கல்லறை

 

– .முத்துலிங்கம்

பிரான்ஸிஸ் தேவசகாயத்துக்கு இரவு மறுபடியும் அந்தக் கனவு வந்தது. அதனாலோ என்னவோ அவர் வெகு நேரம் தூங்கிவிட்டார். அன்று எப்படியும் காலை 7.30க்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார். அப்படி புறப்பட்டால்தான் பொஸ்டன் நகரத்து வீதிகளின் ஒத்துழைப்போடு 8.00 மணிக்கு அலுவலகத்துக்குப் போய்ச் சேரலாம்; 7.35க்குப் புறப்பட்டால் 8.20 மட்டும் இழுத்துவிடும்; 7.40 என்றால் நிச்சயம் 9.00 மணிக்கு மேல்தான் போய்ச் சேரமுடியும்.

 

நேரத்துக்கு அலுவலகத்துக்கு போகக்கூடிய  சாத்தியக் கூறுகள் அன்று தென்படவில்லை. அவருடைய மகள் மேசையின் முன்னால் உட்கார்ந்து தேநீர் கோப்பையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தேநீர் பையின் இரண்டு காதுகள் வெளியே தொங்கின. தேநீரின் நிறம்போல அவள் முகமும் கோபத்தில் சிவந்து கிடந்தது. ஒரு பதினாலு வயது பள்ளி மாணவிக்கு இவ்வளவு துக்க பாரங்கள் உண்டா என்பது அவரை வியக்க வைத்தது. பள்ளிக்கூட முதுகுப்பை கவனிப்பாரின்றி கீழே கிடந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கு வெறுப்பாக ஒரு சொற்பதில்கள் சொன்னாள். அப்படிப் பேசுவதில் அவள் மிகவும் சாமர்த்தியம் வேறு காட்டினாள். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் பதில்கள் வரக்கூடிய கேள்விகளைத் தயாரிப்பதில் அன்று அவர் பெரிதும் நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது.

 

பள்ளிக்கூட பஸ்ஸின் சத்தம் கேட்டதும்  திடீரென்று பையை மாட்டிக்கொண்டு புறப்பட்டாள். அவளுடைய முகத்தைத் தூக்குவதற்கு வேறு யாரும் இல்லாததால் அவளாகவே அதைச் சிரமத்துடன் தூக்கிவைத்துக் கொண்டு போனாள். அப்படி தூக்கியதை இனி இறக்கி வைக்க அவளுக்கு இரண்டு நாளாவது பிடிக்கும்.

 

அவளுடைய நீண்ட கோபத்தின் காரணத்தை அவர் ஒருநாள் கண்டுபிடிப்பார்.

மனைவியிடம் பேச்சுக் கொடுக்க அவருக்குத் தயக்கமாக இருந்தது. பேப்பரில் முகத்தைப் புதைத்தார். இந்தப் பன்னிரண்டு வருடத்து அமெரிக்க வாழ்க்கையில் குளிர் தேசத்துக்கு வேண்டிய உடுப்புப் பழக்கம் அவளுக்கு இன்னும் ஏற்படவில்லை. கடல் அலை பாயும் நேரத்திலோ, குளம் வற்றாத நேரத்திலோ, பெரு வெள்ளம் சாலைகளில் ஓடும் நேரத்திலோ நடப்பதற்கு ஏதுவாக நிலத்திலிருந்து ஆறு அங்குலம் உயரத்தில் சேலையின் கரை இருக்கும் விதமாக அதை அணிந்துகொண்டு வீட்டிலே உலவினாள்.

காலையில் ஏதாவது ஒரு வியாதியைக் கற்பனை செய்வது அவள் வழக்கம். நேற்று மூச்சடைப்பு இருந்தது; அதற்கு முதல் நாள் கண் எரிச்சல் என்ற முறைப்பாடு. அன்று மூட்டுவலியாக இருக்கலாம். ஒரு  பிளேட்டிலே வைக்கலாம் என்ற சிறு அறிவுகூட இல்லாமல் கைகளினால் தொட்டு பிரெட்டும் ஜாமும் எடுத்துக் கொண்டு, இரண்டு இடக்கால்களால் நடப்பதுபோல அரக்கி அரக்கி வந்தாள்.

 

காலை நேரங்களில் அவருக்கு உலகை வெறுக்க எடுக்கும் அவகாசம் வரவர சுருங்கிவிட்டது. அவசரமாக வெளியே வந்து காரில் ஏறி உட்கார்ந்து சீட் பெல்ட்டை மாட்டினார்.  அப்படி மாட்டியபோது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் அன்று நடக்கப் போவது அவருக்குத் தெரியாது.

 

தேவசகாயம் ஒரு மனநோய் மருத்துவர். கடந்த நாலு வருடங்களாக அவர் ஒரு தனி கிளினிக் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இந்திய, இலங்கை, பாகிஸ்தானிய நோயாளிகளே வந்தார்கள். இப்பொழுது அமெரிக்கர்களும் வரத் தொடங்கியிருந்தனர். மன நோயில் சாதிப் பிரிவோ, நாட்டுப் பிரிவோ இல்லாதது அவருக்கு வசதியாகப் போய்விட்டது.

 

ஆனாலும் இந்தக்  கனவு அவருக்குப் பெரும் இம்சையாகிவிட்டது. யாரிடமாவது இந்தப் பிரச்சினையைச் சொன்னால் மனப் பாரம் இறங்கும். யாரிடம் சொல்வார்? அவரே ஒரு மனநோய் வைத்தியர்.

 

இரவிலே நித்திரை கொள்வதற்கே அவர் பயந்தார். திருப்பித் திருப்பி ஒரே கனவு வருகிறது. ஒரு நாளா, இரண்டு நாளா? ஒரு வார காலமாக. கனவின் முடிவு மட்டும் தெரிவதாயில்லை. அந்த நேரம் பார்த்து முழிப்பு வந்துவிடுகிறது.

 

சாலையிலே காரை எடுத்தபிறகு மனது கொஞ்சம் அமைதி அடைந்தது. கர்ப்பிணிப் பெண்ணில் காணும் கவர்ச்சிபோல இலை உதிர் காலத்து மரங்களுக்கு ஒரு விசேஷ அழகு இருக்கும். அப்படி அமைதியான சிறு குளிர் தரும் காலைப்போதுகளில் அவருக்குக் கவிதை பிய்த்துக்கொண்டு வரும். அன்றும் வந்தது. சொல்லிப் பார்த்தார்.

 

 

மொட்டை மரங்கள்

நிரையாக அணிவகுத்து

நின்றன.

குளிர் காலம்

வரப்போவதற்கான அறிகுறி

எங்கும் தென்பட்டது.

பறவைகள் தூரதேசம் பறந்தன.

துருவக் கரடிகள்

தங்கள் மயிர்களை நீளமாக வளர்த்து

ஆழ்நித்திரைக்குத் தயாராகின.

ஆடுகள்

கத்தையான ரோமத்தின் கதகதப்பில்

தங்களைப் பாதுகாக்க ஆயத்தப்படுத்தின.

மனிதர்கள்

காலுறையும் கையுறையும் தொப்பியும் அணிந்து

தங்கள் உடம்புகளை

நீண்ட அங்கிகளுக்குள்

மூடி

மறைத்துகொண்டார்கள்.

ஆனால்,

இந்த மரங்கள் மாத்திரம்

இருக்கும் இலைகளையும் உதிர்த்துவிட்டு

வெறும் மேலோடு குளிர் காலத்தை

எதிர்க்கத் தயாராகி விட்டன.

என்ன துணிச்சல்!

 

கவிதை நன்றாக வந்ததுபோல பட்டது. ‘தைரியம்’ என்ற தலைப்பு கொடுக்கலாம். இன்னும் சில கவிதைச் சொற்களைச் சொருகிவிட்டால் நல்லாயிருக்கும். மறக்க முன்பு எழுதி வைத்துவிட வேண்டும்  என்று நினைத்துக்கொண்டார். சமிக்ஞை விளக்குகள் மறித்தன. ஒரு சிவப்புத் தலை அழகி தோல் ஓவர்கோட் அணிந்து தோள்களைச் சுருக்கிக்கொண்டு பாதையை அவசரமாகக் கடந்தாள். அவருடைய கனவில் வரும் பெண்ணுக்கும் இப்படிச் சிவப்புத் தலைதான்.

 

இருளும், பனிப்புகாரும் சூழ்ந்த  ஒரு நீண்ட சாலை. இரண்டு பக்கமும் மரங்கள். வேறு நடமாட்டமே இல்லை. ஒரே அமைதி.

தலையிலிருந்து கால்வரை மூடிய ஒரு நீளமான கறுப்பு அங்கியை அவர் அணிந்திருந்தார். கண்களுக்குத் துளை வைத்த அங்கி. அவர் நடந்துகொண்டிருந்தார். எதையோ குறிவைத்துப் போவது போல கால்கள் பரபரப்பாக இயங்கின.

தூரத்தில் ஒரு உயரமான சர்ச் தென்பட்டது. பிரம்மாண்டமான கதவுகள். சர்ச் நுனியிலே சிலுவைக்குறி. அதிலே சிவப்பு விளக்கு. அவர் கால்கள் அந்த சர்ச்சுக்குப் பின்னால் இருந்த மயானத்தை  நோக்கிச் செல்லத் தொடங்கின.இப்பொழுது வேறு பல கறுப்பு அங்கி உருவங்களும் சேர்ந்து விட்டன. அவை எல்லாம் ஒன்றையொன்று இடித்துக்கொண்டு  ஒரு  சவக்குழியை நோக்கி விரைந்தன. திடீரென்று அந்த இடத்தில் செங்கூந்தல் பெண் ஒருத்தி தோன்றினாள். வெள்ளை ஆடை உடுத்தி, தேவதை போல இருந்தவள், அனாயாசமாக கறுப்பு அங்கி உருவங்களை விலக்கியபடி, அவரைக் குறிவைத்து வந்து அவர் கையை எட்டிப் பற்றினாள்.

 

சவக்குழி இப்போது நன்றாகத் தெரிந்தது. அதன் ஆழத்திலே ஒரு சவப்பெட்டி மூடியபடியே கிடந்தது. பக்கத்திலே பளிங்கு கல்லில் கல்லறை வாசகம் எழுதித் தயாராகவிருந்தது. அந்தப் பெண் புன்னகை செய்தபடி அதைச் சுட்டிக் காட்டினாள். அதில் அவருடைய பெயர் ‘பிரான்ஸிஸ் தேவசகாயம்’ என்று எழுதியிருந்தது. பிறந்த தேதியைப் படித்தார். மிகச் சரியாக இருந்தது. 22 ஏப்ரல் 1955.

 

வெள்ளை உடைப் பெண் அவரை விட்டுக் கண்களை எடுக்கவில்லை. இறந்த தேதியைப் பார்த்தார். அதைப் படிப்பதற்கு முன்பு கறுப்பு அங்கிப் பட்டாளம் அவர்களை நெருக்கித் தள்ளியது. அவருக்கு முழிப்பு வந்துவிட்டது.அந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் சரியாகக் கனவு முறிந்துவிடுகிறது. அவர் நெஞ்சு படபடவென்று அடிக்கும். அவருடைய உடம்பு வெள்ளமாக நனைந்திருக்கும்.

 

சில நாட்களில் அவருக்கு நித்திரையிலேயே இது கனவு என்ற உணர்வு வந்துவிடும். சினிமா போல அடுத்து என்ன சம்பவிக்கும் என்றும் தெரியும். அந்தக் கல்லறை வாசகம் வரும் சமயம் இந்தக் கனவை எப்படியும் நீடித்து அந்த தேதியைப் படித்துவிட வேண்டும் என்று மனம் அவாவும். ஆனால் நித்திரை கலைந்துவிடும்.

 

இந்தக் கனவு வருவதற்கு மனோதத்துவ ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று யோசித்தார். ஆழ்மனது ஆசைகளின் சூசகமான வெளிப்பாடு என்று சிக்மண்ட் பிராய்டு சொல்லிவிட்டார். இந்த நாடு வந்து எல்லாமே மாறிவிட்டது. கடந்த பன்னிரண்டு வருடங்களில் மனைவியும் மகளும் அவரிடமிருந்து விலகி விலகி ப் போயினர்; ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு இஞ்ச் என்ற விகிதத்தில்.

 

மாற்றம்தான் மனித குழப்பத்துக்குக் காரணம் என்று பட்டது.  அன்றுமுதல் இன்றுவரை மாறாத குணம் கொண்டவை இந்த மருத்துவமனைக் கதவுகள் மாத்திரம்தான். அவர் வருவதை எப்படியோ மின்சாரக் கண்களால் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டு, தயாராகக் காத்திருந்து, அவர் வாசலை அணுகியதும் இரண்டு கைகளாலும் வரவேற்பதுபோல படீரென்று இரு கதவுகளையும் திறந்து, அவர் உள்ளே நுழையுமட்டும்  பொறுத்திருந்து, பின் நுழைந்தவுடன் அவர் முற்றிலும் நுழைந்துவிட்டார் என்பதை நிச்சயித்துக்கொண்டு, மறுபடியும் இணைந்து வணக்கம் கூறி விடைபெறும். இந்தக் கதவுகளின் நடத்தையில் அவர் இதுவரை ஒரு வித மாற்றத்தையும் காணவில்லை.

 

இப்படி வித்தியாசமாக நினைத்தபோது அவர் உதட்டில் புன்சிரிப்புக்கு இரண்டு செகண்ட் முந்திய ஒரு முறுவல் தோன்றி மறைந்தது.

 

அலுவலகத்துக்கு வந்தபோது மணி ஒன்பது. வரவேற்பாளினி அவரைக் கண்டதும் எழுந்து பின்னாலே ஓடி வந்தாள். அதிக எடையும், குறைந்த இடையுமாக அவள்  பெரிய கறுப்புப் பட்டையை இடுப்பிலே கட்டி இறுக்கி இருந்தாள். காதுகளை மறைத்த அவள் மயிர் கற்றைகள் கன்னத்தில் படபடவென்று அடித்தன. பென்சில் குதிக் காலணிகள் சப்திக்க சப்திக்க வந்தவள் மூச்சுக் காற்றை இரைச்சலுடன் விட்டுக்கொண்டு பேசினாள்.

‘டாக்டர், கிறிஸ்டி என்ற பெண் நேற்றிலிருந்து நாலு தரம் போன் செய்துவிட்டாள். சரியான அவசரம்; உடனே பார்க்க வேண்டுமாம்.’

‘டெபி, இது என்ன அவசரப் பிரிவு வார்டா? மன நோய்தானே!  அடுத்த வாரத்தில் ஒரு நாள் வந்து பார்க்கச் சொல்லு.’

 

அவருக்கு அன்று உற்சாகமே இல்லை. இரவு வருவதற்கு இன்னும் எத்தனை மணி நேரம் இருக்குமென்று எண்ணிப் பார்த்தார். பிறகு டைரியைப் பிரித்து வாசித்தார். அவருடைய முதல் நோயாளி ஒரு நாற்பத்தைந்து வயதுக்காரர். இன்ஸூரன்ஸ் முகவர். மூளைக்கும் வாய்க்கும் தொடர்பு அறுந்தவர்; பேசவிட்டால் பேசிக்கொண்டே இருப்பார்.

 

தேவசகாயத்தின்  வாயிலிருந்து ஸ்றோபரி ஜாமின் வாசனையுடன் ஒரு கொட்டாவி வெளிப்பட்டது. வரவேற்பாளினியை டெலிபோனில் அழைத்து அந்த இன்ஸூரன்ஸ்காரரை அனுப்பச் சொன்னார்.

 

அவர் வந்து சாய் கதிரையில் மிகவும் பழக்கப்பட்டவர்போல சாய்ந்துகொண்டு, ‘டாக்டர், போனமுறை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கட்டுமா?’ என்றார். ‘சரி, சொல்லுங்கள்’ என்றார் டாக்டர்.

 

‘எனக்குக் களவு செய்வதென்றாலே பிடிக்காது. அது என்னவோ சிறு வயதில் இருந்தே எனக்கு அதில் ஒருவித ஈடுபாடும் கிடையாது. என் பெற்றோர்களும்  அந்த வயதில் ஒருவித ஊக்கமும் எனக்குத் தரவில்லை. ஆனால் சமீபத்தில் நான் ஒரு திருட்டை செய்துவிட்டேன். சுவரேறிக் குதித்தோ, முகமூடி அணிந்தோ, வழிப்பறி செய்தோ நடத்திய களவு இல்லை. சொந்த வீட்டிலேயே திருடியதுதான். அதுவும் கட்டிய மனைவியிடம். . . . .’

 

ஒரு மாதிரியாக நாலு நோயாளிகளை அன்று பார்த்து முடித்து விட்டார். மதிய உணவுக்குப் போகலாம் என்று அவர் நினைத்தபோது வரவேற்பாளினி இன்னொரு தடவை அரக்கப்பரக்க ஓடி வந்தாள்.

 

‘டாக்டர், அந்தப் பெண்மணி கிறிஸ்டி வந்திருக்கிறாள். மிகமிக அவசரமாம். It’s a matter of life and death. பிளீஸ் டாக்டர், அனுப் பட்டுமா?’ என்றாள்.

தேவசகாயத்துக்குக் கோபம் வந்தது. ஆனால் இது வினோதமாகவும் பட்டது. இந்த எட்டு வருட அனுபவத்தில் இப்படி அவசரக் கோலத்தில் அவர் ஒரு நோயாளியையும் பார்த்ததில்லை.

‘ஓகே, வரச்சொல்லு’ என்றார்.

சிறிது நேரம் கழிந்தது.

வைத்த கண் வாங்காமல் அவள் வருவதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

அவள் நிறமோ செம்மண். நீலக் கண்கள்,  மஞ்சள் ரப்பைகள், கறுப்பு உதடு, பச்சை நகம், சிவப்பு கூந்தல் இன்னும் வேறு வேறு அங்கங்களில் வேறு வேறு பூச்சு வேலைகளுக்கும் சாத்தியம் இருக்கிறது என்று சொல்வதுபோல  அசைவென்று ஊகிக்க முடியாத ஒரு அசைவில் வந்துகொண்டிருந்தாள். உடம்பிலே கடவுள் படைத்த அத்தனை நிறங்களும் வந்துவிட்டதாலோ அல்லது அவற்றை எடுப்பாகக் காட்டவோ அவள் முற்றிலும் வெள்ளையாலான ஒரு தொளதொள உடையை அணிந்திருந்தாள். வெள்ளைக் கலருக்கு இவ்வளவு அழகிருப்பது அவருக்கு இதற்கு முன்பு தெரியவில்லை.

 

‘டாக்டர், நான் பெரிய இக்கட்டில் இருக்கிறேன். என்னால் தூங்கவே  முடியவில்லை.  கடந்த  ஒரு வார காலமாக எனக்கு ஒரே கனவு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அந்தக் கனவில் ஒரு பொறுத்த கட்டம் வரும்போது நான் முழித்துவிடுகிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது’ என்றாள்.

 

டாக்டருக்கு திடுக்கென்றது. தன்னைப் போலவே இந்தப் பெண்ணுக்கும் கனவுகள் வருகின்றன. இது என்ன பொஸ்டனில் தொடர் கனவு வாரமா?

‘சரி, என்ன கனவு? சொல்லுங்கள் பார்ப்போம்.’

‘அது ஒரு நீண்ட சாலை. இரண்டு பக்கமும் மரங்கள். இருளும் பனிப்புகாரும் எங்கும் சூழ்ந்திருந்தது. ஒரே அமைதி.

‘நான் வேகமாக நடந்துகொண்டிருந்தேன்.

‘திடீரென்று ஒரு உயரமான சர்ச் தென்பட்டது. பிரம்மாண்டமான கதவுகள். சர்ச் நுனியிலே சிலுவைக்குறி. . .’

‘நில்லுங்கள். சிவப்பு விளக்கு இருந்ததா?’ என்றார் டாக்டர்.

‘ஆமாம், டாக்டர் எரிந்தது. உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள்.

 

‘நான் சர்ச்சை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அதற்குப்  பின்னால் ஒரு மயானம்.  அங்கே பல கறுப்பு அங்கி உருவங்கள் ஒரு சவக்குழியைச் சுற்றி அலைந்தன.  ஒரு  கறுப்பு அங்கி உருவத்தை  மாத்திரம் குறிவைத்து என் கால்கள் நகர்ந்தன. அந்த உருவத்தின்  கைகளைப் பற்றி நான் இழுத்தேன்.

 

‘சவக்குழியில் ஒரு சவப்பெட்டி மூடியபடியே கிடந்தது. பக்கத்திலே பளிங்கு கல்லில் கல்லறை வாசகம் எழுதித் தயாராகவிருந்தது. நான் அந்த உருவத்தைப் பார்த்து புன்னகைத்தபடியே அந்த வாசகத்தைச் சுட்டிக் காட்டினேன். அந்த சமயத்தில் கறுப்பு அங்கிப் பட்டாளம் எங்களை நெருக்கித் தள்ளியது. நான் முழித்துவிட்டேன்.’

 

கதையைச் சொன்ன ஆசுவாசத்தில் பெருமூச்சு விட்டாள். முகம் வியர்த்துப்போய் இருந்தது.

டாக்டரைப் பார்க்க சகிக்கவில்லை. முகத்தில் பயக்களை பூரணமாகக் கட்டிவிட்டது.

அவர் அவளைக் கூர்ந்து பார்த்தார். சந்தேகமே இல்லை. கனவிலே கண்ட அதே பெண்தான். வெள்ளை ஆடை, சிவப்புத் தலைமயிர், நீலக் கண்கள்.

 

‘இந்தக் கனவு எவ்வளவு காலமாகத் தொடருகிறது?’ என்றார். அவர் குரலில் சிறு நடுக்கம் சேர்ந்துவிட்டது.

‘ஒரு வாரமாக.’

‘இதற்கு முன்பு ஏன் என்னிடம் வரவில்லை?’

‘கனவுதானே, போய்விடும் என்று நினத்தேன்.’

‘இன்று வந்த காரணம்?’

‘அந்தக் கல்லறையில் இருந்த வாசகம்தான்’ என்றாள்.

‘என்ன? நீங்கள் அந்த வாசகத்தைப் படித்தீர்களா?’

‘ஒவ்வொரு தடவையும் படித்திருக்கிறேன்.’

‘எல்லாம் ஞாபகமிருக்கிறதா?’

‘சிலது மட்டும் ஞாபகமிருக்கிறது.’

‘கல்லறையில் எழுதிய பெயர் ஞாபகம் இருக்கிறதா?’

‘இல்லை.’

‘பிறந்த தேதி?’

‘ஞாபகம் இல்லை; ஆனால் இறந்த தேதி  துல்லியமாக நினைவிருக்கிறது.’

டாக்டர் பரபரப்பானார்.

‘அப்படியா? சொல்லுங்கள், சொல்லுங்கள்.’

‘செப்டம்பர் 12; அதாவது நாளை.’

 

END

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta