சிரிப்பு

""""புகைப்படம் எடுக்கும்போது என்னைச் சிரிக்கவைக்கப் பாடுபட்டு பலர் தோற்றுப் போயிருக்கிறார்கள். புகைப்படத்தில் சிரிப்பது செயற்கையாக இருக்கும். அதில் தெரிவது வேறு யாரோ. ஆனால் நீங்கள் அறியாமல் உங்களை யாராவது படம் பிடித்தால் அது உண்மையாக இருக்கும். படத்தை பார்த்தவுடனேயே புரிந்துவிடும். ஏனென்றால் அந்தச் சிரிப்பு இதயத்தில் உதித்து வெளியே வந்திருக்கும். எஸ்.ராமகிருஷ்ணன் கனடா வந்திருந்தபோது பலர் அவருடன் சேர்ந்து படம் பிடிக்க காமிராவை எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவர் சொல்வார் ‘எதற்காக படம். நாம் இனிமேல் சந்திக்க மாட்டோம் என்றால்தான் படம் தேவை. நாம்தான் அடிக்கடி சந்திக்கப்போகிறோமே.’ உடனேயே அவர்கள் காமிராவை மூடி வைத்துவிடுவார்கள்.

 

சமீபத்தில் அமெரிக்காவில் மாட்டுக்காவலர்கள் (cowboys) வாழ்ந்த/ வாழ்கின்ற இடத்தை பார்க்கப் போயிருந்தேன். நாங்கள் நினைக்கிறோம் அவர்கள் காலம் முடிந்துவிட்டது என்று. தவறு. இன்றும் ஆயிரக்கணக்கான மாட்டுக்காவலர்கள் அமெரிக்காவில் வாழத்தான் செய்கிறார்கள். 100, 200 வருடங்களுக்கு முன்பு அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே இன்றைக்கும் வாழ்கிறார்கள். விளிம்பு வைத்த உயரமான தொப்பி, இடுப்பிலே பெரிய பித்தளை வளையம் பதித்த பெல்ட், குதிரையை உந்துவதற்காக பக்கவாட்டிலே சில்லு வைத்த நீண்ட பூட்ஸ், கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃப், தொடையில் இருந்து கீழே இறங்கும் தோல் மறைப்பு, துப்பாக்கிப் பை என நாங்கள் நூற்றுக்கணக்கான அமெரிக்க சினிமாக்களில் பார்த்த அதே மாட்டுக்காவலர்கள்தான். அவர்கள் குதிரைகளில் ஆரோகணித்து சுருக்கு கயிற்றை வீசி மாடுகளைப் பிடிக்கும் லாவகத்தை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நவீன உலகத்து வசதிகள் ஒன்றுகூட எட்டாமல் அதே பழைய வாழ்க்கையை தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

ஆனால் நான் அவர்களைப் பற்றிச் சொல்ல இதை எழுத வரவில்லை. அதை இன்னொருநாள் பார்ப்போம். அன்று நான் புறப்பட்டபோது காலை பத்து மணி.  முழுக்க முழுக்க மரத்தினால் செய்த குடிசையில் இரவு தங்கியிருந்தேன். அந்தக் குடிசைக்கும் வயது 100 இருக்கலாம். காட்டு மரங்களை அறுத்து கட்டியிருந்தபடியால் குடிசை மிக உறுதியாக நின்றது. ஆயிரம் மாடுகள் கொண்ட கூட்டத்தை மாட்டுக்காவலர்கள் வளைத்துப் பிடித்து குறிசுடப் போகிறார்கள். வருடத்தில் ஒருமுறைதான் இது நடக்கும். மாடுகள் வளைக்கும் இடத்திலிருந்து ’ஹோ’ என்ற பெரிய சத்தம் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைப் பார்ப்பதற்குத்தான் அவசர அவசரமாக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். என்னை அழைத்துப் போவதற்காக ஒரு மாட்டுக்காவலர் காத்திருந்தார். வெயில் ஏறிக்கொண்டு வந்தது; வெக்கை 29 பாகை செண்டிக்கிரேட் காட்டியது. மற்றவர்களுக்கு குளிரும்போது எனக்கு வியர்க்கும்; அவர்களுக்கு வியர்க்கும்போது எனக்கு குளிரும். அப்படித்தான்.

 

அன்றைக்கும் அதேதான் நடந்தது. வெப்பக் காற்று வெளியே வீசியபோது எனக்கு குளிர்ந்தது. நான் மேலங்கியை எடுத்து அணியத் தயாரானபோது மேலங்கியே கொஞ்சம் வெட்கப்பட்டு சிரித்ததுபோல பட்டது. நானும் சிரித்தேன். அந்த நேரம் பார்த்து யாரோ எனக்குத் தெரியாமல் படம் பிடித்துவிட்டார்கள்.

 

செல்பேசிகளிடமிருந்து தப்ப முடியாது. 100 வருட பாரம்பரியமான மாட்டுக்காவலர்களிடமும் அது போய்ச் சேர்ந்துவிட்டது. எனக்குத்தான் தெரியவில்லை.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta