ஒரு காலும், ஒரு கையும்
அ.முத்துலிங்கம்
ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது.
கடவுள் உலகத்தைப் படைத்த பின்னர் முதல் மனிதனை சிருட்டித்தார். அவன் ஆதாம் என அறியப்பட்டான். ஏதேன் தோட்டத்தின் அழகை பருகியபடி அவன் காய் கனிகளைப் புசித்து உயிர் வாழ்ந்தான். கவலை என்பது என்னவென்று தெரியாத வாழ்க்கை எனினும் தனிமை அவனை வாட்டியது. அவனை படைத்த ஆண்டவனை அழைத்தான். அந்தக் காலங்களில் எல்லாம் ஆதாம் அழைத்தவுடன் கடவுள் பிரசன்னமாகிவிடுவார். காரணம் இந்தப் பூமியில் உயிர் வாழ்ந்த மனிதன் அவன் ஒருவன்தான். அவன் அழைக்காவிட்டால் கடவுளை அழைப்பதற்கு வேறு ஒருவருமே கிடையாது
கடவுள் தோன்றினார். ஆதாம் அவரைப் பார்த்து நடுநடுங்கவில்லை; ஓடி ஒளியவில்லை. ‘எனக்கு தனிமை தாங்கமுடியாமல் இருக்கிறது. ஒரு துணை வேண்டும்’ என்றான். கடவுள் சொன்னார், ‘உனக்கு ஒரு பெண் துணை தருகிறேன். அவள் உனக்கு அடிமைபோல சேவகம் செய்வாள். சமைப்பாள். வீடு வாசல் கூட்டுவாள். துவைப்பாள். பிள்ளைகளைப் பெற்று பராமரிப்பாள். ஓயாது உனக்கு பணிவிடை செய்வாள். நீ ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. அவளை ஆண்டுகொள்ளலாம். ஆனால் ஒரு விலையுண்டு.’ ’என்ன விலை?’ என்றான் ஆதாம். ‘நீ ஒரு கையும் ஒரு காலும் தரவேண்டும்’ என்றார் கடவுள். ஆண் யோசித்துவிட்டு ‘ஒரு விலா எலும்புக்கு என்ன தரமுடியுமோ அதைத் தாருங்கள்’ என்றான். அப்படி குறைக்கப்பட்ட விலையில் பலத்த குறைகளுடன் கிடைத்தவள்தான் பெண். இது எல்லோருக்கும் தெரியும்.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. It cost an arm and a leg. நிறைய செலவானது என்பது பொருள். இந்த தொடர் உருவானதற்கும் ஒரு கதையுண்டு. முந்திய காலத்தில், புகைப்படக் கருவிகள் வரமுன்னர், ஓவியர்கள் ராசாக்களையும் ராணிகளையும், பிரபுக்களையும், அவர்கள் மனைவிமார்களையும், வைப்பாட்டிகளையும் வரைந்தார்கள். படங்களை வரையமுன்னர் ஓவியர் கேட்பார். ’ஒரு காலா இரண்டு காலா?’ அதாவது படத்தில் ஒரு கால் தெரிய வேண்டுமா அல்லது இரண்டு காலும் தெரிய வேண்டுமா என்று. இரண்டு காலும் தெரிந்தால் இரண்டு மடங்கு கட்டணம். அதே மாதிரித்தான் கையும். இரண்டு காலும் இரண்டு கையும் தெரிவதுபோல வரைந்தால் கட்டணம் அதி உச்சத்திற்கு போய்விடும். அந்தக் காலத்து நெப்போலியனின் படங்களைப் பார்த்தால் புரியும். ஒரு கையும் ஒரு காலும் தெரிவதுபோலத்தான் படங்கள் அமைந்திருக்கும். சர்வ வல்லமை படைத்த ராணுவத் தளபதியும், பிரெஞ்சு சாம்ராஜ்யத்தின் பேரரசனுமான நெப்போலியனுக்கு என்ன பணக் கஷ்டம் என்பதுதான் புரியாத புதிர்.
சமீபத்தில் ரொறொன்ரோவில் எனக்கும் ஓவியம் சம்பந்தமான அனுபவம் ஒன்று கிட்டியது. ஓர் அறக்கட்டளை சார்பாக இளம் ஓவியர் ஒருவரை அணுகி படம் ஒன்று வரைந்து தரும்படி கேட்டேன். அவரும் சம்மதித்தார். இன்றைக்கு, நாளைக்கு, இன்றைக்கு, நாளைக்கு என்று ஒரு மாதத்துக்கு மேலாக இழுத்தடித்து படத்தை வரைந்து அனுப்பினார். அதன் பின்னர் நடந்ததுதான் ஆச்சரியமானது. தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்தியிலும் பணம் கேட்டு தொந்திரவு பண்ணினார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. உள்ளங்கையால் மறைக்கக்கூடிய படம் அது. ‘இது ஓர் அறக்கட்டளை. அவர்களிடம் பணம் இல்லை. கொஞ்சம் பெரிய மனதுடன் உதவலாமே’ என்றேன். அவர் சம்மதிக்கவில்லை. ‘எவ்வளவு?’ என்று கேட்டேன். அவர் 150 டொலர் என்று வாய்கூசாமல் சொன்னார். ‘எப்படி 150 டொலர்?’ என்றேன். ‘படத்திலே இரண்டு உருவங்கள் இருக்கின்றன. ஒன்றுக்கு 75 டொலர். இரண்டுக்கும் 150 டொலர்’ என்றார். ‘படத்திலே உள்ள பெண் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருந்தால்?’ ‘ அதற்கும் 75 டொலர். மொத்தமாக 225 டொலர் கட்டணமாகியிருக்கும்’ என்றார். ’ஒரு நாய்க்குட்டி இருந்தால்?’ ‘அதற்கும் தனியாக 75 டொலர்’ என்றார். ‘மரங்கள், ஆகாயம், சூரியன் இவைகளுக்கு என்ன கட்டணம்?’ என்றேன். ’அவை இலவசம்’ என்றார். எத்தனை பெரிய கருணை உள்ளம் என நான் வியக்கும்படி ஆயிற்று.
இளம் கலைஞர்களுக்கு அறிவை பணமாக்கிவிடவேண்டும் என்ற ஆவல் அதிகமாகியிருப்பதை சமீப காலங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. உழைப்புக்கு சன்மானம் தேவை என்பதில் ஒருவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஒரு தச்சு வேலைக்காரருக்கு எப்படி சம்பளம் கொடுப்பார்களோ அப்படியே ஓர் எழுத்தாளருக்கும், ஓவியக்காரருக்கும் சம்பளம் கொடுக்கவேண்டும். ஆனால் கொஞ்சம் தர்ம சிந்தையும் இருந்தால் நல்லது. ஒருவருடைய எழுத்தையோ சித்திரத்தையோ வைத்து லாபம் அடைந்திருக்கிறார்களா? அப்படியாயின் அந்த லாபத்தில் ஒரு பங்கு அவர்களுக்கு போய்ச் சேருவதுதான் முறை.
இன்று கூகிள் இலவசமாகக் கிடைக்கிறது. ஸ்கைப், யூட்யூப், விக்கிபீடியா எல்லாமே இலவசம். அகராதிகள் இலவசம். 20 வருடம் தொலைந்துபோன நண்பரை முகப்புத்தகத்தில் இலவசமாக தேடிக் கண்டுபிடிக்க முடிகிறது. அமெரிக்காவின் சல்மான் கான் நடத்தும் ’கான் அக்காடமி’ இன்று 26 மொழிகளில் இலவசமாக நடக்கிறது. 100 உயர் பல்கலைக் கழகங்கள் சேர்ந்தாலும் செய்ய முடியாத வேலையை கான் அக்கடாமி தனியாகச் செய்கிறது. 4000 பாட வீடியோக்கள் ஏற்றப்பட்டிருக்கின்றன. 24 கோடி பாடங்கள் இதுவரை நடத்தப்பட்டிருக்கின்றன. எல்லாமே இலவசம். உலகின் எந்த மூலையில் இருந்தும் யாரும் படித்து பயனடையலாம்.
வைதேகி ஹேர்பர்ட் என்பவர் தன் நிரந்திர வேலையை துறந்துவிட்டு கடந்த சில வருடங்களாக தமிழ் இலக்கியத்துக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் 18 சங்க நூல்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதுதான் அவருடைய லட்சியம். 12 நூல்களை ஏற்கனவே மொழிபெயர்த்துவிட்டார், மீதி ஆறு நூல்களை 2014ம் ஆண்டு முடிவதற்கிடையில் மொழிபெயர்க்கப்போவதாக திட்டமிட்டிருக்கிறார். இவை எல்லாமே இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. ‘எதற்காக இலவசமாகச் செய்கிறீர்கள்’ என்று அவரிடமேயே கேட்டேன். அவர் சொன்னார் ‘அவை எங்களுக்கு 2000 வருடங்களாக இலவசமாகத்தானே கிடைத்துவந்தன.’
இலவசமாக தருபவர்களும் இருக்கிறார்கள். கையுக்கு ஒரு கட்டணம், காலுக்கு ஒரு கட்டணம், முகத்துக்கு ஒரு கட்டணம் என்று 19ம் நூற்றாண்டு ஓவியர் செய்ததுபோல அறவிடுபவர்களும் உள்ளனர். 2013ம் ஆண்டு பிறந்தபோது சில சங்கல்பங்கள் செய்தேன். இந்த வருடம் முகநூலில் 1000 like சேர்ப்பது. வீட்டுத் திறப்பை மூன்று தடைக்கு மேல் தொலைக்காமல் இருப்பது. கடன்களை ஒரு மாதம் முடிவதற்குள் தீர்ப்பது. எனக்கு படம் வரைந்து தந்த இளம் ஓவியரை இனியும் காக்கவைக்க முடியாது. என் வங்கியிலிருந்து பணம் கொடுக்க முடிவு செய்தேன். அவரை தொலைபேசியில் அழைத்து ‘செக்காக வேணுமா அல்லது விலா எலும்பாக வேணுமா?’ என்று கேட்டேன். ஏனென்றால் விலா எலும்பு மலிவு. என்னுடைய கேள்வியின் இரண்டாம் பகுதி அவருக்கு கேட்கவில்லை.
‘செக்காகவே அனுப்பிவிடுங்கள்’ என்றார்.
END