இரண்டு சந்தோசங்கள்
இன்று எனக்கு இரண்டு சந்தோசங்கள். கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைக்கும் நாள் இது. அதாவது ஒரு மணி நேரத்தை மீண்டும் வாழலாம். மொத்தத்தில் எனக்கு இன்று 25 மணித்தியாலங்கள் கிடைக்கும். ஒரு வருடத்தில் ஒருமுறை மட்டுமே இப்படி நடக்கும். ஆகையால் நான் இந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.
இரண்டாவது சந்தோசம் நான் பெருமதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடம் விஷ்ணுபுரம் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அவருக்கும், இந்த விருதை வழங்கும் விஷ்ணுபுரம் இயக்கத்துக்கும் என் வாழ்த்துக்கள். கனடாவில் வதியும் நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து ‘இலங்கை எழுத்தாளருக்கு இந்தியாவில் விஷ்ணுபுரம் விருது கிடைத்திருக்கிறது’ என்றார். நான் ‘இலங்கை எழுத்தாளர் என்பதோ, மலையக எழுத்தாளர் என்பதோ அவர் மதிப்பை குறைப்பதாகும். அவர் இலங்கையில் பிறந்த தமிழ் எழுத்தாளர்’ என்று கூறினேன்.
தெளிவத்தை ஜோசப்பை ஒரேயொருமுறை அவர் கனடா வந்தபோது சந்தித்திருக்கிறேன். அவரைச் சந்தித்த முதல் இரண்டு நிமிடங்களில் பல வருடங்கள் பழகியதுபோல இருவரும் அன்னியோன்யமாகிவிட்டோம். மிகவும் நட்பாக பழகுவார். அவருடன் கதக் நடன நிகழ்ச்சி ஒன்று பார்க்கப்போனது நினைவுக்கு வருகிறது. அவர் பார்த்த முதல் கதக் நடனம் என்று அவர் சொன்னதாக ஞாபகம். அடுத்த நாள் ஓரு பூங்காவுக்கு போனோம். அங்கே பலவிதமான மரங்கள் செடிகள் பூக்கன்றுகள் இருந்தன. வெவ்வேறு நாடுகளிருந்து பல்வேறு விதமான மரங்கள் கொண்டுவந்து அங்கே நட்டு வளர்த்திருந்தார்கள்.. நூறு வருடத்துக்கு மேலே வயதான மரங்களும் இருந்தன. அதிலே ஒரு மரம் நிலத்திலே ஒருவிதமான நச்சுத் திரவத்தை பரப்பியது. அதற்கு கிட்டவாக வேறு எந்த மரமோ செடியோ முளைக்கமுடியாமல் அது பார்த்துக்கொண்டது. ‘மரங்களில்கூட சுயநலம் பிடித்த மரங்கள் இருக்கின்றனவே’ என்று சொல்லி அதிசயித்தார்.
எழுதவேண்டும் என்ற நெருப்பு அவருள்ளே எரிந்துகொண்டிருக்கும். அந்த வெறி, உக்கிரம் இல்லாவிட்டால் எழுத்தாளர் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பார். அவர் எழுதிய ஒரு சிறுகதையில் ஆண்நாய் ஒன்று பெண் நாயை ஆவேசத்தோடு தேடும். அந்த வீட்டு இரும்புக் கேட் எப்பவும் உயர்ந்துபோய் பூட்டியபடி இருக்கும். ஒருநாள் பக்கத்துவீட்டு பெண் நாய் கேட் வாசலுக்கு வந்துவிடும். ஆண்நாய் உக்கிரமான காமத்தால் உந்தப்பட்டு ஈட்டிக் கம்பிகள் உடலைத் துளைக்க கேட்டைப் பாய்ந்து கடக்கும்.
நல்ல இலக்கியப் படைப்புக்கு தேவை இப்படி உக்கிரமான வெறி. ஏற்கனவே வாழ்ந்து முடித்த மணி நேரத்தை திரும்பவும் ஆரம்பிப்பதுபோல தெளிவத்தையின் படைப்புகள் மீண்டும் தொடரட்டும். இலக்கியம் நிற்காமல் வந்துகொண்டே இருக்க என் வாழ்த்துக்கள்.
விஷ்ணுபுரம் விருது – 2013
தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.
தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்
இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ உழைக்கப் பிறந்தவர்கள் என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது மலையகச் சிறுகதை வரலாறு அவ்வகையில் முக்கியமான கொடை.
தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல்சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு .இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப்பதிப்பாக வெளியிடவிருக்கிறது.
தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்
1 காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)
*
பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும்.
இம்முறை விருதுத்தொகை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. ரூ ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும்.
தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார்.
மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு > வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார்.
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ,
இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் பேசுவார்கள்