பொன்னுருக்கு
அ.முத்துலிங்கம்
நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன?’சமீபத்தில் ரொறொன்ரோவில் நடந்த பொன்னுருக்கு சடங்கு ஒன்றுக்குப் போயிருந்தேன். அதைப் படம் பிடித்து முகப்புத்தகத்தில் போட்டபோது என் நண்பரும் வேறு சிலரும் இதே கேள்வியை கேட்டார்கள். அப்பொழுதுதான் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், பொன்னுருக்கு சடங்கு கிடையாது என்பது தெரிய வந்தது. பொன்னுருக்கு என்றால் திருமணத்துக்கு முன்னர் செய்யப்படும் சடங்கு. ஆசாரியார் தாலி செய்யும் பொன்னை மாப்பிள்ளை வீட்டில் அவருக்கு முன்னால் உருக்குவது.
நான் சென்ற பொன்னுருக்கு ரொறொன்ரோவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய ஒரு கல்யாணம்தான். ஒரேயொரு குறை, மணப்பெண் இல்லை. யாழ்ப்பாணத்தில் 50 வருடங்களுக்கு முன்னர் எப்படி பொன்னுருக்கு நடந்ததோ அப்படியே, அதேமாதிரி நுணுக்கங்களுடன் இன்றும் கொண்டாடப்பட்டது, ஆனால் பத்து மடங்கு தொழில் நுட்ப வசதிகளுடன். மாப்பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்தார்கள். வீடியோவை இன்னொருவர் கவனித்தார். ஸ்கைப்பில் ஜேர்மனியில் இருந்தும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகப் பார்த்தார்கள்.
பெண் வீட்டார் பூசைக்குரிய பொருட்களுடன், பெரிய பெரிய தட்டங்களில் பலகாரம் ஏந்தி வந்தார்கள். ஆசாரி வாயு அடுப்பில் மாப்பிள்ளை முன் தாலிப் பொன்னை உருக்கினார். மாப்பிள்ளையின் வேலை சும்மா உட்கார்ந்திருப்பதுதான். உருக்கிய பொன் வட்டமாக வந்ததும் அதை ஒரு தட்டிலே வைத்து பார்வையாளர்களுக்கு ஆசாரியார் அனுப்பினார். எல்லோரும் தொட்டு ஆசி வழங்கினார்கள். இதுதான் நடந்தது. ஆசாரி இதை நீட்டி இரண்டு மணி நேரத்துக்கு இழுத்துவிட்டார். இரண்டு வீடியோக்களும் 1200 படங்களும் எடுக்கப்பட்டன.
1960 களில் கொழும்பில் நடந்த என்னுடைய பொன்னுருக்கில் பலதரமான நாடக அம்சங்கள் இருந்தன. இப்பொழுது நினைக்கும்போது சிரிப்பு வந்தது; துயரமும் கூடியது. எங்களுடையது காதல் திருமணம். பெண் வீட்டாருக்கு சம்மதம். வீட்டிலே எனக்கு மூன்று அண்ணன்மார். அவர்கள்தான் திருமணம் பற்றிய முடிவு எடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமே இல்லை, ஆனாலும் நான் விடாப்பிடியாக இருந்ததால் ஒப்புக்கொள்வதுபோல நடித்தார்கள். எப்படியாவது இதை நிறுத்திவிடவேண்டும் என்று மன அடிஆழத்தில் ரகஸ்யமாக வேலைசெய்தார்கள். பெண்வீட்டார் ஆடம்பரமானவர்கள். அவர்களை மட்டம் தட்டவேண்டும் அல்லது பழி வாங்கவேண்டும் என்பதே முக்கிய நோக்கம். இதற்கு பொன்னுருக்கு வசதியாக அமைந்தது.
அந்தச் சாக்குச் சொல்லி, இந்தச் சாக்குச் சொல்லி எத்தனை கடத்த முடியுமோ அத்தனையும் கடத்தி கடைசியில் ஒருவாறு பொன்னுருக்குவதற்கு ஒரு நாளை நிச்சயம் பண்னினார்கள். இரண்டு பகுதியும் சம்மதித்த பின்னர் ஆசாரிக்கும் சொல்லிவிட்டார்கள். பெண் வீட்டார் எத்தனை மணிக்கு, என்ன என்ன கொண்டுவரவேண்டும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டுவிட்டது. மாப்பிள்ளை வீட்டு பட்டியலில் மஞ்சள், விபூதி, சந்தனம், வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், பச்சை அரிசி, கற்கண்டு, பட்டு ஆகியவை இருந்தன. பெண் வீட்டார் கொண்டுவர வேண்டிய பட்டியலில் நவதானியம், மண்சட்டி, மண், பழவகை, பலகாரம், வேட்டி, சால்வை, கொழுக்கட்டை என்று எழுதியிருந்தது.
நிச்சயித்த நாள் ஆடிக்காற்று அடித்தது. ஆடிக் காற்று என்றால் அது புழுதிக்காற்றுக்கு மேலே. புயல் காற்றுக்கு கீழே. அதைப்பற்றி கவலைப்படாமல் என்னுடைய மூன்று அண்ணன்மாரும் சிரித்து மகிழ்ந்து ஓடியாடி காரியங்கள் பார்த்தார்கள். சிரிப்பு என்றால் முகத்துக்கு வெளியே நீண்ட சிரிப்பு. எனக்கு திக்கென்றது. வழக்கம்போல அவர்கள் வதனம் ஓர் அடி முன்னே தள்ளிக்கொண்டு நிற்கவில்லை. ஓர் அறைக்குள் நுழையும்போது அவர்கள் முகம் முதலில் வரும்; பின்னர் அவர்கள் வருவார்கள். எனக்கு நெஞ்சு பதறத் தொடங்கியது. ஏதோ சதி வேலை நடக்கிறது தெரிந்தது. என்ன வெடி எப்போது வெடிக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.
தாவணிகள் மேலே வீச, அங்கவஸ்திரம் பறக்க, பெண்வீட்டார் வந்து சேர்ந்தனர். ஆசாரியார் பூசையை ஆரம்பித்தார். என்னுடைய வேலை, இருக்கும் உடுப்பில் திறமானதை அணிந்து ஆசாரியார் கொண்டுவந்த சட்டிக்கு முன் உட்கார்ந்திருப்பதுதான். பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து முறையான பூசை செய்யப்பட்டது. வலது கை கற்பூர ஆரத்தி செய்யும்போது இடது கை மணியை அடித்தது. பெண் வீட்டார் கொண்டு வந்த சட்டியில், மண்ணை நிரப்பி நவதானியங்களை பாலிலே தோய்த்து ஒவ்வொன்றாக ஊன்றினார். திருமணத்தின்போது முளைவிட்டிருக்கும் நவதானியத்தை மாப்பிள்ளை எடுத்துச் செல்வதற்கான ஆயத்தம்.
எனக்கு முன்னாலிருந்த சட்டியில் சிரட்டைக்கரி நிரப்பியிருந்தது. வட்டமான பவுண் காசை சட்டியிலே போட்டு நெருப்பை மூட்டி ஊதாங்குழலால் ஊதி ஊதி அதை ஆசாரியார் பெரிசாக்கினார். சிரட்டைக்கரியை அடிக்கடி கிளறிவிட்டார். பவுண் காசு மறைந்து சில நிமிடங்களின் பின்னே அது உருண்டு திரண்டு நல்ல வடிவில் வந்தது. எல்லோரும் நல்ல சகுனம் என்றார்கள். சிலருக்கு சப்பையாக வரும். சிலவேளை பிழைத்துப்போன தோசைபோல இருக்கும். முக்கோண வடிவில் வந்ததும் உண்டு. அதிர்ஷ்டம் என்று என்னை பாராட்டினார்கள். நான் என்ன செய்தேன்? சும்மாதானே உட்கார்ந்திருந்தேன்.
பிரச்சினை இல்லாமல் முடிந்தது என்று மூச்சு விட நினைத்தபோதுதான் அது நடந்தது. ’கொழுக்கட்டை எங்கே?’ என்றார் மூத்த அண்ணர். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒன்றுமே புரியவில்லை. பெண்வீட்டார் காவி வந்த பெரிய தாம்பாளத்தை மூடியிருந்த வெள்ளைத் துணியை திறந்ததும் நடுவில் ஒரேயொரு கொழுக்கட்டைதான் இருந்தது. அதிர்ச்சி நீங்கியதும் ’ஒரேயொரு கொழுக்கட்டையா?’ என்று குரல் எழுப்பினார் மூன்றாவது அண்ணி. அவர் இரண்டு நாட்களாக கொழுக்கட்டை பற்றிய கனவிலேயே இருந்திருப்பார். அவருக்கு ஐந்து வயதாயிருந்தபோது கோயிலுக்கு துலாபாரம் நேர்த்திக்கடன் வைத்து எடைக்கு எடை கொழுக்கட்டை அவித்துக் கொடுத்தார்களாம். அதில் சரி பாதியை அந்த வயதிலேயே அவர் தின்று தீர்த்ததாக கதை இருந்தது. பெண் வீட்டார் ஒரே குரலில் ’பட்டியலில் கொழுக்கட்டை என்றுதானே எழுதியிருந்தது’ என்றார்கள். ’சரி, வெட்டும்’ என்று கட்டளையிட்டார் பெரிய அண்ணர். கொழுக்கட்டையை தாம்பாளத்தில் வைத்து, இரண்டாவது அண்ணி தொட்டுப்பிடிக்க, மூத்த அண்ணி சரிபாதியாக வெட்டினார். ஒரு பாதி மாப்பிள்ளை பகுதிக்கு, அடுத்த பாதி பெண் வீட்டுக்காரருக்கு.
’எங்கே பவுண் காசு?’ என்றார் அண்ணர். வீட்டு நாயை அதட்டும் குரல். கொழுக்கட்டைக்குள் ஒரு பவுண் காசை வைத்து அவித்து வரவேண்டும் என்பது ஐதீகம். அதை வெட்டும்போது யாருக்கு பவுண் கிடைக்கிறதோ அவர்கள் வென்றவர்கள். இவர்கள் பவுணே வைக்கவில்லை. பெண்ணின் அண்ணர் கொழும்பில் பிரபல வழக்கறிஞர். அவர் மெல்லிய குரலில் ’பட்டியலில் இல்லையே.’ என்றார். ’இது எல்லோருக்கும் தெரியுமே. வெறும் கொழுக்கட்டையை யாரும் சடங்குக்கு எடுத்து வருவார்களா? பவுண் வைத்து கொண்டுவருவதுதானே வழக்கம்.’ இதைச் சொன்னது பெரிய அண்ணி. அந்தக் களைப்பு தீர இரு பகுதியினரும் பலகாரங்களை தின்று தீர்த்தார்கள்.
‘எங்கே மரம்? நல்ல நேரம் முடிவதற்கிடையில் மரத்தை நடவேண்டும்.’ இது இரண்டாவது அண்ணர். கெடுதி செய்யும்போது அதையும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர். எல்லாவற்றையும் மூத்த அண்ணரையே செய்ய விடக்கூடாது.
’மரமா? என்ன மரம்? பட்டியலில் இல்லையே?’
‘மரத்தையுமா பட்டியலில் சேர்ப்பார்கள். மரம் நடாமல் எங்காவது பொன்னுருக்கு முடிவுக்கு வந்திருக்கிறதா? மரம் நடவேண்டும் என்பது பரம்பரை பரம்பரையாக கடைப்பிடிக்கும் வழக்கம்தானே.’ இரண்டாவது அண்ணிக்கு என்னிலும் ஒரு வயது கூட. ஆனால் அவர் இப்படியான விசயங்களை விரிவாகவும் ஆழமாகவும் தெரிந்து வைத்திருந்தார்.
பெண் வீட்டார் ஆறு கார்களில் வந்திருந்தார்கள். எல்லாமே சொந்தக் கார்கள். அதிலே ஒருவர் ஒரு பேச்சுப் பேசாமல் காரைக் கிளப்பிக் கொண்டுபோய் அழகான முள் முருங்கை மரம் ஒன்றை எப்படியோ சம்பாதித்து கொண்டு வந்து இறக்கினார். வெட்டினாரா, வாங்கினாரா, திருடினாரா ஒன்றுமே தெரியவில்லை. முள்முருங்கை வளர்ப்பதற்கு எளிதானது. அநேகமான திருமண வீடுகளில் அதைத்தான் நடுவார்கள். அது எத்தனை தழைக்கிறதோ அத்தனை மணமக்கள் குடும்பமும் தழைக்கும் என்பது ஐதீகம்.
சரி சரி. நல்ல நேரம் முடிவதற்கிடையில் மரத்தை நடவேண்டும். பெண்ணின் மாமாவை அழையுங்கள். அவர்தான் நடவேண்டும் என்றார் மூத்த அண்ணர். இதுதான் நான் எதிர்பார்த்திருந்த தருணம். எங்கே எப்படியான குண்டை வெடிக்க வைக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். கதி கலங்கிப்போய் சகலரும் நின்றனர். பெண்ணின் மாமனார்தான் மரத்தை நடவேண்டும் என்ற விதியை யார் எப்போது எழுதி வைத்தது. கணியன் பூங்குன்றனாரா? அல்லது தொல்காப்பியரா? ஒருவேளை ஈழத்து பூதந்தேவனாரா?
இத்தனை நேரமும் பேசாமல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் சிறிய தகப்பனார் – நாங்கள் அவரை சின்னப்பு என்றுதான் அழைப்போம் – பேச ஆரம்பித்தார். சடங்குளை முறையாகச் செய்யவேண்டும் என்பது அவர் கொள்கை. எங்கள் ஊரில் சடங்குகளின் காவலர் அவர்தான். அவரை எதிர்த்துப்பேச ஆட்கள் பயப்படுவார்கள். அவருக்கு கவி பாடவரும் என்பதால் அறம் பாடிவிடுவார் என நடுங்குவார்கள். ஒருமுறை வீட்டு மாமரத்தில் அணில் மாம்பழத்தை கொந்தியதை இவர் பார்த்து, அறம்பாட அணில் பொத்தென்று விழுந்து இறந்துபோனதாம். சின்னப்பு ‘மரம் நடுவதென்றால் பெண்ணின் மாமாதான் நடவேண்டும். சாஸ்திரங்களை எழுதி வைத்தது அவற்றை மீறுவதற்கா? பெண்ணுக்கு மாமா இல்லாவிட்டால் அதற்கு நாங்களா பொறுப்பு’ என்றுவிட்டு கோபத்துடன் என்னைப் பார்த்தார். நான் இடைவெளியை கூட்டினேன். சின்னப்புவின் வாய் சாமர்த்தியத்தை வெல்லும் தகுதிகொண்டவர் அந்தக் கூட்டத்தில் கிடையாது. அக்காவையும் தங்கையையும் ஏக்கத்துடன் பார்த்தேன்.
என் அக்காவும் தங்கையும் காலை நாலு மணிக்கே எழும்பி தங்கள் அலங்காரங்களை ஆரம்பித்து குறைவின்றி செய்திருந்தார்கள். அக்காவின் தலையை தங்கை செய்தார். தங்கையின் தலையை அக்கா செய்தார். ஏதோ அவர்களைப் பெண்பார்க்க வருவதுபோல அலங்காரம் அட்டகாசமாக இருந்தது. காப்புகளை எண்ணி எண்ணி சரிபார்த்து இருகைகளிலும் அணிந்திருந்தார்கள். கண்களுக்கு அஞ்சனம் பூசி கண்களை மேலும் கறுப்பாக்கியிருந்தனர். நான் அவர்களை மாறி மாறிப் பார்த்தேன். ஆதரவு தருவதாக தலையலங்காரம் செய்ய முன்னரும், செய்த பின்னரும் அக்கா வாக்கு தந்திருந்தார். அவர் வாயை திறப்பார் என்று பார்த்தேன். ‘பொறு பொறு’ என்று அஞ்சனம் பூசிய கண்களால் சாடை காட்டினார். எனக்குத் தெரியும். அவர்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்களுக்கு இப்படியான விசயங்களில் ’வோட்’ கிடையாது.
பெண்ணுக்கு மாமனார் இல்லை. இது இல்லோருக்கும் இருநூறு முறை அடித்து அடித்து சொல்லப்பட்ட விசயம். மாமனாரை கண்டுபிடிப்பது முள்முருங்கைபோல இலகுவான விசயமும் அல்ல. பெண்ணுக்கு ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றாம் வகையில் ஒரு மாமா இருந்தார். அவர் அன்றைக்கு ரயில் பிடித்து யாழ்ப்பாணம் போகிறார். பெண்ணுக்கு தம்பி முறையான ஒரு பையன் காரை எடுத்துக்கொண்டு பறந்தான். கொழும்பு ரயில் நிலையத்தில் டிக்கட் எடுத்து வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணம் புறப்பட காத்திருந்தவரிடம் முழுக் கதையையும் விஸ்தாரமாகக் கூறி, பாதி மன்றாட்டத்துடனும், பாதி வலோத்காரத்துடனும் அவரை கொண்டுவந்து இறக்கினான். கொலைசெய்த ஒருவர் நீதிமன்றத்துக்குள் நுழைவதுபோல தடுமாற்றத்துடன் அவர் உள்ளே வந்தார்.
அவரைப் பார்த்தபோது எனக்கு உடனே தோன்றியது கும்பிடுபூச்சியின் உருவம். மேலே டெர்லின் சட்டை அணிந்திருந்ததால் உள்ளே ஒவ்வொரு விலா எலும்பையும் எண்ணக்கூடியதாக இருந்தது. கைகள் நடுங்கின. வழக்கமான நடுக்கமா, பயத்தில் நடுங்கினாரா தெரியவில்லை. வயது 60 இருக்கும். நீளமான தலைமுடி கன்னத்தில் இருபக்கமும் விழுந்து வியர்வையில் ஒட்டிக் கிடந்தது. எல்லோர் மனத்திலும் அந்தக் கணம் ஓடியது ஒரேயொரு கேள்விதான். இவரால் மரத்தை தூக்கி நடமுடியுமா?
காற்று ஒரு பக்கம் இழுக்க அவர் மற்றப் பக்கம் எப்படியோ மரத்தை இழுத்து தூக்கி நட்டார். அன்றைய ரயிலை தவறவிட்டார். அவருக்கு பலகாரமோ, கொழுக்கட்டையோ, குளிர்பானமோ ஒன்றுமே கொடுக்க மறந்துவிட்டார்கள். அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ அவர் ரயில் பிடித்து யாழ்ப்பாணம் போவார். அன்றைய கதாநாயகன் அவர்தான். ஒரு கல்யாணத்தை இக்கட்டான சமயத்தில் காப்பாற்றிய அந்த மகானை உடனேயே மனித வழக்கம் போல எல்லோரும் மறந்துவிட்டார்கள்.
அன்பின் வந்த அகனமர் காதல் பெண்ணுக்கு மாப்பிளை வீட்டில் நடந்த பிரச்சினைகள் ஒன்றுமே தெரியாது. வீட்டார் கொண்டுவரப்போகும் மிச்சப் பலகாரத்தை சாப்பிடுவதற்காக தன் வீட்டு கேட்டை பிடித்துக்கொண்டு நின்றார். வேறு அவமதிப்புகள் இல்லை என்று தெரிந்ததும் பெண் வீட்டார் புறப்பட்டனர். அவரவர் கார்களில் போய் ஏறுமட்டும் அவர்கள் நிலத்திலே சுழலும் சருகுகளைத் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை. வாழ்நாளில் இப்படியான ஒருநாளை அவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய அண்ணன்மார் மூவர் உதடுகளிலும் புன்னகை இருந்தது. அதே சிரிப்புத்தான், கொஞ்சம் வித்தியாசமானது. வஞ்சம் தீர்த்த சிரிப்பு.
END