தீர்மானம்
அ.முத்துலிங்கம்
புது வருடம் பிறந்தபோது ஒரு தீர்மானம் எடுத்தேன். ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களை வேஸ்ட் செய்யவேண்டும் என்று. அதன் பிரகாரம் நேற்று முந்தாநாள் ’டோஸ்தானா’ என்ற ஹிந்திப்படத்தை பார்த்தேன். படம் முடிந்த பின்னர்கூட டோஸ்தானா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அபிஷேக் பச்சன், ஜோன் ஆப்பிரஹாம், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்தது. அபிஷேக்கும், ஜோனும் gay ஆக நடிக்கிறார்கள். யாரோ சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் கன்னத்திலே இரண்டு விரல்களை வைத்தால் gay ஆகி விடுவீர்கள் என்று. அவர்களும் அப்படியே நடித்தார்கள். விரல்களை எடுத்தவுடன் gay இல்லாமல் ஆனார்கள்.
ஜோனுடைய திறமை என்னவென்றால் அது 8 கட்டம் போட்ட உடம்பை அடிக்கடி காட்டுவது. அத்துடன் நடிப்பு முடிந்துவிடுகிறது என்று அவர் நினைத்து விடுகிறார். அபிஷேக்கின் திறமை அரைவாசி வாயால் சிரிப்பது. பேசுவது. இதற்கு நிறைய பயிற்சி தேவை. அதிலே ஓர் இடம் வரும். அபிஷேக்கின் தாய் அவர் gay என நம்பிவிடுகிறார். எல்லோர் முன்னிலையிலும் அவரைக் கண்டபடி திட்டுவார். அபிஷேக் ‘மா’ என்பார். நிறுத்தாமல் தாய் மேலும் மேலும் உரத்தகுரலில் அவரை திட்டுவார். அபிஷேக் ‘மா’ என்பார். அப்பவும் ஆத்திரம் தீராமல் குதித்து குதித்து அழுதபடியே அந்தத் தாயார் திட்டுவார். அதற்கும் அபிஷேக் ‘மா’ என்பார். இந்தக் காட்சி படத்தில் நீண்டுகொண்டே போகும். ஒவ்வொரு தடவையும் தாயார் நீண்ட வசனம் பேசி மூச்சை விட நிறுத்தும்போது அபிஷேக் ‘மா’ என்பார். அப்பொழுது நான் நினைத்தேன் ஹிந்தி வசனகர்த்தா அபிஷேக்கின் வசனங்களை எழுத எவ்வளவு பாடுபட்டிருப்பார் என. அதை மனனம் செய்ய அபிஷேக்தான் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். ஹிந்தி வசனபிதாக்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்ற வதந்தி உண்மைதான்.
அபிஷேக் 26 தடவை ’மா’, ’மா’ என்று சொன்னார். நான் எண்ணிக்கொண்டே வந்தேன். 27வது தடவை சொல்லவில்லை. படம் முடிந்துவிட்டது.
END