பல ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பாடு தூக்கி என்று அறியப்பட்ட
ஓர் இனம் எங்கள் மத்தியில் வாழ்ந்தது. கொழும்பு மாநகரத்தில்
மாத்திரம் பத்தாயிரம் பேருக்கு மதியச் சாப்பாட்டுப் பொதிகளை
இவர்கள் தினம் காவினார்கள். சமீபத்தில் நான் கொழும்புக்குப்
போனபோது இவர்களைக் காணவில்லை. முன்பெல்லாம் வீதிகளில்
எங்கே திரும்பினாலும் அவர்கள் நிறைந்திருப்பார்கள். சைக்கிள்
பின் காரியரில் கட்டிய பாரிய பெட்டிகளில் சாப்பாட்டுத் தட்டுகளை
அடுக்கிக்கொண்டு குறுக்குமறுக்காகவும், தாறுமாறாகவும் விரைந்து
செல்வார்கள். ஆற்று நீர் வற்றி வற்றி இல்லாமல் ஆனதுபோல
இவர்கள் கொழும்பு வீதிகளிலிருந்து முற்றாக மறைந்துபோனார்கள்.
நான் மணமுடித்த புதிதில் எனக்கு ஒரு சாப்பாடு தூக்கி கிடைத்
தான். அவன் பெயர் பியதாச. சாரம் உடுத்தி, அகலமான கறுப்பு
பெல்ட் அணிந்து, கைவெட்டிய பனியன் போட்டிருந்தான். நல்ல
அரும்பு மீசையும் இருந்தது. சாப்பாடு தூக்கிகள் எல்லோருமே
சிங்களவர். என் மனைவி பத்து மணிக்கே சமையலை முடித்துவிடுவார்.
பியதாச ஒரு நிமிடம்கூடத் தாமதிக்கமாட்டான்; துடித்துக்கொண்டு
நிற்பான். ஒரு பிளேட்டில் உணவை நிரப்பி இன்னொரு பிளேட்டினால்
மூடி சதுரமான வெள்ளைத் துணியினால் கட்டி அதில் விலாசம்
எழுதிய சீட்டைத் தொங்கவிட்டுக் கொடுக்கவேண்டும். அந்த விலாசத்
துக்குத்தான் சாப்பாடு போகும். சாப்பாட்டு பிளேட்டைப் பெட்டியிலே
அடுக்கி, இரண்டுபக்கமும் பெட்டி அசைய நின்றபடி உழக்கிக்கொண்டு
விரைவான், பியதாச.
என் மனைவி பிறந்த வீட்டிலிருந்து வரும்போதே சோறு சமைக்கவும்,
மூன்று கறி செய்யவும் பழகிக்கொண்டு வந்திருந்தார். தக்காளிச்
சம்பல், கத்தரிக்காய் குழம்பு, புடலங்காய் கூட்டு. ஒரு பெண்
குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி மூன்று கறி வைக்கப்
பயிற்சி கொடுத்து எனக்கு மணமுடித்து வைத்ததில் அவருடைய
பெற்றோருக்கு அளவற்ற பெருமை. அந்தப் பெருமை குலைந்துவிடாமல்
தினமும் என் மனைவி அதையே சமைத்தார். பாராளுமன்றத்
தீர்மானம் போட்டால் ஒழிய அவர் அதை மாற்றமாட்டார் என்று
எனக்குத் தோன்றியது. எவ்வளவுதான் காதல் பெருக்கெடுத்தாலும்,
எவ்வளவுதான் திடநெஞ்சக்காரனாக இருந்தாலும் எத்தனை நாளைக்
குத்தான் ஒருவன் புடலங்காய் கூட்டையும், கத்தரிக்காய் குழம்பை
யும், தக்காளிச் சம்பலையும் சாப்பிட்டு உயிர் வாழமுடியும். ஒருநாள்
துணிந்து கேட்டேன். ஆண்டவன் படைத்த உணவுகளில் உயர்ந்தது
பருப்பு. உலகம் முழுக்க இதைச் சாப்பிடுகிறது. இந்தப் பருப்பு
என்ன பாவம் பண்ணியது. இதைச் சமைப்பதற்கு உமக்கு வீட்டிலே
ஒருவரும் பயிற்சி அளிக்கவில்லையா?
‘பருப்பு என்றாலே எனக்குப் பெரும் குழப்பம் உண்டாகிவிடுகிறது.
எந்தப் பருப்பை, எதற்குப் பாவிக்கவேண்டும் என்பது என் அம்மா
விற்குத் தெரியவில்லை. அதிலே எத்தனை வகை இருக்கு தெரியுமா?
பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மைசூர் பருப்பு, துவரம் பருப்பு.
அதுதான் அம்மா ஒத்திப்போட்டிருக்கிறார். வளைகாப்புக்கு நான்
வரும்போது அதை எனக்குப் படிப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.’
இப்படி ஒரு ரகஸ்ய ஒப்பந்தம் வளைகாப்பு மட்டும் நீட்டிக்கப்பட்டு
இருப்பது எனக்கு அப்போதுதான் வெளிச்சமானது.
அது நல்ல காரியம்தான், ஆனால் உளுத்தம் பருப்பை விட்டு
விட்டீரே.
அது என்ன உளுத்தம் பருப்பு?
அத்துடன் பருப்புக் கதை எங்கள் வீட்டிலே நிறுத்தப்பட்டது.
மனைவி அனுப்பிய சாப்பாட்டுக் கோப்பையை ஒரு நாள்
அலுவலகத்தில் திறந்து பார்த்தால் புடலங்காய் கூட்டு இல்லை
ஆனால் அதற்கு பதிலாகக் கீரை இருந்தது. வந்தது வரட்டும்
என்று என் மனைவி துணிந்து கீரை கடைந்து அனுப்பியிருந்தார்.
தேங்காய்ப்பால் விட்டுக் கடைந்து எண்ணெய் மிதக்க அது நல்ல
ருசியாக அமைந்திருந்தது. கீரையை அனுபவித்ததிலும்பார்க்க புடலங்
காய் வராதது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் பிறந்து
வளர்ந்த வீட்டில் புடலங்காயைத் தொடுவதில்லை. இங்கே எத்தனை
நாள்தான் அதனுடன் மாரடிப்பது. அன்று வெறும் கோப்பையைத்
திருப்பும்போது ஒரு பழம் பாடலை, எப்பவோ படித்தது, ஒரு
துண்டுக் காகிதத்தில் எழுதி பிளேட்டினுள் வைத்து அனுப்பினேன்.
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம் பசந்து – பொய்யே
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் செறிந்த கையாள்.
நான் வீட்டுக்குத் திரும்பியபோது என் மனைவி அடைந்த
சந்தோசம் சொல்லும் தரமன்று. சொர்க்கத்துக் கதவை ரகஸ்யமாகத்
திறந்துவிட்டதுபோலத் துள்ளிக்கொண்டு நீளத்துக்கு ஓடிவந்து
வெளிப்பட்டார். அவ்வையாரும், ஒரு கட்டுக் கீரையும், பழம்
பாடல் ஒன்றும் வீட்டு நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது.
நான் பாடல் எழுதி அனுப்பிய நாளில் இருந்து துண்டுப்
பரிமாற்றங்கள் கிரமமாக நடந்தன. ஒரு நாள் சாப்பாட்டு பிளேட்டுக்கு
மேலே ஒரு துண்டுக் காகிதத்தில் ‘பாம்பு வந்தது’ என்று எழுதி
அனுப்பியிருந்தார். இந்தப் புதிரை எவ்வளவு யோசித்தும் என்னால்
விடுவிக்க முடியவில்லை. ஒரு நல்ல சிறுகதையின் ஆரம்பம் போலவும்
இருந்தது; முடிவு போலவும் இருந்தது; தலைப்பு போலவும் இருந்தது.
அன்றைய சாப்பாட்டை ருசி பார்த்தால் அது முழு மோசம்.
சோறு அவியவில்லை. வீட்டுக்குத் திரும்பிப் போனபோதுதான்
மர்மம் துலங்கியது.
அன்று மனைவி சமைத்துக்கொண்டிருந்தபோது ஒரு பாம்பு
வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. அவர் அரண்டுபோய் வாசலுக்கு
வந்து கூப்பாடு போட்டிருக்கிறார். ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை.
நல்லகாலமாக அந்த நேரம் பார்த்து சாப்பாடு எடுக்க வந்த பிய
தாச அந்தப் பாம்பை ஒரே அடியில் அடித்துக் கொன்றுபோட்டான்.
அன்றைய சமையல் அரையும் குறையுமாக இருந்ததற்கு அதுதான்
காரணம். புடலங்காய் கூட்டு இல்லாமல் இரண்டு கறிதான்
வந்திருந்தது. ‘இன்றைக்கு சாப்பாடு கூடாதா?’ என்றார் மனைவி
சிணுங்கிக்கொண்டே. உண்மையில் புடலங்காய் கூட்டு வராததில்
நான் சந்தோசமாய்த்தான் இருந்தேன். நான் ‘அதற்கென்ன, நீர்
பாம்பிடமிருந்து தப்பியது பெரிய காரியம். இண்டைக்கும் சேர்த்து
நாளைக்கு நான் புடலங்காய் கூட்டு சாப்பிடலாம்’ என்றேன்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு எப்போது சாப்பாடு மோசமாக
வந்தாலும் நான் ஒரு துண்டில் எழுதி அனுப்புவேன். ‘இன்று
என்ன வந்தது, ஓணானா?’ மனைவி புரிந்துகொண்டுவிடுவார்
சாப்பாடு கூடாது என்று.
அந்த நாட்களில் எங்களுக்குள் சண்டைக்கு காரணமே தேவை
யிருக்கவில்லை. ஒருநாள் காலை ஏதோ பூசல். ஏதாவது ஒரு
சின்ன காரணம் போதும். நான் சாப்பிடாமலே அலுவலகம் போய்
விட்டேன். ஆனால் மனதை என்னவோ செய்தது. அப்படி வந்திருக்கக்
கூடாது என்றே தோன்றியது. மத்தியான நேரம் சாப்பாட்டுத்
தட்டைத் திறந்தால் ஆகச் சிறிய ஒரு துண்டுப் பேப்பரில் ‘கோபமா?’
என்ற ஒரு வார்த்தை மட்டும் எழுதியிருக்கிறது. என்னால் அன்று
சாப்பிடமுடியவில்லை. அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு
வீட்டுக்குப் போய் மனைவியை சமாதானப்படுத்த வேண்டிவந்தது.
இப்படி எத்தனையோ சம்பவங்கள். நாங்கள் கொழும்பில் வாழ்ந்த
அத்தனை வருடங்களிலும் ஆறு, ஏழு சாப்பாடு தூக்கிகள் எங்களிடம்
சாப்பாடு தூக்கினார்கள். எல்லோருமே மரியாதை தெரிந்தவர்களாக
இருந்தார்கள். மிகக் கடுமையான உழைப்பாளிகள். ஒரு நாளாவது
நேரம் பிந்தியது கிடையாது. திடீரென்று மட்டம் போட்டு எங்களைத்
தவிக்க விட்டதும் இல்லை. சாப்பாடு எடுக்க வீட்டுக்கு வருபவன்தான்
நேராக என்னிடம் அதைக் கொண்டு வருவான் என்றில்லை.
என்னுடைய சாப்பாட்டு பிளேட் மூன்று, சில வேளை நாலு கை
மாறித்தான் வந்து சேரும். ஆனாலும் சரியான விலாசத்துக்கு,
சரியான நேரத்துக்கு வந்துவிடும். அதுபோல நான் அலுவலகத்திலிருந்து
திரும்ப வீடு போய்ச் சேருமுன்னர் என்னுடைய வெறும் பிளேட்
அங்கே இருக்கும்.
பியதாசாவுக்கு ஒரு நாள் வேறு வேலை கிடைத்து விடைபெறுவ
தற்கு வந்திருந்தான். நாங்கள் இனிமேல் யாரை வேலைக்கு வைக்கலாம்
என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஒருவர் பின் ஒருவராக
நாலு பேர் வேலை கேட்டு வந்தார்கள். எவ்வளவுக்கு அவர்களிடம்
ஆற்றல் இருந்ததோ அவ்வளவுக்கு இந்த வேலையில் போட்டியும்
இருந்தது. அதற்குப் பிறகு வந்தவன் பெயர் மெண்டிஸ். இன்னும்
பலபேர் வந்துபோனார்கள். அவர்கள் பெயர் எல்லாம் ஞாபகத்தில்
இல்லை. ஆனால் மெண்டிஸ் செய்த ஒரு பெரும் தவறு அவனுடைய
பெயரை இன்றைக்கும் நினைவில் நிற்கும்படி செய்துவிட்டது.
மெண்டிசிடம் அரிய குணங்கள் இருந்தன. அவன் தனது ஆங்கில
அறிவை அதிகமாக எடைபோட்டதுதான் பெரிய குறைபாடு. ஒரு
நாள் சாப்பாடு வந்தது ஆனால் அதைக் கட்டிய துணி வித்தியாசமாக
இருந்தது. விலாச அட்டையைப் பார்த்தால் அதில் என் பெயர்
இல்லை; என் பெயரின் முதல் எழுத்துத்தான் இருந்தது. சாப்பாட்டுக்
கோப்பையைத் திறந்து பார்த்தால் உள்ளே சிவப்புச் சோறு, மஞ்சள்
வகையான கறி, பச்சைக்கீரை என்று பல வண்ணத்தில் சோடனை.
நடுவில் சோற்றுக்குள் புதைத்து ஒரு மீன் உடம்பின் வால் பக்கத்தில்
வெட்டிய துண்டு. நிச்சயமாக இந்தச் சாப்பாடு என் மனைவியின்
கையிலிருந்து உருவாகவில்லை. சரி, என்னுடைய சாப்பாடு மாறி
விட்டது, யாருடையதோ இங்கே வந்துவிட்டது என்று மூடிவைக்கப்
போன சமயத்தில் ஒரு பேப்பர் துண்டு கண்ணிலே பட்டது.
அதில் ‘இன்று சொக்கட்டான் விளையாடலாமா?’ என்று எழுதி
யிருந்தது. ஒரு பெண்ணின் கையெழுத்துதான், சந்தேகமில்லை.
தாயம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சொக்கட்டான்
என்றால் அது மகாபாரதத்தில் தருமரும், சகுனியும் ஆடியது.
இந்தப் பெண் சொக்கட்டான் விளையாடக் கூப்பிடுகிறார், துவாபர
யுகம் திரும்பிவிட்டதா? இது ஒரு சங்கேத வார்த்தை என்பதை
ஒரு குழந்தைப்பிள்ளைகூட ஊகிக்கமுடியும். எனக்குச் சிரிப்பாக
வந்தது. இதை எழுதியது ஒரு மனைவியாக இருக்கலாம்; ஏன்
காதலியாகக்கூட இருக்கலாம். நான் அதே துண்டில் ‘விளையாடலாமே’
என்று எழுதி திருப்பி வைத்துவிட்டேன். அப்பொழுதுதான் இன்னொரு
பிரச்சினை நினைவுக்கு வந்தது. எப்பொழுதாவது சாப்பாட்டில்
மீதம் விட்டால் அது வீட்டுக்குத் திரும்பிப் போகாது. இந்தச்
சாப்பாடு தூக்கிகள் போகும் வழியில் மீதியை பிச்சைக்காரருக்கு
விற்றுவிடுவார்கள். அதுகூட ரெண்டர் முறைப்படிதான் நடக்கும்.
ஆகவே நான் சாப்பாட்டைக் கொட்டிவிட்டு கடிதத்தை மாத்திரம்
உள்ளே வைத்து பிளேட்டைக் கட்டி வைத்தேன். பிளேட்டை
எடுக்க மெண்டிஸ் வந்தபோது சாப்பாடு மாறிப்போனதைச் சொன்
னேன். அவன் ‘சொறி சேர், சொறி சேர்’ என்று பதினாறுதடவை
ஆங்கிலத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். சற்றுக் குறைந்த
ஆங்கில அறிவும், கூடிய ஞாபகசக்தியும் இருந்தால் இந்த விபத்தைத்
தடுத்திருக்கலாமே என்று எனக்குப் பட்டது.
சில நாள் கழித்து மெண்டிசிடம் சாப்பாடு மாறிப்போனதால்
அவனுக்கு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டேன். அவன்
இல்லை என்றான். அந்த வீட்டில் ஒரு விதவை அம்மாவும் ஒரு
பெண்ணும்தான். அந்த அம்மா ஆறு பேருக்கு சாப்பாடு கட்டி
அனுப்புவார். அதுதான் அவர்கள் பிழைப்பு என்றான். உடனேயே
மகளுக்குக் காதல் தொடங்கிவிட்டது, அவள் தாய்க்குத் தெரியாமல்
தூது விடுகிறாள் என்று நினைத்துக்கொண்டேன். அதுவும் பிழை
என்று சில நாட்களில் தெரிந்தது. மகளின் வயது ஆறு என்றான்
மெண்டிஸ். அப்படியென்றால் இது தாயின் காதல்தான். அந்த
விதவைத் தாளய்தான் சொக்கட்டான் விளையாட்டுக்குத்தான் ஊட்டி
வளர்க்கும் யாரையோ அழைத்திருக்கிறாள்.
விதவையின் காதலைச் சொல்லப்போய் மிக முக்கியமான என்
வீட்டுக் கதையைச் சொல்ல மறந்துவிட்டேன். சாப்பாடு மாறிய
அன்று நான் வீட்டுக்குத் திரும்பியபோது என் மனைவி பெரிய
சாகசம் செய்து முடித்ததுபோலச் சிரிப்பைச் சொண்டுக்குள் அடக்கிக்
கொண்டு சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்டார். நான்
எங்கே சாப்பாட்டைக் கண்டேன். அன்று பட்டினி அல்லவா?
இருந்தாலும் ஒரு பொய்யை உடனுக்குடன் உண்டாக்கி ‘பரவாயில்லை’
என்று பட்டும் படாமலும் சொல்லிவைத்தேன். அவ்வளவுதானா
என்றார். அவ்வளவுதான் என்றேன். அவர் முகம் உடனே மூடிவிட்டது.
வெடுக்கென்று உள்ளே போனார்.
மீண்டும் சில நாள் கழித்து அதே விசயத்தை எடுத்தார். நான்
பேச்சை மாற்றப் பார்த்தேன். சாப்பாடு எப்படி இருந்தது என்றார்
விடாமல். ஒரு பொய்யை உண்மையாக்கப் பல பொய்களைச்
சொல்லவேண்டும். நான் ‘நல்லாய்த்தானே இருந்தது’ என்றேன்.
தான் அன்று புதுக்கப் புதுக்க துவரம்பருப்புக் கூட்டு செய்து
அனுப்பியதாகவும், அதைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை
என்றும் முறைப்பாடு வைத்தார். இந்தக் கணத்தில் நான் உண்மையை
ஒப்புக்கொண்டிருக்கவேண்டும். அப்படிச் செய்தால் முன்பு நான்
சொன்ன அத்தனை பொய்களுக்கும் காரணம் காட்டவேண்டி
வரும். ‘மெய்யாகவே விசேஷமாகத்தான் இருந்தது. அருமையிலும்
அருமை’ என்றேன். நேரம் தப்பிய பாராட்டு. மூன்று நாள் முன்வந்த
பிறந்த தினத்துக்கு இப்பொழுது வாழ்த்துச் சொல்வதுபோல. மனைவி
முகத்தில் மகிழ்ச்சி அணைந்துபோனது.
இன்று, பல வருடங்களுக்குப் பிறகும் அந்த விதவையின் காதல்
என்னவானது என்று என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடிய
வில்லை. அன்னம் விடு தூது, கிளிவிடு தூது, மேகம் விடு தூது,
நாரை விடு தூது என்பது போல ஒரு காலத்தில் சாப்பாடு தூக்கிகள்
காதல் தூதுவர்களாக இருந்தார்கள். சிலவேளைகளில் தூது தவறான
இடத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் உண்டு.
என்னுடைய மனைவி முதன்முதலாகத் துவரம்பருப்புக் கூட்டு
வைத்தது அவருடைய சமையல் வரலாற்றில் ஏற்பட்ட பெரும்
பாய்ச்சல். பக்கத்துவீட்டு மாமியிடமோ, மேல்வீட்டு மாமியிடமோ,
கீழ்வீட்டு சிநேகிதியிடமோ பாடம் கேட்டு, எனக்காகப் பாடுபட்டுச்
சமைத்து அனுப்பியது அந்தக் கூட்டு. முளிதயிர் பிசைந்த காந்தள்
மென்விரல் சங்க காலத்துப் பெண்ணை நினைவூட்டும் வகையில்
என்பொருட்டு பெரும் அல்லல் பட்டிருந்தார். முதல் நாள் துவரம்
பருப்பு வாங்கி நனையப்போட்டு, அதை அரைத்து, மெல்லிய
விரல்களால் தட்டித் தட்டையாக்கி, இடியப்பத் தட்டில் இட்டு
அவித்து, ஈரம் காய்ந்ததும் துண்டு துண்டாக வெட்டி, காயவைத்து,
பொரித்து, கூட்டுவைத்து, இறக்கி சூடு தணிந்த பிறகு தேசிக்காய்
பிழிந்துவிட்டு மணக்க மணக்க ஆக்கியிருப்பார். அது ஒரு சாப்பாடு
தூக்கி விட்ட பிழையால் தவறான விலாசத்துக்குப் போய், மாதம்
இவ்வளவு என்று காசு கொடுத்துச் சாப்பிடும் பெயர் தெரியாத
ஒருத்தனால் ருசி பார்க்கப்பட்டது பெரும் துரதிர்ஷ்டமே. இப்பொழுது
நினைத்துப் பார்க்கும்போதும் அது வேதனையைக் கொடுத்தது.
ஆனால் இது நாள்வரை அந்த உண்மையை என் மனைவியிடம்
நான் சொல்லவில்லை. இன்றுகூட என் மனைவி என்னையோ,
சாப்பாடு தூக்கியையோ, சொக்கட்டான் விளையாடும் கள்ளக்
காதலனையோ மன்னிக்கும் பக்குவம் அடைந்துவிட்டார் என்று
சொல்லமுடியாது.
END