இலையுதிர் காலம்

 இலையுதிர் காலம்

அ.முத்துலிங்கம்

ஒவ்வொரு வருடமும் கனடாவில் 11ம் மாதம் 11ம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிட நேரம் மௌனம் அனுட்டிக்கப்படும். முதலாம் உலகப் போர் 1918 நவம்பர் மாதம் காலை 11 மணிக்கு முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் நாள். அன்றுதான் போர் நாடுகளுக்கு இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. கனடாவில் அந்த இரண்டு நிமிடம் பஸ்கள் ஓடாது. கார்கள் ஓடாது. தெரு நிசப்தமாக இருக்கும். வீடுகளில் ரேடியோக்களும் டிவிக்களும் அணைக்கப்பட்டிருக்கும். கனடா முழுக்க மௌனத்தில் ஆழ்ந்திருக்கும். நான் வீட்டினுள்ளே என் பாடங்களை படித்துக்கொண்டிருந்தேன். பல்கலைக் கழகத்தில் முதல் வருடத்தில் சேர்ந்து 9 வாரங்கள் கடந்திருந்தன. ஏற்கனவே படித்த புத்தகங்களும், படிக்கவேண்டிய புத்தகங்களும் முன்னே குவிந்து கிடந்தன. அந்தப் பெரிய மௌனத்தை கலைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு முன் தோட்டத்தில் சத்தம் எழுந்தது. மிஸஸ் சூஸன் டி அல்மேடா ‘ஓ கடவுளே’ என்று கத்திக்கொண்டு கீழே விழுந்தார்.

 

அவர் அந்த வீட்டில் தனியாக வாழ்ந்தார். அவருடைய ஒரே மகன் 10,000 மைல் தூரத்தில் ஏதோ ஒரு கம்பனியில் ஆலோசகராக பணி புரிந்தார். நான் எட்டிப் பார்த்தபோது ராட்சதப் பறவை அடிபட்டுக்கிடப்பதுபோல புற்தரையில், நாலு கால்கள் மூன்று கைகளுடன் அறிவில்லாமல் கிடந்தார். தூயவெள்ளை ஆடை உடம்பில் தாறுமாறாக ஏறியிருந்தது.  டெலிபோனில் 911 அவசர உதவி நம்பரை நான் அழைத்தேன். மௌனம் அனுட்டிக்கும் நேரமாயிருந்தும் அவர்கள் அழைப்பை ஏற்றார்கள். இரண்டு நிமிடத்தில் அம்புலன்ஸ் வந்து சூஸனை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் சென்றது. நான் அவருடைய மகனுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பிவிட்டு மறுபடியும் விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.

 

அன்று காலைதான் சூஸன் வீட்டு முன் தோட்டத்தை கூட்டி உதிர்ந்திருக்கும் இலைகளை அள்ளி நாலு பெரிய கடுதாசிப் பைகளில் நிரப்பியிருந்தேன்.  அதற்கு முதல் நாள் அவருடைய பின் தோட்டத்தை சுத்தம் செய்திருந்தேன். இலைகள் உதிர்ப்பது ஓரளவுக்கு முடிந்துவிட்டது. கம்பளி ஆடையால் தன்னை சுற்றிக்கட்டிக்கொண்டு வாசலில் நின்று ஆகாயத்தை கூர்ந்து பார்த்தார். பின்னர் மேற்பார்வையாளர் குரலில் சூஸன் எனக்கு உத்தரவுகள் பிறப்பிக்க தொடங்கினார். எந்த நேரமும் பனி கொட்ட ஆரம்பிக்கலாம். அவர் வீட்டுப் பனி தள்ளுவதும் நான்தான். 70 வயது சூஸனால் அதை எல்லாம் செய்ய முடியாது. மாத முடிவில் கணக்குப் பார்த்து எனக்கு சம்பளம் தருவார். கோபமானவர் ஆனால் தாராளமானவர்.

 

அன்று மௌனம் அனுட்டிக்கும் வேளையில் எதற்காக முன் தோட்டத்துக்கு போனார் என்பது புதிராகவே இருந்தது. நான் குப்பையை பைகளிலே நிரப்பி ஏற்கனவே கட்டி வைத்திருந்தது அவருக்கு தெரியும். ஒழுங்காக வேலையை செய்தேனா என்பதை உறுதிப்படுத்த நினைத்திருப்பாரோ தெரியவில்லை. ஒன்றிரண்டு இலைகள் உதிர்ந்திருந்தால் அவருடைய முகபாவம் விதம் விதமாக மாறியிருக்கும். அவற்றைச் சேகரித்து மறுபடியும் பையில் நுழைத்துவிடுவார். அவருக்கு எல்லாமே சுத்தமாக இருக்கவேண்டும். நாலு அறைகள் உள்ள பெரிய வீடு அது. நில அறைகளில் அலங்காரப் பொருட்கள் நிறைந்திருக்கும். படுக்கை அறை, குளியல் அறை, இருக்கும் அறை, சமையல் அறைகளைப் பார்க்கும்போது ஐந்து நட்சத்திர ஹொட்டல் நினைவுக்கு வரும். ஒரு கடுமையான மேலதிகாரி அவரை மேற்பார்வை செய்வதுபோல 5 நிமிடத்துக்கு ஒருமுறை வீட்டை துப்புரவாக்குவார். தூசியை பொறுக்கி கையிலே வைத்துப் பார்த்தபின்னர் குப்பை தொட்டியில் வீசுவார். பளிங்குபோல மினுங்கும் மேசையையும் கண்ணாடியையும் துடைப்பார்; பின் மீண்டும் துடைப்பார். நாற்காலியை மேலும் பலமானதாக்க ஐந்தாவது காலைப் பொருத்துவது போலத்தான். தூசி உறிஞ்சியால் கம்பளங்களை சுத்தப்படுத்துவார். கால் வைத்ததும் புதைந்து, கால் எடுத்ததும் மீண்டும் சமநிலை அடைய கம்பளம் அரை நிமிடம் எடுக்கும். திரைச் சீலைகள் மாதத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டு தூய வெண் நிறத்தில் மெலிதாக அசையும்.

 

சூஸன் படித்து பட்டம் பெற்ற பின்னர் காதல் திருமணம் செய்துகொண்டார். கணவரும் அவரும் சேர்ந்து ஆரம்பித்த காப்புறுதி முகவர் நிறுவனம் அமோகமாக வளர்ந்து லாபம் ஈட்டியது. மகன் படித்தது கணினி பொறியியல். பல நாடுகளில் ஆலோசகராக அலைந்தபடி இருக்கும் வேலை. இன்னும் மணமுடிக்கவில்லை.  கணவன் இறந்த பின்னர் சூஸன் கம்பனியை விற்றுவிட்டார். முழு நேர வேலையாக வீட்டை பராமரித்தார். காலை எழுந்ததுமே பாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிப்பார். மெட்டும் தெரியாது, சொற்களும் வராது ஆனாலும் பாடுவார். ’எதற்காக இத்தனை கடும் உழைப்பு? அவருக்கு யாராவது சலவைக்கல் சிலை வைக்கப் போகிறார்களா?’ என்று கேட்பேன். ’ம்’ என்பார், அவருடைய சிரிப்பு.

 

ஆஸ்பத்திரியிலிருந்து தாயை வீட்டுக்கு கொண்டு வந்தார் மகன். மருத்துவர் சொல்லிவிட்டார் இனிமேல் அவர் தனிமையில் இருப்பது அத்தனை விரும்பத்தக்கது அல்ல என்று. கடவுள் கொடுத்த முகம் அல்ல சூஸனுடையது; முற்றிலும் மாறிவிட்டது. வீட்டை விற்றுவிட மகன் முடிவெடுத்து அதை விற்பனைக்கு போட்டார். கார் ஏற்கனவே விற்றாகிவிட்டது. முதியோர் காப்பகம் ஒன்றில் தாயாரை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். உச்சமான பணக்காரர்கள் மட்டுமே அங்கே தங்குவதற்கு அனுமதி பெறலாம். அங்கே இடம் கிடைப்பதற்காக காத்திருப்போரின் பட்டியல் நீளமானது. காப்பகத்துக்கு பெரிய தொகை மகன் நன்கொடை வழங்கியதால் உடனேயே இடம் கிடைத்துவிட்டது. மகனுக்கு அவசர வேலை இருந்ததால் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்த பின்னர் அவர் மறுபடியும் பயணம் புறப்பட்டு போய்விட்டார்.

 

சூஸன் வீட்டுச் சாமான்களை அகற்ற நான் அவருக்கு உதவி செய்தேன். மகன் உத்தரவு போட்டிருந்தார். ஒரு பொருளும் இருக்கக்கூடாது. தானமாகக் கொடுத்துவிடுங்கள். அல்லது விற்று விடுங்கள். இரண்டும் முடியாவிட்டால் குப்பையில் எறியுங்கள். என் வாழ்க்கையில் இப்படி துயரமான ஒன்றை நான் காணவில்லை. புத்தகங்கள் மாத்திரம் 2000 இருந்தன. அத்தனையையும் நூலகத்துக்கு சூஸன் தானம் செய்தார். இரண்டு பக்கமும் நிரையாக ஓட்டை விழுந்த தாள்களில் கம்பனி அறிக்கைகள் கட்டுக் கட்டாகக் கிடந்தன. அவற்றை எறியவேண்டி நேர்ந்தது. வீட்டினுள் அவர் வளர்த்த செடிகளையும், பூக்கன்றுகளையும் பலருக்கு இலவசமாகத் தந்தார். செடிகளை விட்டு அவரால் பிரியமுடியவில்லை. ஒவ்வொன்றையும் தடவி விடைகொடுத்தார். அடுத்து, சுவரிலே மாட்டியிருந்த குடும்ப படங்கள். அவற்றை அவர் எங்கே வைப்பார்? என்ன செய்வது? என்னைப் பார்த்தார். நான் கீழே பார்த்தேன். ஒரு படத்தைப் பார்த்து நான் திடுக்கிட்டேன். இளமையாக கவர்ச்சியாக சிரித்துக்கொண்டு நின்றார். மணமுடித்த புதிதில் எடுத்தது. ஒரு காலத்தில் அவரால் சிரிக்க முடிந்திருந்தது. வேறு வழியின்றி குப்பையிலே எறிந்தார். ஒரு முழு வாழ்க்கை நினைவிலிருந்து அழிந்தது. அந்த முதிய கண்களில் நீர் கசிந்தது.

 

பிரச்சினை என்னவென்றால் முதியோர் காப்பகத்தில் சொல்லிவிட்டார்கள், ஒரு சூட்கேசில் 20 கிலோ சாமான் மட்டுமே எடுத்துவரலாம் என. ஒரு உயர்தர ஹொட்டலில் கிடைக்கும் வசதிகள் அங்கே இருந்தன. உடைகள், மேலாடைகள், கம்பளிகள், காலணிகள், கையுறைகள், கண்ணாடி மருந்து ஆகியவையே அவருக்கு தேவைப்படும். மீதி எல்லாமே அங்கே கிடைக்கும். ஓர் அழகான அறை அத்துடன் தொடுத்த பாத்ரூம். இருக்கும் அறை, இளைப்பாறும் அறை என எல்லா வசதியும் இருந்தது. சூஸனுடைய வீடு ஏற்கனவே விற்பனையாகிவிட்டதால் புதிதாக வருபவர்கள் குடிவரத் தயாராக இருந்தனர். வீட்டு தளபாடங்கள், கம்பளங்கள், திரைச்சீலை போன்றவற்றை வீட்டோடு  சேர்த்து வாங்கிவிட்டார்கள்.

 

இன்றுதான் சூஸன் வீட்டைவிட்டு புறப்படும் நாள். முதியோர் காப்பகம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு வாகனத்தை அனுப்புவதாக சொல்லியிருந்தது. சூஸன் முன் அறை நாற்காலியில் தன் ஆடையை சற்று மேலே இழுத்துவிட்டு உட்கார்ந்தார். நான் பக்கத்தில் அமர்ந்தேன். அவர் போன பின்னர் அவர் இல்லாததை நான் பெரிதாக உணர்வேன். முழுநேர வேலைபோல நாற்காலியில் நிமிர்ந்து பொறுமையாக  அவர் காத்திருந்த காட்சியை என்னால்  பார்க்க முடியவில்லை. அவர் விரல்கள் நடுங்கின. கண்களில் அமைதி போய்விட்டது. ஏதோ சொல்ல விரும்பினார், ஆனால் சொல்ல முடியவில்லை. சூட்கேஸ் நிரப்பப்பட்டு பக்கத்தில் நின்றது. உட்கார்ந்திருந்த அவர் திடீரென்று எழும்பி நடந்தார். திரைச் சீலையை தொட்டுப் பார்த்தார். நீண்ட யன்னல் கண்ணாடி வழியாக பின் தோட்டத்து புல்தரையை பார்த்தார். அது பச்சை நிறம் மாறி பழுப்பாகிக்கொண்டு வந்தது. இருக்கும் அறையில் உள்ள நீண்ட கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைப் பார்த்தார். அதைத் தொட்டார். கைப்பையை திறந்து மென்தாள் ஒன்றை எடுத்து கண்ணாடியை துடைத்தார். என்னைப் பார்த்துச் சொன்னார். ’இந்த வீட்டில் நானும் கணவரும் 30 வருடங்கள் வாழ்ந்தோம். இந்த நிலைக்கண்ணாடிதான் மணமுடித்த பிறகு  நாங்கள் வாங்கிய முதல் பொருள். நானும் கணவரும் இது விற்ற கடைக்கு இரண்டு தரம் சென்று பேரம் பேசினோம். என் கணவர் அதை அன்று இரவே இதே இடத்தில் பொருத்தினார். அவர் தினமும் இதன் முன் நின்று தன்னை ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் அலுவலகம் போவார்.’

 

’உங்கள் மகன் இங்கேதான் பிறந்தாரா?’ ’ஆமாம். இந்த வீட்டை வாங்கிய இரண்டாம் வருடம் பிறந்தான். இடது பக்கத்தில் தெரிவது அவனது அறை. நீலக்கலரில் என் கணவர் எனக்குத் தெரியாமல் வண்ணம் பூசி அலங்காரம் செய்துவைத்தார். நான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தபோது அற்புதமான ஒரு புது அறை நீல நிறத்தில் தயாராக இருந்தது.  இந்தச் சுவர் முழுக்க மகனின் கிறுக்கல்கள் இருந்தன. நாங்கள் அவனை தடுக்கவில்லை. என் கணவர் அவனின் வெளிப்பாடு என்று சொன்னார். கணவர் இறந்த பின்னர் நான் அந்த அறையை மீண்டும் வர்ணம் பூசி புதிதாக்கினேன். என் கணவருடன் 40 வருடங்கள் வாழ்ந்தேன். என் மகனுடன் 20 வருடங்கள். என்னுடன் 70 வருடம் வாழ்ந்துவிட்டேன். அலுப்பாயிருக்கிறது.’ தலையை சாய்த்து தூரத்து சத்தத்தை கேட்பதுபோல கண்கள் மேலே போக யோசித்தார். பழைய எண்ணங்களில் அவர் மூழ்கிவிட்டார்.

 

சூஸனின் வயதை சொல்லவே முடியாது. கழுத்தில் கொஞ்சம் சுருக்கம் தொங்கியது. ஆனால் புத்தி கூர்மையாக வேலை செய்தது. சூட்கேஸ் மேலே ஒரு புத்தகம் இருந்தது. புத்தம் புதிது போல காணப்பட்ட 400 பக்க புத்தகம் அது. இதை மாத்திரம் அவர் நூலகத்துக்கு தானம் செய்யவில்லை. அது கட்டடக்கலை பற்றிய புத்தகம். திறந்து பார்த்தேன். யாராவது அன்பளிப்பு என்று எழுதி கையெழுத்து வைத்திருப்பார்களோ. அப்படி ஒன்றும் இல்லை. ’இது என்ன  புத்தகம்? கட்டடக்கலை பற்றி இனிமேல் படிக்கப் போகிறீர்களா?’ என்று கேட்டேன்.

 

’எனக்கு 20 வயது நடந்தபோது நான் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். கட்டடக்கலை நிபுணராகவேண்டும் என்பது பலவருடங்களுக்கு முன்னர் நான் எடுத்த முடிவு. அதற்கான புத்தகங்களை தேடினேன். புத்தகங்கள் அதிக விலையாக இருந்தன. அவற்றை வாங்கும் வசதி எனக்கு இல்லை. ஆகவே நூலகங்களில் இரவிரவாக  படித்து குறிப்புகள் எடுத்தேன். நான் ஏழ்மையான குடும்பத்திலிருந்து படிக்க வந்திருந்தேன். என்னுடைய படிப்புக்கு நானே காசு கட்டவேண்டும். அதற்காக பல்கலைக் கழகத்தில் நாள்கூலி வேலை பார்த்தேன். காசு போதாமல் வெளியே கோப்பிக் கடைகளில் வேலைசெய்து பணம் சம்பாதித்தேன். என்னுடைய சிநேகிதிகள் விருந்து, கேளிக்கை, சினிமா என்று வெளியே சுற்றும்போது நான் உணவகத்தில் கோப்பைகள் கழுவிக்கொண்டிருந்தேன்.

 

பேராசிரியர் ஒரு பெரிய புரொஜெக்டை என்னிடம் ஒப்படைத்தார். அதில் வெற்றி பெற்றால்தான் என்னுடைய கட்டடக்கலை படிப்பு உறுதியாகும். எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது. அப்பொழுது கட்டக்கலை சிந்தனையை முழுக்க மாற்றியமைத்த பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவரை நேர்காணல் செய்ய முடிவெடுத்தேன். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொலைபேசி எண் கிடைத்து அழைத்தபோது அது வேறு எங்கேயோ போனது. பின்னர்தான் எனக்கு விசயம் புரிந்தது. இந்தப் பேராசிரியர் ஹிப்பி கலாச்சாரத்தை சேர்ந்தவர். சிக்குப்பிடித்த தாடி. நகம் வெட்ட மாட்டார். குளிக்க மாட்டார். உடை மாற்ற மாட்டார். அவர் தூரத்தில் வரும்போதே நெடி தாங்கமுடியாமல் போகும். ஆனால் இவர் மாணவர்களுடன் நட்பாக இருந்தார். இவர் கற்பித்தது அமெரிக்காவில் அதி பிரபல்யமான பல்கலைக்கழகம் ஒன்றில். அதிகாரம் அவரைத் திருத்த முயன்றது. எச்சரிக்கை விடுத்தது. அவர் ஒன்றையும் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டது.

 

பேராசிரியருக்கு பின்னர் வேலை கிடைக்கவில்லை. அவருடைய விண்ணப்பம் போகுமுன்னர் அவர் பற்றிய சேதி அங்கே போய்விடும். வேலை இல்லாமல் வீதிவீதியாக அலைந்தார். ஒருநாள் அவரைத் தேடி கண்டுபிடித்துவிட்டேன். சற்று முன்னுக்கு தள்ளிய முகம். கடல் சிப்பிபோல வளைந்த முதுகு. பிரகாசமான கண்கள். சிரிக்கும்போது எல்லாப் பற்களாலும் சிரிப்பார். மோசமான ஒரு தெருவில் சின்ன அறையில் வசித்தார். ஒருநாள் முழுக்க அவரை நேர்காணல் செய்தேன். எதிர்பார்த்ததிலும் அதிகமான ஒத்துழைப்பு கொடுத்தார். நிறைய விவரங்களை தானாகவே தந்தார். கண்ணியமாக நடந்துகொண்டார். அற்புதமான மனுசர். பேட்டி முடிவில் அவர் என்னிடம் கேட்டார். நான் அப்படியே அதிர்ந்துபோய்விட்டேன். ‘எனக்கு பசியாயிருக்கு. என்னை ஓர் உணவகத்துக்கு அழைத்துப் போக முடியுமா?’ பிரச்சினை என்னவென்றால் நான் அவரிலும் பார்க்க கொடிய ஏழ்மையில் இருந்தேன். உணவகத்துக்கு அழைத்துச் செல்லும் வசதி எனக்கிருக்கவில்லை. ஆனால் இப்படி பதில் சொன்னேன். ‘உணவகச் சாப்பாடு மோசமாக இருக்கும். என் சமையல் அற்புதமானது. என் அறைக்கு வாருங்கள்.’

 

சொன்ன நேரத்துக்கு அவர் வந்தார். குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது. இரண்டு முன் பொத்தான்கள் இல்லாத பழைய ஓவர்கோட்டை அணிந்து,  கைகளால் தோளைக் கட்டிக்கொண்டு நின்றார். சப்பாத்துகள் பிய்ந்து கடைசி நிலையை எட்டியிருந்தன. ’ஒரு முழு வாத்தை நான் இப்போது சாப்பிடுவேன்’ என்றார். என்னிடம் கோழிக்குஞ்சுகூட இல்லை, ஆனால் முட்டை இருந்தது. அதிலே நல்ல ஓம்லெட் செய்தேன். பிரட், சீஸ், வால்நட் தூவிய ரொமெய்ன் சாலட், தக்காளி சூப் என்று பலவிதமான உணவு தயாரித்தேன். பியரை அப்படியே போத்தலுடன் கொடுத்தேன். உணவை திரும்பவும் மேசையில் இருந்து எடுத்துவிடுவேன் எனப் பயந்ததுபோல அவசரம் அவசரமாக சாப்பிட்டார். மூக்கையும் வாயையும் ஒரே சமயத்தில் கோப்பையினுள் நுழைத்து சூப்பை குடித்தார்.  அதி மகிழ்ச்சியில் காணப்பட்டார். நன்றி என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

 

கதை முடியவில்லை. ஒரு வாரம் கழிந்தது. தொலைபேசியில் என்னை அழைத்து ஓர் உதவி கேட்டார். ‘புத்தகக் கடைக்கு போய்ப்பார்க்க ஆவலாக இருக்கிறது. என்னை உள்ளே விடமாட்டார்கள். அழைத்துப் போகமுடியுமா?’ அன்று நான் மிகவும் பிசியாக இருந்தேன். எனினும் இந்தச் சின்ன உதவியை எப்படிச் செய்யாமல் இருக்க முடியும். புத்தகக் கடை வாசலுக்கு சென்றதும் என் பின்னாலிருந்து மெல்லத் தொட்டார். அவர் கைவிரல்கள் நடுங்குவதை உணரமுடிந்தது. குழந்தைப்பிள்ளை விளையாட்டுச் சாமான் கடைக்குள் நுழைந்ததுபோல ஆவலாக ஒவ்வொரு புத்தகத்தையும் தொட்டுப் பார்த்தார். சிலதை விரித்துப் படித்தார். இந்தப் புத்தகத்தை என் மாணவன் எழுதினான் என்று ஒன்றைக் காட்டினார். ஒவ்வொரு புத்தகத்தையும் தடவிய பின்னர் திரும்ப அதே இடத்தில் வைத்தார். ஒரு புத்தகமும் அவர் வாங்கவில்லை.

 

வெளியே வந்தோம். ’உங்கள் சுயசரிதையை எழுதுங்கள். உபயோகமாயிருக்கும்’ என்றேன். ‘என்ன பிரயோசனம்? ஒருவராலும் முழுதாக எழுதமுடியாது. கடைசி அத்தியாயம் விட்டுப் போய்விடும்’ என்றார். சிறிது தூரம் என் பக்கத்தில் நடந்தபின்னர் நடுவீதியில் சட்டென்று நின்றார். மழைபெய்து தண்ணீர் தேங்கி நின்றது. எனக்கு நன்றி சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அவருடைய பழைய ஓவர்கோட்டின் பைகளுக்குள் கையை நுழைத்து ஒரு புத்தகத்தை வெளியே எடுத்து என்னிடம் நீட்டினார். நான் ’என்ன? என்ன?’ என்று பதறியபடி பின்னுக்கு நகர்ந்தேன். கட்டடக் கலை பற்றிய முக்கியமான புத்தகம் அது. நூலகத்தில் இரவிரவாக நான் குறிப்பெடுத்தது இந்தப் புத்தகத்தில் இருந்துதான். ‘பரிசாகத் தருகிறேன். தயவுசெய்து ஏற்கவேண்டும்’ என்றார்.

 

’பரிசா? களவெடுத்தீர்களா?’

அவர் வளைந்துபோய், இரண்டு பொத்தான் இல்லாத ஓவர்கோட் விளிம்பை ஒரு கையாலும், மறு கையால் புத்தகத்தையும் பிடித்துக்கொண்டு, அசையாது நின்றார். அவருடைய பிம்பம் கீழே தண்ணீரில் ஆடியது.

’ஆமாம், உங்களுக்கு ஏதாவது தரவேண்டும். என்னிடம் ஒன்றுமில்லையே. பிளீஸ். மறுக்கவேண்டாம்’ என்றார்.

’நான் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டேன். இதுதான் அந்தப் புத்தகம்.’

’கட்டடக்கலை படித்தீர்களா?’

’இல்லையே. அதற்குப் பின்னர் என் மனம் மாறிவிட்டது. மனேஜ்மெண்ட் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மூளைக்குள் புகுந்துவிட்டது.’

’உங்கள் கணவர் ஞாபகமாக ஏதாவது இருக்கிறதா?’

’இல்லை.’

’உங்கள் மகன் ஞாபகமாக ஏதாவது எடுத்துப் போகிறீர்களா?’ ‘இல்லை.’

கார் வந்து வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது. சாரதி உள்ளே நுழைந்தார். பெரிய விருட்சம் ஒன்று சுருங்கிச் சுருங்கி மறுபடியும் விதையானதுபோல நாலு அறை, நிலவறை, மாடி கொண்ட பெரிய வீட்டு சாமான்களை சுருக்கி 20 கிலோவாக சூட்கேசில் அடைத்து வைத்திருந்தார். அது பக்கத்தில் ஓர் ஆள்போல இரண்டு சில்லுகளில் நின்றது.

 

சாரதி பெட்டியை இழுத்துக்கொண்டு முன்னே நடந்தார். சூஸன் இரண்டு கைகளையும் முன்னே நீட்டி ஒரு குழந்தையை ஏந்துவதுபோல புத்தகத்தை தூக்கிக்கொண்டு நடந்தார். நான் அவர் பின்னே நடந்தேன்.

 

END.

 

 

About the author

1 comment

  • அ முத்துலிங்கம் அவர்களின் இலையுதிர் காலம் சிறுகதை நிதர்சனமான யதார்த்தமான கதை.பரபரப்பான நவீன உலகில் மூப்பு எய்திய பெற்றோர் படும் ரணமான வலி.

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta