மு.இராமனாதன்

புலம் பெயர்ந்தவர்களின் அடையாளம் : முத்துலிங்கத்தின் வெளி

 

புலம் பெயர்ந்து வாழ்பவர்களில் தங்கள் பிறந்த மண்ணின் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கிறவர்கள் உண்டு. புலம் பெயர்ந்த மண்ணின் அடையாளங்களைச் சுவீ்கரித்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிலிருந்தும் தங்களுக்கு வேண்டுவனவற்றை எடுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிற்கும் இடையில் ஊசலாடுபவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் அ.முத்துலிங்கம் அளவிற்குத் தமிழில் வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவரது புனைவின் வெளியில் பல கதைகள் புலம் பெயர்ந்தோரின் அடையாளச் சிக்கல்களைப் பேசுகின்றன. "அமெரிக்கக்காரி" (காலச்சுவடு பதிப்பகம், 2009) சிறுகதைத் தொகுப்பிலும் அப்படியான கதைகள் உள்ளன. அதில் சிறப்பான இடத்தில் வைக்கத்தக்கது தலைப்புக் கதையான "அமெரிக்கக்காரி"

 

மதி யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள குக்கிராமத்தில் பிறந்தவள். உதவிப் பணம் பெற்று அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு வருகிறாள். சின்ன வயதிலிருந்தே அவளுடைய ஆசை அமெரிக்கக்காரியாக வேண்டுமென்பது. ஆனால் பல்கலைக்கழகத்தில் எல்லோரும் அவளை இலங்கைக்காரி என்றுதான் சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களைப் போலப் பேசக் கற்றுக் கொள்கிறாள். அவளுடைய தோற்றமோ, நிறமோ கூடத் தடையில்லை. அவளது 'கரிய கூந்தலும் கறுத்துச் சூழலும் விழிகளும்'  பையன்களை இழுக்கவே செய்கின்றன. ஒன்றிரண்டு பேர் நெருங்கியும் வருகிறார்கள். ஆனால் தங்கள் அறையில் தங்க முடியுமா என்று கேட்கிறார்கள். இவள் மறுத்ததும் மறைந்து போகிறார்கள்.

 

லான்ஹங் வியட்நாமிய மாணவன். அவன் மதியை அறைக்கு அழைப்பதில்லை. அது அவளுக்குப் பிடித்துப் போகிறது. படிப்பை முடித்ததும் அவன் ஆசிரியர் வேலையில் சேர்கிறான், இவள் ஆராய்ச்சி மாணவியாகிறாள். சேர்ந்து வாழ்கிறார்கள். அவள் அம்மா அனுப்பிய தாலியை இலங்கை முறைப்படிச் சங்கிலியில் கோர்த்து அவளுடைய கழுத்தில் கட்டுகிறான்.  முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனைச் சாட்சியாக வைத்துக்கொண்டு வியட்நாமிய முறைப்படி அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்துக் கடித்துக் சாப்பிடுகிறான். இப்படியாகத் திருமணம் முடிந்து பிறகு நான்கு வருடங்களாகியும் குழந்தை உண்டாகவில்லை. அவன் உயிரணுவில் குறைபாடு இருக்கிறது. ஆப்பிரிக்க ஆசிரியர் ஒருவர் உயிரணுக்களைத் தானம் செய்கிறார். பிள்ளை பிறக்கிறது. 'எனக்கு ஒரு அமெரிக்கப் பிள்ளை பிறந்திருக்கு' என்று அம்மாவுக்கு எழுதுகிறாள் மதி.

 

தன்னை அமெரிக்கக்காரியாக அடையாளம் காண விழையும் மதியின் விருப்பமே கதையின் தலைப்பிலிருந்து கடைசி வரி வரை நீள்கிறது. இதற்கு முன்பும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் அடையாளச் சிக்கல்களை முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். அவரது "கறுப்பு அணில்" கதையில் வரும் லோகிதாசன் துப்பரவுப் பணியாளன். இதே தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் "மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்க"ளில் வரும் ரத்ன பரிசாரகி. இருவரும் கனடாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இருவரிடமும் கைவசம் உள்ள ஆங்கிலச் சொற்களைப் போலவே காசும் குறைவு. தனிமையும், குளிரும் வாட்டும் ஊரில் தங்களைப் பொருத்திக் கொள்ளப் பாடுபடுகிறார்கள். இவர்கள் கனடாவிற்கு விரும்பி வந்தவர்களல்ல.எறிகணைகளிலிருந்தும் குண்டுவீச்சுகளிலிருந்தும் முள்வேலி முகாம்களிலிருந்தும் தப்பிப் பிழைக்க வந்தவர்கள்.

 

முத்துலிங்கத்தின் "கொம்பு ளானா",  "ஐந்தாவது கதிரை" ஆகிய கதைகளில் வரும் நாயகி்களும் கனடாவில்தான் வசிக்கிறார்கள். தனியாக அல்ல, கணவனுடனும் பிள்ளைகளுடனும். இருவருக்கும் ஒரே பெயர்: பத்மாவதி. இவர்களிடையே உள்ள ஒற்றுமை இந்த இடத்தில் முடிகிறது. முதல் பத்மாவதி தனது 'பாரம்பரியம் மாறாமல் காலையிலிருந்து இரவு படுக்கும் வரை சமையலறையிலேயே வாசம் செய்பவள்'.  இரண்டாவது பத்மாவதிக்கோ கனடா வந்த பிறகு 'அவள் குதிக்கால் வெடிப்பில் ஒட்டியிருந்த செம்பாட்டு மண் முற்றிலும் மறைவதற்கு சரியாக ஆறுமாதம் எடுத்தது. ஆனால் அவள் அடியோடு மாறுவதற்கு ஆறு வாரம் கூட எடுக்கவில்லை'.

 

பிறந்து வளர்ந்த மண்ணின் பாடுகளை அத்தனை சீக்கிரம் உதறிவிட முடியு்மா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் முடியும் என்கிறார்கள். அங்கு வசிக்கும் இந்தியர்களால் அமெரிக்க இந்தியர்களாக முடிகிறது. சீனர்களால் அமெரிக்கச் சீனர்களாக முடிகிறது. பரீத் சக்காரியா அப்படியான அமெரிக்க இந்தியர். மும்பையில் பிறந்து வளர்ந்தவர், ஊடகவியலாளர், நூலாசிரியர். இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு நியூஸ்வீக்கில் அவர்  எழுதிய புகழ் பெற்ற கட்டுரையின் தலைப்பு- 'அவர்கள் ஏன் நம்மை வெறுக்கிறார்கள்?'. இந்தியாவில் பிறந்தவர் தன்னையும் அமெரிக்கராகப் பாவித்துக் கொண்டு 'நம்மையும்' என்று எழுதியபோது யாரும் அதைக் கேள்வி கேட்கவில்லை.

 

எனக்கு தெரிந்த இன்னொரு அமெரிக்க இந்தியன் என் வகுப்புத் தோழன். கல்லூரியில் எனது வகுப்பில் படித்தவர்கள் சேர்ந்து ஒரு மின்னஞ்சல் குழுமம் நடத்துகிறார்கள். அதில் ஒரு உரையாடலின் போது அவன் இப்படி எழுதியிருந்தான் : "இந்தப் பிரச்சனை குறித்து எனது சொந்த மாநிலமான இல்லினாய்ஸின் அரசியலமைப்பு என்ன சொல்கிறதென்றால் …." .

எனது நண்பனைப் போலவோ சக்காரியாவைப் போலவோ ஏன் மதியால் அமெரிக்க நீரோட்டத்தில் ஐக்கியமாக முடியவில்லை?, அவள் தனது தாயாரோடு தாய் நாட்டையும் நேசிப்பவள். இன்னொரு காரணம் அவளது வளர்ப்பில் ஊட்டப்பட்டிருக்கும் நாணமும் அச்சமும். அதுவே காதலர்களின் அழைப்பை அவளால் ஏற்க முடியாமல் செய்கிறது. வாசகன் உய்த்துணரும்படியான இன்னொரு காரணமும் கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. கதை ஆசிரியரின் கூற்றாகத்தான்  சொல்லப்படுகிறது. என்றாலும் அது நாயகியின் பார்வைக்கோணத்தில்தான் விரிகிறது. ஓரிடத்தில் ஆசிரியர் போதபூர்வம் கால் மாற்றி ஆடுகிறார்.

 

அசோகமித்திரன் மார்லன் பிராண்டோ வின் நடிப்பு method எனும் வகையைச் சேர்ந்தது என்று ஒரு முறை எழுதியிருந்தார். பிராண்டோ எப்போதும் வசனங்களை முணுமுணுப்பார்.ஆனால் அவரது படங்களில் இரண்டு அல்லது மூன்று சூட்சும இடங்கள் இருக்கும். அந்த இடத்தில் பிராண்டோ ஓர் எழுத்து பிசக மாட்டார். கதையில் ஒன்றியிருக்கும் பார்வையாளனால் இதைப் பிரித்துப் பார்க்க முடியாமல் போகலாம். எனில், இயக்குநர் சொல்ல நினைப்பது ஆழமாகப் போய்ச் சேரும்.

 

முத்துலிங்கமும் நாயகியின் பார்வைக்கோணத்தில் கதை சொல்லும் போக்கிலிருந்து மாறி, நாயகனின் பார்வைக்கோணத்தில் ஒரேயொரு வரியைத் தருகிறார். 'அவள் கண்களை அவன் அதிசயமாக முதன்முறை பார்ப்பது போலப் பார்த்தான். அவள் வாய் சிரிக்க ஆரம்பிக்க முன்னரே அவள் கண் இமைகள் சிரித்ததை அன்று முழுவதும் அவனால் மறக்க முடியவில்லை'.  இது ஒரு நுட்பமான இடம். அவள் வெடித்துச் சிரிப்பவளல்ல. சுயதம்பட்டம் அவளது வெளிப்பாட்டு முறையல்ல. தயக்கமும் கனிவும் நிறைந்தவள். சிரிப்பதற்கு முன் அவள் மனதளவில் அதற்குத் தயாராகிறாள். அதனால்தான் இமைகள் முதலில் சிரிக்கின்றன. அவளது காலில் இலங்கை மண்ணின் பாடுகள் ஒட்டிக் கொண்டே இருப்பதற்கு இந்தத் தன்னடக்கமும் ஒரு காரணமாகலாம்.

 

இதைப்போலவே, அவள் ஒருபோதும் பச்சாதாபத்தைக் கோருவதில்லை. இலங்கையைப் பற்றியும் யுத்தத்தைப் பற்றியும்  பேசுகிற பெண்ணிடம் கூட தன்னுடைய அண்ணன்மார் இருவரும் ஒரு வருடம் முன்பாகப் போரில் இறந்து போனதை அவள் சொல்வதில்லை. இந்தப் பண்பை அவள் அம்மாவிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். மாதம் தோறும் அம்மா கடிதம் எழுதுகிறாள். பட்டணத்திலிருந்து மூன்று நிமிடங்கள் மகளுடன் தொலைபேசியில் பேசுகிறாள். அம்மா ஒருபோதும் தன் கஷ்டங்களைச் சொல்வதில்லை. ராணுவம் ஊரைச் சுற்றிப் பலரைக் கொன்று குவிக்கிறது என்று மதி அறிகிறாள். ஆனால் அம்மா மூச்சு விடுவதில்லை.

தான் நாடற்றவள் என்று மதி யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை. மாறாக 'இனிமேல்தான் ஒரு நாட்டைத் தேட வேண்டும்' என்கிறாள். கணவனின் உயிரணுக்கள் குறைபாடு உடையவை என்று தெரிய வந்த பிறகும், லான்ஹங் அவளிடம் 'அஞ்சல்நிலையத்துச் சங்கிலியில் பேனாவைக் கட்டி வைப்பது  போல் நான் உன்னை கட்டிவைக்கவில்லை. நான் வேண்டுமானால் விலகிக்கொள்கிறேன். நீ யாரையாவது மணமுடித்துப் பிள்ளை பெற்றுக் கொள்' என்று சொன்ன பிறகும், அவள் விலகிப் போகவில்லை. அது அவளால் ஏலாது.

 

தாயுடனான மதியின் உறவு கதை நெடுகிலும் நுணுக்கமாகப் பதிவாகியிருக்கிறது. குளிருக்காக நாற்பது டாலருக்குச் சப்பாத்து வாங்கும்போது அம்மாவின் குடும்ப நிலைமை நினைவிற்கு வந்து அவளை உறுத்துகிறது. ஒரு கடிதத்தில் அவள் அம்மாவுக்கு இப்படி எழுதுகிறாள்: 'நான் உன் வயிற்றில் கருவாக உதித்த போது என் வயிற்றில் ஏற்கனவே கருக்கள் இருந்தன. அப்படி எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது உனக்குள் இருந்து வந்ததுதான்'.  அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் முகம் அம்மாவுடையதைப் போலவே இருக்கிறது. 'நான் உன்னைத் திரும்பவும் பார்க்க வேண்டும். அதற்கிடையில் செத்துப் போகாதே' என்று ஆரம்பத்தில் எழுதும் மதி, மகள் பிறந்ததும், 'அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி, நீ அவளைப் பார்க்க வேணும், அதற்கிடையில் செத்துப் போகாதே' என்று  சொல்கிறாள். இந்தத் தொப்புள்கொடி உறவுதான் திரும்பிப் போக முடியாத தாய் நாட்டோடு அவளை இணைக்கிறது.அதனால்தான் அவள் இலங்கைக்காரியாகவே இருக்கிறாள். அதனால்தான் அவளால் அமெரிக்கக்காரியாக முடியவில்லை. ஆனால் அமெரிக்காவில் பிறந்த அவள் மகளால் அது முடியும்.

 

கதையில் சில அபூர்வமான உவமைகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்று கூட தேய்வழக்குகளின் பாற்பட்டதல்ல. 'கறுப்பு எறும்புகள் நிரையாக வருவது போலப் பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள்' என்பது அவற்றுள் ஒன்று. இன்னொரு இடத்தில் அமெரிக்க இளைஞன் ஒருவன் தன் தாயை மதியிடம் அறிமுகப்படுத்துகிறான். 'மீன் வெட்டும் பலகை போல அவள் முகத்தில் தாறுமாறாகக் கோடுகள்' இருக்கின்றன. முனைவர் படிப்புக்கு அவள் நீண்ட நேரம் உழைக்கிறாள். சில நாட்களில் இருபது மணி நேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்கிறாள். ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்த பிறகு வீட்டின் ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கிறாள். ஒரு நாளின் அவ்வளவு நேரத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அப்போது்  'கொடிக் கயிற்றில்  மறந்து போய்விட்ட கடைசி உடுப்பு போல அவள் மனம் ஆடிக் கொண்டிருந்தது'.

 

'அமெரிக்கக்காரி' தமிழின் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்றாக விளங்கும். இந்தக் கதையை நல்ல அச்சோடும் அமைப்போடும் வெளியிட்டுச் சிறப்புச் செய்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். தமிழில் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் இந்தக் கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும்.அப்போது 'அமெரிக்கக்காரி'யின் அடையாளமும் மாறும். இப்போது சில ஆயிரம் தமிழ் வாசகர்கள் மட்டுமே வாசித்திருக்கிற இந்தக் கதை, உலகெங்கும் உள்ள தேர்ந்த வாசகர்களை எட்டும், 'அமெரிக்கக்காரி' உலகத்தரம் வாய்ந்த சிறுகதை என்று உணரப்படும். இந்த இலங்கைக்காரி அமெரிக்கக்காரியாவதும் நடக்கும்.

 

(அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில், தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in, நவம்பர் 2009, விலை.ரூ125)

(திருப்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய அ.முத்துலிங்கம் அவர்களின் சமீபத்திய  நூல்களைப் பற்றிய ஆய்வு, ரசனை சார்ந்த கட்டுரைப் போட்டியில் தெரிவு பெற்றது)

(கணையாழி ஜூலை 2012 இதழில் பிரசுரமானது)

இணையதளம்: www.muramanathan.com; மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta