ஆதிப் பண்பு

            ஆதிப் பண்பு

               அ.முத்துலிங்கம் 

படுக்கை அறை வாசலில் இருந்து நடுக்கூடத்து ஆசனத்துக்கு தட்டுத்தடுமாறி நடந்து, இடையில் நாலுதரம் நின்று இளைப்பாறி, வந்து சேர்ந்த சார்லி அபேயசிங்க, என் நண்பனின் தகப்பன், அவருடைய 12 வயதில் ஒரு காட்டு யானையை தனியாக சுட்டு வீழ்த்தியவர். இதை எனக்குச் சொன்னது என்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்த ரோஹான், அவருடைய மகன். யானையை சார்லி சுட்டது நிக்கவெரட்டிய காட்டில். அந்தக் காடு எனக்கு பழக்கமானது. ஏனென்றால் நான் கொழும்பில் டொக்டராக பாஸ் பண்ணியதும் எனக்கு அரசாங்கம் தந்த முதல் வேலை நிக்கவெரட்டிய ஆஸ்பத்திரியில்தான். ஆகவே ரோஹான் சொன்னதை உடனேயே நம்பினேன். அங்கே என்னிடம் வந்த நோயாளிகளிலும் பார்க்க யானை அடித்து வந்தவர்களே அதிகம். யானையை கொன்றவர்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். யானை கொன்றவர்களையும் வெட்டி பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறேன்.

நிக்கவெரட்டியாவில் நடந்த ஒரு சம்பவம்தான் என்னை மேல்படிப்புக்காக நாட்டைவிட்டு விரட்டியது. ஒரு பிணம் காட்டினுள் கிடப்பதாக தகவல் வந்தது. காட்டினுள் சென்று பிணத்தை பரிசோதிக்கும்படி எனக்கு ஆணை கொழும்பிலிருந்து வந்தது. நானும் பொலீஸ்காரனும் பிணத்தை தேடி காட்டினுள்ளே சென்றோம். என்னுடைய வேலை பிணத்தை பரிசோதனை செய்வது மட்டுமே. வழக்கம்போல ’யானை அடித்து மரணம்’ என்று எழுதுவதற்கு தயாராக வந்திருந்தேன். சோதித்ததில் கழுத்திலே வெட்டுக்காயம் இருந்தது. இது கொலைதான், ஆனால் யானை அடித்து மரணம் என்று பொலீஸ் தீர்மானிக்கவேண்டும் என்பதற்காக பிணத்தை காட்டுக்குள் வீசியிருந்தார்கள். பொலீஸ்காரன் சொன்னான். ‘சேர் சேர், யானை அடித்து மரணம் என்று எழுதிவிடுங்கள் சேர். கொலைகாரனை பிடிக்க முடியாது சேர். நீங்களும் நானும் கோர்ட்டுக்கு அலையவேண்டும் சேர்.  இரவிரவாக நான் இந்தக் காட்டில் பிணத்துக்கு காவல் காக்கவேண்டும் சேர், பிளீஸ்.’

நான் இங்கிலாந்துக்குப் போய் மகப்பேறு மருத்துவத்தில் விசேட படிப்பு படித்தேன். என்னுடைய பெயருக்குப் பின்னால் MRCOG எழுத்துக்கள் சேர்ந்துகொண்டன. ஆனால் கொழும்பிலே எனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை. கனடாவில் இருந்து உடனே மருத்துவர் தேவை என்று கடிதம் வந்தபோது நான் கனடா வந்தேன். மருத்துவமனையை அப்போதுதான் புதிதாக கட்டி முடித்திருந்தார்கள். கனடா உலகத்திலேயே இரண்டாவது ஆகப் பெரிய தேசம் என்பதை நான் உணரவில்லை. அங்கே எந்தப் பகுதியில் வேலை என்ற சாதாரண கேள்வியைகூட நான் கேட்கத்தவறிவிட்டேன். எனக்கு கிடைத்தது நியூஃபவுண்லாண்ட். மிகவும் பின்தங்கிய பிரதேசம். அது ஒரு தீவு, அத்துடன் கனடாவின் பத்தாவது மாநிலம். இலங்கையிலும் பார்க்க 6 மடங்கு பெரியது.  பனிக்காலத்தில்  குளிர் -20,  -30  சென்ரிகிரேட் வரைக்கும் இறங்கும். ஆர்க்டிக் வட்டம்  800 கி.மீட்டர் தூரத்தில் இருந்ததால்  அங்கிருந்து காற்று வீசும்போது குளிர் -40க்கு இறங்கிவிடும். இதையெல்லாம் பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.

நியூஃபவுண்லாண்டின்  தலைநகரம் சென்ற்ஜோன்ஸ். அங்கேதான் ரோஹான் எஞ்சினியராக வேலைபார்த்தான். தற்செயலாக அவனைச் சந்தித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. உலகம் கவனிக்காத பனிப்பிரதேசத்தில் 10 வருடங்களுக்கு முன்னர் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த நண்பனைப் பார்ப்பது எத்தனை அபூர்வம். சார்லியிடம் நான் பல வருடங்களாக கேட்க நினைத்த கேள்வியை கேட்டேன். ’எப்படி 12 வயதில் உங்களால் யானையை சுட முடிந்தது?’ ’என் அப்பாவின் புத்திமதி இதுதான். உன் உயிரை உன் சம்மதமின்றி எதுவும் பறிக்கமுடியாது. பதற்றம் கூடாது. நம்பிக்கை இழக்காதே. நிதானம் மிகமிக அவசியம். வேட்டைக்கு போனபோது திடீரென்று ஓரு யானை என் முன்னே தோன்றியது. அப்பா சுடு என்றார். நான் சுட்டேன்.  யானையின் மண்டை ஓட்டில் ஒரு விசித்திரம் உண்டு. தந்தங்களுக்கு மேலே நெற்றிக்கு கீழே ஓர் ஓட்டையுண்டு. என் அதிர்ஷ்டம் நான் சுட்ட குண்டு ஓட்டைக்குள் நுழைந்து மூளையை துளைத்தது. யானை ஒரு நிமிடம் ஆடாது திகைத்து நின்று, பின்னர் பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. இப்பொழுதுகூட என் கனவுகளில் இந்தக் காட்சி அடிக்கடி வருகிறது’ என்றார்.

நான் நியூஃபவுண்லாண்டுக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடமாகிறது. மருத்துவமனை அனுபவம் வித்தியாசமானது. அங்கே வேலை செய்யும்போது எனக்கு  நிக்கவெரெட்டியா ஆஸ்பத்திரி நினைவுக்கு வரும். ஒருநாள் முழுக்க பயணித்து ஆட்கள் வருவார்கள். நிக்கவெரட்டியாவில் யானை அடித்து பிணங்கள் வருவதுபோல இங்கே அநேகமாக குளிரில் உறைந்துபோன பிணங்கள் வரும். அதைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்புவோம். குளிரில் அரைகுறையாக உறைந்துபோன உடல்களும் வரும். முதலில் தாக்கப்படுவது உடலின் நுனிப்பாகங்கள்தான். கைவிரல்களும் கால்விரல்களும் விறைத்து செயலற்றதாகிவிடும். அவற்றை உடனுக்குடன் அகற்றவேண்டி நேரும். முழுக் கால்களை இழந்தவர்களும் உண்டு.

எங்கள் நாட்டிலே மூட நம்பிக்கைகள் இருந்தன. அவைக்கு நான் பழகிவிட்டேன். ஆனால் ஒரு வெள்ளைக்கார நாட்டில் மூடநம்பிக்கைகளை நான் எதிர்பார்க்கவில்லை. மிஸஸ் ஜேஸனுக்கு நடுத்தர வயது. இரண்டு முறை அவர் கருத்தரித்து பாதியிலேயே கரு கலைந்துவிட்டது. மூன்றாவது தடவையாக என்னிடம் வந்திருந்தார். கிரமமாக அவரை சோதித்தேன். அவரும் எச்சரிக்கையாகவே இருந்தார். ஒரு முறை சோதித்தபோது குழந்தை அவர் வயிற்றிலே எக்கச்சக்கமாக பெருத்துப்போய் கிடந்தது. ஆபத்து, சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என்று அடுத்த நாளை குறித்துக் கொடுத்தேன். அந்தநேரம் அவர் தன் கையுறையை தவறுதலாக நழுவ விட்டுவிட்டார். உடனேயே மற்றக் கையுறையையும் கீழே எறிந்தார். ’இது கெட்ட சகுனம்.  இன்னொரு தேதி தரமுடியுமா?’ என்றார். கொடுத்தேன். அவர் சிசேரியனுக்கு வந்தபோது உள்ளே குழந்தை செத்துவிட்டது. அவர் மனம் உடைந்து அழுதார். தன் மூடத்தனத்தை எண்ணி எண்ணி வருந்தினார். அவருக்கு ஆறுதல் சொன்னேன். தயங்கித் தயங்கி நின்றார். பின்னர் ஓர் அலை திரும்புவதுபோல என்னையே பார்த்தபடி பின்னகர்ந்தார்.

சில மாதங்கள் கழித்து மறுபடியும் கருவுற்று மிஸஸ் ஜேஸன் வந்தார். ஒவ்வொரு மாதமும் பரிசோதித்தேன். மறுபடியும் குழந்தை பெரிதாக வளர்ந்துவிட்டது. இரண்டு நாள் கழித்து காலைநேரம் அவருக்கு சிசேரியன் செய்ய நாள் குறித்துக் கொடுத்தேன். அவர் உடனேயே சரி என்றார். கையுறையை அவர் கையிலே இறுக்கிப் பிடித்தபடி இருந்ததால் ஒருவித அசம்பாவிதமும் நேரவில்லை. எனக்கு தலைநகரில் வேலை இருந்தது. அதை முடித்துவிட்டு ரோஹானைச் சந்தித்தேன். அவன் ’ரம்யா எப்போது வருகிறார்?’ என்றான். ’அவளை நான் காதலிப்பது அவனுக்கு தெரியும். நான் கொழும்புபோய் அவளை அழைத்து வரவேண்டும். பனிக்காலம் முடிந்ததும் போகலாம் என்பது திட்டம்’ என்றேன்.

மதிய உணவை முடித்துவிட்டு கிளம்பியபோது ரோஹான் ’இன்றே புறப்படப் போகிறாயா?’ என்று கேட்டான். நான் ’ஆமாம்’ என்றேன். ’நீ ஒரு மூடனா?’ என்றான். ஏன் என்றேன். ’இன்று  மிகப்பெரிய பனிப்புயல் வீசப்போகிறது. காலநிலை அறிவிப்பாளர் டிவியில் சொல்லிக் கொண்டிருக்கிறாரே’ என்றான். ’எப்படி போகாமல் இருக்க முடியும்? மிஸஸ் ஜேஸனின் சிசேரியனுக்கு நாளை காலை எட்டு மணிக்கு நான் இருக்கவேண்டுமே’ என்றேன். ’முட்டாள். நீ போகாவிட்டால் என்ன நடக்கும்?’ ‘சேய் மாத்திரமல்ல, தாயும் இறக்கலாம். என் கடமை’ என்றேன். ‘சரி, கவனமாகப் போ. அங்கே போய்ச் சேர்ந்ததும் எனக்கு டெலிபோனில் தகவல் சொல்’ என்றான்.

என் எஞ்சிய வாழ்நாளில் நான் என்றென்றும் மறக்கமுடியாத இரவு தொடங்கியது. மிஸஸ் ஜேஸன் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘நீங்கள் கொழும்பில் படித்திருக்கிறீர்கள். லண்டனில் படித்து இருக்கிறீர்கள். கனடாவில் படித்து இருக்கிறீர்கள். உங்களிடம் மூன்று நாடுகளின் அறிவு உள்ளது. நீங்கள்தான் என்னுடைய சிசேரியனை செய்யவேண்டும்’ எப்படியும் நான் போய்ச் சேரவேண்டும். மருத்துவமனை மேரீஸ்டவுன் என்ற நகரத்தில் இருந்தது. சென்ற்ஜோன்ஸில் இருந்து அதன் தூரம் 300 கிலோ மீட்டர். சாதாரண நாளில் 5 மணி நேரத்தில் கடந்துவிடலாம். நீண்ட சாலை; போக்குவரத்து குறைவு, ஆகவே நிம்மதியாகக் காரை ஓட்டலாம். மாலை 6 மணிக்கு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று பட்டது. இரண்டு மணி நேரப் பயணம் ஒருவித பிரச்சினையும் இன்றி கழிந்தது. பின்னர் பனிப்புயல் ஆரம்பமானது.

ஆறுமாதம் முன்புதான் புதுக் கார் வாங்கியிருந்தேன். பனிக்கால டயர் பூட்டிய ஃபோர்ட் கிரவுண் விக்டோரியா. 1992 டிசெம்பர் மாதம். ஆரம்பத்திலேயிருந்து வானம் சாம்பல் நிறத்திலே இருந்தது. சூரியன் அங்கே இருப்பதற்கான அறிகுறியே கிடையாது. வாகனத்தின் வேகத்தை குறைத்தேன். நாலு மணி ஆனபோது பாதி தூரத்தை கடந்திருந்தேன். திரும்ப முடியாது என்றபடியால் எப்படியும் எச்சரிக்கையாக ஓட்டிச் செல்வது என்று முடிவு செய்தேன். ஏழு மணி ஆனபோது மீதி தூரம் 100 கி.மீட்டர் இருந்தது. இந்தப் பாதையில் லைட் கம்பங்கள் இல்லாததால் வழியெல்லாம் இருட்டாக இருக்கும். பனியோ கொத்துக் கொத்தாக கொட்டியது. பார்க்கும் இடம் எல்லாம் வெண்பனியால் நிறைந்திருந்தது. ஒரே பனிப்பாலைவனம் என்று சொல்லலாம். இதை கனடாவில் வைட்டவுட் (Whiteout) என்று சொல்வார்கள். வீடுகள் இல்லை. மரங்கள் இல்லை. வேறு வாகனங்கள் இல்லை. ஒரே தனிமைதான். கார் கண்ணாடி துடைப்பான் வேகமாக வேலை செய்தது. அப்படியும் பனி கொட்டியபடியே இருந்தது. எங்கே ரோட்டுப் போகிறது, எது என்னுடைய பக்கம், எது எதிர்ப்பக்கம் ஒன்றையுமே ஊகிக்க முடியவில்லை. கார் முகப்பு வெளிச்சம் பத்தடி தூரம் கூட பாயவில்லை.

காரிலே ஒரு ரேப் ஓடிக்கொண்டிருந்தது. கரகாட்டக்காரனில் வரும் பாடல். இளையராஜா இசை அமைத்து, அவரும் சித்ராவும் பாடியது. ’இந்த மான், உந்தன் சொந்த மான், பக்கம் வந்துதான் சிந்து பாடும்.’ பாடலை கேட்டு கொஞ்சம் உற்சாகம் பிறந்தது. ரம்யாவுக்கு மிகவும் பிடித்த பாடல். அவளும் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நல்லாய் இருக்கும். தண்ணீர் சூழ்வதுபோல என்னை அவள் சுற்றி அணைத்துக் கொள்வதை நினைத்தேன். பெரிய உதடுகளை நான் விரல்களால் பிடித்து இழுத்து விடும்போது அவை ரப்பர் போல ஆடும். இடையில் இருந்து தொங்குவதுபோல ஆரம்பித்த கால்களால் சேற்றிலே நடப்பதுபோல நடப்பாள். அவள் சாரி உடுப்பதும் ஒருவித அழகுதான். பார்த்திருக்கும்போதே அரை நிமிடத்தில் உடுத்தி முடிப்பாள். எஞ்சிய சேலையை உருட்டி வலக் கையிலே வைத்துக்கொண்டு இதை என்ன செய்வது என்பதுபோல யோசிப்பாள். பின்னர் சிறுமிகள் ரைட்டோ விளையாட்டில் கல் எறிவது போல தோளுக்கு மேலால் எறிந்துவிடுவாள். என்னுடன் காரிலே இப்போது ரம்யாவும், இளையராஜாவும், சித்ராவும் பயணம் செய்தார்கள்.  

ரோட்டைப் பிரிக்கும் மஞ்சள் கோடோ, வெள்ளைக் கோடோ தெரியவில்லை. ஒரு மைல் நீளமான குளம் ஒன்று அந்தப் பாதையில் கிடந்தது. இந்த நேரம் அது உறைந்து போயிருக்கும். ஒருவேளை கார் எதிர்வரும் பாதையில் போகிறதோ என்று  நினைப்பு வந்தது. அடுத்தகணம் கார் பள்ளத்தில் உருளத் தொடங்கியது. பத்து இருபது தடவை உருண்டு 50 அடி கீழே விழுந்து உறைந்துபோன குளத்தில் தலைகீழாகக் கிடந்தது. அத்தனை தரம் கார் புரண்டபோதும் எனக்கு நினைவு தப்பவே இல்லை. ரேப்பிலே ஓடிய பாட்டு தலை கீழாக ஒலித்து சடுதியாக நின்றது.  பனி தொடர்ந்து காரை மூடியது.

முதலில் மனதில் நினைவுக்கு வந்தது உறைந்துபோன உடல்களை அவர்கள் தள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போகும் காட்சி. என்னுடைய உடலைக் கண்டுபிடிப்பார்களா? எத்தனையாவது நாள் என் உடலை தள்ளிக்கொண்டு போவார்கள். பனி காரை மூடுவதற்கு எத்தனை மணி நேரம் பிடிக்கும். சிலவேளை ரோஹான் ஆஸ்பத்திரியை கூப்பிட்டு விசாரிக்கக்கூடும். தொலைபேசி இந்தப் புயலில் வேலை செய்யுமா? மிஸஸ் ஜேஸன் வந்து காத்திருப்பார். அவருடைய சிசேரியனை யார் செய்வார்கள்? ரம்யாவுக்கு அறிவிப்பார்களா? எத்தனை நாள் கழித்து தகவல் போகும். அனலைதீவில் பிறந்து, நிக்கவெரட்டிய காடுகளில் அலைந்து, லண்டனில் படித்து, மேரீஸ்டவுன் பியூரின்  மருத்துவமனையில் மகப்பேறு வைத்தியம் செய்யவந்த என் விதி இப்படி முடியவேண்டுமா? ஒருவித பேய் வேகத்தில் கார் சில்லுகளின் தடயத்தையும் என் வரலாற்றையும் பனிப்புயல் அழித்துக்கொண்டிருந்தது.

கதவை உடைத்து வெளியே வரமுடியாது. அது நெளிந்துபோய் கிடந்தது. உடலிலே எங்கேயாவது காயம் இருக்கிறதா என்று தடவிப் பார்த்தேன். கிடையாது. தலைகீழாக தொங்குவதை நேராக்க முடியுமா என்றால், அதுவும் முடியவில்லை. புவியீர்ப்பு மையம் நழுவியது. வெளியே போனால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும். உள்ளே இருப்பது பாதுகாப்பானது. என்னுடைய மருத்துவ அறிவைக்கொண்டு எத்தனை மணிநேரத்தில் சாவு வரும் என்று கணிக்க முயன்றேன். நாலு அடுக்கு உடை, தலையிலே தொப்பி, கையிலே கையுறை, காலிலே தடித்த காலுறையும், சப்பாத்தும், கழுத்தைச் சுற்றி கம்பளி ஸ்கார்ஃப். வெளியே -30 டிகிரி இருந்தது. உள்ளேயும் அதுதான். ஆர்க்டிக் காற்று அடிப்பதால் வெளியே சீக்கிரத்தில் -40 டிகிரி ஆகிவிடும்.

காரின் குளிர்நிலை ஒவ்வொரு நிமிடமும் ஒரு டிகிரி கீழே போய்க்கொண்டிருந்தது. முதலில் கை கால் விரல் நுனிகள் விறைக்கும். மூக்கு விறைக்கும். பின்னர் உடல் மரத்துப்போக ஆரம்பிக்கும். உதடுகள் காய்ந்து தன்பாட்டுக்கு துடித்தன. உணர்ச்சியே இல்லை. ’இந்த மான், உந்தன் சொந்தமான், பக்கம் வந்துதான், சிந்து பாடும்’ என்று பாடினேன். வேறு வார்த்தைகள்தான் வெளியே வந்தன. இதுவே என்னுடைய கடைசிப் பாட்டாக அமையலாம். மரணத்துக்கு முன்னர் நினைவுக்கு வருவது பனிக்குளிரில் இறந்தவர்களுடைய கதைகள்தான். ஒருவருடைய கைவிரல்கள் விறைத்தபோது அவர் வளர்த்த நாயை குத்தி கொன்று அதன்  வெதுவெதுப்பான ரத்தத்துக்குள் விரல்களை நுழைத்து தன்னை காப்பாற்றியிருக்கிறார். டைட்டானிக் மூழ்கிய இடத்தை 7 வருடங்களுக்கு முன்னர் கண்டு பிடித்தார்கள். சென்ற்ஜோன்ஸிலிருந்து அதன் தூரம் வெறும் 560 கி.மீட்டர்தான். அதிலே பயணித்தவர்களில் அநேகர் குளிரில் விறைத்துத்தான் இறந்துபோனார்கள்.  

12 வயதில் யானையை சுட்டு வீழ்த்திய சார்லி சொன்னது நினைவுக்கு வந்தது. உன் சம்மதமின்றி உயிர் பிரியாது. பதற்றம் ஆகாது. நிதானம் தவறக்கூடாது. நம்பிக்கையை இழக்காதே. எந்த நேரமும் மூளை குழம்பிப் போகலாம். அதற்கு முன்னர் சிந்தித்து செயல்படவேண்டும். நீ ஒரு டொக்டர், டொக்டர் போல யோசி. கண்ணாடி வழியாக ஒரு சதுர பிரதேசம் இருளில் தெரிந்தது. உடல் இப்படியே தொங்கும். பின்னர் விறைப்பு நிலை மெள்ள மெள்ள அதிகமாகி ரத்தம் உறையும். ஆழ்ந்த நித்திரை உன்னை அணைக்கும். மனித உடல் அனுபவிக்கும் அதியற்புத உறக்கமாக அது இருக்கும்.

கார் யன்னலில் டக்டக் என்று தட்டும் சத்தம் கேட்டது. முதலில் ஏற்பட்டது பயம்தான். காதை கூர்மையாக்கினேன். மறுபடியும் அதே சத்தம். தொங்கிய நிலையில் உடலை வளைத்து திரும்பி பார்த்தேன். ஓர் உருவம் அசைந்தது. கையிலே டோர்ச் வெளிச்சம் அங்குமிங்கும் ஆடியது. வெள்ளை மனித முகம். கறுப்பு உடை மேலே வெளிச்ச ஆடை தரித்திருந்தது. இந்த மனிதன் என்னை காப்பாற்ற வந்தவன் என்று தோன்றவே இல்லை. விரோதி என்றே நினைத்தேன். என்னைக் கண்டு விட்டான். உயிர் இருக்கிறதா என்று கூர்ந்து பார்த்தான். நான் டக் டக் டக் என்று மூன்றுதரம் கண்ணாடியில் தட்டினேன்.

ஒரு விரலை வாயில் குறுக்காக வைத்து சைகை செய்தான். என்னை பேசவேண்டாம் என்கிறான். கைகளை சுழற்றினான். என்னுடைய கார் கண்ணாடி மின்சார இயக்கத்தில் வேலை செய்வது அல்ல. கைப்பிடியை தேடினேன். தலைகீழாக தொங்கியதால் அது மேலே இருந்தது. அதைப்பிடித்து சுழற்றினேன். குளிர்காற்றும் பனித்திவலைகளும் வேகமாக உள்ளே அடித்தன. அந்த மனிதன் வலுவான தன் கைகளால் என்னை பிடித்து இழுத்தான். 50 அடி தூரம் என்னை மேலே இழுத்துச் சென்றான். சில இடங்களில் சறுக்க மறுபடியும் இழுத்தான். அவனுடைய வாகனம் பனிக்காலத்தில் ஓடக்கூடிய கனரக வண்டி. அது இயங்கிக் கொண்டிருந்தது. அதன் கதகதப்பு என்னைச் சூழ்ந்தது. பிளாஸ்கில் இருந்து கொஞ்சம் கோப்பி ஊற்றித் தந்தான். நான் அவனை மாட்டுக் கன்று அதன் தாயை பார்ப்பதுபோல பார்த்தேன். மறுபடியும் விரலை குறுக்காக வைத்து பேசவேண்டாம் என்றான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் என் உதடுகள் அசையக்கூடியதாக இருந்தன. ’மிக்க நன்றி’ என்றேன். அவர் பேசவே இல்லை. ’எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்?’ அவர் சொன்னார், ’நான் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தபோது கீழே காரிலிருந்து வெளிச்சம் தெரிந்தது. கார் தலைகீழாக தொங்கியதால் வெளிச்சம் மேல்நோக்கி அடித்தது. எனக்கு விபத்து என்று புரிந்துவிட்டது.’ ’ஆபத்தான பள்ளத்தில் இறங்கிவந்து என்னைக் காப்பாற்றவேண்டும் என்று எப்படி தோன்றியது?’ அவர் உடனே பேசவில்லை. நீண்டநேரம் யோசித்துவிட்டு நான் என்றென்றைக்கும் மறக்கமுடியாத பதிலைச் சொன்னார். ’இன்றும் பலர் அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் என்று நினைக்கிறார்கள். கொலம்பஸ் வருவதற்கு 500 வருடங்களுக்கு முன்னரே லெய்ஃப் எரிக்ஸன் என்ற நோர்வே நாட்டுக்காரன் அமெரிக்காவை கண்டுபிடித்ததும் அல்லாமல் குடியேற்றமும் செய்தான். அப்படிக் குடியேறிய 1000 வருடத்து சந்ததிச் சங்கிலியின் மீதி நாங்கள். தொடர்ந்து நாங்கள் உயிர் தரிக்க காரணம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதுதான். அது கடமை. நடுக்கடலில் கப்பல்கள் ஒன்றுக்கொன்று உதவுவதுபோல. அப்படித்தான் இங்கே உயிர் வாழமுடியும். ஒருவர் பள்ளத்திலே விழுந்து கிடக்க அதைப் பார்த்துக்கொண்டு நான் போக முடியாது. இது எங்கள் ஆதிப் பண்பு.’

’ஆதியில் குடியேறியவர்கள் பயங்கரமாக பனிகொட்டும் இந்தப் பிரதேசத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?’ ’ஐரோப்பாவில் இருந்து ஆகக் குறைந்த தூரத்தில் நியூஃபவுண்லாண்ட் இருக்கிறது. 3200 கி.மீட்டர் தூரம்தான். கடல் அடி கேபிள் இங்கிருந்துதான் அயர்லாந்துக்கு போடப்பட்டது. தெரியுமா, ஆப்பிரஹாம் லிங்கன் 1865ல் சுடப்பட்டு இறந்தபோது அந்தச் செய்தி ஐரோப்பாவுக்கு போய்ச்சேர 10 நாள் எடுத்தது. ஆனால் அடுத்த வருடம், 1866ல் செய்திகள் பத்து செக்கண்டிலே ஐரோப்பாவுக்கு போய்ச் சேர்ந்தன. காரணம் கடல் அடி கேபிள் போடப்பட்டுவிட்டது.’ 

என் இடம் வந்தது. நன்றி கூறி விடைபெற்றேன். அவருடைய முகம் இருட்டில் தெரியவில்லை. ’உங்கள் பெயரையாவது சொல்லுங்கள். நான் ஞாபகம் வைக்கவேண்டும்.’ ’என் பெயரை ஞாபகத்தில் வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த தீவின் ஆதிப் பண்பை நினைவில் இருத்துங்கள்’ என்றார். பின்னர் மறைந்துவிட்டார். அன்றிரவு எனக்கு நல்ல தூக்கம் கிடைத்தது. காலையில் ரம்யாவுக்கும் ரோஹானுக்கும் சேமமாக வந்து சேர்ந்ததை டெலிபோனில் சொன்னேன். விபத்து பற்றி மூச்சு விடவில்லை. மிஸஸ் ஜேஸன் சிசேரியனுக்கு தயாராக இருந்தார். 11.8 றாத்தல் எடையுள்ள சிசுவை வெளியே எடுத்தேன். ஆண் குழந்தை.

அன்று மாலை வழக்கம்போல வார்டைச் சுற்றிப் பார்த்தேன். மிஸச் ஜேஸனின் படுக்கை வந்தபோது என்னையறியாமல் நின்றேன். கையிலே இருந்த குழந்தையைப் பார்த்து அவர் கண்கள் சிரித்தன. அடக்க முடியாத மகிழ்ச்சியில் காணப்பட்டார். உணர்ச்சி வேகத்தில் வாயை திறந்து ஏதோவெல்லாம் பிதற்றினார். முன்னுக்கு நின்ற ஆண் ஒரு விரலை உதட்டில் குறுக்காக வைத்து ஒன்றும் பேசவேண்டாம் என ஆறுதல் படுத்தினார்.

END

 

 

  

About the author

4 comments

  • அன்பிற்கினிய அய்யா,
    ஆதிப் பண்பு கதை படித்து பரவசம் அடைந்தேன். எல்லா மனிதர்களுக்கும் ஆதிப் பண்பு இருக்கும்தானே? அதனை மனதிற்கொள்ள மறப்பதேன்? ஆதிப் பண்பை கைவிடாமல் இருந்தோமேயானால் போர் இல்லாத உலகம் படைக்கலாம் தானே! வன்முறைகளற்ற, பேதங்களற்ற சமூகம் உருவாக்கலாமே! தங்களின் படைப்புகள் மானுடத்தை ஓர் அங்ககுலம் அல்ல பல அங்குலங்கள் உயர்த்தும் அய்யா.
    அன்புடன்,
    விஜயகுமார்,

    • “ஆதிப் பண்பு கதை படித்து பரவசம் அடைந்தேன்”!
      Same feel!! What a story !! One of the best story I ever read!!

  • This story gives the feel of Christopher Nolan Movie!!
    “ஆதிப் பண்பு கதை படித்து பரவசம் அடைந்தேன்”!
    The best message to the World. “இது எங்கள் ஆதிப் பண்பு”.
    >> “முன்னுக்கு நின்ற ஆண் ஒரு விரலை உதட்டில் குறுக்காக வைத்து ஒன்றும் பேசவேண்டாம் என ஆறுதல் படுத்தினார்”. This line is the key line, that connects important “event” in the story!!

  • “நிக்கவெரட்டியா. London. நியூஃபவுண்லாண்டு. Whiteout.
    *)இந்த தீவின் ஆதிப் பண்பை நினைவில் இருத்துங்கள்.
    *) கையிலே இருந்த குழந்தையைப் பார்த்து அவர் கண்கள் சிரித்தன.
    *)முன்னுக்கு நின்ற ஆண் ஒரு விரலை உதட்டில் குறுக்காக வைத்து ஒன்றும் பேசவேண்டாம் என ஆறுதல் படுத்தினார்”.
    Reading and cherishing the best story again

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta