அம்மா, நீ வென்றுவிட்டாய்

அம்மா, நீ வென்றுவிட்டாய்.

 

""

           

ஓர் எழுத்தாளரைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்ன தோன்றுகிறது? அதுதான் முக்கியம். அலிஸ் மன்றோ பற்றி நினைத்துப் பார்த்தபோது அவருடைய கலகல சிரிப்பொலிதான் ஞாபகத்துக்கு வந்தது. பேசிவிட்டு சிரிப்பார் அல்லது சிரித்துவிட்டு பேசுவார். நான் சந்தித்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. குழந்தைப் பிள்ளைபோல சிரிப்பு. இன்று, 82 வது வயதில், 2013ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஓரு காலை நேரம் அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். கனடாவில் சந்தைக்காரர்கள் அதிகாலையிலேயே தங்கள் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். தொலைபேசியில் ’நீங்கள் இதை வாங்குங்கள். உங்களுக்கு மட்டும் 50 வீதம் கழிவு கிடைக்கும்’ என்று தொந்திரவு கொடுப்பார்கள். நான் அசட்டையாக டெலிபோனை எடுத்து ’என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். அப்பொழுது அவர் ’நான் அலிஸ் மன்றோ பேசுகிறேன்’ என்றார். அவர் வெளிநாடு போவதால் திரும்பி வந்ததும் எனக்கு ஒரு செவ்வி தருவதாக ஒப்புக்கொண்டார். அவருடைய தொலைபேசி எண்ணை தந்தபோது கிட்டத்தட்ட நேர்காணல் முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்தேன்.

 

அது எத்தனை தவறு. அவர் கொடுத்த கெடு தாண்டியதும் அவருடைய தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் விட்டேன். பதில் இல்லை. மறுபடியும் தகவல் விட்டேன் பதில் இல்லை. நான் விட்ட தகவல்கள் எல்லாம் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்தன. அவர் தகவல்களைக் கேட்பதில்லை என்ற விசயம் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. நேர்காணல் தள்ளிப்போனது. அந்தச் சமயம் அவருடைய கூட்டம் ஒன்று பற்றி பேப்பரில் விளம்பரம் வந்தது. 35 டொலர் நுழைவுக்கட்டணம் கொடுத்து அந்தக் கூட்டத்துக்கு போனேன். எப்படியும் அவரைச் சந்தித்து நேர்காணல் செய்யவேண்டும் என்பதே என் நோக்கம். ’ஒருநாளைக்கு ஒரு நன்மையாவது செய்யவேண்டும்.’ இது அவருடைய மந்திரம் என்பதைப் படித்திருந்தேன். கூட்டம் முடிந்ததும் அவருடைய மந்திரத்தை ஞாபகப் படுத்தியதும் உடனேயே சம்மதித்தார். அப்படியே அவருடைய நேர்காணலை அடுத்த நாள் டெலிபோன்மூலம் நடத்தி முடித்தேன்.

 

அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது அலிஸ் மன்றோ சொன்ன ஒரு விசயம் ஆச்சரியமூட்டியது. ‘எழுத்து எழுத்து என்று இவ்வளவு காலமும் ஓட்டிவிட்டேன். இனிமேல் எழுதுவதை நிறுத்தப்போகிறேன். என்னாலே என் அலுவல்களைக் கவனிக்க முடியவில்லை. அந்தந்த மருந்துகளை அந்தந்த நேரத்துக்கு எடுக்கவேண்டும். தேகப்பியாசம் செய்வது, வீட்டைத் துப்புரவாக்குவது, சமைப்பது, குப்பைகளை அகற்றுவது எல்லாமே பெரும் சுமையாகத் தெரிகிறது’ என்றார். என்னால் நம்பமுடியவில்லை. எழுத்தாளரால் எப்படி எழுதுவதை நிறுத்தமுடியும். எழுதுவதுதானே அவர் மூச்சு. நான் நினைத்தது சரிதான். எழுதுவதை நிறுத்தப்போகிறேன் என்ற உரைக்கு பின்னர் அவர் எழுதி மூன்று புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது.  ‘Dear Life’ என்ற தொகுப்புதான் தன்னுடைய கடைசி நூல் என்று அலிஸ் மன்றோ சொல்லியிருக்கிறார். அதை அவசரப்பட்டு நம்பக்கூடாது.

 

அவருக்கு  கிடைத்த பரிசுகளை பட்டியலிட்டால்அதுவேஒருபக்கத்துக்குமேலேவரும். ஆளுநர்பரிசைமூன்றுமுறையும், கனடாவின்அதிஉயர்இலக்கியப்பரிசானகில்லெர்விருதைஇரண்டுதடவையும்பெற்றவர். உலகஅளவில்பொதுநலநாடுகள்எழுத்தாளர்பரிசு,  ரில்லியம்புத்தகப்பரிசுஎன்றுஎல்லாவற்றையும்இவர்பார்த்துவிட்டார். இதுதவிர மான் புக்கர் சர்வதேச விருது 2009ம் ஆண்டு கிடைத்தது. இப்பொழுது இலக்கியத்தின் அதி உச்சமான நோபல் பரிசும் கிடைத்துவிட்டது. கடந்த பத்து வருடங்களாக எதிர்பார்த்த விருது இது.  இலக்கியத்துக்காக கனடிய எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்த முதல் நோபல் பரிசு. ( ஸோல் பெல்லோவுக்கும் இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் அவர் கனடாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர்.) இலக்கியத்துக்காக நோபல் பரிசுபெற்ற 13வதுபெண் எழுத்தாளர்.    இவர் புதுமைப்பித்தனைப்போல, Jorge Luis Borges போல சிறுகதைகள் மட்டுமே முக்கியமாக எழுதியவர்.  நோபல் பரிசு அங்கீகாரம் சிறுகதை இலக்கியத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.

 

அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். ’உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது அழகான வசனங்களின் கீழே அடிக்கோடிடுவேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் ஓரிடத்தில் உங்கள் கதைகளில் அழகான வசனங்கள் வரும் இடங்களை வெட்டிவிடுவீர்கள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?’ அவர் சொன்னார். அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும் வசனம். அல்லது திரும்பத்திரும்ப மினுக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவற்றை நான் விரும்புவதில்லை. அகற்றிவிடுவேன். காரணம் ஒரு கதையை சொல்லும்போது அந்தக் கதைதான் முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகருடைய கவனத்தை கதையின் மையத்திலிருந்து திருப்பிவிடும். ஆனால், கதை முடிவை நோக்கிச் செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்கவேண்டும். அதை வரவேற்பேன். ஒரு வசனம் அது சொல்ல வந்ததிலும் பார்க்க கூடச்சொல்லவேண்டும். ஆனால் வன்னவேலை எனக்கு பிடிக்காது.’ அப்பொழுது நான் ‘நீங்கள் வெட்டியெறிந்த வசனங்களையெல்லாம் எனக்கு தரமுடியுமா?’ என்று கேட்டேன். அவர் பெரிதாக சத்தம்போட்டு சிரித்தார்.

 

’நோபல் பரிசு புனைவு இலக்கியத்துக்கு மட்டும்தானே கொடுக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியமானாதா?’ என்று அவரை ஒருதடவை கேட்டேன். அவர் சொன்னார். ’புனைவிலே கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செக்கோவை நான் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பேன். சமீபத்தில் டோல்ஸ்டோயுடைய ’போரும் சமாதானமும்’ நூலை மறுபடி படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இது ஒருதடவை படித்துவிட்டு மூடிவைக்கும் சமாச்சாரம் அல்ல. புனைவு படிப்பதுதான் என்னுடைய மூளைக்கு வேலை கொடுக்கிறது. மனநிலையை தளரவைக்க அபுனைவு படிக்கிறேன். ஆதிகாலத்தில் இருந்து இன்றுவரை மனிதன் புனைவு இலக்கியத்தில்தான் நாட்டம் செலுத்தியிருக்கிறான். தலைமுறை தலைமுறையாக புனைவுக் கதைகள்தான் சொல்லியிருக்கிறான். எந்த மொழியிலும் பழம்பெரும் இதிகாசங்கள் எல்லாம் புனைவுதானே.’

 

அலிஸ் மன்றோவுடைய சிறுகதைகள் மிக நீண்டவை. ஆகவே தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் சிறுகதைகள் அதிகம் படிக்க கிடைப்பதில்லை. அவர் என்னிடம் கேட்டார். ‘என்னுடைய சிறுகதைகளை உங்கள் மொழியில் மொழிபெயர்ப்பது சுலபமா?’ நான் சொன்னேன். ‘மிக எளிது. உங்கள் வசன அமைப்பு தமிழில் மொழிபெயர்ப்பதற்கு இலகுவானது. ஆனால் உங்கள் கதைகள் நீண்டுபோய் இருப்பதால் அவற்றை பிரசுரிப்பது கடினம். உங்கள் கதைகளின் நீளம் 70 பக்கம், எங்கள் சிறுபத்திரிகைகளின் முழு நீளம் 60 பக்கம்தான்’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார்.

 

நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்ட செய்தியை அவரிடம் தெரிவிப்பதற்கு நோபல் கமிட்டியின் செயலாளர் ஸ்வீடனில் இருந்து தொலைபேசியில் அவரை அழைத்தார். வழக்கம்போல அலிஸ் மன்றோ டெலிபோனை எடுக்கவில்லை. ஆகவே 1.2 மில்லியன் டொலர் நோபல் பரிசு விவரத்தை செயலாளர் தகவல் மெசினில் விட்டார். இது ஒன்றும் அறியாத அலிஸ் மன்றோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். நடு இரவு அவருடைய மகள் டெலிபோனில் அழைத்து. ’அம்மா, நீ வென்றுவிட்டாய்’ என்று கத்தியபோதுதான் அவருக்கு விசயம் தெரிந்தது.

 

நானும் செய்தி கிடைத்தபோது அலிஸ் மன்றோவை அழைத்து  தகவல் பெட்டியில் என் வாழ்த்தை தெரிவித்தேன். நோபல் கமிட்டி செயலாளர் விட்ட தகவலுக்கு மேல் என் தகவலும் காத்திருக்கும். எப்போதாவது ஒருநாள் அலிஸ் மன்றோ அதைக் கேட்பார்.

END

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta