உடனே திரும்பவேண்டும்

முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள்

கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர

ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. எங்களுக்கு

என்ன செய்வதென்று தெரியவில்லை.

 அடுத்து அவளுக்கு நுளம்பு கடித்து மலேரியாக் காய்ச்சல் பிடித்தது. மருத்துவ மனைக்கு ஓடினோம். குழந்தை மெலிந்து

உருக்குலைந்து கொண்டு வந்தது. அந்த நேரம் பார்த்து என்னை நைரோபி அலுவலகத்துக்கு அவசரமாக வரும்படி பணித்தார்கள். சியாரா

லியோன் ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரம் என்றால் நைரோபி கிழக்கு கரை. நீண்ட தூரம். நேரடியான விமான பறப்பு இல்லை.

போவதற்கும் வருவதற்கும் மூன்று நாள் எடுக்கும். மனைவியை எப்படியும் சமாளிக்கச் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நான் திரும்பி வர

எட்டு நாட்கள் ஆகும் என்பது எனக்கு அப்போது தெரியாது. வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு பயணமாக அது அமையும் என்பதும்

நான் நினைத்தும் பார்த்திராத ஒன்று.

 நான் போன விசயம் இரண்டு நாளில் முடிந்து மூன்றாவது நாள் புறப்பட்டேன். எத்தியோப்பிய விமானம் அழகான

பணிப்பெண்களுக்கு பேர் போனது. அமைதியான உபசாரம்.    நீண்ட பயணம், ஆனால் ஏதோ பிரச்சினை காரணமாக எங்களை அபிட்ஜானில்

இறக்கிவிட்டு அடுத்தநாள் போகலாம் என்றார்கள். அடுத்தநாள் விமானம் புறப்பட்டு நேராகப் போய் நைஜீரியாவின் லேகொஸ்

தலைநகரத்தில் இறங்கியது. 'விமானம் பழுது, நாளைதான் புறப்படும்' என்றார்கள். அப்படித்தான் பிரச்சினை ஆரம்பமானது.

 ஒருவராவது எதிர்ப்பு தெரிவிக்காமல் தங்கள் தங்கள் பெட்டிகளையும், பைகளையும் தூக்கிக்கொண்டுபோய் வரிசையில்

நின்றார்கள். எனக்கு நைஜீரியா விசா இல்லையாகையால்  அதிகாரி என்னை மறித்துவிட்டார். கேள்விமேல் கேள்விகேட்டு துளைத்தார்.

'நானாக விரும்பி வரவில்லை. பிளேன் பழுதாகி நின்றுவிட்டது, நாளை புறப்படும். ஓர் இரவு மட்டுமே தங்குவதற்கு அனுமதி வேண்டும்'

என்றேன். அந்த அதிகாரி நம்ப மறுத்தார். ஏதோ நானே சதிசெய்து பிளேனை பழுதுபடுத்தியதுபோல என்னைப் பார்த்தார். என்னுடைய

பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு ஒரு பழைய தபால் உறை பின்பக்கத்தில் ஏதோ மொழியில் கிறுக்கி என்னிடம்

தந்தார். அதுதான் பற்றுச்சீட்டு. 'நாளைக்கு திரும்பும்போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.

 ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தாலும் கவலை பிடித்தது. வெளியே நூற்றுக்கணக்கான வாடகைக் கார்கள் நின்றன. ஒரு சாமான்

தூக்கி நிலத்திலே கிடந்த என் பெட்டியை தூக்கி வாகனத்தில் வைத்தான். அதற்கு கூலியாக 100 டொலர் கேட்டான். காசை குடு குடு என்று

சாரதி விரட்டினான். நான் மறுத்தேன். அங்கே நின்ற அத்தனை சாமான் தூக்கிகளும் முற்றுகை இட்டனர். தரையிலே சும்மா கிடந்த

பெட்டியை தூக்கி காரிலே வைப்பதற்கு கூலி நூறு டொலரா? பிரச்சினை பெரிதானது. வேறு ஒன்றும் செய்யத் தெரியாமல் காசைக்

கொடுத்துவிட்டு வண்டியில் ஏறி விமான நிலையத்துக்கு கிட்டவாக உள்ள ஒரு விடுதிக்கு போகச் சொன்னேன். உடனே சாமான் தூக்கியும்

முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான். ஏன் என்று கேட்டேன். 'என் சாமானை விடுதியில் இறக்குவதற்கு' என்று சொன்னான் சாரதி.

நைஜீரியாவில் இப்படி வழக்கம் இருக்கும்போல என்று நினைத்துக்கொண்டேன். சாலை நீண்டுகொண்டே போனது. ஆள் அரவம் அற்ற ஒரு

வீதியில் கார் போனபோது எனக்கு பயம் பிடிக்க தொடங்கியது.

 உலக வங்கியில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவரை லேகொஸ் நகரில் சமீபத்தில் கார்ச் சாரதி ஒருத்தன் கொள்ளையடித்து

அவருடைய விலை உயர்ந்த ஆடைகளையும் சப்பாத்துகளையும்கூட கழற்றிக்கொண்டு அவரை நடுவீதியில் விட்டிருந்த செய்தியை தினப்

பத்திரிகையில் சமீபத்தில்தான் நான் படித்திருந்தேன். ஆகவே கிலி பிடித்து நடுங்கிக்கொண்டிருந்தேன். அவ்வளவாக மனித

நடமாட்டமில்லாத ஒரு விடுதியில் சாரதி காரை சடுதியாக நிறுத்தினான். நான் நேராக மனேஜரிடம் சென்று 'என்னிடம் பணம் இல்லை,

காசோலைதான் இருக்கிறது. எனக்கு தங்க இடம் வேண்டும், வாடகை சாரதிக்கும் பணம் கொடுக்கவேண்டும்' என்றேன். அவரும் சம்மதித்து

எனக்கு தங்குவதற்கு ஓர் அறையை ஒதுக்கி வாடகைக் காருக்கும் பணம் கொடுத்தார். ஒருவாறாக சாரதியிடமும், சாமான் தூக்கியிடமும்

இருந்து தப்பி பெட்டியுடன் அறைக்குள் நுழைந்தபோதுதான் எனக்கு அப்பாடா என்று ஆறுதல் ஏற்பட்டது.

 அறையிலே டிவி, குளிர்பெட்டி, சுழல்விசிறி என்று எல்லா வசதிகளும் இருந்தாலும் அறை மிக மோசமான நிலையில் இருந்தது.

நிலக்கடலைக் கோதுகள் காலில் தட்டுப்பட்டன. எனக்கு முன்பு தங்கியிருந்தவருடைய தலை அடையாளம் தலையணையில் இன்னும்

இருந்தது. தரையில் ஊர்ந்த கரப்பான் பூச்சிகள் அணுகியதும் ஒரு குருவிபோல பறந்துபோயின.   வீட்டு நிலைமை பற்றிய பதற்றமும்

எனக்கு கூடியது. எழுபதுகளில் நெடுந்தொலைவு தொலைபேசி அழைப்புக்கு பல மணி நேரம் காத்திருக்கவேண்டும். ஒருவழியாக தொடர்பு

கிடைத்து மனைவியுடன் பேசியபோது அவர் திரும்ப திரும்ப 'சுறுக்க வாங்கோ, சுறுக்க வாங்கோ' என்று சொன்னாரே ஒழிய வேறு ஒன்றும்

சொன்னாரில்லை.

 பெரும் அவதியாக இருந்தது. ஒருவர்கூட அறிமுகம் இல்லாத பெரிய நாடு. ஒரு மனித சீவன்கூட  அன்பாகப் பேசவில்லை.

வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த பெண்மணி பெரிய ஒப்பனை எல்லாம் செய்திருந்தாளே ஒழிய அவள் உதடுகள் சிரிப்பதை மறந்து பல

வருடங்கள் ஆகியிருக்கலாம். யன்னல் வழியாகப் பார்த்தேன். தரைப் புற்கள் நிறைய மின்மினிப் பூச்சிகள். அவ்வளவு மின்மினிகளை ஒரே

இடத்தில் நான் பார்த்ததில்லை. சில இருப்பதும் சில பறப்பதுமாக ஒரு மின்விளையாட்டு அங்கே நடைபெற்றது. அந்தக் காட்சியில் சற்று

மகிழ்வதுகூட கடவுளுக்கு பிடிக்கவில்லை. திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை இருட்டானது. சிறிது நேரம் அப்படியே அசையாமல்

நின்றேன். உதவிக்கு வருவாரில்லை. நான் தடவித் தடவி கட்டிலை அடைந்து படுத்தபோது காலை எப்படியும் வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்

என்று என்னை தேற்றிக்கொண்டேன்.

 இரவு இரண்டு மணிக்கு திரும்பவும் மின்சாரம் வந்தபோது படபடவென்று விசிறி சுழன்றது. விளக்குகள் எரிந்தன.

தொலைக்காட்சி சத்தமாக பேசியது. குளிர்பெட்டி உயிர்பெற்றது. நான் திடுக்கிட்டு விழித்தேன். மீதி இரவு நான் தூங்கவே இல்லை. எப்போது

விடியும் என்று காத்திருந்து விடிந்ததும் குளித்து தயாரானேன். ஈரப்பசை இல்லாத காற்றில் தலைமுடிகள் நட்டுக்கொண்டு நின்றன.

சீப்பினால் சீவியபோதும் படியாமல் சரசரவென்று ஒலி உண்டானது. நான் முதல் நாள் தரித்த அதே உடையை அணிந்துகொண்டு, காலை

உணவுகூட சாப்பிட நேரம் இல்லாமல் விடுதி மனேஜரிடம் சொல்லி ஒரு கார் பிடித்து விமான நிலையத்துக்கு போய்ச்சேர்ந்தேன்.

 தபால் உறையின் பின்பக்கத்தில் கிறுக்கிய துண்டை கையிலே பிடித்துக் கொண்டு குடிவரவு அதிகாரியை தேடினேன்.

சீருடையில் எல்லோரும் ஒரே மாதிரியான உடலமைப்புடன் தெரிந்தார்கள். ஒருவருக்கும் அந்த துண்டு என்ன சொன்னது என்பது

தெரியவில்லை. அது யார் எழுதியது என்பதும் மர்மமாகவிருந்தது. அந்த மனிதர் பேசியபோது அவருடைய தொண்டை நரம்புகள் புடைத்து

நின்றன. இந்த ஓர் அடையாளத்தை வைத்துக்கொண்டு அந்த அதிகாரியை எப்படி தேடிக்கண்டுபிடிப்பது.

 இரண்டு மணிநேரம் கழித்து அந்த மனிதரே என்னை தேடி வந்து 'நூறு டொலர் எடு' என்றார். நைஜீரியாவில் எல்லோரும் காசை

நூறு நூறாகத்தான் எண்ணுவார்கள் போலும். அதனிலும் குறைவான ஒரு தொகை அவர்களுக்கு தெரியவில்லை. அவர் தந்த துண்டையும்

நூறு டொலரையும் கொடுத்தேன். சாவியைப் போட்டு லாச்சியை திறந்து ஒரு குவியல் கடவுச்சீட்டுகளை அள்ளி மேசைமேல் போட்டார்.

இன்னும் துளாவி மீதியையும் மேசையில் குவித்தார். சில நழுவி மேசைக்காலில் விழுந்தன. நான் பதறியபடி ஒவ்வொன்றாக ஆராய்ந்தேன்.

என் கைகள் நடுங்கியபடியால் என்னால் சீராகத் தேடமுடியவில்லை. எத்தனை நாடுகள், எத்தனை அளவுகள், எத்தனை வண்ணங்கள்.

'வணுவாட்டு' என்றுகூட ஒரு நாடு இருந்தது. ஒருவாறாக என்னுடைய கடவுச்சீட்டை கண்டடைந்தபோது மகிழ்ச்சியால் உடல் விம்மியது.

அவர் மீதியை கைகளால் வழித்து அப்படியே லாச்சியினுள் தள்ளினார். பெரிய காரியத்தை செய்து முடித்தவர்போல கைகளை அகல

விரித்து நடந்துபோனார். நான் ஒரு சின்னக் கணக்கு போட்டுப் பார்த்தேன். அன்றைய நாள் முடிவதற்கிடையில் அவருக்கு நாலாயிரம்,

ஐயாயிரம் டொலர்கள் வியாபாரமாகிவிடும்.

 டிக்கட் கவுண்டரை தேடிப்போனேன். அங்கே பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். அந்த விமான நிலையத்தில் முக்கியமான

வேலைகளுக்கு பெண்களையே நியமித்திருந்தார்கள். இந்தப் பெண் சிக்கலான, ஆனால் நாகரிகமான முடியலங்காரம் செய்திருந்தாள். அந்த

அலங்காரங்களை முடிப்பதற்கு அவளுக்கு அரைநாள் கூட ஆகியிருக்கலாம். நைஜீரிய விமான நிறங்களான கடும்பச்சை, வெள்ளை கலந்த

சீருடை. செதுக்கப்பட்ட புருவம். ஒப்பனை செய்த முகம். அழகான உதடுகள். ஆனால் அந்த உதடுகளை அவள் வீணாக்கவில்லை. ஒரு

வார்த்தை பேசாமல் காரியத்தை கவனித்தாள்.

 அவளுடைய வேலை பயணிகளுக்கு விமான இருக்கை எண் அட்டைகளைக் கொடுப்பது. பக்கத்து மேசை லாச்சி திறந்து

கிடந்தது. பயணிகள் ஒவ்வொருவராக வந்து அவளிடம் இருபது டொலர் கொடுத்தார்கள். அவள் காசை வாங்கி லாச்சியில் போட்டுவிட்டு 

ஓர் அட்டையை எடுத்து அதில் இருக்கை எண்ணை எழுதி நீட்டினாள். பிறகு அடுத்தவரிடம் 20 டொலர் பெற்றுக்கொண்டு அவரைக்

கவனித்தாள். ஒரு பயணியிடம்கூட அவள் பேசவில்லை. எனக்கு முன்னால் நின்றவர் இரண்டுகைகளிலும் சாமான்கள் வைத்திருந்தபடியால்

அவர் கைகளை விரிக்க அவருடைய அக்குளில் இருக்கை அட்டையை செருகினாள். என் முறை வந்தபோது ஒரு பேச்சுப்பேசாமல் காசை

நீட்டினேன். என் இருக்கை எண் D6 என்று குறித்து தந்தாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. தங்குமிடத்திற்கு சென்று அறிவிப்பு

வருவதற்காகக் காத்திருந்தேன்.

 ஒரு விசயம் எனக்கு ஆச்சரியமளித்தது. பயணிகளில் ஆண்கள் குறைவு, பெண்களே அதிகமாகவிருந்தனர். அவர்கள் எல்லாம்

ஆறடி உயரமாக வாட்டசாட்டமாக பெரிய பெரிய பொதிகளுடன் தரையில் உட்கார்ந்திருந்தனர். சிலர் குழந்தைகளையும் முதுகில்

கட்டியிருந்தார்கள். முதல் பார்வைக்கு நூற்றுக் கணக்கான கறையான் புற்றுகள் தரையிலே முளைத்துவிட்டது போலவே தோன்றியது. ஒரு

விமானம் வந்து நின்றது. எல்லோரும் மூட்டை முடிச்சுகளுடன் அதை நோக்கி ஓடினர். நான் அறிவிப்புக்காக காத்திருந்தேன். சிறிது

நேரத்தில் அந்த பிளேன் புறப்பட்டு போனது. எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அடிக்கடி மேல் சட்டையை உயர்த்தி உள்ளே கையை

விட்டு கோலாபாக்கு எடுத்துச் சப்பிக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது வார்த்தைகளுடன் பாக்குத்தூளும் பறக்கும். ஆகவே தயங்கியபடி

பேச்சுக் குடுக்காமல் என்னுடைய அட்டையை எடுத்துக் காட்டினேன். அவர் பறந்துகொண்டிருந்த விமானத்தை சுட்டிக்காட்டி 'அதுதான்

என்னுடைய விமானம்' என்று சொன்னார்.
 
 அடுத்து வந்த பிளேன் நிற்கத் தொடங்க முன்னர் எல்லோரும் ஓடினர். நானும் ஓடினேன். அந்த தொக்கையான பெண்கள்

எல்லாம் இடித்து தள்ளி மூட்டை முடிச்சுகளுடன் வேகமாக ஓடினர். என்னால் அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு மாதிரி

ஒடுக்கமான பிளேன் வாசலுக்குள் நுழைந்துவிட்டேன். எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் உட்கார்ந்துவிட்டார்கள். இடம் கிடைக்காமல்

இருபது பேர் நின்றார்கள். அதில் நானும் ஒருவன். என்னுடைய எண் D6. எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் உட்கார்ந்திருந்த

பெண்மணியின் அட்டையில் D6 என்றே எழுதியிருந்தது. எனக்கு பின்னால் நின்றவருடைய அட்டையும் D6. விமானி எங்களை

விமானத்திலிருந்து இறங்கும்படி விரட்டினார். நாங்கள் திரும்பவும் தங்குமிடத்துக்கு வந்தோம். என்னோடு திரும்பியவர் எனக்கு

நிலைமையை விளங்கப்படுத்தினார். அந்த ஒப்பனைப் பெண் காசு உழைப்பதற்காக ஒரே இருக்கை எண்ணை மூன்று நான்கு பேருக்கு

குறித்து கொடுப்பார் என்றார். உங்கள் இருக்கையை முதலில் அடைவது உங்கள் கெட்டித்தனம். இது ஒரு பந்தயம்போல என்றார். எனக்கு

பகீரென்றது.

 மேலும் இரண்டு விமானத்தை அன்று தவறவிட்டேன். மறுபடியும் இரவு அதே விடுதிக்கு சென்று தங்கினேன். மனைவியுடன்

மீண்டும் தொலைபேசியில் பேசினேன். மனைவி ஒரே வார்த்தையை திருப்பி திருப்பி சொன்னார். 'சுறுக்கு வாங்கோ, சுறுக்கு வாங்கோ.'

 அடுத்த நாளும் விமானங்களை தவறவிட்டேன். அதற்கு அடுத்த நாளும். அந்தப் பெண்களுடன் போட்டி போட என்னால்

முடியவில்லை. எனக்கு பயிற்சி போதாது.  பெரிய மூட்டைகளை தூக்கிக்கொண்டு நைஜீரிய விமானச் சின்னமான பறக்கும் யானைபோல

வேகமாக பறக்கும் பலசாலிகளாக அவர்கள் இருந்தார்கள். ஒரு முறை நான் பாய்ந்து ஏறி எனக்கு குறிக்கப்பட்ட இருக்கையில்

உட்காரப்போன சமயம், ஒரு பாரிய பெண்மணி, தலையிலே பொதி தனியாக ஆட,  வலது கையால் பெரிய மூட்டையை காவிக்கொண்டு

இடது கையால் என்னை இழுத்தெறிந்தார். நான் பிளேன் வாசலில் போய் விழுந்தேன்.

 திடீர் திடீரென்று பயணிகளுக்கிடையில் சண்டைகள் மூளும். இரண்டு மலைகள் பொருதத் தயாராவதுபோல மூக்குகள் முட்ட

பெருத்த குரலில் மோதல்கள் ஆரம்பிக்கும். அவர்கள் வசவுகள் எப்படியிருக்கும் என்றறிய எனக்கு ஆசை. ஆனால் மொழி புரியாது.

தொடங்கிய மாதிரியே உடனே சமாதானமாகிவிடுவார்கள். தொழுகை நேரம் வந்தால் எல்லோரும் ஒரே திசையை நோக்கி திரும்புவார்கள்.

மறுபடியும் கறையான் புற்றுபோல காத்திருத்தல் நடக்கும்.

 மூன்றாவது நாள் நான் முதல் விமானத்தை தவறவிட்டேன். நெளிவுசுளிவுகள் எல்லாம் எனக்கு பரிச்சயமாகிவிட்டன. விமானம்

புள்ளியாகத் தெரியத் தொடங்கியதும் ஓட ஆரம்பித்தேன். நானும் மற்றவர்களை இடித்து மிதித்து முன்னேறினேன். அப்படியும் எனக்கு

முன்னால் ஓடிய பத்துப்பேர்களில் ஒற்றைக்கொம்பு போல வளைந்துபோன ஒரு கிழவிகூட இருந்தார். எனக்கு மூச்சு வாங்கியது.

என்னுடைய இருக்கையை கண்டுபிடித்தபோது அதில் ஏற்கனவே வாட்டசாட்டமான ஒரு கறுப்பு மனிதர் நைஜீரிய தொப்பி அணிந்துகொண்டு

உட்கார்ந்திருந்தார். எனக்கு அதிர்ச்சி. இவர் என்ன காற்றிலிருந்து உண்டாகினாரா? ஒன்றுமே புரியவில்லை. என் சுவாசப் பையில் இன்னும்

கொஞ்சம் காற்று மிச்சம் இருந்தது. 'உங்கள் இருக்கை எண் என்ன?' என்றேன். அவர் அட்டையை காட்டினார். அவருக்கும் எனக்கு கிடைத்த

அதே எண்தான். சீட் கிடைக்காதவர்கள் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார்கள். விமானி வந்து துரத்தும் வரைக்கும் நிற்பதுதான் வழக்கம்.

விமானி வந்து எங்களைக் கலைந்துபோகச் சொன்னார். அப்போது இருக்கையைப் பிடித்த மனிதர் ஒரு காரியம் செய்தார். எழுந்து அவர்

இருக்கையில் என்னை உட்காரவைத்து சீட் பெல்ட்டையும் அவரே கட்டிவிட்டார். சீட் பெல்ட்டை கட்டாவிட்டால் வேறு யாராவது என்னை

இழுத்துப்போட்டு உட்கார்ந்துவிடும் அபாயம் இருந்தது. 'நல்ல பயணமாக அமையட்டும்' என்று வாழ்த்திவிட்டு தன் உடமைகளை

எடுத்துக்கொண்டு அந்த மனிதர் மறைந்தார். உடனேயே எனக்கு தெரிந்தது அவரை நான் இனிமேல் என் வாழ்நாளில் சந்திக்க மாட்டேன்

என்று. என் வாயிலிருந்த வார்த்தைகள் எல்லாம் வெளியேறிவிட்டதால் என்னால் நன்றிகூட சொல்லமுடியவில்லை. இன்றும் அந்த

மனிதரை எந்தக் கூட்டத்தில் கண்டாலும் என்னால் அடையாளம் காட்டமுடியும்.


 விமானம் தரையிறங்கியதும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு

போனேன். ஒரு குட்டித் தலையணையில் குட்டித் தலையை வைத்து குழந்தை படுத்திருந்தது. சரியாக எட்டு இரவும் எட்டு பகலும் கழித்து

வந்திருந்தேன். அப்படியும் என் முகத்தை மகள் மறக்கவில்லை. மெல்லிய ஒரு புன்னகை வெளிப்பட்டது. அதனிலும் பெரிய சமிக்ஞை

தருவதற்கோ சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்கோ அவள் உடம்பில் பலம் இல்லை. மலேரியா குணமாகிவிட்டது என்று மனைவி

சொன்னார். குழந்தை உடலை சற்று திருப்பி 'உம் உம்' என்று தன் தோள்மூட்டை காட்டியது. தும்பு இலையான் முட்டையிட்ட இடம் வீக்கம்

குறைந்து ஆனால் கறுத்து கிடந்தது. சிறு குருவி வாய் பிளந்ததுபோல சதை பிரிந்துபோய் காணப்பட்டது. புழு வெளியே வந்துவிட்டது

என்றார் மனைவி. இப்போது அது செட்டை முளைத்து எங்கோ பறந்துகொண்டிருக்கலாம். ஒன்றும் அறியாத என் மகளின் உடம்பை

கூடாக்கி அங்கே ஒரு புழு  நீண்ட காலம் வசித்தது என்பதை நினைக்கவே மனம் துணுக்குற்றது.

 எங்கள் மருத்துவர் ஆப்பிரிக்காவில் புகழ் பெற்றவர். மருத்துவமனையை விட்டு வேறு எங்கும் நோயாளிகளைப் பார்க்க

போகமாட்டார். என் மகளைப் பார்க்க காலையிலும் மாலையிலும் வந்து போனதாக மனைவி சொன்னார். நம்பமுடியவில்லை. என்

குழந்தையை அவர் காப்பாற்றிவிட்டார். விமானத்தில் தன் ஆசனத்தை எனக்கு விட்டுத் தந்த தொப்பி போட்ட நெடிய கறுப்பு மனிதரை

நினைத்துக்கொண்டேன். மனித ஈரம் இன்னும் பூமியில் ஒட்டிக்கொண்டிருந்தது.

 மனைவி என்னைப் பார்த்து 'என்னால் இனிமேல் ஒரு நிமிடம்கூட இங்கே தங்க முடியாது. நாங்கள் இப்பவே எங்கள் நாட்டுக்கு

திரும்பவேண்டும்' என்றார். அவருடைய இமைகள் நனைந்திருந்தன. என் மன நிலையும் அப்படித்தான். 'அதைத்தான் நாளைக்கு முதல்

வேலையாகச் செய்யப்போகிறேன்' என்றேன்.

 நாங்கள் ஆப்பிரிக்க மண்ணை விட்டுக் கிளம்ப மேலும் 21 வருடங்கள் பிடித்தன.


 END

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta