மூன்று கடிதங்கள்
2010ம் ஆண்டு முடிவதற்கு இரண்டு நாள் இருந்தது. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் பாலு மகேந்திரா. அந்தப் பெரிய ஆளுமையிடம் இருந்து இதற்கு முன்னர் கடிதம் வந்தது கிடையாது. ஆகவே ஆச்சரியமாகவிருந்தது. நான் அவரைச் சந்தித்தது இல்லை. பேசியதில்லை. எழுதியதும் இல்லை. அந்த முதல் கடிதத்தை தொடர்ந்து மேலும் இரண்டு கடிதங்கள் வந்தன. இரண்டு ஆங்கிலத்திலும் ஒன்று தமிழிலும் இருந்தது. என்னுடைய சிறுகதை ஒன்றை படமாக்குவதற்கு சம்மதம் கேட்டு வந்த கடிதம். நான் உடனேயே அவருடைய கடிதங்களுக்கு சம்மதம் என்று பதில் அனுப்பினேன். அவருக்கு கணினி பயிற்சி இல்லாததால் வேறு யாரோ அவருக்கு தட்டச்சு செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆங்கிலக் கடிதத்தை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
டிசெம்பர் 30, 2010
அன்பான முத்து,
உடனுக்குடன் நீங்கள் எழுதிய பதிலுக்கு நன்றி. உங்களுடைய அக்கா தொகுப்பை வாசித்த நாளிலிருந்து நான் உங்கள் விசிறி. கம்புயூட்டரில் எனக்கு பரிச்சயம் இல்லையாதலால் நீங்கள் இணையத்தில் எழுதுவதை என்னால் படிக்க முடிவதில்லை. என்னுடைய மாணவன் ஒருவனுக்கு நீங்கள் எழுத்தின்மூலம் ஆதர்சமானவராக ஆகிவிட்டீர்கள். அவன்தான் இந்தக் கதையை என்னிடம் கொண்டுவந்தான். நான் அதை எப்போ படமாக்குவேனோ தெரியாது. ஆனால் நான் அதைச் செய்தே தீருவேன். அது நிச்சயம். எங்களுக்கிடையில் இப்போது தொடர்பு கிடைத்திருப்பதால் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் கடிதம் பரிமாறிக்கொள்ளலாம். சில காலத்துக்கு முன்னர் நீங்கள் நடிகை பத்மினியை பற்றி எழுதியது எழுத்தின் உச்சம் என்பேன். நான் அதை மிகவும் ரசித்தேன்.
பிரியமுடன்
பாலு
அக்டோபர் 6, 2011
அன்புள்ள முத்துலிங்கம்
உங்கள் கடிதத்துக்கு நன்றி. நீங்கள் ‘அது ஒரு கனாக்காலம்’ திரைப்படம் பார்த்தது மகிழ்ச்சியை தருகிறது. இது என்னுடைய படங்களில் சிறந்த ஒன்று. உங்களுக்கு அது பிடித்துப்போனதில் எனக்கு அதிமகிழ்ச்சிதான்.
முத்து, இப்பொழுதெல்லாம் நான் அதிகம் பயணம் செய்வதில்லை. சென்னையில் திரைப்படக் கல்லூரி ஒன்றை சிறிய அளவில் நடத்துகிறேன். ஏறக்குறைய குருகுலம் போலத்தான். 12 மாணவர்கள். அத்தனை பேரும் சினிமாவை என்னைப்போல ஒரு வெறியோடு நேசிப்பவர்கள். இதை முன்னரே நான் உத்தியோகபூர்வமில்லாமல் செய்திருந்தாலும் இப்போது ஆசிரியராக பணியாற்றுவது பெரும் மனநிறைவை தருகிறது. மிகவும் பிடித்திருக்கிறது. சமகால இலக்கியம், சிறுகதை, நாவல், கவிதை இங்கே கட்டாயம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். ஒருநாளைக்கு ஒரு சிறுகதை என்பது முக்கியம். அவர்கள் அதைப் படிப்பதுடன் புத்தகத்தை மூடிவிட்டு அதன் கதைச் சுருக்கத்தை எழுதவேண்டும். தமிழ் மொழியில்தான் வகுப்பு நடக்கும். ஆகவே இந்தச் சிறிய பள்ளிக்கூடம்தான் உலகின் முதல் தமிழ் சினிமா பயிற்சிக்கூடம்.
உங்கள் சிறுகதை பற்றி நான் இன்னும் தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அதை வைத்து ஒரு குறும்படம் விரைவில் எடுப்பேன். உங்கள் புதுப் படைப்புகள் பற்றி எனக்கு அறியத் தாருங்கள். உடம்பை கவனியுங்கள். நலமாக இருங்கள்
பாலு
பவித்ரா சிறுகதை படமாக்கப்பட்ட விபரம் கொண்ட உங்கள் கடிதம் வந்த சில மணி நேரங்களில் சொல்லி வைத்தாற்போல, படம் செய்த அந்த பையனே வந்தான். அவன் எனது மாணவனல்ல. பூனே திரைப்படக் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மாணவன். தனது படத்தின் பாதியும் கொண்டுவந்திருந்தான். நான் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் கதையை தழுவி நான் ஒரு படம் பண்ணும்வரை அதை பார்க்க மாட்டேன் என்று அந்தப் பையனிடம் சொல்லியிருக்கிறேன். உங்கள் கதையத் தழுவி நான் படம் பண்ணிப்பார்ப்பதில் உங்களுக்குச் சம்மதம் தானே ?
அன்புடன்
பாலு மகேந்திரா.
பாலு மகேந்திரா இறந்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள். நான் நம்பத் தயாரில்லை. அவர் எடுத்த உன்னதமான படங்கள் மூலம் அவர் இன்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது எல்லோருக்கும் தெரியும். அவர் வாக்குத் தவறுவதில்லை. இதுவும் எல்லோருக்கும் தெரியும். மூன்று வருடங்கள். மூன்று கடிதங்கள். மூன்று சம்மதங்கள். நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.