் படிப்பதாகச் சொன்னார். எனக்கு தலை சுற்றியது. ‘வாரத்தில் 20 புத்தகங்களா? என்னால் ஒரு புத்தகம்கூட படித்து முடிக்க முடியாதே’ என்றேன். அவர் சொன்னார், ‘முதல் 20 பக்கம்தான் படிப்பேன். அதற்குள் ஓரளவுக்கு புத்தகத்தின் தரத்தை தீர்மானிக்க முடியும். நிராகரிப்பு கடிதத்தை எழுதி அனுப்பிவிடுவோம். சுவாரஸ்யமாக இருந்தால் முழுவதையும் படித்து பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்வோம்.’

 

சில நாட்களாக எனக்குள் தோன்றியிருந்த ஒரு கேள்வியை கேட்க அவர் பொருத்தமானவராகப் பட்டது. கேட்டேன். ’சமீபத்தில் Karl Marlantes வியட்நாம் போரை பின்னணியாக வைத்து எழுதிய Matterhorn என்ற நாவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பரிசுகளை வென்றது. நியூயோர்க் டைம்ஸின் அதிவிற்பனை புத்தகப் பட்டியலில் இடம் பிடித்தது. ஆசிரியர் இந்த நாவலை 30 வருடங்களாக திருத்தி திருத்தி எழுதினார். 15 பதிப்பகங்கள் நாவலை நிராகரித்தன. 16வது பதிப்பகம் அந்த நாவலை வெளியிட்டபோது அது இத்தனை வெற்றி பெற்றது. இதன் அர்த்தம் என்ன? 15 எடிட்டர்கள் ஒரு புத்தகத்தின் உண்மையான தரத்தை கணிக்கத் தவறிவிட்டார்கள் என்பதுதானே! இது எப்படி நடந்தது?’

 

அவர் சொன்ன பதில் நான் எதிர்பார்க்காதது. ‘இதற்கெல்லாம் காரணம் கம்புயூட்டர்கள்தான். நிறையப் பேர் எழுதுகிறார்கள். நிறைய பிரதிகள் வருகின்றன. எடிட்டர்கள் படித்து படித்து களைத்துப் போகிறார்கள். முதல் இருபது பக்கத்தில் புத்தகம் வாசகரை உள்ளே இழுக்கவேண்டும். நாவலாசிரியர் அதில் தவறிவிடுகிறார். சும்மா எழுதிக்கொண்டே போகிறார்கள். இலக்கியம் இல்லை, வெறும் எழுத்துதான். இப்படியான சூழலில் சிலவேளைகளில் எடிட்டர்கள் நல்ல புத்தகங்களை அடையாளம் காண தவறிவிடுகிறார்கள்.’ இதில் வேடிக்கை என்னவென்றால் புத்தகப் பிரதியை படித்து நிராகரித்த எடிட்டர் ஒருவர் நாவலாசிரியருக்கு சொன்ன அறிவுரை. ‘இப்பொழுது யார் வியட்நாம் போரைப்பற்றி படிக்கப் போகிறார்கள். இதே கதையை வைத்துக்கொண்டு போர் நடக்கும் இடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்றிவிடுங்கள்’ என்றாராம்.

 

சமீபத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஜேன் ஒஸ்டின் என்ற ஆங்கில எழுத்தாளரின் பிரசுரிக்கப்படாத நாவலின் கையெழுத்துப் பிரதியின் ஒரு பக்கம் மட்டும் அகப்பட்டு அது ஏலத்துக்கு வந்திருந்தது. அது ஏறக்குறைய ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு  விலைக்கு போனது. நாவலின் அந்தப் பக்க புகைப்படத்தை பத்திரிகை பிரசுரித்திருந்தது. அந்தக் கையெழுத்துப் பிரதியை பார்த்து நான் திகைத்துப்போனேன். ஒருவருக்குமே புரியாத மாதிரி பல இடங்களில் வெட்டியும் திருத்தியும் அடித்தும் மீண்டும் எழுதியும் காணப்பட்டது. ஒரு வசனத்தை அடித்துவிட்டு அதற்குமேல் புது வசனம் இருக்கும். அந்த புது வசனத்தில் நாலு வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கும். ஒரு நாவலை நேர்த்தியாக எழுதி முடிக்கும்போது மூன்று நான்கு தடவை கையெழுத்து பிரதி திருத்தப்பட்டிருக்கும். சு.ரா பதினைந்து பக்கக் கதையைத் திரும்ப திரும்ப திருத்துவதால் நூறு பக்கங்கள் எழுதிவிடுவார் என்று அவர் மனைவி கமலா ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலில் கூறியிருக்கிறார். பேராசிரியர் கைலாசபதி திருத்தி எழுத எழுத கட்டுரை வளர்ந்துகொண்டே போகும். மூன்று நான்கு தடவை திருத்தி எழுதியதாக அவர் மனைவி கூறியிருக்கிறார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் கம்புயூட்டர் வந்தபோது தீர்ந்துபோனது. தமிழில் மாத்திரமில்லை. உலகில் எந்த மொழியில் எழுதினாலும் கம்புயூட்டர் அதை இலகுவாக்கியது. எத்தனை பெரிய கற்பனைவாதியாக ஒருவர் இருந்தாலும், சிந்தனைவாதியாக இருந்தாலும் உடலுழைப்பு இல்லாமல் ஒருவரால் நூல் எழுத முடியாது. கம்புயூட்டர், எழுதுவதையும் திருத்துவதையும் மேம்படுத்துவதையும் இலகுவாக்கிவிட்டது. முன்பெல்லாம் ஓர் எழுத்தாளர் நாலு வருடத்திற்கு ஒரு புத்தகம் எழுதினார்கள். இப்பொழுது ஒரு வருடத்தில் நாலு புத்தகங்கள் எழுதக் கூடியதாக இருக்கிறது.

 

தமிழில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதற்கு மாதக் கணக்கு ஆகும். உரிய புத்தகங்களை வாங்கவேண்டும் அல்லது நூல் நிலையங்களில் அலைந்து குறிப்புகள் எடுக்கவேண்டும். ஆனால் இப்போது அப்படியல்ல. அநேகமான புத்தகங்கள் இணையத்திலே கிடைக்கின்றன. மதுரைத்திட்டம், நூலகத்திட்டம் போன்றவற்றின் உதவியால் நிறைய புத்தகங்களை இலவசமாக பெற முடிகிறது. தமிழ் விக்கிபீடியா, தமிழ் கூகிள் இன்னும் எண்ணற்ற இணைய தளங்கள் ஆராய்ச்சியை இலகுவாக்கின்றன. இந்த வசதிகளையெல்லாம் 20 வருடங்களுக்கு முன்னர் நினைத்துக்கூட பார்க்க முடியாது.  

 

தகவல்களை பெறுவது மட்டும் இலக்கியத்தை வளர்த்துவிடாது. சொந்தமாகச் சிந்திக்கவும் தெரிந்திருக்கவேண்டும். எங்கள் ஊரில் ஒரு புலவர் இருந்தார். நான் சிறுவயதாயிருந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன். சால்வையின் ஒரு நுனி தோளில் தொங்க அடுத்த நுனி புழுதியில் இழுபட நடந்து போவார். கால்கள் தவளையின் கால்கள்போல மடிந்திருக்கும். பிங்கல நிகண்டு முழுவதையும் அவர் கரைத்து குடித்திருக்கிறார். தமிழ் அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுதான். ஒரு சொல் – பல்பொருள்கள், ஒரு பொருள் – பல பெயர்கள் என மனனம் செய்தவர். ஆனால் அவர் படைத்த ஆகச் சிறந்த இலக்கியம் திருமண வாழ்த்துப் பாடல்தான். அவ்வப்போது கல்வெட்டு பாடல்களும் இயற்றியிருக்கிறார். அத்தனை அறிவுப் பெட்டகத்தை அவர் தன்னுடன் வாழ்நாள் முழுக்க கொண்டு திரிந்தாலும் அவரால் தமிழுக்கு பெறுமதியான ஒன்றைக்கூட படைக்கமுடியவில்லை.

 

எந்த மொழியாய் இருந்தாலும் இலக்கிய வளர்ச்சிக்கு விவாதங்கள் அவசியம். எதிரெதிர் திசையில் வாதங்களை தொடங்கி ஒரு மையத்தை நோக்கி நகர்த்துவதுதான் இலக்கியத்தை முன்னெடுப்பதற்கான வழி. மற்றைய மொழிகளைப்போலவே தமிழிலும் இலக்கிய விவாதங்களுக்கு பெரும் பாரம்பரியம் உண்டு. தமிழ் இலக்கியம் படித்தவர்கள் தருமிக்கும் நக்கீரருக்கும் இடையில் நடந்த விவாதம் பற்றி அறிவார்கள். மகாபாரதத்தை தமிழில் பாடிய வில்லிபுத்தூரர் தன்னுடன் விவாதம் செய்து தோற்ற புலவர்களின் காதுகளை குறட்டினால் பிடுங்கிவிடுவார். தமிழில் மாத்திரமல்ல மற்றைய மொழிகளிலும் இதே கதைதான். ரஸ்ய இலக்கியத்தில் டோஸ்ரோவ்ஸ்கிக்கும் துர்க்கனேவுக்கும் இடையில் கருத்து மோதல்களுக்கு குறைவில்லை. ஆங்கில அகராதி தயாரித்த மேதை சாமுவெல் ஜோன்ஸன் விவாதங்களில் பெரும் நேரத்தை செலவழித்தார். தமிழில் நாவலருக்கும் வள்ளலாருக்கும் இடையில் நடந்த அருள்பா – மருள்பா விவாதம் நீண்டநாள் தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வழக்குப் போடும்படியும் ஆனது. புதுமைப்பித்தன் – கல்கி விவாதமும் பேர்போனதுதான். யார் அதிகமாக இலக்கியத் திருட்டு செய்தார்கள் என்பதுதான் விவாதப் பொருள். புதுமைப்பித்தன் களவாணி இலக்கியம் என்று குறிப்பிட்டார். ஆனால் ஆரம்பத்தில் கண்ணியமாகவும் இலக்கியத் தரத்தோடும் ஆரம்பிக்கும் விவாதங்கள் இறுதிக் கட்டங்களில் தனிமனித வசைகளில் முடிவதுதான் வழக்கம்.

 

கம்புயூட்டர்கள் வந்த பின்னர் இணையத்தளங்களிலும், முகப் புத்தகங்களிலும் விவாதங்கள் சூடு பிடித்தன. முந்திய காலத்தில் ஒருவர் பத்திரிகையில் ஒன்றை எழுத அதற்கு மறுப்பு இன்னொருத்தர் எழுத நாலு மாதம் ஓடிவிடும். நாலைந்து கட்டுரைகள் எழுதி இறுதி நிலை வரும்போது இரண்டு மூன்று வருடங்கள் முடிந்து, ஆரம்ப வேகமும் மட்டுப்பட்டுவிடும். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. நூற்றுக்கணக்கான வாசகர்கள் நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான விவாதங்களில் உடனுக்குடன் பங்குபற்றி கருத்துகள் பரிமாறி  மோதிக் கொள்கிறார்கள். விவாதங்களும் பதில் விவாதங்களும் சுவாரஸ்யமாக இருக்கும். இலக்கியம் வளர்வதென்பது இப்படித்தான். நிறையப்பேர் உலகின் பல பாகங்களில் இருந்தும் விவாதங்களை உடனுக்குடன் தொடர்ந்து படிப்பர். தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்வார்கள்.

 

ஆனால் இதில் உள்ள துரதிர்ஷ்ட அம்சம் என்னவென்றால் வழக்கம்போல இந்த விவாதங்கள் தனிமனித வசைகளுடன்தான் முடிவுக்கு வரும். பத்திரிகைகளில் வெளியாகும் விவாதங்களில் கொஞ்சம் தணிக்கை முறை எதிர்பார்க்கலாம். இணையத்திலும் முகப்புத்தகத்திலும் இப்படியான கட்டுப்பாடுகள் இல்லை. எதை வேண்டுமானாலும் எழுதாலாம். உடனுக்குடன் பதிலடிகள் என்பதால் வாசகர்கள் ஆர்வமுடன் விவாதத்தின் போக்கை கவனிப்பார்கள். வசை கூடக்கூட வாசக எண்ணிக்கையும் கூடும். சில வருடங்களுக்கு முன்னர் புகழ் பெற்ற எழுத்தாளர் Tom Wolfe க்கும்  இன்னொரு பிரபல எழுத்தாளர் Norman Mailer க்கும் இடையில் நடந்த விவாதம் இப்படித்தான் வசையில் முடிந்தது. Tom Wolfe இறுதியில் சொன்னார். ‘எப்பொழுதும் முதலில் போகும் நாயை பின்னால் வரும் நாய்கள் கடிப்பது வழக்கம்தான்.’ அதற்கு Norman Mailer இப்படி பதில் சொன்னார். ’நாயின் பின்பகுதியில் ரத்தம் ஒழுகினால் அது முதல்தரமான நாய் என்று அர்த்தமில்லை.’

 

உ.வே.சாமிநாதையர் அவருடைய ‘என் கதை’ நூலில் ஒரு சம்பவம் சொல்கிறார். பல வருடங்களாக, பல ஏடுகளைச் சோதித்து சிந்தாமணி’ நூலை அச்சிடுவதற்கு தயாரித்துவிட்டார். ஆனால் எப்படி பணம் இல்லாமல் பதிப்பு வேலையை செய்து முடிப்பது என்பது தெரியாமல் குழம்பிப்போய் நின்றார். பின்னர் அவர் சில நண்பர்களின் ஆலோசனைப்படி தமிழன்புள்ள கனவான்கள் 70 பேரை அணுகி அவர்களிடம் கையொப்பமும் முன்பணமும் பெற்று நூலை வெளியிட்டார். ஒருகாலத்தில் நூல் வெளியிடுவதற்கு இதுதான் ஒரே வழிமுறையாக இருந்தது. இது நடந்தது 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில்; கம்புயூட்டர்கள் பிரபலமாக வருவதற்கு 100 வருடங்களுக்கு முன்னர். இப்பொழுது கம்புயூட்டர்கள் பதிப்புத்துறைக்கு வந்த பின்னரும் இதே முறை பின்பற்றப் படுவது தமிழில் மட்டுமாகத்தான் இருக்கும். ’முன்வெளியீட்டுத் திட்டம்’ என்று இதற்குப் பெயர். இணையத்தின் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வாசகர்கள் முன்கூட்டியே பதிவுசெய்து சலுகை விலையில் பணம் செலுத்துகிறார்கள். இந்த ஏற்பாட்டினால் வாசகரும், பதிப்பாளரும், எழுத்தாளரும் ஒருசேர லாபம் பெற முடிகிறது.

 

கம்புயூட்டர்களின் வருகையால் தமிழ் பதிப்புத்துறை இருபது வருடங்களில் பெரிய மாற்றம் பெற்றுவிட்டது. நான் ஒருமுறை இந்தியாவுக்கு போனபோது என் நண்பர் ஒருவர் தான் வெளியிட்ட புத்தகம் எப்படி விலைபோகிறது என்பதை பார்த்துவரச் சொன்னார். பதிப்பாளர் மகிழ்ச்சியுடன் என்னை இருட்டான கீழ் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே நண்பரின் புத்தகங்கள் வரிசையாக, கட்டுக் கட்டாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நண்பர் இரண்டாம் பதிப்பு பற்றி தீவிரமாகச் சிந்தித்து கொண்டிருந்தார். ஒரு வருடமாகியும் புத்தகங்கள் விற்பனை நிலையங்களுக்கோ, நூலகங்களுக்கோ அனுப்பப்படவில்லை. வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தபால் செலவு கட்டுபடியாகாது என்றார். யாராவது வாசகர் தேடிவந்து வாங்கிப்போவார் என்ற நிலையில் அவைகள் பாதுகாக்கப்பட்டன. கம்புயூட்டர் பதிப்பு முறை வந்த பின்னர் இந்தச் சங்கடம் நீங்கியது. புத்தக வடிவம் குறுந்தகட்டில் சேமிக்கப்பட்டிருக்கும். அவ்வப்போது வேண்டிய புத்தகங்களை அச்சடித்து பைண்டிங் செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள்.  தேவைக்கு அதிகமான புத்தகங்கள் அச்சடிப்பது தவிர்க்கப் படுகிறது. பேப்பர் செலவில்லை. மை செலவில்லை. புத்தகம் அடுக்கிவைக்கும் இடம் மிச்சப்படுகிறது. முக்கியமாக சுற்றுச்சூழல் கேடு இல்லை.

 

மாற்றங்களில் முக்கியமான இன்னொன்று எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையேயான உறவு. எழுத்தாளர் கையெழுத்துப் பிரதியை பதிப்பாளருக்கு அனுப்புவார். அவர் சில மாதங்கள் காத்திருக்க வைத்து பின்னர் பிரதியை நிராகரிப்பார். எழுத்தாளர் இன்னொரு பதிப்பாளருக்கு அதை அனுப்பிவைப்பார். அவரும் நிராகரிப்பார். இப்படி ஒரு புத்தகத்தை பதிப்பிப்பதற்கு 4, 5 வருடங்கள்கூட ஆகலாம். இதனால் வாசகருக்கு நட்டம்; எழுத்தாளருக்கு இன்னும் கூடிய நட்டம். 90களில் ஒரு புதுமுறை வந்தது. எழுத்தாளருக்கு அனுகூலமான முறை. இந்த ஏற்பாட்டில் எழுத்தாளர் ஒரு புத்தகத்தை முழுவதுமாக எழுதி முடிக்கக்கூடத் தேவையில்லை. முதல் இரண்டு அத்தியாயங்களை  எழுத்தாளர் தன் கம்புயூட்டரில் இருந்து நேரடியாக பத்து தெரிவுசெய்யப்பட்ட பதிப்பாளர்களுக்கு அனுப்பிவைப்பார். அந்தப் பத்து பதிப்பாளர்களும் ஏல முறையில் ஒருவருடன் ஒருவர் புத்தகத்தை பதிப்பிக்கும் உரிமைக்கு போட்டியிடுவார்கள். ஆகக் கூடிய விலை கொடுக்க முன்வரும் பதிப்பகம்  எழுத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும். அதன் பிறகுதான் எழுத்தாளர் நூலை எழுதி முடிப்பார். இங்கிலாந்தில் சில வருடங்களுக்கு முன்னர் Zadie Smith என்ற பெண்மணி எழுதிய முதல் நாவல் இப்படித்தான் அச்சேறி பெரும் வெற்றியீட்டியது. அந்தப் பெண்மணி புத்தகத்தை ஏலத்துக்கு விட்டபோது அவருடைய வயது 22. முன்பணமாக அவருக்கு கிடைத்த தொகை 250,000 பவுண்டுகள். இம்முறை சமீப காலங்களில் தமிழிலும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இதில் வெற்றி கிட்டினால் அதனால் எல்லோரும் பயன்பெறுவார்கள்.

 

வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய இன்னொரு விடயம் கிண்டில்’ (Kindle) என அறியப்பட்ட புதிய சாதனம். இது புத்தக அளவுதான் இருக்கும். எடையும் கிட்டத்தட்ட அப்படித்தான். நீங்கள் உங்களுக்கு என்ன புத்தகம் தேவை என்று தீர்மானித்து முடித்த ஒரு நிமிட நேரத்துக்குள் அந்தப் புத்தகத்தை உங்களுடைய கிண்டிலில் தரவிறக்கம் செய்து, கடன் அட்டை மூலம் அதற்கான கட்டணத்தையும் கட்டிவிடலாம். ஒரு புத்தகம் படிப்பது போலவே மடியில் வைத்து படிக்கலாம். இருட்டில் படிப்பதற்கு வசதியாக விளக்கும் இருக்கிறது. எழுத்துருவை பெரிதாக்கலாம்; சிறிதாக்கலாம். 1000 புத்தகங்களை தரவிறக்கம் செய்துவைத்து உங்களுடனேயே எடுத்துச் செல்லலாம். புத்தகங்களை அடுக்குவதற்கு வீட்டிலே புத்தகத் தட்டு தேவைப்படாது. ஒரு சொல் அர்த்தம் புரியவில்லை என்றால் அதைத் தேடுவதற்கு அகராதியும் உண்டு. அச்சடித்த புத்தகத்திலிலும் பார்க்க மலிவு. பயணம் செய்யும்போது 1000 புத்தகங்களை உங்களுடன் காவிச் செல்வது என்பது எத்தனை பெரிய வசதி.

 

சமீபத்தில் நான் பொஸ்டனில் இருந்து ரொறொன்ரோவுக்கு திரும்பி வரும் வழியில் நண்பர் ஒருவர் தொலைபேசியில் ஒரு புத்தகத்தை பற்றி மெச்சிப் பேசினார். உடனேயே அதை கிண்டிலில் இறக்கிக்கொண்டேன். விலையும் மலிவு. ஜோசப் கொன்றாட் என்ற எழுத்தாளர் எழுதிய Typhoon நாவல்.   ரொறொன்ரோ வந்து இறங்கியபோது புத்தகத்தில் பாதி முடித்துவிட்டேன். இந்த வசதி இன்னும் தமிழில் வரவில்லை. ஆனால் விரைவில் அந்த வசதிகள் வந்து சேர்ந்துவிடும் என்றுதான் நம்புகிறேன். பதிப்பாளர், வாசகர், எழுத்தாளர் மட்டும்தான் மின்புத்தகங்கள் மூலம் பயன் அடைவார்கள் என்றில்லை. அச்சிடும் தாள் மிச்சப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை கிடைக்கிறது.

 

கணினியும் இணையதளங்களும் முகப்புத்தகங்களும் துரிதர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கேடு விளைவிப்பதாக சொல்பவர்களும் இருக்கிறார்கள். எழுதுவதும் பிரசுரிப்பதும் இலகுவாக்கப்பட்டு விட்டதால் மோசமான புத்தகங்கள் நிறைய வெளிவருகின்றன. அதனால் தரமான புத்தகங்களை வாசகர்கள் அடையாளம் காணமுடியாமல் சிரமப்படுகிறார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு. முன்பெல்லாம் பத்து புத்தகம் வெளிவந்தால் அதில் இரண்டு நல்லது இருக்கும். இப்பொழுது 100 புத்தகங்கள் வெளிவருகின்றன. அதிலே 20 நல்ல புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. 18 புத்தகங்கள் லாபம். வலியது வாழும். நல்ல புத்தகங்கள் எப்படியும் அடையாளம் காணப்பட்டு வாசகர்களைச் சென்றடையும். அதில் சந்தேகமே இல்லை.

 

கணினியின் வரவால் கிடைத்த முக்கியமான அனுகூலம் பழைய நூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும்  பேணிப் பாதுகாத்து அவற்றை இணையத்தில் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது. விலை மதிக்கமுடியாத பழைய ஏட்டுச் சுவடிகளை முன்பெல்லாம் கையினால் பிரதியெடுத்து பின்னர் அச்சேற்றுவார்கள். இப்பொழுது அப்படியில்லை. நேரடியாக அவற்றை ஒளிப்படங்களாக மாற்றி இணையத்தில் இட்டுவிடுகிறார்கள். உலகம் முழுவதும் அவை அகப்படும். வேண்டியவர்கள் தனியாகவோ கூட்டாகவோ ஆராய்ச்சி செய்யமுடியும். அவை தொலைந்துவிடும் என்றோ, உதிர்ந்துவிடும் என்றோ, எரிந்துவிடும் என்றோ கவலைப்படத் தேவையில்லை. 

 

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்ன ஒரு விசயம் அவருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இணையதளத்தில் கட்டுரைகள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று முதலில் எழுதுகிறார்கள். பின்னர் அவை புத்தகங்களாக வெளிவருகின்றன என்றேன். அவரால் நம்பமுடியவில்லை. அவருக்கு தெரிந்து எந்த மொழியிலும் அப்படி நடப்பது தெரியாது என்றார். வசதி உள்ளவர்களிடம் கம்புயூட்டர் இருக்கிறது. அவர்கள் இலவசமாகப் படிக்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் காசு கொடுத்து புத்தகமாக வாங்கிப் படிக்கிறார்கள். இது சரியாகப் படவில்லை என்றார். என்னிடம் அதற்கு பதில் இல்லை. ஆனால் இது தற்காலிகமான பிரச்சினையாகவே பட்டது. நாளடைவில் எல்லோருக்கும் இணைய வசதி கிடைக்கும். அச்சில் புத்தகம் வாங்கும் பழக்கம் குறைந்துகொண்டு வரும். மின் புத்தகங்களை காசு கொடுத்து தரவிறக்கம் செய்வார்கள். வாசகர்கள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் எல்லோருமே பயன்பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

ஒரு காலத்தில் ஓலையில் எழுத்தாணியால் எழுதினார்கள். பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டபோது பேப்பரில் பேனாவினால் எழுத நேர்ந்தது. அச்சு யந்திரம் வந்தபோது தமிழ் அச்சுக்கு மாறியது. பின்னர் வந்த தட்டச்சில் தமிழ் ஏறியது. இன்று கம்புயூட்டரில் முன்னேறுகிறது. தமிழில் பிரதியை குரலாக்கும் வேலையும், குரலை பிரதியாக்கும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது. கணினி மூலம் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் தொடர்கின்றன. உலக தொழில் நுட்பம் பாய்ந்து செல்லும் வேகத்தில் தமிழும் விரையவேண்டும். புறநானூற்று பாடலில் ஒரு வரி ‘எல்லார் புறனும் தான் கண்டு’ என வரும். நவீன தொழில் நுட்பத்தை உடனுக்குடன் பயன்படுத்த தவறினால் தமிழ் எல்லா மொழிகளின் புறனையும் காண நேரிடும். தமிழ், ரயிலைத் தவறவிட்ட பயணிபோல தனித்து நிற்கும்; ரயில் போய்க்கொண்டே இருக்கும். கம்புயூட்டர் அறிவோ, தேடு பொறியோ, இணையத்தளமோ, முகப்புத்தகமோ, துரிதரோ தமிழ் இலக்கிய தரத்தை அதிகரிக்கப் போவதில்லை. அவை செய்வது தமிழை உலகெங்கும் பரப்புவது, இலக்கியங்களை பாதுகாப்பது, தகவல்களை உடனுக்குடன் கிடைக்கச் செய்வது. திருத்தமாக எழுதும் நூலை விரைவாக வாசகர்களிடம் குறைந்த செலவில் கொண்டு சேர்ப்பது. இலக்கியம் படைப்பது நிகண்டைப் பாடமாக்குவது போலவோ, 67ம் வாய்ப்பாட்டை மனனம் செய்வதுபோலவோ அவ்வளவு எளிதானதல்ல. எத்தனை உயர்தரக் கம்புயூட்டராக இருந்தாலும் அது உங்களுக்காக சிந்தித்து இலக்கியம் படைக்க முடியாது. நீங்கள்தான் சிந்திக்கவேண்டும்.

 

END

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta