ரொறொன்ரோ பெண்

ரொறொன்ரோப் பெண்

""முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம்.  கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.)

 

 ‘நான் வசிக்கும் சிறிய வீடு. ஒரு முற்றமும், பூட்டக்கூடிய சாமான் அறையும், வெளியே சமைக்கவும் குளிக்கவும் வசதிகள் கொண்டது. வெள்ளையடித்த உள் சுவருக்கு மேல் சாய்ந்து கிடக்கும் கூரை மழைத் தண்ணீரை முற்றத்தில் கொட்டும். வீட்டின் முழுப்பரப்பும் 18 X 30 அடி இருக்கலாம். தெற்குப் பக்கத்தில் பழுதுபடாத கழிவறை ஒன்றும் உள்ளது. வீட்டு மண் தரை மாட்டுச் சாணியால் கிரமமாக மெழுகப்படுவதால் கிருமிகள் தொல்லை இராது என சொன்னார்கள். மின்சாரம் கிடையாது. ஆகையினால் ஓர் அருமையான சின்ன மண்ணெண்ணெய் விளக்கு எனக்கு வெளிச்சம் தருகிறது. சகாய விலையில் கிடைத்த  மேசையையும் நாற்காலியையும் மாட்டு வண்டியில் கொண்டுவந்து இறக்கியிருக்கிறேன். சுகமான கயிற்றுக் கட்டில் என் படுக்கை. நான் ஒரு மலிவான மண்ணெண்ணெய் அடுப்பு வாங்கியிருக்கிறேன். என் சமையல் தோழி பாப்பம்மா வாங்கிய மண் அடுப்பு ஒன்றுக்கு ஏழு சதம் பிடித்தது. அதற்கு விறகு தேவை. 2.20 டொலர் பெறுமதியான காசு கொடுத்து இரண்டு மாதத்துக்கான விறகு வாங்கியிருக்கிறோம்.

 

வீட்டு வாடகை மாதத்துக்கு 1.20 டொலர். சலவைக்காரருக்கு ஒரு மாத சலவைக்கு கூலி 50 சதம். இந்தக் கிராமத்தின் பொருளாதாரம் உங்களுக்கு இப்பொழுது ஓரளவுக்கு புரிந்திருக்கும். கிராம மக்கள் மிகவும் சிநேகமாக இருக்கிறார்கள். தோழி பாப்பம்மா பரம்பரை சமையல்காரி. அவருக்கு 45 வயதிருக்கும். நான் போகும் இடமெல்லாம் என் பின்னால் நிழல்போல வந்து என் கீர்த்தியை பரப்புவார். அவருடைய மாதச் சம்பளம் 5.50 டொலர். அவருக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது. எனக்கு தமிழ் தெரியாது. தமிழ் வார்த்தைகள், உச்சரிப்பு, இலக்கணம் எல்லாம் என் மூளைக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றன.

 

நான் எட்டு யார் சேலையை கிரமத்து மக்களைப்போலவே உடுக்கிறேன். அதைப் பார்த்து மக்கள் பெருமிதமும் உற்சாகமும் அடைகிறார்கள். என்னுடைய தலைமுடியை சீவி நீளமாகப் பின்னி தொங்கவிட்டிருக்கிறேன். என்னுடைய பிறந்த நாள் அன்று மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. நடுச்சாமம் பாப்பம்மாவின் மேல் ஆவி ஏறிவிட்டது. அது சட்டென்று அவரை தள்ளிவிட்டதால் அவர் சட்டி பானை மேலே உருண்டு விழுந்து பிரளயம்போல பெரும் சத்தம் உண்டாக்கினார். துடைப்பத்தை எடுத்து தலைமாட்டில் வைத்து படுத்தபோது ஆவி ஓடிவிட்டது. பழைய செருப்புகளும் அதே வேலையை செய்யும். துப்பலை விரலில் எடுத்து மூன்று தரம் நெற்றியில் பூசினாலும் பலன் அளிக்கும். ஆனால் ஆகச் சிறந்தது கோயில் திருநீறை வாசல் சட்டத்தில் பூசிவிடுவதுதான். இப்படியாக ஓலைப்பாளையம் அபூர்வ சம்பவங்களாலும் சடங்குகளாலும் நிரம்பி வழிகிறது. நான் இந்தக் கடிதத்தை எழுதும்போது என்னைச் சுற்றி பத்துப் பேர் நின்று எட்டி எட்டிப் பார்த்தபடியே இருக்கிறார்கள். ஒருவர் பேப்பரில் பேனாவால் எழுதுவதை அவர்கள் பார்த்ததில்லை. அதுவும் ஓர் அந்நியமொழியில். எனக்கு இது கொஞ்சம் கூச்சத்தை தருகிறது. இந்த வீட்டில் தொங்கும் உங்கள் படத்துக்கு பூமாலை சூட்டி மரியாதை செய்திருக்கிறார்கள்.

 

என்னுடைய முதல் சந்திப்புக்காக நான் ஒரு தீண்டத்தகாத மனிதரை ஏற்பாடு பண்ணினேன். அது ஏற்படுத்தக்கூடிய பரபரப்பையோ குழப்பத்தை பற்றியோ நான் யோசிக்கவில்லை. முறைப்பாடு கொண்டு வந்தவர் பக்கத்து வீட்டுக்காரர்தான். நான் இந்த மனிதரை வீட்டுக்கு அழைக்கும் எண்ணத்தில் இருக்கவில்லை. பாப்பம்மா தன் வீட்டு முற்றத்தை எனக்கு ஒதுக்கி தந்தார். இவர் அருமையான தகவல்களையும் சம்பிரதாயங்களையும் எனக்கு சொன்னார். ஒரு பழைய சாக்குமேல் அவர் உட்காரவைக்கப்பட்டார். நான் திண்ணையில் ஒரு பாயில் அமர்ந்திருந்தேன். ஒரு சிரட்டையில் அவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள். காய்ந்துபோன பழைய இலையில் உணவும் தரப்பட்டது. இப்படி அவரை அவமதித்தது என் அமைதியை குலைத்தது.’

 

இதை எழுதிய இளம் பெண்ணின் பெயர் பிரெண்டா பெக். பல வாசல்கள் கொண்ட ஒரு மாளிகைக்குள் தற்செயலாக நுழைந்தவர்போல பிரெண்டா எந்த வாசலால் வெளியே வருவது எனத் தெரியாமல் அந்தக் கிராமத்தில் தடுமாறிக் கொண்டிருந்தார். கிராம மக்கள் நல்லவர்கள். எல்லாம் அமைதியாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் பிரெண்டா சுற்றுலாவுக்கு இந்தக் கிராமத்துக்கு வரவில்லை. மானுடவியல் ஆராய்ச்சிக்காக வந்திருந்தார். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் ஆராய்ச்சிக்கான ஒரு நுனிகூட அவருக்கு கிடைக்கவில்லை.

 

ஒருநாள் அவருக்கு அதிசயமான பரிசு கிடைத்தது. பாப்பம்மாவின் உதவியாளன் சுந்தரம்தான்  அதைக் கொடுத்தான். ஒரு துண்டு செப்புக்கம்பி, சின்ன பற்றறி, குட்டி பல்ப் ஆகியவற்றை வைத்து ஒருவிளக்கு தயாரித்திருந்தான். மின்சார விளக்கு. வெல்வெட் பெட்டியில் பாதுகாத்த மாணிக்கக் கல்லை கொடுப்பதுபோல வளைந்து அந்தப் பரிசை நீட்டினான். அதிலிருந்து வெளிப்பட்ட மின்சார வெளிச்சம் மின்மினிப் பூச்சியோடு போட்டிபோடும். அந்த மின்விளக்கை தினமும் அம்மாவின் படத்துக்கு முன் ஒரு மணிநேரம் பிரெண்டா எரியவிடுவார்.

 

அன்றைக்கும் அப்படி எரிந்த மின்விளக்கை அணைத்துவிட்டு படுத்தபோது இரவு அமைதியாய் இருந்தது. எலிகளாலும் வௌவால்களாலும் தொந்தரவு பெரிசாக இல்லையென்றாலும் பாப்பாத்தியின் ஆவி சிலசமையும் துடைப்பத்தை மீறி வெளியே வந்து சத்தம் போட்டு இரவை பரபரப்பாகிவிடும். அந்த நேரங்களில் அவர் ஏன் அங்கு வந்து குடியிருக்கிறார் என்ற கேள்வி பிரெண்டாவின் மனதினுள் எழும். அவருடைய ஆராய்ச்சியை எங்கே தொடங்குவது. எதை ஆராய்வது போன்ற கேள்விகள் மனதை அரிக்கும்போது தூக்கம் கலைந்துவிடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவரை ஆழமாக சூழ்ந்துகொள்ளும்.

 

ஒருநாள் இரவு அதையே சிந்தித்தபடி பிரெண்டா படுத்திருந்தார். ஆனால் தூக்கம் வரவில்லை. பாப்பாத்திக்கும் ஆவி வரவில்லை. அப்பொழுது மனதிலே தீர்மானித்தார். நாளை இந்த ஊரைவிட்டு போய்விடவேண்டும். மனிதர்கள் நல்லவர்கள். ஆனால் அவருடைய  ஆராய்ச்சிக்கு என்ன நடக்கிறது. இத்தனை பணம் செலவான பின்னர் அம்மாவுக்கு என்ன  பதில் சொல்வது. அவருடைய ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் பெருமைப்படும் விதமாக காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை. அன்று இரவு முடிவதற்கிடையில் அவர் வாழ்வில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்பது பிரெண்டாவுக்கு தெரியாது. அடுத்தநாள் காலை தன்னுடைய பொருள்களை சேகரித்துக்கொண்டு அந்த ஊரைவிட்டு புறப்படுவது என்று தீர்மானித்தார்.

 

அப்பொழுதுதான் அது நடந்தது. தூரத்தில் மேளச் சத்தம் கேட்டது. பாப்பம்மாவை எழுப்பி அது என்னவென்று விசாரித்தார். அவர் ’கதை சொல்கிறார்கள்’ என்று கூறிவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்தார்.  உடனேயே அங்கே போகவேண்டும் என்று கூறி பாப்பம்மாவுடன் அந்த இடத்துக்கு புறப்பட்டார். இரண்டு கதை சொல்லிகள் விளக்கு வெளிச்சத்தில் கதை சொல்ல ஆயத்தம் செய்தார்கள். கிராமத்தவர்கள் ஆர்வமாக முன்னே கூடியிருந்தார்கள். கதை சொல்லி என்ன கதை என்று கேட்க கிராம மக்கள் ’அண்ணன்மார் கதை’ என்று கத்தினார்கள். அப்பொழுது அந்த கதை சொல்லிகள் அந்தக் கதையை சொல்லத் தொடங்கினார்கள். நல்ல காலமாக பிரெண்டா தன்னுடைய டேப் ரிக்கார்டரையும் கையோடு எடுத்துப் போயிருந்தார். இந்த கதையை பதிவு செய்தால் ஏதாவது விசயம் கிடைக்கும் என அவருக்குத் தோன்றவே பதிவு செய்ய ஆரம்பித்தார். பார்த்தால் அன்றிரவு கதை முடியவில்லை அவருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. தொடர்ந்து 19 நாட்கள் அந்தக் கதை ஓடியது. அதனை முற்றிலும் ஒரு வரிவிடாமல் பதிவு செய்தார் பிரெண்டா.  

 

பேப்பர் பேனைகூட புழங்காத ஊர் அது. அந்த மக்கள் டேப் ரிக்கார்டரை கண்டது கிடையாது. அதை பிரெண்டா ஓடவிட்டு கதைசொல்லிகளின் குரல் மீண்டும் கதையை சொன்னபோது அப்பாவி கிராம மக்கள் நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். இந்த நிலையில் பாதி கதையிலேயே பிரெண்டாவுடைய பற்றறிகளின் ஆயுள் முடிந்துவிட்டது. எப்படி மீதியை பதிவு செய்வது என பிரெண்டா தத்தளித்தார். ஆனால் ஒரு மின்சார வேலைக்காரர் பக்கத்து கிராமத்தில் இருந்து மின்சாரம் திருடி இவருடைய மெசினை ஓட வைத்துவிட்டதால் பதிவை முடிக்கக் கூடியதாகவிருந்தது.

 

கதைசொல்லிகளின் பெயர்கள் ராமசாமி, பழனிச்சாமி. நாலாபுறமும் நட்டுவைத்த தீப்பந்தங்களின் வெளிச்சம் அசைய உற்சாகமாக அவர்கள் கதையை சொன்னார்கள். மக்கள் ஒன்றிப்போய் கேட்டார்கள். பாட்டு வரும்போது அவர்களும் பாடினார்கள். கதைசொல்லிகள் சில இடத்தில் அபிநயம் பிடித்தனர். சில இடத்தில் பாடினர். சிலநேரம் குரல் தழுதழுத்து அழுதனர். சில நேரம் சிரிப்பாக சிரித்தனர். சண்டைக்காட்சிகளை விவரிக்கும்போது நெருப்புச் சுவாலைகள் பறந்தன. குதிரைகள் ஓடின. வாள்கள் உராய்ந்தன. பெண்கள் தலைவிரித்து பிணங்களை தேடினார். பிரெண்டாவுக்கு தமிழ் ஒரு சொல்லும் புரியவில்லை. இவை எல்லாவற்றையும் கற்பனையில் அவரால் உணர முடிந்தது. அப்பொழுது தீர்மானம் செய்தார். ஒரு கரும்பை கடித்து உண்பதுபோல, தோடம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுவதுபோல, பாக்கை மெல்லுவதுபோல, தேனை நக்குவதுபோல எல்லா விதத்திலும் கதையை உள்வாங்கி அனுபவித்து 500 வருட புராணத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும் என முடிவெடுத்தார்.

 

பிரெண்டாவை திடுக்கிட வைத்த விடயம் கதை சொல்லிகள் இருவருக்கும் எழுதவோ படிக்கவோ தெரியாது. தலைமுறை தலைமுறையாக மனனம் செய்த கதை. வாய்மொழிக் கதை அழிந்தால் பின்னர் அதை உண்டாக்கவே முடியாது. ஆகவே பிரெண்டா நாடாக்களை தகுந்தவகையில் பாதுகாத்தார். ஆனால் கதைசொல்லிகளும் கிராமத்தவர்களும் டேப் ரிக்கார்டருக்கு ஒரு பூசை செய்யவேண்டும் என முடிவுசெய்தார்கள். கற்பூரம் காட்டி, விபூதியை பூசி அதற்குமேல் சந்தனப் பொட்டு இட்டு மகிழ்ந்தனர். டேப் ரிக்கார்டருக்கு மாலை போட்டு அலங்கரித்தனர். இறுதியாக தேங்காய் உடைத்து இளநீரை அதன்மேல் தெளித்தபோது பிரெண்டா பாய்ந்துவந்து தடுத்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவரை ஒருவருமே சட்டைசெய்யவில்லை. தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு தொடர்ந்தார்கள். ’கடவுளின் தீர்த்தம் என்பது அவருக்கு தெரியாதா? அத்தனை மூடப்பெண்ணா?’

 

அவர் வந்த காரியம் இப்படி எதிர்பாராத திசையில் திரும்பியது. 500 வருட காலமாக வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட அற்புதமான கதை முதல் முறையாக ஒலிநாடாவில் என்றென்றைக்கும் வாழும் விதமாக பதிவு செய்யப்பட்டது. அதை ஒலிப்பதிவு செய்த முதல் ஆள் இவர். கடைசி ஆளும் இவராகத்தான் இருப்பார். சில வருடங்களில் மின்சாரம் அந்தக் கிராமத்துக்கு வந்து சினிமாவும் நுழைந்தது. கதைசொல்லிக் கேட்கும் வழக்கம் ஒழிந்தது. அவர் கண் முன்னாலேயே 500 வருடத்து வாய்மொழிக் காவியம் அழிவதைக் கண்டார்.

 

குன்னுடையான் கதை அல்லது அண்ணன்மார் கதை என்று சொல்லப்படும் இந்தப் புராணம் 19 நாட்களுக்கு தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டது என்றால் அதன் நீளத்தை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். செவிவழியாக 500 வருடங்கள் வாழ்த கதையானதால் ஒவ்வொரு கதைசொல்லியும் அங்கங்கே தங்கள் சரக்கையும் சேர்த்து இருப்பார்கள். ஆகவே பல்வேறு வகைப்பட்ட கதைகள் இன்று உலவுகின்றன. இலங்கையில் பதுளையில் இந்தக் கதை அறுபது வருடங்களாக சொல்லப்படுகிறது என்ற தகவலும் ஆச்சரியமானது. இந்த நீண்ட கதையை சுருக்கி சொல்வது இமயமலையை தபால்தலையில் வரைவதுபோல.

 

கோலாத்தனுக்கு சோழமன்னன் பொன்னிவள நாட்டைக் கொடுக்கிறான். அவனின் நாடு செழித்து வளர்கிறது. அவன் அரியநாச்சியை மணமுடித்தாலும் குலம் தழைக்க அவர்களுக்கு பிள்ளை இல்லை. ஒரு நாள் கற்களுக்கு கிழே கண்டெடுத்த பிள்ளையை குன்னுடையான் என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். ஆனால் ஐந்து வயதிலேயே பெற்றோரை பறிகொடுத்த அவன் அனாதையாகிறான். கோலாத்தனின் சகோதர்கள் பாலகனை இம்சைப் படுத்துகிறார்கள். குன்னுடையான் தப்பியோடி வேறு நாட்டில் ஆடு மேய்ப்பவனாக வாழ்கிறான். இளைஞன் ஆனதும் ஆட்டு மந்தையின் தலைவன் தங்கை தாமரையை மணந்துகொண்டு தன் சொந்த நாட்டுக்கு திரும்புகிறான். அங்கே அவனுடைய நிலத்தை  மாமன்மார் அபகரித்துவிடுகிறார்கள். குன்னுடையான் ஒரு சிறு குடிசை கட்டி கற்கள் நிறைந்த நிலத்தை  பாடுபட்டு விவசாய நிலமாக்கி நல்ல விளைச்சல் கண்டு, பறிபோன நிலங்களை மீட்டு அரசனாகிறான். தாமரைக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. பொன்னர், சங்கர் என்ற இரண்டு ஆண்பிள்ளைகளும், தங்காள் என்ற பெண்பிள்ளையும்.

 

காட்டை ஆள்பவர்கள் வேடுவர்கள். அவர்களுக்கு காடு தேவை. நாட்டை ஆளும் பொன்னர் சங்கருக்கு காட்டை அழித்த நிலம் தேவை இதனால் பகை உண்டாகிறது. வேடுவருக்கு சொந்தமான கிளியை பிடித்ததால் மிகக் கடுமையான போர் மூள்கிறது. வேடுவரின் தலைவன் காளியுடன் பொன்னரும் சங்கரும் வீரமாகப் போர் புரிந்து இறக்கிறார்கள். அவர்கள் தங்கை தங்காளும் அவர்களைத் தொடர்வதோடு கதை சோகமாக முடிகிறது.

 

பிரெண்டா 22 மாதங்கள் தொடர்ந்து கிராமத்தில் ஆராய்ச்சி செய்தார். பலரை சந்தித்து அருமையான தகவல்களும் குறிப்புகளும் சேகரித்துக் கொண்டு ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் திரும்பிய அவர் 1968 ல் தன் ஆராய்ச்சியை முடித்தார். நீண்டகால இடைவெளிக்கு பின்னர் கனடாவுக்கு திரும்பிய பிரெண்டா  கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மானுடவியல் பேராசிரியர் பதவியை ஏற்று பல வருடங்கள் கடமையாற்றினார். ஆனால் அவருக்கு நிம்மதி இல்லை. ஏதோ ஒன்று அவர் வாழ்க்கையில் இல்லாமல் போன உணர்வு துரத்தியது.

 

கிராமங்களில் வாய்மொழியாக தொடர்ந்த நாட்டார் கதைப் பாடல்களை பாடுவது அருகி வருவது அவருக்கு தெரிந்தது. சினிமாவும் புதிய தொழில் நுட்பமும் எல்லாவற்றையும் அழித்தன. அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த கலையை ஏன் காப்பாற்றமுடியாது என அவர் சிந்தித்தார். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் நாடாவில் பதிவு செய்த உடுக்கையடிப் பாடல்கள் அவரிடம் இருந்தன. தற்செயலாகத்தான் அப்போது அது நடந்தது. இப்பொழுது அது பெரும் கலைப்பொக்கிஷம். தோற்றவர்கள் வரலாறு எழுதப்படுவதில்லை. இது தோற்றவர்களின் காவியம். இதை அழியவிட்டால் ஒரு மக்களின் கலையும், பண்பாடும், வரலாறும் பூமியிலிருந்து மறைந்துபோகும். பிரெண்டா ஒரு முடிவு எடுக்கவேண்டிய தருணம் நெருங்கியது அப்படித்தான்.

 

  •                       *                                *

நான் தரையில் இருந்தேன். எனக்கு முன் பிரெண்டா அமர்ந்திருந்தார். எங்கள் இருவருக்கும் இடையில் 50 வருடத்துக்கு முன்னர் டேப்பில் பதிவுசெய்யப்பட்டிருந்த கதைசொல்லியின் குரல் கதையை சொன்னது. அவர் சொன்னதை அப்படியே கையெழுத்தில் எழுதிய தாள்கள் பழுப்பாக எழுத்து அழியாமல் எனக்கு முன் ஒன்றரை அடி உயரத்தில் அடுக்கப்பட்டு இருந்தன. பிரெண்டா அண்ணன்மார் கதையை ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டு பாகங்களாக எழுதிய நூல்கள், இதே கதையை படக் கதையாக மாற்றி எழுதிய 16 புத்தகங்கள் ஆகியனவும் என் முன்னே அடுக்கப்பட்டிருந்தன. ஒளிப்படங்களாக மாற்றப்பட்ட 16 படக் கதைகள் ஐபாட்டில் ஓடின. இடது பக்கம் திருப்பினால் சுடுநீரும், வலது பக்கம் திருப்பினால் தண்ணீரும் குழாயில் வருவதுபோல ஐபாட்டில் ஓடும் ஒளிப்படத்தின் கதைமாந்தர்கள் தமிழிலும், வேண்டும்போது ஆங்கிலத்திலும் பேசினர்.

 

நான் 50 வருடத்திற்கு முந்திய தாள்களையும் எழுத்தையும் தொட்டுப் பார்த்து ‘இவை வரவேண்டிய இடத்துக்கு வந்திருக்கின்றன. இவற்றை எப்படியும் பாதுகாத்தாக வேண்டும்’ என்றேன். பிரெண்டா ’இந்த தாள்களை தொட்டவர்கள் மூன்றுபேர். இதை எழுதியவர். நான். என் கணவர். இப்போது நீங்கள், நாலாவது ஆள்’ என்றார். ’இதையெல்லாம் செய்து முடிப்பதற்கு எத்தனை பணம் செலவழித்தீர்கள்?’ அவர் சொன்னார் ’ஒரு மில்லியன் டொலர்.’ என்னால் நம்பமுடியவில்லை. பேச்சு நின்றுவிட்டது. எனக்கு முன்னுக்கு உட்கார்ந்திருக்கும் பெண்  மானுடவியல் பேராசிரியர் பதவியை 1983ம் ஆண்டு உதறிவிட்டு கடந்த 30 ஆண்டுகளாக எழுத்திலும், ஒலியிலும், ஓவியத்திலும், ஒளியிலும் இந்தக் கதையை நிரந்தரமாக நிறுவியிருக்கிறார். ’எதற்காக வேலையை விட்டீர்கள்?’  என்று கேட்டேன்.

 

’50 வருடத்துக்கு முன்னர் அந்தச் சிறிய கிராமத்தில் வாழ்ந்ததை நான் யோசித்துப் பார்த்தேன். அந்த எளிய மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னால் என்றென்றைக்கும் மறக்கமுடியாதவை. அவர்களுடைய கலை 500 வருட பாரம்பரியம் கொண்டது. நான் அவர்களுக்கு திருப்பி என்ன செய்தேன்? என் குற்ற உணர்வு என்னை வதைத்தது. அண்ணன்மார் கதையை எப்படியும் அழியாமல் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடத்தவேண்டும் என்று தோன்றியது.’ ’எப்படி முடிவெடுத்தீர்கள்? திடீரென்றா?’

 

‘திடீரென்றுதான். அந்தக் கிராமத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு கிழவன் சாக்குப் பையை சுமந்துகொண்டு நடந்தான். கனமாக இருந்தது. திறந்து பார்த்தால் ஒரு கல் இருந்தது. அதை எறிந்துவிட்டு தொடர்ந்தான். மேலும் சிறிது தூரத்தில் மறுபடியும் பாரம் அழுத்தியது. மீண்டும் சாக்கை திறந்து பார்த்தான். இன்னொரு கல். அதையும் எடுத்து வீசிவிட்டு மறுபடியும் நடந்தான். இன்னொரு கல். இன்னொரு கல். இப்படி எறிய எறிய கல் முடியவே இல்லை. கடைசிக் கல்லை எடுத்து வீசிவிட்டு ஒரு மரத்தடியில் ஆறினான். புறப்படும்போது தற்செயலாக சாக்கை திறந்து பார்த்தவன் திடுக்கிட்டான். இன்னொரு கல். அப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது. எத்தனை கல்லை அவன் வீசினாலும் கல் அவனை விடுவதாயில்லை. நான் அண்ணன்மார் கதையை என் மனத்திலிருந்து எவ்வளவுதான் விரட்டினாலும் அது என்னை விடுவதாக இல்லை. அப்பொழுதுதான் முடிவெடுத்தேன் அன்றே பணி விலகும் கடிதத்தை கொடுத்தேன்.’

 

’இனி என்ன செய்வதாகத் தீர்மானம்?’ ’500 வருடங்கள் வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக ஒரு கிராமத்தில் தொடர்ந்த கதை சினிமா மற்றும் புதுத் தொழில் நுட்பம் வந்ததும் நின்றுவிட்டது. அந்த இரண்டு கதை சொல்லிகளுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. இன்று அவர்கள் இல்லை; அவர்களுடைய குரல் என்னிடம் இருக்கிறது. கதையும் இருக்கிறது. இதை உலகம் முழுக்க பரப்பவேண்டும். எண்மிய தொழில் நுட்பத்தால் இன்று இதுவெல்லாம் சாத்தியமாகிவிட்டது. மக்கள் மனதில் இந்த அற்புதமான கதை என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும்.’ 8400 மைல்களுக்கப்பால் உள்ள ஒரு சின்னக் கிராமத்தின் வாய்மொழிக் கலைச் செல்வத்தை உலகமுள்ளவரை பாதுகாக்கவேண்டும் என்பதில் அசைக்கமுடியாத உறுதியுடன் இருந்தார் இந்த ரொறொன்ரோப் பெண்.

 

20 வயது இளம் பெண்ணாக இவர்  மண்குதிரையை பிடித்துக்கொண்டு நின்ற கறுப்பு வெள்ளைப் படத்தை பார்த்தேன். கறுப்பு தலைமுடி. வெள்ளைச் சேலை. பழுப்பு நிற பிளவுஸ். தலைமுடி  வாரி இழுத்துப் பின்னி, பொட்டு வைத்துக்கொண்டு சற்றே கீழே பார்த்த கண்களுடன் நிற்கும் பெண். அந்தக் கண்களில் அளவில்லாத ஆர்வமும், துடிப்பும், நம்பிக்கையின் ஒளியும் இருந்தன.

""எனக்கு முன்னால் இருந்தவரைப் பார்த்தேன். முன்பு சிரிப்பு காணப்பட்ட இடத்திலெல்லாம் இப்போது சுருக்கம் இருந்தது. அங்கங்கே நரைத்துவிட்ட தலைமுடி மேலே இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. கறுப்பு கால்சட்டை, பழுப்பு மேலங்கி, சாம்பல் நிற கழுத்துச் சால்வை. ஆனால் அந்தக் கண்கள். கண்கள். அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஒளி மாறவே இல்லை.

 

END.

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta