சிம்மாசனம்

         சிம்மாசனம்

 

                அ.முத்துலிங்கம்

 

தினமும் 5 நிமிடம் பிந்திவரும் சோமபாலாவுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். ஆறடி உயரமாக இருப்பான். அடிமரக்குத்திகளை  தோளிலே அனாயாசமாக தூக்கி எறிவதை கண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும்போது அவன் புஜத்தில் திரளும் தசைநார்கள் முறுகி உருண்டு பெருகி புஜத்தை உடைத்து வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தையூட்டும். கைகட்டி முன்னே நின்றான். ஆசனத்தில் உட்காரமாட்டான். அவன் கையில் பிடித்திருந்த அட்டையை நீட்டினான். ஐந்து நிமிடம் பிந்தி வந்ததால் வருகை நேரம் அட்டையில் சிவப்பாக அச்சடிக்கப்பட்டிருந்தது.

 

ஆயிரம் பேர் வேலைசெய்யும் அந்த தொழிற்சாலையில் 6 மாதம் முன்னர்தான் வருகை பதிவு மணிக்கூடுகள் இரண்டை நிறுவியிருந்தார்கள். தொழிலாளிகள்  நிரையாக வந்து தங்கள் தங்கள் அட்டைகளை மணிக்கூட்டில் செருகி  வருகை நேரத்தை பதிவுசெய்வார்கள். 5 நிமிடம் பிந்தி வந்தால் 15 நிமிடக் கூலி வெட்டப்படும். 15 நிமிடம் பிந்தி வந்தால் அரைமணி நேரக் கூலி. அரை மணி பிந்தி வந்தால் ஒரு மணிநேரக்கூலி. ஒரு மணி நேரம் பிந்தி வந்தால் தொழிலாளி அன்று உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். .

 

சோமபாலா தினமும் பிந்தி வந்ததால் என் முன்னே நின்றான். அந்த தொழிற்சாலை கொழும்பில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஜிந்தோட்ட என்னுமிடத்தில் இருந்தது. முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசம். அங்கே வேலை செய்தவர்களில் நான் ஒருவனே தமிழ் ஆள். நூறு சிங்கள வார்த்தைகளுக்கு மேலே எனக்கு பேசத் தெரியாது. நான் சொல்ல வேண்டியதை அந்த நூறு வார்த்தைகளுக்குள் சுருக்கி சொல்லிவிடவேண்டும். ’நீ பிந்தி வருவதால் உன் கூலியை வெட்டிவிடுகிறார்களே. வீட்டிலேயிருந்து ஐந்து நிமிடம் முந்தி புறப்பட்டால் போதுமே. என்ன பிரச்சினை?’  என்றேன். சோமபாலா குனிந்து பார்த்தபடியே நின்றான். ஏதோ பேசவிரும்பினான் ஆனால் அவனால் முடியவில்லை. அத்தனை பலசாலியான ஒருவன் என் முன்னே கூனிக்குறுகி நின்றது எனக்கே சங்கடமாக இருந்தது. ’சரி போ’ என்றதும் அவன் போனான். இன்னொரு தொழிலாளி கழுத்தை வளைத்து தலையை மட்டும் நீட்டிப் பார்த்தான். யாரோ பக்கவாட்டில் பிதுக்கி பிதுக்கி நேராக்கியதுபோல உயரமாகவிருந்தான். வருகை அட்டையுடன் உள்ளே நுழைந்தான்.

 

அரசாங்கத்துக்கு சொந்தமான அந்த ஒட்டுப்பலகை நிறுவனம் 20 வருடங்களாக இயங்கியது. தினமும் பெரிய பெரிய லொறிகளில் காட்டு மரங்கள் வந்து குவிந்தன. எந்த நேரமும் மரங்களின் மணம் அங்கே சூழ்ந்திருந்தது. பிரம்மாண்டமான மெசின்களில் மரங்கள் சுழல அவற்றை கூரிய கத்திகள் ஒரு பக்கத்தில் செதுக்க மறுபக்கத்தில் அவைகள் நீண்ட மரத்தாள்களாக விழுந்தன. இந்த இழைகளை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்து 3,5,7,9 மரத்தாள்கள் என ஒட்டி வெவ்வேறு தடிப்புகளில் பலகைகள் செய்யப்பட்டன. அவை வழுவழுப்பாகவும் லேசாகவும் இருக்கும். ஆனால் சாதாரண மரப்பலகைகளிலும் பார்க்க வலுவானவை. ஆகவே விற்பனை அமோகமாகவிருந்தது..

 

தொழிற்சாலையில் வேலை செய்தவர்களில் அதிகமாகப் படித்தவன் சோமபாலா. ஆனால் அவன்  மெசின்களில் வேலை செய்வதில்லை. மரங்களை தரம் பிரிக்கும் பகுதியிலோ மற்றும் மரங்களை மெசினுக்குள் செலுத்தும் பகுதிகளிலோ இல்லை. ஒட்டும்பகுதியிலும் மினுக்கும் பகுதியில்கூட அவனுக்கு வேலை கிடையாது. மரத்துண்டு கழிவுகளை கூட்டி அள்ளும் பகுதியில் வேலை செய்தான். ஆனால் அவனால் நூற்றுக்கு மேல் மரங்களை அடையாளம் காணமுடியும். அவற்றின் குணங்களும் உபயோகங்களும் அவனுக்கு மனப்பாடம். தச்சு வேலையின் நுட்பங்கள்  அறிந்தவன். அவனுடைய பரம்பரைத் தொழில் அது. ஆனாலும் அங்கே ஆகக் கடைநிலையில் எல்லோருடைய ஏளனத்தையும் சகித்துக்கொண்டு வேலை செய்தான். .

 

ஒருநாள் சோமபால அரைமணி நேரம் பிந்தி வந்ததால் அவனுடைய மேலாளர் அவனை மோசமாகத் திட்டினார். ’உன் கூலியைத்தான் தண்டனையாகப் பிடிக்கிறார்களே. எதற்காக அவர் உன்னைத் திட்டினார்?’ என்று கேட்டேன். ’நான் கின்னர சாதி. ஆகக் கீழான சாதி. அப்படித்தான் திட்டுவார்கள்’ என்றான். ’உனக்கு பழகிவிட்டதா?’ என்றேன். கிட்ட வந்து காதோடு தொழிற்சாலையின் பொது மேலாளர் என்ன சாதி தெரியுமா என்றான். எனக்குத் தெரியாது. என்றேன். தேவ சாதி என்றான். அப்படி என்றால்? எங்கள் பழைய அரசர்கள் எல்லாம் தேவ சாதி. ஆக உயர்ந்தது என்றான். பின்னர் இருபக்கமும் பார்த்துவிட்டு ’உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? எங்கள் பொதுமேலாளர் ஒரு சிம்மாசனம் செய்கிறார்’ என்றான். ’சிம்மாசனமா எதற்கு?’ ’உட்காரத்தான்.’ .

 

’பொது மேலாளருக்கு தன் முன்னோர்கள் அமர்ந்ததுபோல ஒரு சிம்மாசனத்தில் உட்காரவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. காட்டிலிருந்து வந்து இறங்கும். மரங்களில் சிறந்த மரங்களைத் தேர்ந்தெடுத்து நல்ல சிம்மாசனம் ஒன்றை உருவாக்கச் சொல்லி கட்டளையிட்டிருந்தார். அதற்காகத் தேர்வு செய்யப்பட்டவன் துணிந்து பொய் பேசுகிறவன். அவனை நம்ப முடியாது. அன்னாசிப் பழம் தலையில் விழுந்தது என்று கூசாமல் சொல்வான். அவனுக்கு தச்சுவேலையும் தெரியாது, சிற்ப வேலையும் தெரியாது. பல மரங்களைப் பாழாக்கிவிட்டான். சிம்மாசனத்தின் கால்கள் சிங்கத்தின் முன்னங்கால்கள்போல இருக்கவேண்டுமென்று பொது மேலாளர் சொல்லியிருந்தார். அவனால் கழுதைக் காலைக்கூட உருவாக்க முடியாது.’

 

’ஒன்றிரண்டு மரங்கள் பொதுமேலாளர் சார்பில் வீணானால் என்ன? பெரிய நட்டம் ஏற்பட்டுவிடுமா?’  ’நீங்களே இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் வீணாக்குவது சாதாரண மரங்கள் அல்ல. அபூர்வமான மரங்கள். முன்பு எங்களை ஆண்ட வெள்ளைக்காரர்கள் கலுமெதிரிய மரங்களை கப்பல் கப்பலாக இங்கிலாந்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். நூறு வயது மரங்களை அவர்கள் வெட்டியபோது அவற்றுக்கு ஈடாக புதிய மரங்களை நடவில்லை. இங்கிலாந்திலே இந்த மரங்களில் செய்த மேசைகளிலும் நாற்காலிகளிலும் அமர்ந்து உணவருந்துகிறார்கள். இப்படியான மரம் அவர்களுக்கு எங்கேயும் கிடைக்காது. அத்தனை வழுவழுப்பானது; வலுவானது. மினுக்கினால் அதில் முகம் பார்க்கலாம். அவர்கள் அழித்தது போதாதென்று வேலை தெரியாதவர்களும் அழிக்கிறார்கள். கலையம்சம் சிறிதும் இல்லாதவர்கள் மரம் வெட்டும் வேலையை செய்யலாம். மரத்தில் ஒன்றை உருவாக்கும் வேலையை செய்யக்கூடாது. மூளைக்குள் ஏதாவது இருந்தால்தான் அது கலையாக மரத்தில் வெளிப்படும்.’

 

சோமபால இத்தனை கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. ’என்ன மரம் சிம்மாசனத்துக்கு உகந்தது என்று நீ நினைக்கிறாய்?’ ’முன்பு ஒரு வெள்ளைக்கார கவர்னர் இருந்தான். அவன் பெயர் சேர் ரோபர்ட் பிரவுண்றிக். இவன் இங்கிலாந்துக்கு காலண்டர் மரங்களை கடத்திப் போய்விட்டான். அவன் வீட்டுக் கதவுகளைக்கூட இந்த வகை மரத்தில்தான் செய்தானாம். அதிலும் மோசமாகவல்லோ இப்பொழுது நடக்கிறது. மரக் கழிவுகளை தினமும் கூட்டி அள்ளும் வேலைசெய்யும் என்னால் இவர்கள் செய்யும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை.’ நான் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவே இல்லை. .

 

’மரங்களில் இத்தனை நேசம் வைத்திருக்கும் நீ எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தாய்?’ ’வேறு என்ன? மரப்பற்றுத்தான். ஒவ்வொருநாளும் என்னால் மரங்களுடன் வாழமுடிகிறது. அவற்றின் சரித்திரத்தை படிக்கிறேன். எத்தனை ரகங்கள். 60 அடி 70 அடி உயரமான மரங்கள். 20 அடி சுற்றளவான மரங்கள். 100 வயது வாழ்ந்த மரங்கள். ஆனால் இவை எல்லாம் அழிக்கப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இந்த வேலை எனக்கு பொருத்தமானது இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ ’நீ அநேக கேள்விகள் கேட்கிறாய்.’ ’கேள்விகள்தான் முக்கியம். பதில்கள் அல்ல. உலகம் முன்னேறுவது கேள்விகளால்தான்.’ ‘என்ன செய்யப் போகிறாய்?’’ ’எனக்கு என்னவோ. மரத்தை அழித்துக் கிடைக்கும் காசில் வாழ்வது பிடிக்கவே இல்லை. ஒருநாள் வேலையை விட்டுவிடுவேன்.’

 

என்னுடைய தட்டச்சு மெசினில் யூ, கே, எக்ஸ் போன்ற எழுத்துக்கள் அடித்தவுடன் அவை தாளுடன் ஒட்டிவிடும். அவற்றை விரல்களால் கிளப்பிவிடவேண்டும். அந்த எழுத்துகள் வராத வசனங்களாக உண்டாக்கி டைப் அடித்துக்கொண்டிருந்தேன். வேலை முடிந்த சமயம் வாசலில் நிழல் தட்டியது. சோமபாலாவைப் பார்த்து திடுக்கிட்டேன். முகம், முடி, கை, கால் எல்லாம் மரத்தூள் அப்பியிருந்தய்து. ஆளே மாறிவிட்டான். . ’உள்ளே வா’ என்றேன். குறுக்காக அறுத்த முழுப் பலகை ஒன்றை தலையிலே தூக்கி வந்திருந்தான். வட்டமான பலகையின் விளிம்புகளை இரண்டு கைகளை நீட்டினாலும் தொடமுடியாது. அதன் சுற்றளவு 20 அடி இருக்கும். மரத்தின் கனத்தில் அவன் புஜங்கள் முறுகி ஏறின. நிலத்தில் கிடத்திவிட்டு ’இது என்ன மரம் தெரியுமா?’ என்றான். ’தெரியாது’ என்றேன். ’போபாப். சிங்களத்திலும் தமிழிலும் இதன் பெயர் பெருக்கா மரம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த வகை மரம் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது. வளையங்களை எண்ணிப் பார்த்தால் வயது தெரியும். இந்த மரத்தின் வயது தெரியுமா? 400 வருடம்.  400 வயது மரத்தை வெட்டிவிட்டார்கள். இதைப்போல இன்னொரு மரம் கிடைக்க நாம் 400 வருடம் காத்திருக்க வேண்டும். இதோ இந்த நடுப்புள்ளி இருக்கிறதே இதுதான் இது தோன்றிய காலம். அரசன் விமலதர்மசூரியா ஆண்ட காலம். 400 வருடங்களுக்கு முன்னர் கண்டியை ஆண்டவன். கிறிஸ்தவ சமயத்திலிருந்து புத்த சமயத்துக்கு மாறியவன். பெரிய படையோடு வந்த போர்த்துக்கீசியரை தன் சிறிய படையை திரட்டி தந்திரத்தால் துவம்சன் செய்தவன். அவன் காலத்தில் தோன்றிய மரம் இது. இதோ இந்தப்புள்ளியில் இலங்கையின் கடைசி அரசன் சிறீ விக்கிரமராஜசிங்கன் வேலூர் சிறையில் இறந்தான். இந்தப் புள்ளியில் இலங்கை சுதந்திரம் அடைந்தது.’ இப்படியே சொல்லிக்கொண்டு போனான்.

 

’அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியுமா?’ ’முடியும். அத்துடன் இன்னும் ஒன்று. இந்த மரம் அரிதானது. கடைசிக் கணக்கெடுப்பில் 40 மரங்கள்தான் இருந்தன. அதிலே ஒன்றை இன்று வெட்டிவிட்டார்கள். அதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது. மரங்களை அழித்து வரும் காசில் வாழ்வது வெட்கமாயிருக்கிறது. நான் வேலையை விடப்போகிறேன்.’  ’நீ வேலையை விடமாட்டாய். மரங்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறாய். அவற்றின் அருகாமை உனக்கு தேவை.’

 

அவன் சொன்ன மாதிரி சோமபாலா வேலையை விட்டுவிட்டான் என்று நினைத்தேன். ஒருநாள் காலை வருகை அட்டையுடன் எனக்கு முன்னால் நின்றான். ’என்ன மறுபடியுமா?’ என்றேன். அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவன் அப்படிப் பேசியதே இல்லை. ’நான் என்ன குழந்தைப் பிள்ளையச? திருப்பித் திருப்பி சொல்லி என்ன பிரயோசனம். நான் பிந்தி வந்த காரணம் தெரியுமா? நானும் என் தகப்பனாரும்தான் வீட்டில். எனக்கு ஒருவித உதவியும் இல்லை. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் வெளியே போய் திரும்பிவர வழி தெரியாமல் தொலைந்துபோய் விடுகிறார். அவருக்கு மறதி வியாதி. நான் காலையில் அவரைக் கழுவி சாப்படு ஊட்டி கட்டிலில் படுக்கவைத்து, முழங்காலில் முத்தமிட்டுவிட்டு, கட்டிலோடு சேர்த்து அவரைக் கயிற்றினால் கட்டிவிட்டு வேலைக்கு வருகிறேன். சிலசமயம் கொஞ்சம் நேரம் பிந்திவிடுகிறது. நான் மாலை போய்த்தான் அவரை விடுதலை செய்கிறேன். மறுபடியும் அவரைக் கழுவி சாப்பாடு கொடுத்து முழங்காலில் முத்தமிட்டு அவரைத் தூங்கவைப்பேன். நான் பிந்தி வந்தால் தண்டனையாக கூலியை பிடித்துவிடுகிறீர்கள். இதிலே என்ன பெரிய நட்டம். நான் மெசின் வேலையா செய்கிறேன். எனக்கு கூட்டி அள்ளும் தொழில்தானே.’

 

அந்த நேரம் பார்த்து பிரியங்கா உள்ளே நுழைந்தாள். பொது மேலாளரின் காரியதரிசி. அங்கே வேலை செய்யும் ஒரே பெண். அவளுடைய உடை பழைய காலத்து ராணியின் ஆடைபோல காலையும் தாண்டி நீண்டிருந்ததால் நிலத்திலே அரைந்தது. சேற்றிலே நடப்பதுபோல காலைத் தூக்கி தூக்கி வைத்து நடந்தாள். நான் பாடுபட்டு அச்சடித்த தாளைத் திருப்பித் தந்தாள். யூவோ அல்லது கேயோ தாளில் பதியவில்லை என்று மனேஜர் சுட்டிக்காட்டியிருப்பார். ’டைப்ரைட்டர் பழுதுபட்டுக் கிடக்கிறது’ என்றேன். அவள் ஒன்றுமே பேசாமல் கண்களை எறிந்து கூரையை பார்த்து நாடகத்தனமாக சுழற்றிவிட்டுத் திரும்பினாள். நான் சோமபாலாவிடம் ‘இந்த பெண்ணை உனக்குப் பின்னால் அழைத்துக்கொண்டு போ. அவளுடைய ஆடை நீ கூட்டவேண்டியதை எல்லாம் கூட்டிவிடும்.’ என்றேன். சோமபாலா வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்து குனிந்து சிரித்தான். சிரிக்கும்போதுகூட அவன் புஜங்கள் திரண்டன.

 

அறை மகிழ்ச்சியால் நிரம்பியதும் நான் கேட்டேன். ‘உனக்கு உதவ யாருமே இல்லையா?’ ’நான் ஏன் மற்றவர்களிடம் உதவி கேட்கவேண்டும். இது என் கடமையல்லவா? ஒரு மரத்தின் நடுதான் அதன் பலம். வைரமாகவிருக்கும். மரத்தின் மூத்த பகுதியும் அதுதான். ஆனால் மரத்துக்கு வேண்டிய உணவை அதனால் கடத்த முடியாது. மரத்தின் பட்டைகள்தான் உணவை கடத்தும் வேலையை செய்கின்றன. அந்தப் பகுதி இளையது. மனிதர்களும் அதுபோலத்தான். முதியவர்கள் குடும்பத்தின் பலம். இளையவர்கள்தான் வேண்டிய உணவை சம்பாதிக்கவேண்டும்.’

 

அதன் பின்னர் அவன் இரவு வேலைக்குச் மாறிவிட்டதாகச் சொன்னார்கள். அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் குறைந்துபோனது. ஒருநாள் இரவு வேளையின்போது லொறியில் வந்த மரங்கள் கட்டு அறுந்து விழுந்து உருளத்தொடங்கின. பள்ளத்தில் அவை வேகம் பிடித்து ஓடியதை சோமபாலா கண்டான். அங்கே வேலைசெய்த ஆட்கள்மீது மரம் ஏறினால் ஒன்றிரண்டு பேர் சாவது நிச்சயம். சோமபாலா பாய்ந்து வந்து மரக்குத்தி ஒன்றை குறுக்காகத் தூக்கி எறிந்து விபத்தை தவிர்த்துவிட்டான். அடுத்தநாள் காலை அதுவே பேச்சாக இருந்தது. .

 

அந்த வருசம் தொழிற்சாலை நடாத்தும் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அவனுக்கு பரிசு கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆட்களின் உயிரை அல்லவா காப்பாற்றியிருந்தான். ஆனால் ஒரு பரிசும் கிடைக்கவில்லை. பொது மேலாளர் என்ன பேசினார் என்ற வதந்தி வெளியே உலாவியது. அவர் சொன்னாராம் ’அவனுக்கு பரிசு கொடுப்பதிலும் பார்க்க ஒரு தமிழனுக்கு கொடுக்கலாம்’ என்று. ’நீ பரிசு எதிர்பார்த்தாயா?’ என்று கேட்டேன். அவன் சொன்னான் ’மரம் உருளத் தொடங்கியபோது நான் ஓடிப்போய் நிறுத்தினேன். அந்த நேரம் பரிசு கிடைக்குமா என்றெல்லாம் யோசித்தது கிடையாது. அவர் அவருக்கு என்ன எழுதி வைத்திருக்கிறதோ அது அதுதான் நடக்கும்’ என்றான். நான் ஒன்றுமே சொல்லவில்லை. ’நான் வேலையை விட்டுவிடப்போகிறேன்’ என்றான். நான் திரும்பி பார்க்காமல் நடந்தேன்..

 

சோமபாலா வேலையை விடவில்லை. இரண்டு வாரம் கழித்து நான்தான் என் வேலையை துறந்தேன். சாமான்களை பயணப் பெட்டியில் அடுக்கிக்கொண்டு பஸ்ஸுக்கு புறப்பட்டபோது. பாதி வழியில் சோமபாலாவிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவன் இரவு வேலையில் இருந்தான். தொழிற்சாலை இரவு நேரத்தில் முற்றிலும் வேறுமாதிரி காட்சியளித்தது. வாசலில் இரண்டு பெரிய வருகைப் பதிவு மணிக்கூடுகள் நின்றன. காலை நேரத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நின்று அடித்துப்பிடித்துக்கொண்டு தங்கள் நேரங்களை அட்டைகளில் பதியும் காட்சி  நினைவுக்கு வந்தது. நான் சென்ற நேரம் அங்கே ஒருவரும் இல்லை.

 

சோமபாலாவைத் தேடிக்கொண்டு போனேன். வழக்கமான இடத்தில் அவனைக் காணவில்லை. மெசின்கள் காது செவிடாகும் ஒலியை எழுப்பின. கட்டடத்தின் ஒதுங்கிய சின்ன மூலையில் தனியாளாக அவன் வேலை செய்தான். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கினான். ’உன்னை பழைய இடத்தில் தேடினேன்’ என்றேன். என் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னான். ’பல மாதங்களையும், அபூர்வ மரங்களையும் வீணடித்துவிட்டார்கள். இப்பொழுது என்னிடம் வேலை வந்திருக்கிறது. பழைய கண்டி அரசர்கள் தங்கள் அரண்மனைகளை அலங்கரிப்பதற்கு விரும்பி பயன்படுத்தியது இந்த மரம்தான். இதன் பெயர் ஹுலான்ஹிக். எப்படியோ வெள்ளைக்காரனிடமிருந்து இது தப்பிவிட்டது. இதிலிருந்து எழும்பும் நறுமணம் அரண்மனையையே நிறைக்கும். கறுப்பு என்பது நிறமே இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். மரத்தை மினுக்க மினுக்க அதன் மினுமினுப்பு கூடிக்கொண்டே போகும். இதைப்போல ஒளிவிடும் கறுப்பு மரம் உலகத்திலேயே கிடையாது.’

 

கைப்பிடியில் இரண்டு வாய் திறந்த சிங்கங்கள் தத்ரூபமாக நின்றன. கால்களும் பாய்வதற்கு தயாரான சிங்கத்தின் கால்கள் போலவே அமைந்திருந்தன. ஒரு குழந்தைப் பிள்ளையை அரவணைப்பதுபோல மெதுவாக அந்த கைப்பிடிகளை மினுக்கினான். அது கறுப்பு  ஒளியை வீசியது. அவன் வேலையில் ஆழ்ந்துபோய் இருந்தான். கலை என்று வந்துவிட்டால் எல்லாம் மறந்துபோகும் போலும். ’இதைப்போன்ற  நார்வரிகளை எங்கேயும் பார்க்க முடியாது. அவற்றின் உள் அணுத்துகள்களின் ஒழுங்கமைதி அற்புதமானது. மரங்களின் அரசன் இதுதான்.’

’சிம்மாசனமா செய்கிறாய்?’

எங்குமே பார்க்காத ஒரு பார்வை அவனுக்கு வந்தது. ’நான் நாற்காலிதான் உருவாக்குகிறேன். ஒரு மன்னன் உடகார்ந்தால்தான் அது சிம்மாசனம் ஆகும்.’.

 

’நான் வேலையை விட்டுவிட்டேன். உன்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்காகத்தான் வந்திருக்கிறேன்’ என்றேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. குனிந்து மிகக் கவனமாக மினுக்கிக்கொண்டு இருந்தான். ஏதோ அவன் மூளையின் உள்ளே ஓடியது. ஆனால் சொல்லாக வடிவம் பெறவில்லை. அவனுக்கு கிடைக்கவேண்டிய கூலியை தாறுமாறாக வெட்டிய ஒருவரிடம் என்ன பேச்சு என்று அவன் நினைத்திருக்கலாம்.

 

நான் கொழும்புக்கு போகும் கடைசி பஸ்ஸைப் பிடித்தேன். மூன்று மணிநேரம் பயணம் செய்யவேண்டும். கட்டிலில் கட்டப்பட்டு கிடக்கும் கிழவர் ஒருவரின் ஞாபகம் மனதில் வந்தது. ஆறாம் ஜோர்ஜ் மன்னர் அமர்வதற்கு தகுதியான உத்தமமான சிம்மாசனம் கறுத்து மினுங்கி உருவாகும் காட்சி தொடர்ந்தது. சிவப்பு மையில் நேரம் அச்சடித்த அட்டைகளை வைத்துக்கொண்டு வரிசையாக தொழிலாளர்கள் நிற்கும் காட்சி அடுத்து. தன்பாதை வெளிச்சத்தை தானே உண்டாக்கிக்கொண்டு பஸ் இருளை நோக்கி ஒளிக்கோடாக ஓடிக்கொண்டிருந்தது. ஒருவர் வாழ்நாளில் அருமையாகக் கிடைக்கும் என் நடுநிசி மணித்தியாலங்கள், தன் தகப்பனாரிலும் பார்க்க மரங்களை நேசிக்கும் ஒருவனைப்பற்றி சிந்திப்பதிலேயே கழிந்தது.

 

END

 

.

 

 

 

 

         

 

 

 

 

 

 

 

 

 

About the author

3,000 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta