1964 இல் நான் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்பு ‘அக்கா’. ஐம்பது வருடங்கள் ஓடிக் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகுப்பை மீண்டும் கொண்டுவருகிறார் நற்றிணை பதிப்பகத்தை சேர்ந்த யுகன். அதற்கு நான் எழுதிய முன்னுரை.
திரும்பிப் பார்க்கவில்லை
சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். நான் அப்படியான கேள்வி ஒன்றுக்கு என்னைத் தயார் செய்யவில்லை. ஆகவே சற்று நேரம் திகைத்துப் போய்விட்டேன். அவர் கேட்ட கேள்வி இதுதான். ‘உங்களுக்கு சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன். அப்படியிருந்தால்கூட பாடப் புத்தகம் ஒன்றை நான் சொந்தமாக என் வாழ்நாளில் அனுபவித்ததும் கிடையாது.
முதலில் அண்ணருக்கு பாடப்புத்தகம் சொந்தமாக இருக்கும். அவருக்கு பிறகு அக்கா. அதற்கு பிறகு இன்னொரு அண்ணர். பிறகு மற்றுமொரு அண்ணர். இறுதியாக எனக்கு வந்து சேரும். மட்டை கிழிந்து, பல இடங்களில் ஒட்டுப்போட்டு, மூலைகள் சுருண்டு மடிந்து கிடக்கும். அவற்றை படித்துவிட்டு நான் தம்பிக்கு கொடுப்பேன். அதன்பின் அது தங்கையிடம் போய்ச்சேரும். ஆகவே நான் பாடப் புத்தகத்தை சொந்தம் கொண்டாட முடியாது. ஒருவருட காலம் ’கடன் வாங்கியது’ என்று வைத்துக்கொள்ளலாம்.
சிறுவயதில் அம்புலிமாமா, கல்கண்டு முதலியவற்றை இரவல் வாங்கி படித்தது உண்டு. அது பின்னர் கிராமம் முழுக்க சுற்றுக்கு போய்விடும். கொஞ்சம் பெரியவன் ஆனதும் கல்கி, ஆனந்த விகடன் தொடர்களை படிக்க ஆரம்பித்தேன். கொக்குவில் போன்ற சிறிய கிராமத்தில் வாசிகசாலைகூட கிடையாது. புத்தகங்களை கடன் வாங்கி படிக்கத்தான் முடியும். பல்கலைக் கழகத்தில் யாராவது நண்பர்களிடம் இரவல் வாங்கி இரவு இரவாக படித்துவிட்டு அடுத்தநாள் காலை திருப்பிவிடுவேன். பல்கலைக் கழக படிப்பு முடிந்தபிறகு வேறு படிப்பு தொடங்கியது. ஆகவே கையில் பணம் கிடையாது. ஒரு புத்தகத்தை வாங்கி சொந்தமாக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழக்கூட இல்லை.
எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கை பத்திரிகைகளிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964ல் இந்தியா சென்று எனது ’அக்கா’ சிறுகதை தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ’அக்கா’ சிறுகதை புத்தகம்தான். ஒன்றல்ல, பத்து புத்தகங்கள். ஆனால் அவை ஒவ்வொன்றாக மறைந்து இன்று என் கையில் ஒரேயொரு புத்தகம் மிஞ்சியிருக்கிறது. அதே அட்டை; அதே படம், அதே பழுப்பு நிற தாள், அதே மங்கிய எழுத்து.
பின்னாளில் Margaret Mitchell எழுதிய நூலை படித்தபோது நான் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்வேன். அவர்தான் உலகப் பிரபலம் பெற்ற Gone With the Wind நாவலை எழுதியவர். இந்த நாவலுக்கு அந்தக் காலத்திலேயே புலிட்ஸர் பரிசு கிடைத்தது. மார்கிரட் ஓர் அசுர வாசகி. கணவர் என்ன புத்தகம் கொண்டு வந்தாலும் அதை ஒருநாளில் வாசித்து முடித்துவிட்டு வேறு கேட்பார். ஒன்றிலும் அவருக்கு திருப்தியே வராது. அப்பொழுது ஒருநாள் கணவர் சொன்னார். ‘உனக்கு ஒரு நாவலும் பிடிக்கவில்லை. நீயாகவே ஒன்றை எழுதுவதுதானே.’ அப்படி எழுதியதுதான் அந்த நாவல். அவருக்கு பிடித்த நாவலை அவரே எழுதியது போலத்தான் ஒரு புத்தகத்தை சொந்தமாக்க எனக்கு கிடைத்த ஒரே வழி நானே ஒன்றை எழுதுவதுதான்.
ஓர் எழுத்தாளன் தான் எழுதியதை திரும்ப படிக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஒன்றில் பிரமிப்பு ஏற்படும். ’இதை நானா எழுதினேன்?’ மற்றது வெறுப்பு. ’இதையா நான் எழுதினேன்?’ இரண்டுமே ஆபத்தானது. பைபிளில் ஒரு கதை வரும். கர்த்தர் விசுவாசியான லோத்தைப் பார்த்துச் சொல்வார். ’இந்த ஊர் அழியப்போகிறது. உன் மனைவியின் கைகளையும் இரண்டு குமாரத்திகளின் கைகளையும் பிடித்துக்கொண்டு உன் ஜீவன் தப்ப ஓடிப்போ. பின்னிட்டுப் பாராதே.’ லோத்தின் மனைவி ஆர்வம் தாங்காமல் தான் வாழ்ந்து முடித்த ஊரை ஒருமுறை கடைசித் தடவையாக திரும்பிப் பார்த்தாள். அப்படியே உப்புத்தூண் ஆகிவிட்டாள்.
எழுத்தாளர்களுக்கும் இதே பிரச்சினைதான். சு.ரா சொல்வார் தான் எழுதி அச்சாகியதை திருப்பி படிப்பதே இல்லையென்று. அச்சாகும் முன்னர் எத்தனை தடவை என்றாலும் திருத்தி எழுதுவார் ஆனால் அச்சான பின்னர் படிப்பதே கிடையாது. அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. வெளியிட்டவுடனேயே அது வாசகர்களுக்கு சொந்தமாகிவிடுகிறது. எழுத்தாளர் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி ஒருமுறை ரயில் நிலையம் ஒன்றில் வுட்ஹவுஸ் எழுதிய புத்தகம் ஒன்றை படிப்பதற்காக வாங்கினார். ரயிலில் ஏறி இரண்டு பக்கம் படித்தவுடனேயே அது ஏற்கனவே தான் படித்து முடித்த புத்தகம் என்று தெரிந்தது. அவர் படித்த புத்தகத்தையே அவர் மறந்துவிட்டார். அத்தனை மலிவான எழுத்தாக அது இருந்தது. அப்போது கல்கி விசனப்பட்டார் தான் எழுதுவது குறைந்தது 50 வருட காலத்துக்காவது தாக்குப் பிடிக்குமா என்று. அந்தக் கவலை அனாவசியமானது. அவருடைய புத்தகங்கள் எத்தனையோ பதிப்புகள் கண்டுவிட்டன. இன்றும் இளம் தலைமுறையினர் அவரை படித்தபடியே இருக்கிறார்கள்.
சிறுகதைகள் எழுதுவது இலகுவானது என்ற தவறான அபிப்பிராயம்தான் பொதுவாக நிலவுகிறது. சிறுகதை எழுதும் காரியம் மிகவும் கடினமானது. ஒரு சிறுகதையை எழுதி முடிவுக்கு கொண்டுவர ஏறக்குறைய ஆறு வாரம் எடுக்கிறது. இதை எழுதும்போது கார்ல் இயக்னெம்மா என்ற அமெரிக்க எழுத்தாளர் எனக்கு 2009ல் எழுதிய கடிதம் என் முன்னே திறந்து கிடக்கிறது. இவர் பொஸ்டன் MIT யில் இயந்திரவியல் துறை விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவருடைய சிறுகதைகளை தேடித்தேடிப் படிப்பேன். சிறுகதை உருவத்துக்கு புதிய பரிமாணத்தை தந்த அவர் இப்படி கடிதத்தில் எழுதுகிறார். ‘எனக்கு ஒரு சிறுகதை எழுதி முடிக்க 4 மாதம் எடுக்கிறது. முதல் வரைவு முடிவதற்கு ஏறக்குறைய இரண்டு மாதம் ஆகும். பிறகு திருத்தத்துக்கு மேல் திருத்தமாக செய்து முடிக்க மேலும் இரண்டு மாதம் எடுக்கும். நான் மிக மிக மகிழ்ச்சியடைவது இந்த திருத்த வேலைகள் செய்யும்போதுதான்.’ அன்றும் சரி, இன்றும் சரி மிக நீண்ட காலம் எடுத்துத்தான் ஒரு சிறுகதையை எழுதமுடிகிறது. கால அவகாசம் நீளும்போதெல்லாம் நான் அவரை நினைத்துக்கொள்வேன்.
நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது அப்பாவின் கனவில் ஒரு வார்த்தை வந்தது. அருணகிரிநாதர் கனவில் முருகன் வந்து ‘முத்து’ என்ற வார்த்தையை எடுத்து கொடுத்ததும் அவர் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண’ என்று பாடத் தொடங்கிவிட்டார். என் அப்பாவின் கனவில் வந்த வார்த்தையும் ’முத்து’. அவரால் ஆகக்கூட செய்ய முடிந்தது நான் பிறந்தபோது ‘முத்துலிங்கம்’ என பெயர் சூட்டியதுதான். அவரவருக்கு அவரவர் உயரம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தப் படைப்பை பார்க்கும்போது கொஞ்சம் வியப்பு ஏற்படத்தான் செய்கிறது.
நான் கடந்து வந்த பாதை அளவு தூரம் இல்லை இனி நான் செல்ல வேண்டிய தூரம். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதிய ‘அக்கா’ சிறுகதை தொகுப்பு மீண்டும் வெளிவருகிறது. நற்றிணை பதிப்பகத்தின் யுகன் என்னிடம் தொடர்பு கொண்டு பதிப்பிக்கக் கேட்டார். அவருக்கு நன்றி. 50 வருட காலம் அந்தச் சிறுகதைகள் வாழ்ந்துவிட்டன என்ற திருப்தி இப்போது கிட்டியிருக்கிறது. எனினும் தொகுப்பை நான் மீண்டும் படித்தது கிடையாது. திரும்பிப் பார்க்கவில்லை. வாசகர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
அ.முத்துலிங்கம்
ரொறொன்ரோ, 26 ஜூன் 2014
Utterly indited content, thanks for entropy.
Great info and right to the point. I don’t know if this is truly the best place to ask but do you folks have any thoughts on where to get some professional writers? Thanks in advance 🙂