சமீபத்தில் என்னுடைய சிறுகதை தொகுப்பு ‘குதிரைக்காரன்’ காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதிலே நான் எழுதிய சமர்ப்பணமும், முன்னுரையும் கீழே தரப்பட்டிருக்கின்றன.
சமர்ப்பணம்
அக்டோபர் 31, 2011 தேதி முக்கியமானது. அன்றைய தேதி உலகத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 384,000. கனடாவின் அரா யூனும், அமெரிக்காவின் பிலால் முகமட்டும், இந்தியாவின் நர்கிஸ் யாதவ்வும் இலங்கையின் வத்தலகம முத்துமணியும் பிறந்த அன்றுதான் உலக சனத்தொகை 7 பில்லியன் இலக்கத்தை தொட்டது.
பூமியின் சுற்றுச்சூழலுக்கு அளப்பரிய கேடுவிளைவித்த மனிதகுலத்தில் நானும் ஒரு துளி. இதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு அதை வெட்டுவதுபோல மனிதன் பூமியின் இயற்கை வளங்களை அழித்தான். இந்தப் பூமியில் ஒருநாள் தேனீக்கள் இல்லையென்றால் சகல உயிரினங்களும் அழிந்துபோகும். மனிதன் இல்லாமல் போனால் அத்தனை உயிரினங்களும் வாழும், இன்னும் சுபிட்சமாக.
முன்னோர்கள் எங்களிடம் ஒப்படைத்த பூமி அழிவு நிலையில் அக்டோபர் 31, 2011 ஆகிய இன்று, உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பூமியை மீட்டெடுக்கும் பொறுப்பு உங்களுடையது. இந்தப் பெரிய சவாலை எதிர்கொள்ளும் உங்களுக்கும், உங்கள் வழித்தோன்றல்களுக்கும் இந்தப் புத்தகம் சமர்ப்பணம்.
முன்னுரை
நூறு தேர்க்கால்கள்
நூறு தேர்க்கால்கள் செய்த ஒரு தச்சருக்கு 101வது தேர்க்கால் செய்வது எத்தனை சுலபம். நூறு குதிரைகளை அடக்கிய வீரனுக்கு 101வது குதிரையை அடக்குவது எத்தனை சுலபம். 100 ரோஜாக்கன்று நட்டு வளர்த்தவருக்கு 101வது ரோஜாக்கன்றை வளர்த்து எடுப்பது எத்தனை சுலபம். ஆனால் சிறுகதைகள் அப்படியல்ல. 100 சிறுகதைகள் எழுதிய ஒருவருக்கு 101வது சிறுகதை எழுதுவது அத்தனை எளிதாக இருப்பதில்லை; உண்மையில் மிகவும் கடினமானது. அது ஏற்கனவே எழுதிய நூறு கதைகளில் சொல்லாதது ஒன்றை சொல்லவேண்டும். மற்றவர்கள் தொடாத ஒரு விசயமாகவும் புதிய மொழியாகவும் இருக்கவேண்டும். ’புதிதைச் சொல், புதிதாகச் சொல்’ என்பார்கள்.
ஆரம்பத்தில் சிறுகதையாசிரியர்கள் மாதத்தில் இரண்டு மூன்று கதைகள் என்று எழுதித் தள்ளுவார்கள். நாள் செல்லச்செல்ல கதை எழுதும் வேகம் குறைந்துகொண்டு வரும். 100 கதைகள் எழுதிய பின்னர் ஆறு மாதத்திற்கு ஒன்று எழுதுவதே கடினமாகிவிடும். உலகத்துச் சிறுகதை எழுத்தாளர்களில், பொறாமைப்படவைக்கும் உச்சத்தில் இருக்கும் கனடிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ 200 சிறுகதைகள் எழுதிவிட்டார். இன்றுகூட ஒரு சிறுகதை எழுதுவதற்கு 6 மாதம் தேவை என்கிறார். ஏனென்றால் அவருக்கு புதிதாக ஏதாவது எழுதுவதற்கு தோன்றவேண்டும். எப்பொழுதும் ஒரு புது விடயத்துக்காக எழுத்தாளர் துடித்துக்கொண்டிருப்பார். கண்கள் சுழன்றுகொண்டிருக்கும். காதுகள் ஒரு புது வார்த்தைக்காக ஏங்கும். குளிர் ரத்தப் பிராணி இரைக்கு காத்திருப்பதுபோல மனம் ஒரு பொறிக்காக காத்திருக்கும்.
பல வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள லண்டிக்கோட்டல் என்னும் ஊருக்குப் போயிருந்தேன். அங்கே பிரிட்டிஷ்காரர்களால் அவர்கள் ஆட்சியின்போது 100 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்துவைத்த கைபர் ரைஃபில்ஸ் படைவகுப்பு இருந்தது. அந்த இடத்தில் ஒரு மரத்தை வலைபோட்டு கட்டிவைத்திருந்தார்கள். மரத்தில் எழுதியிருந்த வாசகமே கதையை சொன்னது. ‘நான் கைதுசெய்யப் பட்டிருக்கிறேன்.’ பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் குடிபோதையில் ஒருநாள் வந்தபோது அந்த மரம் ஓடுவதைக் கண்டார். உடனே அவர் கட்டளையிட ரணுவவீரன் ஒருவன் அதைக் கைதுசெய்து கட்டிப்போட்டான். இன்றைக்கும் மரம் அப்படியே சிறையில் காவல் காக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு எப்பவோ போய்விட்டது. ராணுவ அதிகாரி போய்விட்டார். ராணுவவீரன் போய்விட்டான். மரம் இன்னமும் அதே சிறையில் நிற்கிறது – ஒரு காலத்து வரலாற்றையும், அதிகார மமதையையும், மூடத்தனத்தையும் பிரகடனம் செய்தபடி.
ஒரு நல்ல சிறுகதையாசிரியர் உடனே தன் குறிப்பு புத்தகத்தில் இதை எழுதிவைத்துக்கொள்வார். அபூர்வமான சம்பவம். முன்பு ஒருவரும் சிறுகதை ஒன்றில் தொட்டிராத நிகழ்வு. சிறுகதைகள் பிறப்பது இப்படித்தான். ஒருமுறை பழைய நாள் கிரிக்கெட் வீரர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு தேசத்து கிரிக்கட் அணியில் ரிசர்வாக இருந்தவர். எல்லா நாட்களும் பயிற்சிக்குப் போவார். கடுமையாக உழைப்பார். மற்றவர்கள்போல அவரும் விளையாட்டு உடையணிந்து மைதானத்தில் அணியுடன் காத்திருப்பார். ஆனால் ஒருமுறைகூட அவர் சர்வதேச போட்டியில் விளையாடியது கிடையாது. உடையணிந்து உட்கார்ந்திருந்ததுதான் அவருடைய உச்சபட்ச சாதனை. அவருக்கு அந்த சோகம் இருபது வருடங்களாக இருக்கிறது.
நீல் ஆம்ஸ்ரோங்கும், எட்வின் பஸ் அல்ட்ரினும் சந்திரனை நோக்கி புறப்பட்ட விண்வெளிப்பயணத்தில் பஸ் அல்ட்ரின்தான் சந்திரனில் முதலில் காலடி வைப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் விண்கலத்தில் சுருண்டுபோய் உட்கார்ந்திருந்தவிதம் ஆர்ம்ஸ்ரோங் முதலில் இறங்குவதற்கு வசதியாக அமைந்திருந்தது. அப்படியே நடந்தது. அல்ட்ரினிக்கு அது பெரிய இழப்பு. வாழ்நாள் முழுக்க குடிபோதையில் இதை மறக்க முயன்றார். தோல்வியடைந்தவர்களிடம்தான் கதைகள் உள்ளன. ஒஸ்கார் விருது விழாக்களில் நான் தோல்வியடைந்தவர்களையே பார்க்கிறேன். பக்கட்டுகளில் அவர்கள் எழுதிக்கொண்டு வந்த ஏற்புரைகள் இருக்கும். அவற்றை படிக்காமலே அவர்கள் திரும்பவும் வீட்டுக்கு எடுத்து போவார்கள். புறநானூறு பாடல்களை தொகுத்தவர் 401வது பாடலை தொகுக்கவில்லை. அதை எழுதியவர் யார்? அந்தப் பாடல் என்ன? அவரைப்பற்றியும் தேர்வுசெய்யப்படாத அவருடைய கவிதை பற்றியும் எழுதுவது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.
கடந்த நாலு வருடங்களில் புதியதை தேடி அலைந்து எழுதியவைதான் இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள். எதுவுமே முன்பு சொல்லப்படாதவை. மேல்படிப்புக்காக தாயை தனிய விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு படிக்கப்போன மகள் அங்கேயே தங்கிவிடுகிறாள். அவளுக்கும் அவளுடைய தாய்க்குமான உறவு என்னவாகிறது? இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த காலத்தில் ஒரு கிராமத்தில் கடை நடத்திய ஏழைப்பெண்ணை ராணுவம் பிடித்துப்போகிறது. அவளுக்கு என்ன நடந்தது? கனடா பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுமி ருதுவாகிவிடுகிறாள். அவளுடைய தாய் குற்றம் கழிப்பதற்காக அவளை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்திவிடுகிறார். கணிதத்தில் சிறுமி அதி தேர்ச்சி பெற்றவள். அவளால் முக்கியமான மாநில அளவில் நடத்தப்படும் கணித பரீட்சையை எழுதமுடியாமல் போகிறது. 22 வயது இளைஞன் ஒருவன் கனடாவிலிருந்து சீனாவுக்கு முதன்முறையாக அவன் வேலை செய்யும் கம்பனி நிமித்தமாக பயணம் செய்கிறான். அவனுடைய எதிர்காலம் பயணத்தின் வெற்றியில் தங்கியிருக்கிறது. அடிக்கடி அடகு வைக்கப்படும் ஆப்பிரிக்கச் சிறுவன், இரண்டாம் உலகப்போரில் ஆரம்பித்து இன்றுவரை உழலும் யூதப் பெண்மணி. இப்படி சிறு சிறு நிகழ்வுகளை வைத்து புதிய களங்களில் பின்னிய புதிய கதைகள். இவை அவ்வப்போது காலம், காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. அந்த ஆசிரியர்களுக்கு என் நன்றி.
இந்த தொகுப்பை சிறப்பாகக் கொண்டுவரும் காலச்சுவடு கண்ணனுக்கும், அட்டையை வடிவமைத்த றஷ்மிக்கும், புத்தகத்தை வடிவமைத்த மஞ்சு முத்துக்குமாருக்கும் நான் கடமைப்பட்டவன்.
அ.முத்துலிங்கம்
ரொறொன்ரோ amuttu@gmail.com
19 மே 2012 www.amuttu.net
“புறநானூறு பாடல்களை தொகுத்தவர் 401வது பாடலை தொகுக்கவில்லை. அதை எழுதியவர் யார்? அந்தப் பாடல் என்ன? அவரைப்பற்றியும் தேர்வுசெய்யப்படாத அவருடைய கவிதை பற்றியும் எழுதுவது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்”. True True!!