காத்திருப்பது
முனைவர் எம். சஞ்சயன்
பிபிசியின் படப்பிடிப்பு குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தியாவைப் பற்றி ஆச்சரியப்பட விசயம் இருந்தது. எனக்கு அது மதுரையில் கிடைத்தது. பிபிசி டீம் மதுரை வீதிகளில் படப்பிடிப்பை நடத்தியபோது சனக்கூட்டம் எக்கச்சக்கமாக சேர்ந்துவிட்டது. இந்தியாவில் எங்கே போனாலும் இது தவிர்க்கமுடியாத அம்சம். காமிராக்காரரையும், இயக்குனரையும் நெருக்குப்படாமல் காப்பாற்றுவதில் சில மதுரைவீரர்கள் எங்களுக்கு மும்முரமாக உதவினர்.
நாங்கள் எடுத்தது விவரணப் படம். எங்கள் குழுவில் இரண்டு இளம் பிரிட்டிஷ் பெண்கள் இருந்தார்கள். இருவருக்கும் நீண்ட பொன் முடி. பலர் அவர்களை நடிகைகள் என்று நினைத்து மொய்த்தார்கள். உண்மையில் அவர்கள் படப்பிடிப்பு உதவியாளர்கள்தான்.
படப்பிடிப்பு மும்முரமாக நடந்தபோது ஒரு நடுத்தர வயதானவர் எங்கோ வேகமாக சைக்கிளை மிதித்து போய்க்கொண்டிருந்தார். சைக்கிள் ஹாண்டில் பாரில் ஒரு பை தொங்கியது. ஏதோ அவசரமான வேலைக்கு போனவர் கூட்டத்தை கண்டதும் சடேரென்று பிரேக் பிடித்து, சைக்கிளை தொப்பென்று தரையிலே போட்டுவிட்டு சனக்கூட்டத்துக்குள் ஓடி வந்தார். வட்டத்துக்குள் நுழைந்தவர் அனுமதிக்கப்பட்ட ஆகக்குறைந்த தூரத்தில் நின்று படப்பிடிப்பை பார்த்தார். படப்பிடிப்பு ஓர் இரண்டு மணிநேரம் அங்கே நடந்தது. இந்த மனிதர் அசையவேயில்லை. சைக்கிளும் படுத்த படுக்கையிலேயே கிடந்தது. படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததும் இவர் போய் சைக்கிளை நிமிர்த்தி எடுத்தார். ஏறி உட்கார்ந்து ஒன்றுமே நடக்காததுபோல வந்தமாதிரியே மிதித்துக்கொண்டு புறப்பட்டார்.
ஏதோ முக்கியமான வேலையாகப் போன ஒருத்தர் எப்படி அந்த வேலையை ஒதுக்கிவிட்டு இரண்டு மணித்தியாலம் காத்திருந்தார். இவர் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு மருந்து வாங்க போயிருக்கலாம். அல்லது சொந்த மகளின் திருமண விசயமாக அலைந்திருக்கலாம். அல்லது சம்பளம் தரும் முதலாளி கொடுத்த ஒரு வேலையை நிறைவேற்ற விரைந்திருக்கலாம். ஒருவித தயக்கமும் இன்றி தான் செய்யவேண்டிய முக்கியமான வேலையை ஒத்திவைத்துவிட்டு படப்பிடிப்பை பார்த்தார். இந்த இரண்டு மணித்தியாலக் காத்திருப்பு அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.
இந்தியா முழுக்க காத்திருப்பது ஒரு சடங்கு போலவே நடந்தது. ஆரம்பத்தில் எரிச்சல்பட்ட நாங்கள் போகப்போக எங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டோம். ஐஸ்வர்யராய் இன்னும் ரெடியாகவில்லை. அவருடைய உதவியாளர் எங்களை காத்திருக்கச் சொன்னார். நாங்கள் போனபோது அவர் ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். ஒப்பனைப் பெண் ஒவ்வொரு இரண்டு நிமிடமும் அவருடைய ஒப்பனையை சரிபார்த்தார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.
ஐஸ்வர்யராயிடம் சகல வசதிகளும் பொருந்திய ஒரு வாகனம் இருந்தது. அடிக்கடி அதற்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். அந்த வாகனம் ஒரு குட்டி வீடு போல என்றே சொல்லலாம். அங்கே இளைப்பாறலாம்; படுக்கலாம்; ஒப்பனை சரிபார்க்கலாம். பாத்ரூம் சமாச்சாரங்களை முடித்துக்கொள்ளலாம். படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் ஓய்வெடுப்பது அங்கேதான்.
நாங்கள் காத்திருந்தோம். எங்கள் குழுவின் தலைவர் பட்டி ஸ்மித் கோபப்பட்டு நான் கண்டதில்லை. அவருடைய மூச்சுக் காற்று வேகமாக வந்தது. ஒரு கட்டத்தில் அந்த ஓசை பஸ் பிரேக் போடும்போது எழும் உறிஞ்சும் சத்தம்போல பெரிசாக கேட்டது. அவருடைய கோபத்தை பொருட்படுத்தாமல், அரை மணி நேரம் மட்டுமே என்று எங்களிடம் அறிவித்த விளம்பரப் படம் இழுத்துக்கொண்டே போனது. நாலு பக்கத்திலும் இருந்து பாய்ந்த ஒளி வெள்ளத்தில் ஐஸ்வர்யராய் நடித்தபோது ஒரு இடத்தில் சிரித்தார். அப்போது அவரை சுற்றியிருந்த வெளிச்சம் கொஞ்சம் மங்கியது. அப்போதுதான் நான் நினைத்தேன் இவர் உண்மையிலேயே ஓர் அழகான பெண்தான் என்று.
விளம்பரப் படப்பிடிப்பு முடிந்ததும் ஐஸ்வர்யராய் போய் உடையை மாற்றி, மேக்கப்பை கலைத்து பிபிசியின் நேர்காணலுக்கு தயாரானார். வானத்தில் இருந்து அப்போதுதான் இறங்கி வந்த ஒரு தேவதையுடன் பழகுவது போலத்தான் எல்லோரும் அவரை ஒருவித பக்தியுடன் அணுகினார்கள். வயது முதிர்ந்தவர்கள்கூட மூன்றடி தள்ளி நின்று சற்று வளைந்த முதுகுடன் அவரிடம் பேசினார்கள்.
எனக்கு ஐஸ்வர்யராய் பற்றி தெரிந்ததெல்லாம் மிகவும் குறைவு. அவர் 1994ல் உலக அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியும். அவர் நடித்த ஒரு படத்தையாவது நான் பார்த்ததில்லை. அவர் அதிகச் சம்பளம் வாங்கும் ஒரு சிறந்த நடிகை என்றும், இந்தியாவில் அப்போது அவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள்.
அவருடைய முந்தைய காதலன் சல்மான் கான். ஐஸ்வர்யராய் நடித்த தேவதாஸ் படம் கான் திரைப்பட விழாவின் விசேட காட்சிக்கு தெரிவாகியிருந்தது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை உலகத்தின் முக்கியமான முதல் நூறு பேர்கள் பட்டியலில் அவருடைய பேரையும் சேர்த்திருந்தது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இரண்டு தங்க முடிப் பெண்களில் ஒருவருடைய வேலை ஆராய்ச்சி செய்வது. அவர்தான் இந்த விபரங்களை சேகரித்து, இரண்டு பக்கங்களில் குறிப்புகள் தயாரித்து, என்னிடம் தந்திருந்தார். அவற்றை வைத்துக்கொண்டு என் நேர்காணலை நான் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். பிபிசி அதை படம் பிடிக்கும்.
என்னை 'டொக்ரர் சஞ்சயன்' என்று ஐஸ்வர்யராயிடம் அறிமுகப் படுத்தினார்கள். ஒரு இலையான் கூட புகமுடியாத அளவுக்கு உதடுகளை குவித்து 'ஓ, டொக்ரர்' என்று முழுக்கையையும் வளைக்காமல் நீட்டினார். நீண்ட விரல்கள் அத்தனையும் என் கைக்குள் அடங்கின. அவை குளிர்ச்சியாகவும் இருந்தன. அவருடைய நேர் வரிசைப் பற்கள் ஆறாயிரம் வாட் வெளிச்சத்தில் என் கண்ணை கூசவைத்தது.
ஒரு சுழல் கதிரையில் ஐஸ்வர்யராய் காலுக்குமேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். கைப்பிடி இல்லாத ஒரு ஆசனத்தில் அவருக்கு முன்னால் உட்கார்ந்த நான் அதே கணம் நெளியத் தொடங்கினேன். பல ஆண்கள் அப்படி நெளிந்து அவர் பழக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய அசௌகரியம் திருப்தியைக்கூட கொடுத்திருக்கலாம். பெருந்தன்மையாக என்னை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்கு அவர் முயன்று கொண்டிருந்தார்.
ஆனால் என்னிடம் ஒரு காரணம் இருந்தது. ஒரு மாத காலமாக பிபிசியின் விவரணப் படக் குழுவுடன் நான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருந்தேன். டில்லி, கொல்கத்தா, மும்பாய், மதுரை, மைசூர், அஸ்ஸாம், முதுமலை என்று ஒரு இடத்தையும் விட்டுவைக்கவில்லை. கொல்கத்தாவில் பாம்பு பிடிகாரர்களையும், முதுமலையில் யானை பிடிப்பவர்களையும், மதுரையில் மாட்டுச் சண்டைக்காரர்களையும், அஸ்ஸாமில் காண்டாமிருகத்தின் காப்பாளர்களையும், மைசூரில் ஒரு நாள் முழுவதும் உழைத்து ஊதுபத்தி செய்து ஒரு டொலர் சம்பாதிக்கும் இளம் விதவையையும் நான் சந்தித்திருந்தேன். நாற்பத்தியாறாயிரம் பேர் வேலை பார்க்கும் இன்•போசிஸ் கம்பனியின் அதிபர் நந்தன் நிலெகானியின் செவ்வியையும் பிபிசிக்காக பதிவு செய்திருந்தேன். இதுவே கடைசி நேர்காணல். இது முடிந்ததும் நான் வாஷிங்டனுக்கு பயணமாகிவிடுவேன்.
முந்திய நாள்தான் இந்தியாவில் எங்கள் கடைசி இரவு என்றபடியால் நாங்கள் ஒரு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்தோம். இந்தியாவில் பயணம் செய்த முப்பது நாட்களும் இரண்டு முக்கியமான விதிகளை நான் கடைப்பிடித்து வந்தேன்.
1) காரமான உணவை தவிர்ப்பது.
2) கையிலே எப்போதும் இரண்டு நல்ல தண்ணீர் போத்தல்களை வைத்திருப்பது.
அந்தக் கடைசி இரவு இந்த தற்காப்பு வியூகத்தை சிறிது தளர்த்தி விட்டேன். காரமான உணவு வகைகளை வெள்ளைக்காரர்கள் சர்வ சாதாரணமாக வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இந்த ஒரு மாத காலத்தில் அவர்கள் வயிற்றை எப்படியோ பழக்கிவிட்டார்கள். அவர்கள் முன்னால் நான் குறைந்தவன் இல்லை என்பதை காட்டிவிடவேண்டும் என்ற ஆவேசத்தில் என் விதிகளை மீறியிருந்தேன். அதன் பின்விளைவுதான் என் உடம்பின் பின்பாகம் ஒத்துழைக்க மறுத்தது. அதிகாலை மூன்று மணியிலிருந்து பாத்ரூமுடனான என் உறவு அதிகரித்தது. இதைப் பற்றி நான் யாருக்கும் மூச்சுவிடவில்லை. ஒரு 45 நிமிடங்கள் என் வயிறு அமைதி காத்தால் போதுமானது, ஐஸ்வர்யராயுடனான என் நேர்காணலை வெற்றிகரமாக முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.
ஐஸ்வர்யராய் இப்போது தயாராகியிருந்தார். முடியை கையினால் அளைவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். நான் என் கையிலிருந்த குறிப்புகளை தள்ளி வைத்துவிட்டு என் மனதில் அந்த நிமிடம் தோன்றிய ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுவே முதல் கேள்வி.
'நீங்களும், நானும் இப்போது சேர்ந்து வெளியே போனால் என்ன நடக்கும்?'
ஐஸ்வர்யராய் மடிந்து சிரித்தார். பதின்பருவத்து பெண்ணின் சிரிப்புபோல அது கலீரென்று அடிவயிற்றில் இருந்து எழும்பி அறையை நிறைத்தது. அடிக்கடி அவருடைய தலைமுடி முன்னே விழுவதும் அவர் அதை சிலுப்பி பின்னே எறிவதுமாக நிமிடத்துக்கு மூன்று தடவை இது நடந்தது. முடியை பின்னே தள்ளுவது மட்டுமே தெரிந்தது. முடி எப்படி முன்னுக்கு வருகிறது என்பதை அந்த 45 நிமிடத்தில் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
'ஏன், நாங்கள் சேர்ந்து போய்ப் பார்க்கலாமே. நான் தயார்,' என்று சொல்லியபடி ஐஸ்வர்யராய் எழுந்து நின்றார்.
இந்த நிமிடம் என் வயிறு, அதற்கு விதிக்கப்பட்ட எல்லையை அடைந்துவிட்டது. நான் நேர்காணல் தொடங்குவதற்கு முன்பாக, படம் பிடிக்கும் இடத்திலிருந்து ஆகக்கிட்டவான பாத்ரூம் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் என்பதையெல்லாம் என் கவனத்தில் நிறுத்தியிருந்தேன். எனக்கிருந்த கணக்கறிவையும், என்னுடைய அதிகபட்ச வேகத்தையும் மனதில் இருத்தி எத்தனை செக்கண்டுகளில் அந்த தூரத்தை கடக்கலாம் என்பதையும் கணித்து வைத்திருந்தேன்.
'மன்னியுங்கள்' என்றுவிட்டு பாத்ரூம் இருந்த திசையில் ஓட்டம் எடுத்தேன்.
மிகக் குறைந்த வசதிகள் கொண்ட பாத்ரூம் அது. நேர்காணலை பாதியிலே விட்டுவிட்டு வரும் ஒருவருக்காக அது நிச்சயம் கட்டப்பட்டிருக்கவில்லை. நான் எதிர்பார்த்ததற்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டது. சேர்ட்டை அவசரமாக கால்சட்டைக்கு உள்ளே தள்ளி பழைய நிலைக்கு என்னை மாற்றிக்கொண்டு திரும்பினேன். இன்னும் 43 நிமிடங்கள் வயிறு தாக்குப் பிடித்தால் போதுமானது. வெளியே வந்தபோது என் வயிற்றினிடமிருந்து அந்த உத்திரவாதம் கிடைத்தது போலவே எனக்கு பட்டது.
ஒப்பனைப் பெண் குனிந்து ஐஸ்வர்யராயின் காதுகளில் தன் வாயைக் குவித்து ஏதோ சொன்னார். விளக்குகள் மீண்டும் எரிந்தன. காமிராக்காரர் காமிராவுக்கு பின்னால் நின்றார். இயக்குனர் கடந்த பத்து நிமிடங்களாக தன் இடத்தைவிட்டு அசையவில்லை. சுற்றிவரச் சேர்ந்த கும்பல் அப்படியே நின்றது. இன்னும் பல மணித்தியாலங்களை அங்கே கழிப்பதற்கு அது சித்தமாயிருந்தது. நான் காமிராவை நோக்கி நடந்தேன்.
உலக அழகி எனக்காகக் காத்திருந்தார்.
முற்றும்