வட அமெரிக்காவில் கலியோப் தேன்சிட்டு என ஒரு பறவை இருக்கிறது. திடீரென்று மறைந்து போகும். மறுபடியும் ஆறு மாதம் கழித்து திடீரென்று தோன்றும். மதுமிதாவும் அது போலத்தான். திடீர் திடீரென்று காணாமல் போய்விடுவார். ஆனால் பெயரிலேயே மது வைத்திருப்பவர் திரும்பும்போது தேன் கொண்டு வருவார்.
இதோ அவர் எழுதிய கடிதம்.
அன்பு அ. முத்துலிங்கம் அவர்களுக்கு
வணக்கம். விகடனில் நானும் விகடனும் வாசித்தேன். அதற்கு முன் வெளிவந்த சிறுகதையும் வாசித்தேன். புதிய தலைமுறையில் உங்கள் படைப்புகள் வாசிக்கிறேன். உங்களின் ஒவ்வொரு படைப்பும் ஒரு பலதிறப்புகள் கொண்ட சாளரத்தை எனக்குள் திறக்கிறது.’ நானும் அ. முத்துலிங்கமும்’ என்று ஒருநாள் எழுதிவிடுவேன் போலிருக்கிறது.
இன்று காலை 11. 45 மணிக்கு நூலகம் சென்றேன். வீட்டிலிருந்து விரைவாக நடந்தால் 3 நிமிடத்தில் நடந்து அங்கு சென்றுவிடலாம். மெதுவாக என்றால் 5 நிமிடங்கள். வீட்டில் தரையில் மார்பிள் என்பதால் எனக்கு கால்வலி உண்டு. வீட்டில் செருப்பு அணிந்து நடக்க வேண்டும் என மருத்துவர் சொல்லியிருந்தார். எனக்கு அதில் விருப்பமில்லை. கொடைக்கானலில் வீட்டில் செருப்பு அணிகிறேன். இராஜையிலும் சென்னையிலும் அணிவதற்கு மனம் வருவதில்லை. இந்நிலையில் என் அப்பா சொன்னார் ‘நம் வீட்டுக்கு வரும்போது வெறும் தரையில் செருப்பு அணியாது வா’ என்று. அரை நிமிடத்தில் அம்மா வீட்டுக்குப் போய்விடலாம் என்பதாலும் சாலை சிமிண்ட் தரை என்பதாலும் செருப்பு அணியாமல் செல்வேன். அதுபோல் மாடியில் நடைப்பயிற்சி என்று செருப்பு அணியாமல் தான் நடப்பேன். இந்த பழக்கத்தில் நூலகம் செல்லும்போதும் செருப்பு அணியாமல் போவேன். காலை பத்து மணி அல்லது மாலை 5 மணிக்கு போவதுண்டு. இன்று அப்பாவும் அப்பாவின் நண்பரும் நம் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததால் தாமதமாக 11.45 மணிக்கு செல்ல வேண்டியிருந்தது. நம் தெருவைக் கடந்து நூலகத்தின் பெரிய தெருவில் கால் வைத்தவுடன் நினைவுக்கு வந்தது செருப்பு அணியாமல் வந்திருக்கிறேன் என்பதும் இது சரியான வெயில்காலம் கொளுத்தும் வெயிலில் சாலை வெந்துகொண்டிருக்கிறது என்பதும். பத்து வீடுகள் தான் இடையில் உள்ள தூரம். நடக்க இயலவில்லை. பாதங்கள் கொப்பளித்துவிடும் போன்று வலியில் நடக்க இயலவில்லை. நடுப்பகல் என்பதால் வீட்டின் நிழல் கூட சாலையில் இல்லை. மனதில் வெறி இதில்தான் இப்படியே நடக்க வேண்டும் என்று. பத்து வீடுகளைக் கடப்பதற்குள் பத்து ஆண்டுகள் வெயிலில் நடந்தது போல் ஒரு அயற்சி. நூலகத்தின் படியில் கால் வைத்த பிறகே ஆசுவாசம் ஆனது. நூலகம் விட்டுத் திரும்பி வரும்போது அதே வெயில் இன்னும் உக்கிரமாய். கால்கள் கொப்பளித்து விட்டன. நினைவில் சோமாலியத்தாய் வந்து சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டாள். விழிகளில் நீர் பொழியத் தயாராவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
சோமாலிய தாய் ஒருவள் சுடுமணலில் நடந்து கொண்டிருந்தபோது வெயிலின் சூடு பொறுக்க முடியாமல் கையில் அணைத்து ஏந்தி வந்த தன் குழந்தையை கீழே போட்டு அதன் மேல் ஏறி நின்ற கதையை உண்மையா கட்டுக்கதையா என அறியாது பலர் சொல்லக் கேள்விப்பட்ட கதையை நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தது மனதை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது. இதை எழுதியேனும் அவளை அனுப்பிவிட்டு அடுத்த வேலை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். முடியாது போலிருக்கிறது. தியரியை விட ப்ராக்டிகல் எவ்வளவு முக்கியம் என்பதை அனுபவ பூர்வமாக உனர்கிறேன். இந்த உணர்வு மிகவும் வலிக்கிறது.
அன்புடன்
மதுமிதா