Difficult things we do immediately, miracles take a little longer.
கடினமானவற்றை உடனே செய்வோம், அற்புதங்கள் சிறிது நேரம் எடுக்கும்.
இன்று அருணிடம் இருந்து ஒரு கடிதம் வந்து என்னை ஆச்சரியப் படுத்தியது. அந்தக் கடிதம் கீழே வருகிறது. அதற்கு முதல் முன்கதைச் சுருக்கம்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு பரிசு வாங்கிக் கொடுக்கும்போது நான் ஒலிப்புத்தகங்களாக வாங்கிக் கொடுப்பேன். அவன் அலுவலகத்துக்கு போகும்போதும் வரும்போதும் காரிலே உள்ள ரேப் ரிக்கர்டரில் அவற்றை போட்டுக் கேட்பான். ஒருவாரத்தில் எப்படியும் ஒரு புத்தகத்தை முடித்துவிடுவான். இதைப் பார்த்த நானும் ஒலிப்புத்தகங்கள் வாங்கி கேட்க ஆரம்பித்தேன். புத்தகம் கேட்பது புதிய அனுபமாக இருந்தது. அனுகூலமும் உண்டு. புத்தகத்தை கேட்கும்போதே சமைக்கலாம், வீடு கூட்டலாம், இன்னும் பல வேலைகள் செய்யலாம்.
தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்தவர்களுக்கு எழுதினேன். சில எழுத்தாளர்களுக்கும் எழுதிப்பார்த்தேன். ’உங்கள் புத்தகங்களை ஒலிப்புத்தகமாகப் பதிவுசெய்து வெளியிடுங்கள். பலருக்கும் புத்தகங்களை வாசிப்பதிலும் பார்க்க கேட்பது வசதியாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் போகும்போதும் வரும்போதும் காரிலே கேட்கலாம். வீட்டிலே உள்ளவர்கள் சமைக்கும்போதும் வேறு வேலைசெய்யும்போதும் புத்தகங்களை கேட்கலாம். முக்கியமாக பார்வையற்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என்றேன். எனக்கு கிடைத்த பதில்கள் இப்படியிருந்தன.
’காரிலே போகும் வசதி படைத்தவர்கள் தமிழ் புத்தகம் வாங்கமாட்டார்கள். அவர்கள் சினிமா இசை கேட்கத்தான் பிரியப்படுவார்கள்’ என்றார் ஒருவர். இன்னொருவர் ’கணினி வசதி உள்ளவர்களில் ஒரு பகுதியினர் வாங்குவார்கள் ஆனால் அவர்கள் தொகை மிகவும் குறைவு. கட்டுபடியாகாது’ என்றார். என்னுடைய அரட்டைப் பெட்டிக்கு இலவசமாக வந்த ஒருவர் இலவசமான அறிவுரை தந்தார். ‘முதலில் சாப்பிடவேண்டும். பிறகுதான் விரலைச் சூப்பலாம்.’ காலம் இன்னும் கனியவில்லை என்று சொல்கிறார் என விளங்கிக்கொண்டேன்.
சமீபத்தில் அருண் என்பவர் தொடர்பு கொண்டார். இவரும் குணா என்பவரும் இணைந்து இணையதளம் ஒன்று நடத்துகிறார்கள். கூடு என்ற இலக்கியப் பத்திரிகையும் அதில் ஒரு பிரிவு. தமிழ் குறுந்திரைப்படங்கள் எடுப்பதற்கு உதவிசெய்து முற்றுப்பெற்ற படங்களை இணையத்தில் உலவ விடுகிறார்கள். யாரும் எங்கிருந்தும் இலவசமாக பார்த்து மகிழலாம். இது தவிர முக்கியமான சிறுகதைகளை ஒலிவடிவில் ஏற்றுவதால் அவற்றை பல வாசகர்கள் கேட்கக்கூடிய வசதியும் உண்டு. கம்புயூட்டரில் நேரடியாகவோ அல்லது அலைபேசியில் பதிவிறக்கியோ கேட்கலாம்.
அருண் என்னை தொடர்புகொண்டு என்னுடைய சிறுகதைகளை குரல்வடிவில் பதிவேற்றுவதற்கு விருப்பம் காட்டினார். நான் அக்கறை எடுக்கவில்லை. திருப்பி திருப்பி மின்கடிதத்தில் தொடர்புகொண்டபடியே இருந்தார். அவருடைய அர்ப்பணிப்பும், ஆர்வமும், விடாமுயற்சியும் என்னால் நம்பமுடியாததாக இருந்தது. சிறுகதைகளை அனுப்பிவைத்தேன்.
இன்று கடிதம் எழுதியிருக்கிறார். எட்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் சிறுகதைகளை கேட்டிருப்பதாக. நம்பவே முடியவில்லை. அவர் எழுதிய கடிதம் கீழே வருகிறது.
அன்பின் முத்துலிங்கம் அவர்களுக்கு,
இதுதான் தமிழ் ஸ்டுடியோ இலக்கிய பிரிவான கூடுவின் இணைய முகவரி: http://koodu.thamizhstudio.com/
இதுதான் கதைசொல்லியின் இணைய முகவரி: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_index.php
இந்த இணைப்பில் உங்களது கதைகள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கதைகளை வாசகர்கள் பதிவிறக்கம் செய்துக் கொண்டு தங்கள் அலைப்பேசியிலும் இணைத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். கதை சொல்லி தமிழ் ஸ்டுடியோவின் மிக பெரிய அளவில் புகழ்பெற்ற ஒரு பகுதி. உங்கள் கதைகளை இதுவரை மட்டும் பல்வேறு இணைப்புகள் மூலம் எட்டு இலட்சத்திற்கும் மேலான வாசகர்கள் கேட்டுள்ளனர். உங்கள் கதைகளை கேட்பதற்கான இணைய முகவரி: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_27.php
நன்றி.
அருண் மோ.
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண்.41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
+919840698236, +919894422268
நான் புதுமைப்பித்தனையும், கு.அழகிரிசாமியையும், கு.பா.ராவையும், தி.ஜானகிராமனையும், நகுலனையும், சுந்தர ராமசாமியையும் நினைத்துக்கொள்கிறேன். புதுமைப்பித்தனை அவருடைய உச்சமான காலத்தில் 1000 பேர் படித்திருப்பார்களா? நிச்சயமில்லை. சு.ரா ஒரு முறை சொன்னார். தன்னுடைய உலகம் முழுக்கப் பரந்திருக்கும் வாசகர்களை எண்ணினால் அது பத்தாயிரத்தை தாண்டாது என்று. இன்றைய தொழில்நுட்பம் தமிழ் சிறுகதைகளை எங்கேயெல்லாமோ தூக்கிப் போகிறது. அருண் & குணா என்ற இரட்டையர்கள் இளம்வயதில் இத்தனை பெரிய காரியத்தை சத்தமில்லாமல் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒருசதம் லாபம் கிடையாது. நேரத்தையும் தங்கள் காசையும்போட்டு அர்ப்பணிப்போடு செய்கிறார்களே ஒழிய சேவை என்றெல்லாம் சொல்வதில்லை. இதை தமிழ்நாட்டு அற்புதம் என்று கூறாமல் வேறு எப்படி சொல்வது.
ஒரு நல்ல செய்தியும் உண்டு. இந்த மாதம் 18ம் தேதி அருணுக்கும் பானுவுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. காதல் திருமணம். எழுத்தாளர்கள், குறும்பட இயக்குநர்கள், ஆர்வலர்கள் மற்றும் உலகத் தமிழ் வாசகர்கள் சார்பிலும் என் சார்பிலும் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை அனுப்புகிறேன்.
அருணுக்கு தனியாக ஒரு வார்த்தை.
மீன் பிடிப்பவருக்கு சொல்லித் தரும் முதல் பாடம் ’கயிறு தொய்யக்கூடாது’ என்பதுதான். அல்லாவிடில் மீன் கழற்றிக்கொண்டு போய்விடும். அன்பரே மீன் கயிறுபோல உங்கள் காதல் இறுக்கமாகவும், நெருக்கமாகவும், தொய்யாமலும், நேராகவும் என்றென்றும் நீடிக்கட்டும்.
இதைத்தான் இளங்கோவடிகளும் ‘கவவுக்கை ஞெகிழாமல்’ என்று சொன்னார்போல.
END