ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்
அ.முத்துலிங்கம்
அழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல் என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது. சனங்களின் குழப்பத்தை தீர்ப்பதற்காக ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இனிமேல் நவம்பர் நாலாவது வியாழக்கிழமையில் மட்டுமே நன்றி கூறல் நாள் கொண்டாடப்படவேண்டும் என பிரகடனம் செய்தார்.
மகன் மொன்ரானாவில் இருந்ததால் அங்கே வந்து 24ம் தேதி வியாழக்கிழமை வரும் நன்றி கூறல் நாளில் கலந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தான். மகன் விஞ்ஞானி என்பது தெரியும். ஆனால் அவன் ஒரு தலைசிறந்த சமையல்காரன் என்பது பலருக்கு தெரியாது. சமையல் கலை படித்துப் பட்டம் பெற்றதல்ல. தானாகக் கற்றுக்கொண்டபடியால் சமைக்கும் உணவில் புதுமையும், சுவையும் இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க தொலைக்காட்சி அவனுடைய நன்றிகூறல் நாள் சமையலை நேரடியாக ஒளிபரப்பியது.
நானும் மனைவியும் அமெரிக்காவுக்கு விருந்துண்ணப் போவதென்று முடிவுசெய்தோம். ரொறொன்ரோவில் இருந்து விமானத்தில் கிளம்பி முதலில் மினியப்பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து மொன்ரானாவின் மிசூலா நகரத்துக்கு போய்ச் சேர்ந்தோம். அந்தப் பயணத்தின்போது அசாதாரண சம்பவம் ஒன்று நடந்தது. என் மனைவி தன் மடியில் கைப்பையை வைத்திருந்தார். அந்தக் கைப்பையில் காசும், கடன் அட்டைகளும், மருத்துவ அட்டை மற்றும் வாகன ஓட்டுநர் அட்டைகளுடன் வேறு முக்கியமான ஆவணங்களும் இருந்தன. விமானப் பணிப்பெண் கைப்பையை மேலே சாமான் தட்டில் வைக்கச் சொன்னார். மனைவி மறுத்தார். அப்படியிருந்தும் விமானப் பணிப்பெண் விடாமல் தொந்திரவு செய்து அந்தக் கைப்பையை வாங்கி மேலே வைத்து விட்டார். மடியிலே வைக்கக்கூடிய சிறிய கைப்பையை மேலே வைக்கும்படி விமானத்தில் ஒருவரும் இதற்கு முன்னர் கட்டாயப் படுத்தியது கிடையாது.
விமானம் தரையில் இறங்கியதும் நானும் மனைவியும் வெளியேறினோம். கைப்பையை மறந்துவிட்டோம். வெளியே வந்து சூட்கேசுகளைக் காருக்குள் ஏற்றும்போது நினைப்பு வந்தது. திரும்பி ஓடிப்போனபோது அதிகாரிகள் எங்களை விமானத்துக்குள் நுழைய விடவில்லை. அவர்களாகவே தேடினார்கள். கைப்பை அகப்படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து நிமிடங்களுக்குள் கைப்பை மறைந்துவிட்டது. விமானப் பணிப்பெண்ணை தேடினோம். அளவான ஒப்பனையுடன், நாகரிகமாக உடை உடுத்திய மிடுக்கான பெண் அவர். எந்தக் கூட்டத்திலும் அவரை இலகுவாக அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். அவர் ஹொட்டலுக்குப் போய்விட்டார் என்றார்கள். விமான அதிகாரியிடம் முறைப்பாடு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். கைப்பை வரும் என்ற நம்பிக்கை இல்லை. எங்கள் சந்தேகம் ஏனோ அந்த விமானப் பணிப்பெண்மீது இருந்தது. எப்படி யோசித்தும் கைப்பை மறைவதற்கு வேறு காரணத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நன்றிகூறல் நாள் வியாழக்கிழமை என்பதால் செவ்வாய்க்கிழமையே பொருட்களை வாங்கவேண்டும். காலை ஆறு மணிக்கு புறப்பட்டு சுப்பர்மார்க்கெட் வாசலில் வரிசையில் நின்றோம். முதல் நன்றி கூறல் நாள் 1621ம் ஆண்டு நடந்தது. ஆரம்பத்திலே குடியேறியவர்கள் ஒரு வருடம் பூர்த்தியானபோது முதல் அறுவடையில் கடவுளுக்கு விருந்து படைத்து நன்றி கூறிய நாள். 400 வருடங்களாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இது. இந்த ஒரு நாளில் அமெரிக்காவில் 51 மில்லியன் வான்கோழிகள் உண்ணப்படும். இரண்டு பில்லியன் டொலர்கள் செலவாகும். வேறு ஒரு கொண்டாட்டமும் அமெரிக்காவில் இத்தனை சிறப்புடன் நடப்பதில்லை.
வரிசை நகர்ந்து உள்ளே நுழைந்ததும் கேக்கும் கோப்பியும் இலவசமாக வழங்கினார்கள். 10 றாத்தல் எடை , 20 றாத்தல் எடை, 40 றாத்தல் எடை என வான்கோழிகளுக்கு பல வரிசைகள் இருந்தன. இந்த சுப்பர்மார்க்கெட்டில் ஹுட்டரைட் வான்கோழிகளுக்கு நல்ல வரவேற்பு. ஜேர்மனியில் 400 வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய ஹுட்டரைட் சமயக்குழு அமெரிக்காவுக்கு 125 வருடங்களுக்கு முன்னர் வந்து மொன்ரானா மாநிலத்தில் குடியேறியது. இன்றும் அவர்கள் சமுதாயக் குழுவாக விவசாயம் செய்து ஒரு தலைவரின் கீழ் இயங்குகின்றனர். தனியாக ஒருவரிடமும் சொத்து கிடையாது. அனைத்துமே பொதுச் சொத்துதான். கூட்டாக சமைத்து ஒன்றாக உண்பார்கள். அவர்கள் பண்ணையில் திறந்த வெளியில் இயற்கை முறையில் வான்கோழிகள் பராமரிக்கப்படுவதால் மக்கள் நெடுநேரம் வரிசையில் நின்று அவற்றை வாங்கினார்கள். வான்கோழியுடன் இன்னும் பல சாமான்களையும் வாங்கிக்கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புதன் இரவு 40 றாத்தல் வான்கோழி ஒன்றை மன்னித்து விடுதலை செய்தார். அது ஒரு குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தது மனிதன்தான். இன்னொரு வான்கோழி சேமக் கையிருப்பாக இருந்தது. முதல் சொன்ன வான்கோழி இயற்கை மரணம் எய்திவிட்டால் மன்னிக்க முடியாதே. அதற்காக இன்னொரு வான்கோழியும் சேமிப்பில் இருந்தது. இரண்டாவது வான்கோழியும் விடுதலை செய்யப்பட்டது. அதே சமயம் மூன்றாவது வான்கோழி ஒன்று சமையல் அறையில் உணவுக்கு தயாரானது.
நன்றி கூறல் நாள் அன்று 16 விருந்தினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். வான்கோழியுடன் இன்னும் பல சுவையான உணவுகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் உணவின் சுவையை புகழ்ந்து தள்ளினார்கள். அன்று விருந்தினர்கள் பேசியது மூன்றே மூன்று பொருள்தான். ட்ரம்ப், ஹுட்டரைட் வான்கோழி, தொலைந்துபோன கைப்பை. கைப்பை பற்றிய வாதப் பிரதிவாதங்களும், ஊகங்களும் அதிக நேரத்தைப் பிடித்தன. ட்ரம்ப் பற்றிய நகைச் சுவையில் முதல் இடம் பிச்சைக்காரனுக்கு. அவன் ஒரு பலகையில் இப்படி எழுதி பிச்சை எடுத்து பணக்காரனாகிவிட்டான். ‘எனக்கு ஒரு டொலர் பிச்சை தாருங்கள். இல்லாவிட்டால் நான் ட்ரம்புக்கு வாக்களிப்பேன்.’ இரண்டாம் இடம் மொன்ரானா பத்திரிகையாளருக்கு. ’ட்ரம்ப் இன்று மொன்ரானா வந்தார். நாளை அவருடைய தலைமுடி வரும் என்று நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.’
கைப்பையை தொலைத்த நாட்கள் கூடக்கூட அது கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அடுத்த நாள் மாலை ரொறொன்ரோ திரும்பவேண்டும். ஆனால் காலை ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கைப்பை கிடைத்து விட்ட செய்தி வந்தது. சோல்ட் லேக் நகரத்து சலவைக்கூடத்துக்கு, விமானத்தில் உபயோகிக்கும் துணிகளையும் கம்பளிகளையும் சலவைக்கு அனுப்பியிருந்தார்கள். கம்பளிகளுடன் மாட்டுப்பட்டு ஒரு கைப்பை காணப்பட்டது. அந்த சலவைத் தொழிலாளி கைப்பையை மேலதிகாரியிடம் கொடுத்தார். மேலதிகாரிக்கு தகவல் ஏற்கனவே போயிருந்ததால் அவர் நடந்ததை ஊகித்துவிட்டார். கைப்பையை திருப்பி அதே விமானத்தில் மிசூலாவுக்கு உடனேயே அனுப்பும்படி கட்டளையிட்டார். அப்படித்தான் கைப்பை திரும்பி வந்தது. நாங்கள் விமான நிலையத்துக்குச் சென்று கைப்பையை மீட்டோம். காசும், கடன் அட்டைகளும் இன்னும் பிற ஆவணங்களும் சரியாக இருந்தன. கைப்பையுடன் ஒரு கடிதமும் வந்திருந்தது. வீடு வந்த பின்னர் அந்தக் கடிதத்தை திறந்து படித்தோம். கைப்பையை கண்டுபிடித்த சலவைத் தொழிலாளி எழுதிய கடிதம் இப்படி இருந்தது.
’சோல்ட் லேக் நகரத்து சலவைத் தொழிலாளியாகிய நான் எழுதுவது. 3716 பறப்பில் வந்த சலவைத் துணிகளுக்குள் இந்தக் கைப்பை கிடந்தது. ஜோன் வார்னரின் கட்டளைப்படி இதை நான் திரும்பவும் மிசூலாவுக்கு 4742 பறப்பில் அனுப்புகிறேன். கைப்பையின் உரிமைக்காரரிடம் இதை தவறாது சேர்ப்பிக்கவும். மூன்று நாட்களாக அவர்கள் காத்திருக்கிறார்கள். எது காரணம் கொண்டும் தாமதிக்க வேண்டாம். அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்.’
கடிதத்தைப் படித்த நான் திகைத்து நின்றுவிட்டென். அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார். சிரிப்பாக வந்தது.
அன்று மாலை ரொறொன்ரோவுக்கு புறப்பட்டோம். மனைவி கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி வந்தார். ரொறொன்ரோ விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நெடுநேரம் நின்றோம். ’கைப்பை இருக்கிறதா?’ ‘ஓ, இருக்கிறது.’ கடவுச்சீட்டுடன் குடிவரவு படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு நீட்டினோம். அதிகாரி எங்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே மெசினில் இழுத்துவிட்டு திரும்பவும் தந்தார். சூட்கேசுகளுக்காக காத்திருந்து மீட்டு அவற்றை உருட்டிக்கொண்டு வெளியே வந்தோம். ’கைப்பை இருக்கிறதா?’ ‘ஓ, இருக்கிறது.’ வரவேற்பு கூடத்தில் நிறைய சனங்கள் பயணிகளை வரவேற்பதற்கு நின்றார்கள். பலர் பலவிதமான பெயரட்டைகளைக் காவிக்கொண்டு காத்திருந்தனர். எங்கள் பெயர் அந்த அட்டைகளில் இல்லை. ஒருவரும் எங்களைப் பார்த்து சிரிக்கவில்லை. துள்ளித் துள்ளி கைகளை எட்டி அசைக்கவுமில்லை. ஒருவருக்குமே நாங்கள் ஒபாமாவுக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது தெரியவில்லை.
END