போர்க்கப்பல்

 

அ.முத்துலிங்கம்

உணவு விசயத்தில் ஆச்சரியப்படக்கூடாது என்று பலவருடங்களுக்கு முன்னரே நான் முடிவு செய்திருந்தேன். வரலாற்று பிதாமகர் ஹெரொடோரஸ் ஒரு சம்பவம் சொல்கிறார். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாரசீக பேரரசன் டேரியஸ் தன் அவையில் பிரசன்னமாயிருந்த கிரேக்கர்களிடம் ஒரு கேள்வி கேட்டான். ’எவ்வளவு பணம் கொடுத்தால் இறந்த உங்கள் பெற்றோரை உண்பீர்கள்?’ அவர்கள் திகைத்துப்போய் ’எவ்வளவு கொடுத்தாலும் உண்ணமாட்டோம்’ என்றார்கள். அடுத்து Callatiae என்ற இந்திய இனக்குழுவிடம் மன்னர் கேட்டார். ’எவ்வளவு காசு கொடுத்தால் உங்கள் பெற்றோரின் சடலத்தை எரிப்பீர்கள்?’ அவர்கள் தலையை நிறுத்தாமல் ஆட்டி ’அந்தக் கொடுமையை ஒருபோதும் செய்ய மாட்டோம்’ என்று சொன்னார்கள். அவர்கள் வழக்கம் இறந்துபோன பெற்றோரை உண்பது.

 

பைபிளில் யாத்திராகமம் 17ம் அதிகாரத்தில் ஒரு சுவையான சம்பவம் சொல்லப்படுகிறது. எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரவேல் புத்திரர்கள் கனான் தேசத்தின் எல்லையை அடையும் வரைக்கும் வனாந்திரத்தில் அலைந்தார்கள். கர்த்தர் அவர்களுக்கு 40 ஆண்டுகள் தினமும் மாலையில் காடை இறைச்சியும் காலையில் மன்னா அப்பத்தையும் வானிலிருந்து பெய்யச் செய்தார். மன்னா என்பது கொத்துமல்லி அளவாயும் வெண்மை நிறமாயும் அதன் ருசி தேனிட்ட பணியாரத்துக்குச் சமமாயும் இருந்தது.

 

மன்னா என்ற அப்பம் வேறு ஒன்றுமில்லை. கொக்கிடே (coccidae) என்று அழைக்கப்படும் பூச்சியின் கழிவுப் பொருள்தான். இது மரங்களின் சத்தை உறிஞ்சி சாப்பிடும். தன் உடல் எடையைவிட பன் மடங்கு எடை கழிவை தினமும் உற்பத்திசெய்து காற்றிலே விடும். நாற்பது வருடங்கள் இஸ்ரவேல் புத்திரர்கள் மன்னா அப்பத்தை சாப்பிட்டுத்தான் உயிர் வாழ்ந்தார்கள். இன்றைக்கும் வானாந்திர நாடோடிகள் மன்னா சாப்பிடுவதை அவதானிக்கலாம்.

 

நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது  மழைக்காலங்களில் ஈசலைப் பொறுக்கி வறுத்து அவர்கள் உண்பதை பார்த்திருக்கிறேன். ஈசலை மோரில் கலந்து உண்டதாக சங்கப்பாடல்கள் சொல்கின்றன. நான் கனடா வந்த பின்னர் இங்கே சந்தித்த ஒரு கொரிய நண்பரிடம் அவர் நாட்டிலே அதிகம் விரும்பி உண்ணப்படும் வித்தியாசமான உணவு என்னவென்று கேட்டேன். அவர் ’ஒக்டோபஸ்’ என்றார். ’அதிலே என்ன ஆச்சரியம். அதுவும் கணவாயைப் போலத்தானே’ என்றேன். அவர் சொன்னார் அதை உயிருடன் தின்பதாக. ’அது நகர்ந்துகொண்டே இருக்கும். பிளேட்டைவிட்டு அது ஓட முன்னர் அதைச் சாப்பிட்டுவிடவேண்டும்’ என்றார்.

 

வருடா வருடம் ஓவியம் வரைவதற்காக கோடைக் காலங்களில் கனடாவின் வடதுருவ வட்டத்திற்குள் போய்வரும் ஒருவர் சொன்னது. அங்கே வாழக்கூடிய இனூயிட் ஆதிவாசிகள் கிலியாக் என்ற உணவைச் சாப்பிடுவார்கள். சீல் என்னும் கடல்நாயை பிடித்து வெட்டி குடலை அகற்றிவிட்டு 500 ஒக் (auk) பறவைகளை அதன் உள்ளே திணிப்பார்கள். பின்னர் மண்ணுக்குள் ஆழமாக புதைத்து வைத்து, உடல் சிதிலமாகி புளிப்பு ஏற்படும்போது அதைக் கிண்டுயெடுத்து உண்பார்களாம்.

 

இப்படி பல ஆச்சரியமான உணவுப் பழக்கங்கள் உள்ளன. 1980 களில் புலம்பெயர்ந்து ஈழமக்கள் ரொறொன்ரோவில் குடியேறியபோது தமிழர் உணவகம் ஒன்றுகூடக் கிடையாது. இன்று அவர்கள் சனத்தொகை மூன்று லட்சம். தமிழ் உணவகங்கள் முப்பதுக்கும் மேலே. 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கை தமிழ் பிரதேசங்களில் என்னென்ன உணவு வகைகள் அகப்பட்டனவோ அத்தனையும் இங்கே உண்டு. கனடாவில், நான் வாழும் பகுதியில் பிரபலமானது ’அப்பொல்லோ’ உணவகம். இதன் உரிமையாளர் சூரியப்பிரகாசம். இவர் தன்னுடைய பத்து வயதிலேயே தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டதாகச் சொல்லுவார். பழைய காலத்து செய்முறையை பின்பற்றாமல் புதுப்புது உணவு வகையை உண்டாக்கி புதுப் பெயரும் சூட்டிவிடுவார். கலீலியோ நாலு சந்திரன்கள் வியாழன் கிரகத்தைச் சுற்றுவதை கண்டுபிடித்ததும் ஒரு புரவலரை அணுகி அவர் பெயரை சந்திரன்களுக்கு சூட்டுவதாகவும் தன்னுடைய ஆராய்ச்சிக்கு பணம் கொடுத்து உதவும்படியும் கேட்டிருக்கிறார். அதேபோல இவரும் வங்கிகளிடம் அவர்கள் பெயரை தன்னுடைய புதிய உணவுக்கு சூட்டுவதாகவும் கடன் தரும்படியும் கேட்டிருக்கிறார். அவர்கள் மறுத்து விட்டார்கள். ஓர் உணவுக்கு தன் மனைவி பெயரை சூட்டி ’கமலா நூடில்ஸ்’ என்று வெளியிட்டார். அதைப்பற்றி கேட்டபோது அதுவும் ஒருவித ‘கடன்காரிதான்’ என்று சொல்லி சமாளித்தார்.

 

இவருடைய சிந்தனை தனித்துவமானது. ’இறைச்சியை வாங்கி தடியால் அடித்து அதை மிருதுவாக்கக் கூடாது. வாங்கும்போதே இளம் இறைச்சியாக பார்த்து வாங்கவேண்டும்’ என தன் தொழில் ரகஸ்யத்தை சொல்வார். கடுமையான உழைப்பாளி. ’வாரமுடுமுறை இல்லையா?’ என்று கேட்டால் அவர் ‘வாரவிடுமுறை என்றால் என்ன?’ என்று கேட்பார். மற்ற உணவகங்களில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் இருக்கும். ஆனால் இவரிடம் இருப்பது வேறு ஒருவரிடமும் இராது. எல்லாம் புதுவகை. இவராக யோசித்து உருவாக்கியவை. ஒருமுறை கேட்டேன். ’மற்றவர்களிடம் இருப்பதுபோல உங்களிடம் 100 வகைகள் இல்லையே, ஏன்?’ அதற்கு அவர் சொன்னார். ‘100 வள்ளங்கள் இருந்தால் ஒரு போர்க்கப்பல் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மூடர்கள். போர்க்கப்பலை போர்க்கப்பலாகவே உருவாக்கவேண்டும். என்னுடையது போர்க்கப்பல்.’

 

கனடிய நண்பர் ஒருவர் கலப்பில்லாத ஈழத்து உணவு சாப்பிட வேண்டுமென்றார். அவர் இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், மலேசியா, தாய்லாந்து எல்லாம் பயணம் செய்தவர். மெய்யான உணவுக்கு ஆசைப்பட்டார். அது வேறு ஓர் நாட்டிலும் கிடைக்கக்கூடாது என்பது அவர் நிபந்தனை. உடனே நினைவு வந்தது சூரியப்பிரகாசம். ’வேறு யாருடைய புத்திமதியும் கேட்காமல் நீங்களாகக் கண்டுபிடித்த உணவு உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவருக்கு கேள்வி பிடிக்கவில்லை. ‘முட்டையிடம் கோழி புத்திமதி கேட்குமா? இங்கே இருப்பதெல்லாம் நான் கண்டுபிடித்தவை’ என்று சொல்லி புதிய உணவு ஒன்றை தந்து உதவினார். ஆறு அங்குலம் விட்டத்தில் வட்டமாகவும் ஓர் அங்குலம் தடிப்பாகவும் இருந்தது. கையிலே கதிரைவேற்பிள்ளை அகராதியை தூக்குவதுபோல கனத்தது.

 

’எப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டபோது ’இது பரம ரகஸ்யம். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்’ என்றார். ’இளம் ஆட்டு இறைச்சியை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி கடுகு, வெங்காயம் பச்சைமிளகாய், வெள்ளைப்பூடு, லீக்ஸ் போட்டு வதக்கி தனியாக வைத்துவிட்டு, கூனி றால் பொரித்து அதையும் ஒரு பக்கமாக வைக்க வேண்டும். முட்டை கலந்த பான்கேக் மா கரைத்து இரண்டு சின்னத் தோசை சுட்டு இறைச்சி வதக்கலையும் றால் பொரியலையும் ஒரு தோசையின் மேல் வைத்து மற்ற தோசையால் மூடவேண்டும். அதை மா கரைசலில் தோய்த்து ரஸ்க் தூள்கள் தூவி பொரித்து எடுத்தால் பொன் நிறத்தில் வரும்’ என்றார்.

 

அப்படியே அது பொன் நிறத்தில் இருந்தது. விருந்தாளி சுவைகளின் மன்னர். இலகுவாக அவரை ஏமாற்ற முடியாது. கத்தியும் கரண்டியுமாக போருக்கு ஆயத்தமாவதுபோல நிலையெடுத்து ஒரு துண்டு வெட்டி வாய்க்குள் வைத்து சுவைத்து விழுங்கினார். ’ஆஹா!’ என்று கதிரையை விட்டு வெளியே வந்து ஒரு துள்ளுத் துள்ளினார்.

 

’என்ன? என்ன?’ என்றேன்.

 

’முந்தி எப்போதும் சுவைக்காத சுவை. அதே அளவுக்கு காரம். சுவைகளில் இது ஓர் உச்சம். அது சரி, இதற்கு என்ன பெயர்?’ என்றார்.

 

ரொறொன்ரோவிலும், இன்னும் பல புலம்பெயர் நாடுகளிலும் வேகமாகப் பரவி வரும் இந்த உணவின் பெயரை நான் சட்டென்று சொல்ல விரும்பவில்லை. எங்கள் பழைய நினைவுகளை தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப் போகும் உணவு இது. யூதர்கள் 3400 வருடங்களுக்கு முன்னர் எகிப்திலிருந்து விரட்டப்பட்ட  நாளை நினைவுகூர்வதற்காக இன்றைக்கும் 7 நாட்கள் புளிக்காத அப்பம் உண்டு விரதம் காப்பதுபோல இதுவும் எதிர்காலத்தில் எங்கள் விரத உணவாக மாறலாம். அது அவருக்கு தெரியாது.

 

’அதன் வடிவம் என்ன? சொல்லுங்கள்’ என்றேன்

 

’வட்டம்’ என்றார்.

 

’ஊகியுங்கள்’ என்றேன். அவர் முடியவில்லை என்று தலையாட்டினார்.

 

’உணவின் பெயர் மிதிவெடி’ என்றேன். அவர் ஆவென்று வாயைப் பிளந்து அப்படியே ஒரு நிமிடம் வைத்துக்கொண்டார்.

 

’அப்படியா? ஏன் மிதிவெடி?’  என்றார்.

 

‘இப்பொழுது துள்ளினீர்களே.’

 

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta