இரவு யானைகள்

இரவு யானைகள்

 

அ.முத்துலிங்கம்

 

பல வருடங்களுக்கு முன்னர் கென்யாவில் நான் வசித்து வந்த  காலத்தில் அங்கே உள்ள ‘சாவோ’ (Tsavo) தேசிய வன காப்பகத்துக்கு ஒருமுறை போயிருக்கிறேன். கென்யாவில் உள்ள ஆகப் பெரிய வனகாப்பகம் அதுதான். 22,000 சதுர கி.மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. எங்கள் விடுதியை நோக்கி காட்டுக்குள்ளால் பயணித்துக்கொண்டே இருந்தோம். இருள் வேகமாக வந்தது. எங்கள் சாரதி வழியை தவற விட்டுவிட்டார். பகல் முடிவதற்குள் நாங்கள் தங்கும் விடுதியை அடைய வேண்டும். அல்லாவிட்டால் காட்டு விலங்குகளின் மத்தியில் அகப்பட்டு விடுதியை கண்டுபிடிக்கும் சங்கடத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்போம். ’குழந்தைகளையும் மூடர்களையும் கடவுள் காப்பாற்றுவார்’ என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. அன்று எந்த வகைப்பாட்டின் கீழ்  நாங்கள் காப்பாற்றப்பட்டோமோ தெரியாது.

 

விடுதி பெரிய பெரிய தூண்களுக்குமேல் நின்றது. வனவிலங்குகள் தங்கள் விருப்பப்படி உலவுவதற்கான வசதி என்று காப்பாளர் சொன்னார். ஒரு பக்கத்து காட்டிலிருந்து மறுபக்கத்துக்கு யானைக்கூட்டங்கள் விடுதிக்கு கீழால் போவதைக் காணலாம். இங்கேதான் நான் சிவப்பு யானைகளைக் கண்டேன். பூச்சிகளின் தொல்லை தாங்காமல் யானைகள் சிவப்பு மண்ணில் குளித்து நிரந்தர சிவப்பாகவே மாறிவிட்டன. தாய் யானைகள் வேகமாக முன்னே போக யானைக் கன்றுகள் ஓடி ஒடி தாயை பிடிக்க முயன்று தோற்றுப்போகும் காட்சியை நாள்முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்பொழுதுதான் ஒரு ஆங்கிலப் பெண்மணியை பற்றி கேள்விப்பட்டேன். காயம்பட்ட, அல்லது தாயை இழந்த வனவிலங்குகளை காப்பாற்றி அவற்றை மீண்டும் வனத்துக்குள் சேர்ப்பிக்கும் பணியை அவர் செய்தார். அவருடைய கணவர் வன அதிகாரியாக கடமையாற்றியதால் அந்த வேலையை பெண் சரிவர நிறைவேற்றக் கூடியதாக இருந்தது.

 

அவர் பெயர் டாஃப்னி ஸெல்ட்ரிக். 1934ல் பிறந்தவர். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக  வனவிலங்குகளுக்காகவே வாழ்ந்தார்; குறிப்பாக யானைக் கன்றுகள். கென்யாவில் வருடா வருடம் யானைகள் அவைகளுடைய தந்தங்களுக்காக கொல்லப்பட்டன. 1990 ல் தந்தங்கள் தடைசெய்யப்பட்டன. அப்படியிருந்தும் தொடர்ந்து யானைகளை சட்டவிரோதமாக அழித்தனர். லாபம் தரும் இந்த வேட்டையில் பல கும்பல்கள் ஈடுப்பட்டிருந்ததால் அவர்களால் அந்த தொழிலை விடமுடியவில்லை. ஒரு யானை தந்தத்தில் கிடைக்கும் பணம் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்துக்கு போதுமானது. ஆகையால் யானைகளைக் காப்பதற்கென்று ஏற்பட்ட சட்டங்களை ஒருவரும் சட்டை செய்யவில்லை.   திருடர்கள் மாதத்துக்கு குறைந்தது 50 யானைகளைக் கொன்றனர். அப்படியானால் வருடத்துக்கு 600 யானைகள் அழிந்தன. புதுச் சட்டம் வந்த நாளிலிருந்து கணக்குப் பார்த்தால் ஆயிரக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் காட்டு யானைகள் இன்றும் கென்யாவில் எஞ்சியிருப்பது ஆச்சரியம்தான்.

 

ஆப்பிரிக்க யானைகளில் பெண் யானைகளுக்கும் தந்தம் உண்டு. தாய் யானைகள் கொல்லப்படும்போது தனித்து விடப்பட்ட கன்றுகள்  சிலநாட்களில் செத்துப்போகும். இந்தக் கொடுமைகளைக் கண்ணுற்ற டாஃப்னி யானைக் கன்றுகள் காப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். கன்றுகள் பெரிதாக வளர்ந்து 3,4 வயதை எட்டியதும் அவற்றை மறுபடியும் ஒரு யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிடுவார். ஆனால் பிரச்சினை ஒன்று இருந்தது. பால்குடி மாறாத யானைக் கன்றுகளை எவ்வளவுதான் கவனமாகப் பராமரித்தாலும், எத்தனை போத்தல் பசுப்பால் கொடுத்தாலும் அவை இறந்துபோயின. பசுப்பால் அவற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பலவித சோதனைகள் நடத்தியபின்னர் டாஃப்னி ஒரு புதுவிதமான பாலை கண்டுபிடித்தார். தேங்காய்ப்பால்.  ஒருநாள் தேங்காயை உடைத்து அதைப் பாலாக பிழிந்து பருக்கினார். கன்று தப்பிவிட்டது. அன்றிலிருந்து யானைக் கன்றுகளுக்கு உணவு தேங்காய்ப்பால்தான்.

 

1972ல் அவரிடம் ஒரு யானைக் கன்று அனாதையாக வந்து சேர்ந்தது. அதற்கு எலெனோர் என்று பெயர் சூட்டி வளர்த்தார். வயது வந்ததும் அதை காட்டு யானைகளுடன் சேர்த்துவிட்டார். 22 வருடங்கள் கழிந்துவிட்டன. ஒரு நாள் காலை 1994ல் ஒரு யானைக் கூட்டம் அவரிடம் வந்தது. அந்தக் கூட்டத்தில் எலெனோர் இருப்பதாக அவருடைய உள்ளுணர்வு சொன்னது. ’எலெனோர்’ என்று குரல் கொடுத்தார். அந்தப் பெரிய கூட்டத்திலிருந்து ஒரு யானை மட்டும் அவரை நோக்கி நடந்து வந்தது. இவர் கிட்டப் போய் அதை தடவிக் கொடுத்தார். எதிர்பாராத விதமாக அது தும்பிக்கையால் அவரைச் சுற்றி தூக்கி சுழற்றி வீசியது. 20 யார் தூரம்போய் விழுந்தார். யானை அப்பொழுதும் சீற்றம் தாங்காமல் அவரை நோக்கி அடியெடுத்து வைத்தது. எலும்புகள் முறிந்த நிலையில் தரையில் கிடந்தபடியே டாஃப்னி யானையை உற்று நோக்கினார். அதன் முகம் தடிப்பாக இல்லை; கண்கள் நிறமற்றவை. அது எலெனோர் அல்ல என்பது மூளையில் பட்டது.  கண்களை மூடி கடவுளிடம் வேண்டினார். ‘இந்த விபத்தில்  தப்பி உயிர் பிழைத்தால் நான் என் வாழ்நாள் சரித்திரத்தை எழுதுவேன்.’ இப்படியாக ஒரு சங்கல்பம் செய்தார்.

 

யானை அவருக்கு சமீபமாக அணுகியது. ஒரு யானைக் கன்றை தூக்குவதுபோல மெதுவாக தடவி அவரை தூக்க முயன்றது. டாஃப்னி அதிகாரமான குரலில் ’நிறுத்து. திரும்பிப் போ’ என்று  சத்தமாகச் சொன்னார். யானை ஏதோ புரிந்ததுபோல அமைதியாக அவரை விட்டு பின்வாங்கிப் போனது.

 

டாஃப்னியுடைய சங்கல்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. அவர் வெளியிட்ட புத்தகம் அவருடைய சுயசரிதைதான். ஆனால் யானைகளுடைய கதையும்கூட. புத்தகத்தின் பெயர் Love Life and Elephants. டாஃப்னிக்கு  இப்போது 79 வயதாகிறது. அவர் நடத்திவரும் யானைக் கன்று அனாதை ஆச்சிரமத்தில் இதுவரை 130க்கு அதிகமான கன்றுகளை காப்பாற்றி அவற்றை காட்டிலே சுதந்திரமாக விட்டிருக்கிறார். டாஃப்னியுடைய சேவையை பாராட்டி இங்கிலாந்தின் மகாராணி எலிஸபெத் அவருக்கு OBE பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறார்.

 

சில வருடங்களுக்கு முன்னர் டைம் பத்திரிகை அவரை பேட்டி கண்டது.

‘யானைகளும் மனிதர்களைப்போல இறந்துபோன யானைகளுக்காக துக்கம் கொண்டாடுகின்றனவா?

 

’நான் 50 வருடங்களாக யானைகளுடன் வாழ்ந்து வருகிறேன். மனிதர்கள் போலவே இறந்துபோன யானைச் சடலத்தை நோக்கி மற்ற யானைகள் தூர இடங்களிருந்து வந்து முன்னே நின்று மௌனமாக அஞ்சலி செய்கின்றன. வருடக் கணக்காக அவை துக்கம் அனுட்டிப்பதை காணலாம். யானை மரித்த இடத்தில் தடிகளையும் தழைகளையும் பரப்பி அவை மரியாதை செய்கின்றன.’

 

’யானைகள் பற்றி மனிதன் என்ன தவறாக நினைக்கிறான்?’

 

’அவைகளுடைய புத்திக்கூர்மை பற்றி. அவை நம்பமுடியாத அளவுக்கு புத்தியானவை. பெரிய தந்தங்கள் கொண்ட யானைகளுக்கு மனிதன் தந்தங்களுக்காகவே தங்களை கொல்கிறான் என்பது தெரிந்திருக்கிறது. தங்கள் தந்தங்களை அவை மரங்களிலும் செடிகளிலும் மறைத்து வாழ்கின்றன. அவை பகலில் வெளிவருவதில்லை. இரவிலே உணவு தேடி இரவுப் பிராணிகளாகவே மாறிவிட்டன.’

 

யானைகள் அழியும் வேகத்தில் அடுத்து வரும் சந்ததியினருக்கு அவை பார்க்கக் கிடைக்குமோ என்பதுகூட சந்தேகமாயிருக்கிறது. இரவுப் பிராணிகளான கழுதைப்புலி, சிறுத்தை ,சிங்கமெல்லாம் வேட்டையாடித் தின்று தொல்லையின்றி வாழ்கின்றன. ஒரு தீங்கும் இழைக்காத யானை ஏன் இந்த உலகிலிருந்து அழியவேண்டும்?

 

இரவுப் பிராணிகளாக அவை மாறுவது ஒன்றுதான் வழி.

 

END

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta