Tamil Literary Garden, Canada
Iyal Virudhu Ceremony on 18 June 2011
Speech by writer Jeyamohan as a Special Guest
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது விழா, 18 ஜூன் 2011
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய சிறப்புரை
இந்த மேடையிலும், அரங்கிலும் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நண்பர்களே, இந்த அரங்கிலே ஈழம் உருவாக்கிய முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொ அவர்களைக் கௌரவிக்கும் முகமாக நாம் இங்கு கூடியிருக்கிறோம். எஸ்.பொ அவர்களைப் பற்றிய என்னுடைய மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் ஒரு நீண்ட பெரிய கட்டுரையாக நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பிரசுரமாகியிருக்கிறது. இப்போது சில சொற்கள் மட்டும் அவரை வாழ்த்தும் முகமாக கூறலாம் என்று நினைக்கிறேன். நண்பர்களே, 2004 ல் நாகர் கோவில் வட்டாரத்தில் சுனாமி தாக்கியபோது நானும் நாஞ்சில் நாடனும் இன்னும் சில நண்பர்களும் சுசீந்திரம் தேர்த் திருவிழா பார்ப்பதற்காகப் போய்ச் சேர்ந்திருந்தோம். அதற்கு ஒருநாள் முன்னாடி சுந்தர ராமசாமியின் பிறந்தநாள். அதையொட்டி நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சுனாமி வந்தது என்ற தகவல் வானொலியில் சொல்கிறது என்று எங்களிடம் ஒருவர் சொன்னார். உடனே எங்களுக்குத் தோன்றியது கடற்கரைக்குச் சென்று அதைப் பார்க்கவேண்டுமென்றுதான். ஓடி வந்து ஆட்டோ ரிக்சா (Auto Rickshaw) கேட்டோம். அவன் வரமாட்டேன் என்று சொன்னான். சரி, டாக்ஸியில் (call taxi) போயிடலாம் என்று டாக்ஸி கேட்கிறோம். அவனும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். சரி, நடந்தே கன்னியாகுமரிக்குப் போயிடலாம் என்று மெயின் ரோடுக்கு வருகிறோம். கன்னியாகுமரியிலிருந்து, ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரிக்கு யாரும் போகக் கூடாது, போலீஸ் தடுக்கிறார்கள் என்று சொன்னார்கள். திரும்பி வந்து சாலையில் நின்று கொண்டிருந்தபோது சு.ரா பற்றிய ஆவணப் படம் எடுத்தவராகிய ரமணி என்பவர் கன்னியாகுமரியிலிருந்து ஆட்டோ ரிக்சாவில் வந்துகொண்டிருக்கிறார். அவரது கை ஒடிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவரது மாமனார், மாமியார், குழந்தைகள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள். அன்று மாலைதான் கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் இறந்து போய்விட்ட தகவல் எங்களுக்குத் தெரிகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும். மனித மனதுடைய ஒரு அடிப்படையான அறியாமையை நான் அந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கிறேன். தேடிக் கன்னியாகுமரிக்குப் போய், கடற்கரைக்குப் போய் இறந்தவர்கள்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம். எட்டுமணிக்கு சுனாமி சென்னைக்கு வருகிறது. பத்தரை மணிக்கு நாகர்கோவிலுக்கு வருகிறது. எட்டரை மணிக்கு வந்த தகவல் உடனே இங்கே வந்து கிடைத்தது. உடனே மக்கள் அங்கு போனார்கள். அதன்பிறகு நாம் மறுநாள் சுனாமி எப்படியிருந்தது என்று பார்த்தேன். அது ஒரு பெரிய கொடுங்கனவு மாதிரியான ஒரு சந்தர்ப்பம், மனித உடல்களை, சேற்றோடு சேறாக கலந்து குப்பையாகிப்போன மனித உடல்களை, அள்ளிப் போன ஒரு தருணம். தொடர்ந்து சென்ற சில நாட்களில் சமீபத்தில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது இன்னொரு சுனாமிதான் என்னுடைய நினைவில் வருகிறது. ஈழ அவலம் என்ற ஒரு சுனாமி; திரையில் அலறக்கூடிய மக்களுடைய குழந்தைகளுடைய குரல்களை, மனிதர்களுடைய கண்ணீர் கலந்த அலறல்களை, கடவுளே என்ற அந்த அர்த்தமற்ற கதறல்களைக் கேட்கும் போது திருப்பித் திருப்பி இந்த சுனாமிதான் நினைவுக்கு வந்தது. அதையொட்டி நினைவுகள் குழம்பிக் கொண்டேயிருந்தன.
அப்போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்; அந்தமானிலே "மோக்கல்" என்ற ஒரு பழங்குடி இருக்கிறது. மொத்தமாக ஆயிரத்திற்கு குறைவான பேர் மட்டுமே உள்ள ஒரு பழங்குடி. அவர்கள் தனியாக எந்தத் தீவிலும் வாழ்வதில்லை. படகில்லத்திலேதான் பெரும்பாலும் வாழ்கிறார்கள். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்களும், மொங்கோலிய வம்சத்தை சேர்ந்தவர்களும் கலந்து உருவான ஒரு பழங்குடி அவர்கள். அப்படிப்பட்ட பழங்குடி உலகத்திலே ரொம்பக் குறைவு. அந்த மொழிக்குடும்பங்களுக்கு இடையேயான உறவைப் பற்றி ஆராய்வதற்கு மிகச் சிறந்த ஆவணமாகக் கருதப்படுவதும், ஆதாரமாகக் கருதப்படுவதும் அவர்களது மொழிதான். மிக அரிய மொழி என்று சொல்கிறார்கள். ஆயிரம் பேருக்குள்ளேதான் இந்த மொழியைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுனாமி வந்து முடிந்தபின்பு முதல் "ஹிந்து" (The Hindu) இல் வந்த செய்தி ஒரு இனம் முழுமையாக அழிந்தது; அந்த மொழி அழிந்தது; அவர்களுடைய பண்பாடு அழிந்தது; ஒருவர்கூட மிச்சமில்லை. மறுநாள் அந்த செய்தி போட்டார்கள்; ஆயிரம் பேரும் காணாமல் போயிருக்கிறார்கள். ஒரு நான்கு நாட்களுக்குப் பிறகு அடுத்த செய்தி வந்தது; இல்லை, ஆயிரம் பேரும் உயிரோடு இருக்கிறார்கள். ஆயிரம் பேருமே தப்பிவிட்டார்கள். எப்படித் தப்பினார்கள் என்றால் அவர்களுடைய குலத் தலைவராகிய "சலே கனத்தா" என்ற ஒருவர் அவருக்கு அவருடைய மூதாதைகள் சொன்னார்கள்; இன்னும் கொஞ்ச நேரத்தில் சுனாமி வரப்போகிறது. எல்லோரும் மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள் என்று. அவரை பிபிசி (BBC) பேட்டி எடுத்து வெளியிட்டது. அவர் சொல்கிறார்; எனக்குத் தோன்றியது, என் மூதாதையர்கள் சொன்னது. கடல் அலை என்பது மூதாதையர்கள்; அவர்களுடைய நாக்கு அது. ஒரு பசித்த மூதாதையன் வந்து எங்களையெல்லாம் சாப்பிடப் போகிறான் என்று எனக்குத் தோன்றியது. அதனால் சொன்னேன் என்கிறார். அவரைப் பற்றி விரிவான ஆய்வுகள் வந்தது. அந்த ஆய்வுகளிலிருந்து ஒரு தகவல் தெரிந்தது என்னவென்றால், அது ஒரு சாதாரணமான விசயமில்லை. அது ஒரு ஆழமான உள்ளுணர்வு. அந்த உள்ளுணர்வு தொடர்ந்து அலையை, கடலை, மீனை, பறவைகளை, மரங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு இரண்டு மணிநேரப் பேட்டியிலே அவர் சுனாமிக்கு ஏறத்தாழ நான்கு மணிநேரத்துக்கு முன்னதாக என்ன என்ன விஷயங்கள் அங்கே நடந்தது என்று சொல்கிறார். மீன்கள் எப்படி திசை மாறின, அலைகளின் வடிவங்கள் எப்படி மாறின; நிறையத் தகவல்கள் சொல்கிறார். அந்த சுனாமிக்கான முன்னேற்பாடுகள் நான்கு மணிநேரம் நடந்த பின்னாடிதான் சுனாமி வருகிறது; அதற்குள்ளே அவருக்கு அந்த உள்ளுணர்வு தெரிகிறது. நான் "கொட்டில்பாலை" என்னும் இடத்திலே சுனாமிக்கான உதவிப் பணி புரிய சென்றபோது ஓன்று தெரிந்தது; அதிகமாக பெண்களும் குழந்தைகளுமே இறந்து போயிருக்கிறார்கள். குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பெண்களால் ஓட முடியவில்லை. இரண்டாவது புடவை ஒரு பெரிய பிரச்சினை. ஆண்கள் பெரும்பாலும் லுங்கியைக் கழற்றிப் போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்கள். அதேபோல கட்டிப் போட்டிருந்த எல்லா மிருகங்களும் இறந்துபோக கட்டிப் போடாத எந்த மிருகமும் இறக்கவில்லை; நாய்கள், எலிகள் என்று எல்லாமே ஒரு மணி நேரத்துக்கு முன்னரே மேடான பகுதிகளுக்கு சென்றுவிட்டன.
ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. இயற்கையோடு மனிதனை தொடர்புபடுத்தக் கூடிய உள்ளுணர்வு. அந்த உள்ளுணர்வை சுத்தமாகத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்போது அதற்கான வழி அங்கே தெரிகிறது. எந்த சுனாமியிலும், எந்த அரசியல் சுனாமியிலும், போர் சுனாமியிலும் தப்பிக்கக் கூடிய, வாழக்கூடிய, வாழ வைக்கக்கூடிய உள்ளுணர்வு. எங்கள் எஸ்.பொ அவர்களை ஒரு வகையான உள்ளுணர்வின் பாடகன் என்று சொல்வேன். ஒரு சமூகத்துடைய, ஈழ சமூகத்துடைய "சலே கனத்தா" என்று அவரை சொல்வேன். ஒரு வம்சத்துடைய பிரக்ஞையுடைய காவலன். ஒரு ஐம்பது வருடம் ஈழ மண்ணை, ஈழ மனிதர்களை, ஈழ வாழ்க்கையை அவரறியாமலேயே அவர் கவனித்து வந்திருக்கிறார்; உள்ளுணர்வில் தேக்கி வந்திருக்கிறார். அந்த உள்ளுணர்வின் வெளிப்பாடாகத் தொடர்ந்து தமிழிலே அவர் பணியாற்றி வந்திருக்கிறார். தமிழிலக்கியத்திலே எப்போதும் இரண்டு வழி உண்டு; ஒன்று கருத்துக்களுடைய வழி, இரண்டு உள்ளுணர்வின் வழி. ஒரு தொடக்கத்தை வைத்து சொல்லப் போகிறோமென்றால் "பிரதாப முதலியார் சரித்திரத்தை” எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களை கருத்துக்களுடைய வழி என்று சொல்லலாம். கருத்துப் பிரச்சாரம் தான் இலக்கியம் என்று நம்பினார்கள். சமூகத்தை மாற்றுவதற்காக எழுதினார்கள். புறவயத்தைப் பார்த்து எழுதினார்கள். சமூகத்தைப் பார்த்து, மக்களைப் பார்த்து தனக்குப் பட்டத்தை எழுதினார்கள்; அது ஒரு வழி.
இன்னொரு வழி இருக்கிறது. அது "கமலாம்பாள் சரித்திரத்தை" எழுதிய ராஜமய்யருடைய வழி. அது தன்னைப் பார்த்து எழுதுவது. இந்த வெட்டத் திடலில் தானும் ஒருவன் என்று தன்னைக் கூர்ந்து தனக்குள்ளே பார்க்கப் பார்க்க இந்த மக்களையே பார்ப்பதுதான் என்று தெரிந்து எழுதுவது. உள்ளுணர்வை தீட்டி வைத்துக் கொண்டு உள்ளுணர்வை மட்டுமே வெளிப்படுத்துவது. அது ஒரு வழி. ஈழப் பாரம்பரியத்தை வைத்துப் பார்த்தால் இந்தக் கருத்துப் பிரச்சார வழியை, சமூக மாற்றத்துக்காக அரங்கில் கொள்ளவேண்டியதான வழியை, அந்த வழியை முன்வைத்த இரண்டு முக்கியமான சிந்தனையாளர்களை ஈழம் உருவாக்கியது; "கைலாசபதி, சிவத்தம்பி." அவர்களுடைய பாதிப்பு இலக்கியம் முழுக்க இருந்தது. ஈழத்தினுடைய பொதுவான போக்கு என்பதே கருத்துக்களை முன்வைப்பதே. ஈழத்தினுடைய பொதுவான எழுத்து என்பது எனக்குத் தெரிந்தவரை, நான் வாசித்தவரை மீண்டும் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தியல் புலத்தை உருவாக்குவதுதான்; அதற்குள் செயல்படுவதுதான். அதற்கு எதிராக, அதற்கு மாறாக செயற்பட ஒரு சின்ன, மென்மையான ஒரு நீரோடை போல ஒரு வழி இருந்தது. அதில் இரண்டு முக்கியமான பெயர்கள்; ஒன்று "மு.தளையசிங்கம்," இன்னொன்று "எஸ்.பொ" அவர்கள்.
கைலாசபதி, சிவத்தம்பி மரபு கருத்துப் பிரச்சாரம் சார்ந்து உருவாக்கிய ஒரு பெரும்போக்குக்கு எதிராக எஸ்.பொ அவர்கள் தன்னை முன்வைத்தார் எனச் சொல்லலாம். தன்னுடைய உடலை, தன்னுடைய மனதை, தன்னுடைய ஆளுமையை முன்வைத்தார். எஸ்.பொவின் ஆளுமை என்பது ஆரம்பத்திலிருந்தே முழுக்க முழுக்க அவரது உள்ளுணர்வு சார்ந்தது. சுந்தர ராமசாமி "ஜே.ஜே" பற்றிக் குறிப்பிட்டு ஒன்று சொல்லுவார், அவரது உள்ளுணர்வு இருட்டில் மிருகங்களின் கண்களைப் போன்றது. தானாக ஒளிவிடக் கூடியவை. அவற்றுக்கு வெளியிலிருந்து ஒளி தேவையில்லை. அதற்கு உள்ளேயிருந்தே ஒளிவரும். அப்படிப்பட்ட ஒளியோடு ஈழ இலக்கியத்தில் பயணம் செய்தவர் எஸ்.பொ. ஒருவகையில் உள்ளுணர்வு என்பது தர்க்கத்துடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளதல்ல. எஸ்.பொ அவர்களது கடிவாளத்தில் அவர் நின்றது கிடையாது. உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்; சடங்கு நாவலிலே ஒரு இடம் வரும், "யாரது, ரயிலில தண்ணியடிச்சிட்டுப் போறது" என்று; "அது எஸ்.பொ குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறான்" என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரைப் பற்றி அவரது சித்திரமே அதுதான். ஒரு கட்டற்ற மதயானையாக ஈழ இலக்கியத்தில் அவர் உலாவியிருந்தார். நல்லவற்றை இடித்திருக்கிறார்; கெட்டவற்றை இடித்திருக்கிறார். ஒரு அலையாக, ஒரு தன்னிச்சையான போக்காக அவரது பண்பு இருந்திருக்கிறது. அதற்கு நற்போக்கு என்று அவரே பெயரிட்டிருக்கிறார்; முற்போக்குக்கு எதிரான ஒரு மரபாக. இன்று பல வருடங்களுக்குப் பின்பு திரும்பிப் பார்க்கும்போது எஸ்.பொ அவர்களின் மரபு அதே அளவு வீச்சத்துடன் ஈழ இலக்கியத்தில் தொடர்கிறதா, உள்ளுணர்வை மட்டுமே நம்பி எழுதக்கூடிய கட்டற்ற சுதந்திரங் கொண்ட படைப்பாளிகளின் வரிசை உருவாகியிருக்கிறதா என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. விதி விலக்குகள் இருக்கின்றன, ஆனால் போதுமான அளவுக்கு இல்லை. எதிர்காலத்தில் அப்படிப்பட்ட மரபு, அப்படிப்பட்ட ஒரு போக்கு ஈழ இலக்கியத்தில் உருவாகும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக இந்த மேடையிலே என் விருப்பத்தையும் ஆசையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, எஸ்.பொ அவர்களைத் தமிழகம் உரிய அளவில் கவனிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் அவரைப்போன்ற இன்னும் மூதாதையர்களை நாங்கள் கவனிக்கவில்லை. தமிழகம் இன்றைக்கும் பிரபலங்களின் பின்னால்; அரசியல் அல்லது சினிமாவால் அடையாளப்படுத்தப்பட்ட பிரபலங்களுக்குப் பின்னால் போகக்கூடிய அமைப்பாலானதாக இருக்கிறது. கௌரவிக்கப்படாத மூதாதையர்கள் பற்றிய பெரிய பட்டியல் நம்மிடம் இருக்கிறது. ஒரு பெரிய அநீதியின் மேல்தான் ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனும் எழுத வருகிறான். என்னுடைய மூதாதையர் கவனிக்கப்படவில்லை, அவருடைய இலக்கியங்கள் படிக்கப்படவில்லை, அவர் மனமுருகி தனிமையில் இருக்கிறார்கள் என்ற உணர்வோடுதான் ஒரு இளம் எழுத்தாளனும் அங்கே படைக்க வருகிறான். தமிழில் அதற்கான வழிகள் எல்லாமே அடைத்துப்போன ஒரு காலகட்டத்திலேதான் "இயல் விருது" இங்கே ஆரம்பிக்கப்பட்டது. நம்முடைய தமிழிலக்கியத்தின் பிதாமகன் என்று சொல்லக்கூடிய சுந்தர ராமசாமிக்கு அளிக்கப்பட்ட விருது இங்கு அளிக்கப்பட்டதுதான். தமிழிலக்கியத்தில் ஒரு ஐம்பது வருடம் அழகியலையும் உள்ளுணர்வையும் முன்வைத்த, முன்னோடி விமர்சகராகிய வெங்கட் சுவாமிநாதனுக்கு அளிக்கப்பட்ட விருது இங்கே அளிக்கப்பட்டதுதான். தமிழிலக்கியத்தில் பெண்ணிய எழுத்தென்ற ஒன்றைத் தொடங்கிவைத்த அம்பைக்கு அளிக்கப்பட்ட விருது இங்கேதான் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கௌரவிக்கப்படாத முன்னோடிகளைக் கௌரவிக்கும் முகமாக, தமிழகம் செய்யத்தவறிய ஒரு விஷயத்தை செய்வதாக , இங்கே இயல் விருது தமிழ் இலக்கியத் தோட்டத்தால் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தினுடைய எழுத்தாளர் அனைவரது சார்பிலும் லட்சக்கணக்கான வாசகர்கள் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது தமிழ் இலக்கியத் தோட்டம் தன்னுடைய பணிகளை விரிவுபடுத்தி எழுத ஆரம்பிக்கும், எழுத வரும் புது எழுத்தாளர்களை ஊக்குவிப்பதாக தனது அங்கீகாரத்தை அளிக்கிறது. அதுவும் மிக மரியாதைக்குரிய விஷயம். ஏனென்றால் இவர்களில் ஒருவர் ஏதாவது ஒரு விருதைப் பெற இன்னும் எத்தனையோ வருடங்கள் ஆகும். உதாரணமாக என் நண்பர் சு.வெங்கடேசன் அவர்கள் "காவல் கோட்டம்" என்ற நாவலை எழுதியிருக்கிறார். அவரது முதல் படைப்பு; அந்த முதல் படைப்பே கடல் கடந்து இவ்வளவு முக்கியமான ஒரு அமைப்பின் முக்கியமான விருதைப் பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஒரு பெரிய ஆசிர்வாதம் போல. எழுத்தாளனுக்கு தன் எழுத்து கவனிக்கப்படுகிறது, படிக்கப்படுகிறது என்பது அளிக்கக்கூடிய ஊக்கம் முக்கியமானது. இந்த மேடையில் அளிக்கப்பட்ட பிற விருதுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கன்றன; ஏனென்றால் அனேகமாக எல்லா முக்கியமான விருதுகள் பெறுபவர்களும் ஏற்கனவே என்னால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள், என்னால் மதிக்கப்படுபவர்கள், பாராட்டி எழுதப்பட்டவர்கள். நண்பர் பொ.கருணாகரமூர்த்தி அவர்களுடைய ஆரம்பகால முதல் தொகுதிக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். அது "ஒரு அகதி உருவாகும் நேரம்" என்று நினைக்கிறேன். அவருடைய படிப்புக்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஈழ இலக்கியத்திலே ஒரு அசலான நகைச்சுவை உணர்வும் மிகச் சரளமான சித்தரிப்பு முறையும் கொண்ட முக்கியமான படைப்பாளி. நீண்ட இளைவெளி அவரிடத்திலே விழுந்தது. அந்த இடைவெளியிலிருந்து மீண்டு மிகுந்த வேகத்துடன் அவர் எழுதுவற்கு இந்த விருது அவருக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும் என்று நினைக்கிறேன். நண்பர் சு.வெங்கடேசனுடைய "காவல் கோட்டம்" நாவல்; அது வெளிவந்த போதே தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான சாதனைப் படைப்பு என்று ஏறத்தாழ அறுபது எழுபது பக்கங்களுக்கு நீண்டதொரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அவருக்கு அளிக்கப்பட்ட விருதுக்காக தமிழ் வாசகன் என்ற முறையில் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தியோடர் பாஸ்கரன் அவர்கள் தமிழிலே ஒரு துறை தொடங்கிவைத்த முன்னோடி. தமிழிலே "சூழியல்" சார்ந்து எதுவுமே எழுதப்பட்டது கிடையாது. அதற்கான வார்த்தைகளே தமிழிலே இல்லை. மரபிலே இருந்திருக்கிறது. அந்த வார்த்தைகளை அவ்வளவற்றையும் மீட்டு எடுத்து ஒரு தனி மொழியை, ஒரு துறையைத் தொடக்கிவைத்த இலக்கிய முன்னோடி, ஒரு மிக முக்கியமான சாதனையாளர், தியோடர் பாஸ்கரன். அவருக்கு அளிக்கப்பட்ட விருது எனக்கு அளிக்கப்பட்ட விருது போல. அதற்காகவும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் துவரங்குறிச்சி என்ற சின்ன கிராமத்திலே சின்ன வீட்டில் ஒரு கட்டிலிலிருந்த நோயுற்ற இளைஞனாக நான் மனுஷ்யபுத்திரனைப் பார்த்தேன். அப்போதே அவர் மிக முக்கியமான கவிஞராக இருந்தார். இத்தனை வருடங்களில் என்னுடைய மனத்தினுடைய அந்தரங்கமான கவிஞராக, என்னுடைய கவிஞர் என்று நான் சொல்லக்கூடிய கவிஞராக எப்போதும் அவரை நான் கண்டுவருகிறேன். அவருடைய சமீபத்திய கவிதைகள் எல்லாம் மிகுந்த வீச்சத்துடன் வெளிவந்திருக்கின்றன. அதை அடையாளங்கண்டு பாராட்டியமைக்காக இலக்கியத் தோட்டத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் திருமாவளவன், இரண்டாயிரத்தில் அவருடைய தொகுதிகள் வந்தபோது நான் நடத்திக் கொண்டிருந்த "சொல் புதிது" இதழில் இரண்டு பக்கங்களில் அவருடைய கவிதைகளை வெளியிட்டோம். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் நான் கவனிக்ககூடிய மதிக்கக்கூடிய முக்கியமான கவிஞராக அவர் இருக்கிறார். அனேகமாக அவருக்குக் கிடைக்ககூடிய முதல் விருது இதுவென்று நான் நினைக்கிறேன். அதுவும் மிகுந்த பாராட்டுக்குரியது. நான் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கணையாழியிலிருந்தே கவனித்து வரக்கூடிய கட்டுரையாசிரியரான சச்சிதானந்தம் சுகிர்தராஜா அவர்களுக்கு இங்கே விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பு "மருதம்" என்ற சிறிய இணைய இதழை நான் ஆரம்பித்தபோது அதற்கு எழுத்துருக்கள் தேவைப்பட்டன. முத்து நெடுமாறன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். எந்தவிதமான கட்டணமும் வாங்காமல் அந்த எழுத்துருக்களை எனக்கு அளித்துதவினார். ஒரு பதினைந்து வருடங்கள் நான் எழுதிய எல்லா எழுத்துக்களும் "முரசு அஞ்சலில்" எழுதியவைதான். முரசு அஞ்சல் இல்லை என்றால் இணைய உலகில் வரவோ தட்டச்சில் எழுதவோ எனக்குப் பழக்கம் இல்லாமல் போயிருக்கலாம். எனது எழுத்தில் பெரும்பகுதி அவருடைய எழுத்துருவைப் பயன்படுத்தி எழுதியது. அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும். இந்த மேடையை என்னுடைய வாழ்த்தைத் தெரிவிப்பதற்காக நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
இலக்கியத் தோட்டம் விருதுகள் தமிழில் இன்று மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கின்றது. இதனுடைய முக்கியத்துவம் அதனுடைய அமைப்பாளர்களுக்கு எந்தளவு தெரியுமென்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் இப்போதைக்குத் தமிழில் அளிக்கப்படும் விருதுகளில் ஒரு இலக்கிய வாசகன் பொருட்படுத்தக்கூடிய ஒரே விருதாக இது இருக்கிறது. ஆகவே தவறாக அளிக்கப்பட்டுவிட்டால் மிக முக்கியமான விமர்சனத்துக்குரிய விருதாகவும் இது இருக்கும், இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் ஒரு மதிப்பீடை உருவாக்கி இருக்கிறீர்கள். சுந்தர ராமசாமி, வெங்கட் சுவாமிநாதன், என்று அந்தவொரு வரிசை இருக்கிறது. அந்த வரிசையில் ஒரு எழுத்தாளன் வந்து அமரும்போது அவனுக்கு அதற்கான தகுதி இருக்கவேண்டும். இன்றைக்கு எஸ். பொன்னுத்துரைக்கு அளிக்கப்படக்கூடிய இந்த விருதுக்குப் பிறகு அளிக்கப்படவிருப்பவருக்கு அந்தத் தகுதி இருக்கவேண்டும். அது ஒவ்வொருமுறையும் இன்னுமதிகமான பொறுப்பை உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்கிறீர்கள் என்பதை இந்தக் கட்டத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். விருதுகள் என்பது திறந்து இருக்கவேண்டுமென்பது உண்மைதான். அது ஒருவகையில் ஜனநாயக பூர்வமாக இருக்கவேண்டும். ஆனால் கலை விசயத்தில் ஜனநாயகத்துக்கு பெரிய இடங் கிடையாது. மக்களிடம் பரவலாகக் கருத்துக் கேட்டு விருது கொடுப்பதென்றால் அவர்கள் ராஜேஷ் குமாருக்கு விருது கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்வார்கள். திருமாவளவன் கவிதைகளுக்கு விருது கொடுக்க வேண்டுமென்று சொல்பவர்கள் டொராண்டோவில் பத்துப் பதினைந்து பேர்கள் தான் இருப்பார்கள். நான் ஊருக்குப் போய்விட்டால் அது ஒன்பதாகக் குறைந்துவிடும். ஆகவே அது ஒருவகையில் ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு விசயந்தான். ஆக நடுவர்கள் எப்போதும் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். தமிழகத்திலே ஒரு பல்கலைகழகத்திலே முப்பத்தைந்து வருடங்கள் பணியாற்றி ஒரு முறைகூட ஒரு நல்ல எழுத்தாளனை அடையாளப்படுத்தாத ஒருவரை இங்கே கூட்டிவந்து அவரை ஒரு நடுவராக அமர்த்துவதென்பது மிகத் தவறானது. அவர் திருப்பி அங்கே என்ன செய்தாரோ அதைத்தான் இங்கே செய்வார். நடுவராக வரக்கூடிய ஒருவர் ஏற்கனவே தன்னுடைய இலக்கியத் தகுதியை, இலக்கிய ஆர்வத்தை, இலக்கியத்தில் தன்னுடைய அர்ப்பணிப்பை நிரூபித்தவராக இருக்க வேண்டும். இந்த ஒரு கோரிக்கையை மட்டும் இந்த மேடையில் சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
(ஒலியிலிருந்து எழுத்து – மயூ மனோ)