இரண்டுநாள் நண்பர்

            இரண்டு நாள் நண்பர்

         

இன்று காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. நண்பர் ரிஸ்டோ ஸெலேகெவிக் இறந்துவிட்டார். இரண்டு தடவை மட்டுமே சந்தித்த ஒருவர், ஆனால் அவரை மறக்க முடியவில்லை. குவைத்தில் லாரி அடித்து அந்த இடத்திலேயே மரணமாகிவிட்டார் என்று செய்தி சொன்னது.

 

முதல் தரம் ஒரு மதிய உணவின்போது ரொறொன்ரோவில் அவரைச் சந்தித்தேன். ஐ.நா சபையின் ஒரு பிரிவில் நீண்ட காலம் வேலை செய்து ஓய்வு பெற்றவர். வயது எண்பதுக்கு மேலே இருக்கும். அழகான வெள்ளை மடிப்புக் கலையாத கோட்சூட்டில் அலங்காரமாக, இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருடைய சப்பாத்தும் வெள்ளை நிறம். தன்னுடைய முழுப்பெயரையும் சொல்லி அறிமுகப்படுத்தினார். திருப்பிச் சொல்லமுடியாத சங்கடமான பெயர். என்னுடைய பெயரைச் சொன்னேன். என்னுடைய நாடு என்னவென்று கேட்டபோது அதையும் சொன்னேன். அவருடைய நாடு என்ன என்று கேட்பதாக நினைத்து உங்கள் தாய்மொழி என்னவென்று கேட்டேன். அப்பொழுதுதான் அதிர்ச்சி ஏற்பட்டது. மாசிடோனியன் என்றார். நீங்கள்தான் நான் சந்திக்கும் முதல் மாசிடோனியன் என்று உணர்ச்சிவசப்பட்டு மறுபடியும் கைகுலுக்கினேன். என்னுடைய பரபரப்பை பார்த்த அவர் முகத்தில் பயக்களை தோன்றியது. தன்னைச் சுருக்கிக்கொண்டார். பின்னுக்கு ஒருமுறை திரும்பிப் பார்த்து  ரகஸ்யமான குரலில் சொன்னார் ’பலர் நினைக்கிறார்கள் மாசிடோனியன் மொழி அழிந்துவிட்டது என்று. கிரேக்கர்கள் எவ்வளவு முயன்றும் அதை அழிக்க முடியவில்லை. இன்னமும் இயங்குகிறது’ என்றார்.

 

சிறிய நாடான மாசிடோனியா அரசனுக்கும் கிரேக்க அழகி ஒலிம்பியாவுக்கும் பிறந்தவன் அலெக்சாந்தர்.  கிரேக்கரான அரிஸ்டோட்டல் அவனுடைய குரு. இளவயதில் ஆட்சிக்கு வந்து 33 வயதிலேயே  இறந்துபோனாலும் உலகத்தில் பாதியை பிடித்து தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்திருந்தான். இதுவெல்லாம் நான் ஏற்கனவே படித்தது. நான் படிக்காத ஒன்றை ரிஸ்டோவிடம் கேட்டேன். 'அலெக்சாந்தர் என்ன மொழி பேசினான்?'  அவர் சொன்னார் 'அப்பொழுதெல்லாம் கிரேக்கம் உலக மொழி. மாசிடோனியன் சிறிய மொழி. தன் நாட்டு படைவீரகளுடன் மட்டும் அலெக்சாந்தர் மாசிடோனியன் பேசினான். உலகத்தோடு பரிமாறிய மொழி கிரேக்கம்' என்றார்.

 

மாசிடோனியா மிகச் சிறிய நாடு. யூகொஸ்லேவியா உடைந்தபோது 1991ல் சுதந்திரம் பெற்று தனிநாடாக ஆகியது. அங்கே ஒன்றரை மில்லியன்  மக்கள் மாசிடோனியன் பேசுகிறார்கள். 'அலெக்சாந்தர் பேசியது உங்களுடைய மொழி. இப்பொழுது நாடும் கிடைத்துவிட்டது. நீங்கள்  அதிர்ஷ்டக்காரர்கள்’ என்றேன். அவருடைய வெள்ளை முகம் சூரிய வெளிச்சத்தில் சிவப்பாக மாறிக்கொண்டு வந்தது. ’ஆனால் பகை உண்டு. எங்கள் மொழி வளர்வது கிரேக்கர்களுக்கு பிடிக்கவில்லை’ என்றார். அலெக்சாந்தர் இருபது வயதில் அரசனானதும் முதலில் படையெடுத்தது கிரேக்க நாட்டின்மீதுதான். அந்தப் போரில் 6000 கிரேக்க வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 30,000 பேர் அடிமைகளாக்கப்பட்டார்கள். இது நடந்தது 2300 வருடங்களுக்கு முன்னர், ஆனால் கிரேக்கர்கள் அதை இன்றுவரை மறக்கவில்லை. மாசிடோனியன் பெயர்களை எல்லாம் ஒரு காலத்தில் கிரேக்கப் பெயர்களாக மாற்றினார்கள். மாசிடோனிய மொழி பேசுவதைக்கூட சட்ட விரோதமான காரியமாகப் பார்த்தார்கள்.   

 

’மாசிடோனியன் எழுத்தை வாசிப்பீர்களா?’ என்று கேட்டேன். அவர் ஒன்றுமே பேசவில்லை. வெள்ளையான அவர் முகம் கறுப்பானது. என்னுடைய முகவரியை கேட்டு ஒரு துண்டுப் பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டு விடைபெற்றார். சிலநாட்கள் கழித்து எனக்கு ரிஸ்டோவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ரொறொன்ரோவில் வெளிவரும் மாசிடோனியன் வார இதழை எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு சின்னக் குறிப்பும் இருந்தது. ‘இதுதான் மாசிடோனியன் மொழி. இதை வாசிப்பவர்களும் இதில் எழுதுபவர்களும் இங்கே இருக்கிறார்கள்.’

 

இரண்டாவது  சந்திப்பின்போதும் அதே மாதிரி அழகான வெள்ளை கோட்சூட்டில், முழங்கால்களில் கைகளை வைத்துக்கொண்டு  உட்கார்ந்திருந்தார். அவருடைய நண்பர் சொன்னார் அவர் எப்போதுமே அப்படித்தான் உடை உடுப்பார் என்று. பரவசத்தோடு என் கைகளைப் பிடித்து குலுக்கினார். அளவற்ற சந்தோசத்தில் இருந்தார். தன்னுடைய மகன் தன்னை அழைத்திருப்பதாகவும் அவரைப் பார்க்க குவைத்துக்கு போக திட்டமிடுவதாகவும் சொன்னார். ’உங்களுக்கு யாரும் மாசிடோனியாவில் இல்லையா?’ என்றேன். உடனேயே அவர் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. எதையோ கண்டு மிரண்டதுபோல ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்த்தார். ’நான் குவைத்தில் என்னுடைய மகனைப் பார்த்துவிட்டு கனடாவுக்கு திரும்பும் வழியில் மாசிடோனியாவுக்கு முதல்முறையாக போகப்போகிறேன். அங்கே  மாசிடோனியன் மொழியில் உரையாடுவேன். இறப்பதற்கு முன்னர் என் சொந்த நாட்டை ஒருமுறையாவது பார்த்துவிடுவேன்’ என்றார்.

 

இப்பொழுது மின் கடிதம் வந்திருக்கிறது. குவைத்தில் மகனுடன் சில நாட்களைக் கழிக்க போயிருந்தார். வழக்கம்போல காலை நடைபயில வெளியே புறப்பட்டுப் போனபோது ஒரு லாரி வந்து அடித்து அந்த இடத்திலேயே குப்புற விழுந்து மரணமானார்.

 

நண்பா, ஒரு முறை திரும்பிப் பார்த்திருக்கலாமே!

 

END

 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta