ரயில் புறப்பட்டுவிட்டது
- புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த கணம் நினைவிருக்கிறதா?
நிச்சயமாக. எங்கே எந்த நேரத்தில் என்ன படித்தேன் என்பதும் நினைவில் இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாக ‘பொய்க்குதிரை’ சிறுகதையை படிக்கிறேன். அப்படியே சில நிமிடம் திகைத்து நின்றேன். மறுபடியும் படிக்கிறேன். இப்படியும் தமிழிலே எழுதமுடியுமா?
’அன்றும் அவனுக்கு சம்பளம் போடவில்லை’ என்று கதை தொடங்குகிறது. அவனுக்கு பசி, மனைவிக்கும் பசி. சற்று வசதியான நண்பன் வீட்டு நவராத்திரி கொலுவுக்கு போகிறார்கள். மனைவி பாடுகிறாள். பசியில் தொண்டை கட்டிவிடுகிறது. கணவன் பாட்டை பாடி முடிக்கிறான். எல்லோரும் அமர்ந்து சாப்பிடும்போது மனைவியும் பரிமாறுகிறாள். நண்பன் வேடிக்கையாகச் சொல்கிறான். ‘ஊரார் வீட்டு நெய்யே, பெண்டாட்டி கையே.’ அவள் திடுக்கிடுகிறாள். வீட்டுக்கு வந்த பின்னர் விம்மி அழுகிறாள். ‘அசடு, அசடு’ என்று தேற்றுகிறான் அவன். ‘என்னவோ மனசு நெலை கொள்ளலை’ என்கிறாள் அவள்.
அன்று படித்ததை இன்றும் மறக்க முடியவில்லை. இந்தக் கதைதான் என்னை மாற்றியது. புனைவு என்றால் என்ன என்பது ஒருவாறு புரிய ஆரம்பித்தது.
- முப்பதாண்டுகள் எழுதாமலிருந்தபோதுகூட பல கதைகளை மனதுக்குள் எழுதிக்கொண்டுதான் இருந்தேன் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இயல்பில் ஒரு கதையை எப்போது எழுதத் தொடங்குவீர்கள்? எழுதியபின் எத்தனைமுறை திருத்துவீர்கள்?
கனடா போன்ற குளிர்நாட்டில் எல்லா வீடுகளிலும் தவறாமல் எரிஉலை (furnace) இருக்கும். எரிஉலைகளில் இரவு பகல் எந்த நேரமும் வருடம் முழுக்க உள்ளே சிறு நெருப்பு எரிந்துகொண்டே இருக்கும். வெப்ப நிலை குறைய ஆரம்பிக்கும்போது ஒரு புள்ளியில் சிறுநெருப்பு தீப்பிழம்பாகி காற்றைச் சூடாக்கி சுழலவிடும். வீட்டின் வெப்ப நிலை மீட்கப்படும். மறுபடியும் சிறுநெருப்பாக மாறி காத்திருக்கும்.
எழுத்தாளரும் அப்படித்தான். அவர் சிந்தனை எப்பவும் சிறுகொழுந்தாக மனதிலே எரியும். சமயத்தில் தீ பிளந்து வெளியே வந்து படைக்கும். ஒன்றை எழுதிய பின்னர் நான் குறைந்தது பத்து தடவையாவது திருத்துவேன்.
- ஒரு கட்டுரையைக்கூட கதையின் சுவாரஸ்யத்தோடு எழுதுகிறவர் நீங்கள் (கிட்டத்தட்ட கதைபோல). ஒரு சுவாரஸ்யமான கட்டுரை ஏன் கதை ஆகாது?
கட்டுரையை புனைவுப் போர்வையில் எழுதும் வேலையை முதலில் ஆரம்பித்தவர் பெயர் நோர்மன் மெய்லர். இவர்தான் creative non-fiction என்ற வகையை தொடங்கிவைத்தவர். இவர் எழுதிய உண்மைக் கதைக்கு புனைவுப் பிரிவில் புலிட்சர் பரிசு கிடைத்தது. அதன் பின்னர் அந்த வகை எழுத்து பிரபலமாகியது.
சமீபத்தில் எனக்கு ஏ.கே செட்டியாரின் பயண நூல் படிக்கக் கிடைத்தது. அதை வாசித்தபோது அவர் எல்லோரையும் மிஞ்சியவராக இருந்தார். தமிழில் புனைவுக் கட்டுரைக்கு இவர் முன்னோடி என்று சொல்லலாம். இவருடைய அமெரிக்கப் பயணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இவர் விவரிக்கிறார்.
கணவனும் மனைவியும் ஒருவரை விருந்துக்கு அழைக்கிறார்கள். மேசையில் அமர்ந்து சாப்பிட்டபோது உணவு தீர்ந்துவிட்டது. அவர்களுக்கு தந்தி அடிக்கும் முறை தெரியும். கணவர் மேசையில் விரல்களால் தட்டி வேறு உணவு இருக்கிறதா என விசாரிக்கிறார். மனைவி அதே முறையில் இல்லை என்கிறார். விருந்தாளிக்கும் தந்தி அடிக்கத் தெரியும். அவர் விரல்களால் ’போதுமானது சாப்பிட்டுவிட்டேன்’ என செய்தி அனுப்பினார்.
கட்டுரை புனைவு வடிவத்தில் இருந்தாலும் அது கட்டுரைதான். புனைவு என்று சொல்லமுடியாது.
- ஒரு நல்ல சிறுகதையாளராக உருவாக்கிக்கொள்வதில் உங்களுக்கு உதவிபுரிந்த, உங்களைப் பாதித்த எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்.
நான் என் வாழ்நாளில் முதன்முதல் சொந்தமாக்கியது நான் எழுதிய புத்தகத்தை தான். இரவல் புத்தகங்களில்தான் இலக்கியம் படித்தேன். புத்தகம் தந்து என்னை படிக்க ஊக்கப்படுத்தியவர் பேராசிரியர் க.கைலாசபதி. ஆரம்பத்தில் நான் எழுதிய சிறுகதைகளை அவர்தான் முதலில் படித்துக் கருத்துச் சொன்னார். அவர்தான் என்னை தொடக்கி வைத்தார். பின்னர் நான் திரும்பிப் பார்க்கவில்லை.
- ஒரே களத்தை சார்ந்து எழுதப்பட்ட பல சிறுகதைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பை நாவல் என்று சொல்லலாமா?சொல்லலாம் என்றால், நாவல் வடிவத்தின் தனித்தன்மை என்பது என்ன?
நாவலின் வயது 200 தானே. அது இன்று எத்தனை வளர்ந்துவிட்டது. பெரிய காவியங்கள் ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனத் தொடங்கும். தமிழ் நாவல் கூட ஒரு காலத்தில் ஆற்றுப் படலம், நகர்ப் படலம் என ஆரம்பித்தது. இப்பொழுது அப்படி எழுதுகிறார்களா?
சிலவருடங்களுக்கு முன்னர் Kathryn Stockett என்ற அமெரிக்கப் பெண்மணி ஹெல்ப் என்ற நாவல் எழுதினார். அது பல விருதுகளை வென்றது. 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. விற்பனை 10 மில்லியன் டொலர்களை தொட்டது. கறுப்பின வேலைக்காரப் பெண்களைப் பற்றியது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைபோல இருக்கும்; ஒருசேரப் படித்தால் நாவல்.
அசோகமித்திரன் எழுதிய ’ஒற்றன்’ நாவலும் அவ்வகைதான். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாக சுவாரஸ்யத்துடன் இருக்கும். நாவலுக்கு வேண்டிய முக்கிய பண்பு என்றால் அது வாழ்க்கையை பேசவேண்டும். மொழிச்சிறப்பும், கலாபூர்வமும், மானுடதரிசனமும் நாவலின் பிரதான அம்சம். ஆலமரம் போல கிளைவிட்டு பரந்தும் இருக்கலாம். கமுகு மரம் போல நேர்க்கோட்டிலும் இருக்கலாம். இரண்டுமே நாவல்தான்.
- கதையின் போக்கில் உலக நடப்புகளை ஆங்காங்கே சொல்வது, பல நாட்டுப் பழக்க வழக்கங்கள், கணிதப் புதிர்கள், பல்மொழிமேற்கோள்கள் என கதைக்குப் பொருத்தமாக அவற்றை இணைப்பது என இந்த சுவாரஸ்யமான சொல்லும் முறையை எப்படிக் கைக்கொண்டீர்கள்?
சிறுகதை, நாவல் என்றால் என்ன? அவை தகவல் களஞ்சியம்தானே. ஒரு புனைவை வாசித்து முடிக்கும்போது நீங்கள் எடுத்துச் செல்வது தகவல்கள்தானே. அவைதானே சுவாரஸ்யம்.
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 1963ம் ஆண்டில் சுடப்பட்டு பின்மதியம் இறந்து போகிறார். அதே நாள், ஒரு மணிநேரம் கழிவதற்கிடையில் லிண்டன் ஜோன்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆச்சரியமாக இருந்தது. ராமாயணத்தில் ஒரு காட்சி. சீதையை மீட்க நடந்த போரில் ராவணன் கொல்லப்பட்டு கிடக்கிறான். ராமர் சீதையிடம் போயிருக்கவேண்டும். அதுதானே முறை. விபீடணன் முடிசூட்டப்படுகிறான். இது தகவல்.
’என்பில் அதனை வெயில்போலக் காயுமே, அன்பில் அதனை அறம்’ என்பது திருக்குறள். எலும்பில்லாத புழுவை வெயில் வருத்தும். அதுபோல அன்பில்லாதவர்களை அறம் வருத்தும். ஈரம் தேவையான புழுவை வெயிலில் போட்டால் அது உலர்ந்து இறந்துவிடும். இது தகவல் சிறுவயதில் விஞ்ஞானம் படித்தபோது ஆசிரியர் ஒரு கிளாஸ் தண்ணீரில் உப்பை போட்டார். எடை கூடியது, ஆனால் கொள்ளளவு கூடவில்லை. ’நாழி அப்பும், நாழி உப்பும் நாழியானவாறுபோல்’ – சிவவாக்கியர். இது தகவல். தகவல்களால் ஆனதுதானே இலக்கியம்.
- புனைவைவிட சில உண்மைகள் நம்பவே முடியாதவையாக இருக்கும். அப்படியான உண்மைகளைச் சந்தித்திருக்கிறீர்களா?
புனைவை நம்பிவிடலாம். உண்மையைத்தான் பல சமயங்களில் நம்புவது கடினம். ஒருவர் சர்க்கஸ் பார்க்கப்போனார். யானைகள் விளையாட்டுக் காட்டின. ஒரு யானை இவர் காரில் உட்கார அது நெளிந்துவிட்டது. அவர் வீட்டுக்கு திரும்பியபோது போலீஸ்காரர் பிடித்துவிட்டார். ’எப்படி விபத்து நடந்தது?’ என்று போலீஸ்காரர் கேட்டார். ’சர்க்கஸில் யானை குந்தியது’ என்றார். போலீஸ்காரர் நம்பவே இல்லை.
கனடாவில் வடமேற்கு பிரதேசத்தில் டேனே பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். ஆர்க்டிக் வட்டத்துக்கு சமீபமானதால் அதிகுளிர் பிரதேசம். இவர்களுடைய உணவு 500 – 600 றாத்தல் எடையான கரிபோ மான். மனிதனுக்கு பசியெடுக்கும்போது கரிபோ மான் தேடி வரும் என்பது நம்பிக்கை. தகப்பன் தன்னுடைய ஒன்பது வயது மகனுடன் கரிபோ மான் வேட்டையாட நாய்கள் இழுக்கும் சறுக்கு வண்டியில் புறப்பட்டார். தூரத்தில் கரிபோ மானைக் கண்டபோது சறுக்கு வண்டியை வேகமாகத் திருப்பினார். பையன் கீழே விழுந்துவிட்டான். பையனுக்காக வண்டியை நிறுத்தினால் மான் தப்பிவிடும். மானைத் துரத்திப் போனால் பையன் ஆழ்குளிரில் தனிமையில் இறக்கக்கூடும். தகப்பன் சட்டென முடிவெடுத்து மானைத் துரத்தினார். மானைத் தவறவிட்டால் வீட்டிலே அவர் குடும்பம் பட்டினி. ஒரு முழுநாள் கழித்து தகப்பன் மான் இறைச்சியுடன் திரும்பியபோது மகன் சறுக்கு வண்டித் தடத்தில் நடந்து வந்துகொண்டிருந்தான். அவர்கள் தழுவிக்கொண்டார்கள். மகன் தகப்பனை மன்னித்துவிட்டான்.
- ஓர் எழுத்தாளர் தனது எல்லா அனுபவங்களையும் படைப்பாக எழுதிவிடுவதில்லை. அப்படி எழுதவும் முடியாது. யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத பல அனுபவங்களை எண்ணங்களை அவர் சந்திக்கிறார் எனும்போது, எழுதவே முடியாத அனுபவங்களை ஒரு எழுத்தாளர் என்ன செய்வார்?
ஒருவர் தன் வாழ்நாள் அனுபங்களை எல்லாம் எழுதுவதென்றால் அவருக்கு பத்து வாழ்நாள்கள் கூடப் போதாது. எல்லோருக்குமே பெரிய தரவு நிலம் இருக்கும். அவ்வப்போது ஒரு சம்பவமோ, வார்த்தையோ அந்த தரவிலிருந்து ஒரு துளியை இனம் காட்டும். அதைப் பெருக்கினால் இலக்கியம் பிறந்துவிடுகிறது.
ஒருநாள் நான் ரொபின்சன் குரூசோ நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இதுதான் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் என்று சொல்கிறார்கள். புயலில் உடைந்துபோன கப்பலில் இருந்து தப்பிய ஒருவன் ஒரு தனித்தீவில் தங்கி மிருகங்களுடனும் பறவைகளுடனும் வாழப் பழகிவிடுகிறான். 28 வருடங்கள் அப்படி வாழ்கிறான். ஒருநாள் மணலில் மனிதக் காலடிகளை கண்டு அவன் கிலிபிடித்து அலைகிறான். அத்தனை காலமும் தனிமையில் கழித்தவன் இன்னொரு மனித உயிரைக் கண்டு அச்சமடைகிறான். இது எத்தனை வியப்பானது? இந்தக் குறிப்பை தரவு நிலத்தில் என் மனது தேடுகிறது. பல புதிய கற்பனைகள் உதிக்கின்றன. வார்த்தைகள் இலவசமானவை. யாரும், எப்பவும் அவற்றை பயன்படுத்தலாம். கட்டுரையும், சில சிறுகதைகளும் பிறக்கின்றன.
- உலகின் பல்வேறு மொழி, கல்வி, கலாசாரம், என அனுபவ ரீதியான அறிதல் கொண்டவர் நீங்கள். தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன? தமிழர்கள் வெளியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
எந்த நாட்டுக்கு போனாலும் அவர்கள் மொழி பற்றி விசாரிப்பேன். என்ன மொழியில் படிக்கிறார்கள் என்று முக்கியமாகக் கேட்பேன். எல்லோரும் தங்கள் தங்கள் தாய்மொழிகளில்தான் படிக்கிறார்கள். கூடவே ஒன்றோ அல்லது இரண்டோ முக்கியமான உலக மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் விசயம் வேறு. தமிழே கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் இல்லாமலே பட்டப்படிப்பை முடித்து வேலையும் சம்பாதித்து கொள்ளலாம். தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த அவல நிலை.
முன்பின் அறியாத ஒருவர் என்னை பிரான்சிலிருந்து அழைத்தார். அவர் பெயர் சங்கர் கிருஷ்ணன். என் புத்தகத்தை படித்ததாகச் சொன்னார். இவர் ஆரம்பத்திலிருந்து கிராமத்து அரசுப்பள்ளியில் தமிழில் படித்தார். ஐடி வேலைக்காக ஆங்கிலம் கற்றார். பிரான்சில் வேலை கிடைத்து அங்கே வந்து ஆறு மாதத்தில் பிரெஞ்சும் கற்றுக்கொண்டு விட்டார். சங்க இலக்கியங்களும் பிரபந்தங்களும் அவர் பேச்சில் வந்தன. எல்லாமே தானாக ஆர்வத்தில் கற்றுக்கொண்டவைதான். இவர் சொல்கிறார் தாய்மொழியில் கற்பது மிகவும் அவசியம் என்று. சிக்கலான கருத்துகள், தேற்றங்கள், விஞ்ஞானம் தாய்மொழியில் இலகுவாகப் புரிந்துவிடுகின்றன. வழக்கமாக நான்தான் கேள்விகள் கேட்பேன். இவர் ஒரு கேள்வி கேட்டார். ‘பிரெஞ்சுக்காரர்கள் பேசும்போது ஒரு சொல் ஆங்கிலம் கலப்பதில்லை. அரேபியர்கள் அரபுமொழியில் பேசும்போது ஒரு சொல் ஆங்கிலம் கலப்பதில்லை. தமிழர்கள் மட்டும் ஏன் ஐம்பதுக்கு ஐம்பது ஆங்கிலம் கலக்கிறார்கள்?’ என்னிடம் ஏது பதில்.
இன்று தமிழ் இலக்கியம் உச்சத்தில் இருக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள் உலகத் தரத்தில் படைத்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் இலக்கியம் வெளியே தெரிவதில்லை. அவற்றிற்கு தரமான மொழிபெயர்ப்புகள் இல்லை. அல்பேனிய மொழி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அல்பேனிய மொழியில் எழுதிய ஒரு புத்தகம் முதலில் பிரெஞ்சிலும், பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, அதற்கு புக்கர் சர்வதேச விருது கிடைத்தது. நோபல் பரிசுக்கு அடுத்த நிலையில் இந்த விருது மதிக்கப்படுகிறது.
ஓர்ஹான் பாமுக் என்பவர் துருக்கிய மொழியில் ஒரு புத்தகம் எழுதினார். அதை எர்டான் கோக்நர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கோக்நரிடம் ’உங்களை எப்படி மொழிபெயர்ப்பதற்கு தேர்வு செய்தார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள் ஒரு குழு அமைத்து மூன்று பேர்களுக்கு மொழிபெயர்ப்பு பரீட்சை வைத்து தேர்வு செய்தார்கள் என்றார். எத்தனை தீவிரத்துடன் அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டது என்பது தெரிகிறது. My Name is Red என்ற அந்த நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அது மொழிபெயர்க்கப் படாவிட்டால் இன்றைக்கும் அந்த நூல் பற்றி வெளியே தெரிந்திருக்காது. எங்கள் இலக்கியம், வெளி உலகத்துக்கு தெரிய வேண்டுமானால் இப்படித் தீவிரமான செயல்பாடு அவசியம்.
சேக்ஸ்பியரைப் படிக்காத ஓர் ஆங்கில எழுத்தாளரைக்கூட காணமுடியாது. ஆனால் பழமை வாய்ந்த தமிழ் இலக்கியம் தெரியாத தமிழ் எழுத்தாளர்களை நிறையவே காணலாம். சேக்ஸ்பியரை உலகத்தில் பரப்புவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை வருடாந்தம் செலவழிப்பதாக ஓர் அங்கில எழுத்தாளர் சொன்னார். தமிழ்நாடு அரசு ஒரு மொழிபெயர்ப்பு குழு அமைத்து, தரமான இலக்கியங்களை வேற்று மொழியில் வெளியிட உதவினால் என்ன? இதுவும் ஓர் அரசின் கடமைதானே.
ஏதாவது நன்மை கிட்டும் என்ற எண்ணத்தில் நான் பல வருடங்களாக பேச்சிலும் எழுத்திலும் இதை திரும்பத் திரும்ப விதை ஊன்றுவதுபோல சொல்லிவருகிறேன். என் நண்பர் சொல்கிறார், ‘முளைத்தால் மரம், பிழைத்தால் உரம்.’
- உலகமயமாக்கலால், தொழில்நுட்ப பரவலால் ஒரு ஒற்றைத்தன்மை உருவாக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? மொழியில்,கலாசாரத்தில், உணவில், ரசனையில், என… சிறு இனக்குழுக்களின் அடையாளங்கள், கலாசாரங்கள் அழிக்கப்படுவதை….
’உலகம் தட்டையானது’ என்ற சொற்பிரயோகத்தை முதலில் தந்தவர் நந்தன் நீல்கேனி என்ற இந்தியர்தான். இந்த சொற்பிரயோகம் தந்த உந்துதலில் ‘The World is Flat’ என்ற நூலை தோமஸ் ஃபிரீட்மன் என்பவர் எழுதி பிரபலப்படுத்தினார்.
உலகமயமாக்கலில் உள்ள தீமைகளைப் பார்க்கும் அதே சமயம் நன்மைகளையும் நோக்க வேண்டும். அறிவைப் பயன்படுத்தி முன்னேறுவது மனித குலம் மட்டுமே. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததுபோலவே இன்றும் மீன்கள் வாழுகின்றன. தூக்கணாங்குருவி இன்றும் அதே மாதிரித்தான் கூடு கட்டுகிறது. ஒரு மாற்றமும் இல்லை. சிங்கம் அப்படியேதான் வேட்டையாடுகிறது. மனிதன் மாத்திரம் மாறிக்கொண்டே வருகிறான். அதனால் உலகமும் மாறுகிறது. அதை நிறுத்த முடியாது.
உலகமயமாக்கல் என்றால் என்ன? என்னுடைய மொழி, என்னுடைய மதம், என்னுடைய கிராமம் என்று சிந்திக்காமல் என்னுடைய உலகம் என சிந்திப்பதுதானே. ஒரு தலை முறைக்கு முந்தி செல்பேசி, முகப்புத்தகம், யூட்யூப், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவை உலகத்தில் இத்தனை மாற்றம் கொண்டுவரும் என்று யாராவது யோசித்திருப்பார்களா? கலாச்சாரம் சீரழிகிறது, இனக்குழு அடையாளம் மறைகிறது, தேவையில்லாத பொருட்கள் திணிக்கப்படுகின்றன, அறிவு வளம் மேற்கு நோக்கி நகர்கிறது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
பீட்சா வந்து கலாச்சாரம் போய்விட்டது என்று எப்படிச் சொல்லலாம்? நியூயோர்க்கில் இட்லி சாப்பிடுவதற்கு வேற்றின மக்கள் வரிசையில் நிற்கிறார்களே. ஒரு காலத்தில் எங்கள் முன்னோர்களின் கைகளில் இருந்த யோகா இப்பொழுது உலகம் முழுவதும் பரவியிருக்கிறதென்றால் அது நல்லதுதானே. கடந்த அக்டோபர் மாதம் கனடிய நாடாளுமன்றத்தில் இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடவேண்டும் என்ற பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முல்லத்தீவைச் சேர்ந்த ரானேந்திரன் இன்று அமெரிக்காவில் விண்கலம் நுண்ணறிவியல் ஆய்வுகள் செய்கிறார். இவர் வடிவமைத்த ஏவுகணைக்கு ’அசுரன்’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
அறிவு வளங்கள் பாதுகாப்பிலும் முன்னேற்றம் இருக்கிறது. நூலகம் திட்டம், தமிழ் சம்பந்தமான 32,000 அறிவு வளங்களை எண்மியமாக மாற்றி பாதுகாத்து அவற்றை பொதுவெளியில் இலவசமாகவும் வழங்குகிறது. இதைச் செய்வது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது நூலகம் திட்டத்தின் தமிழ் மொழி ஆவணப் பாதுகாப்பு முன்னணியில் இருக்கிறது.
உலகமயமாக்கல் என்னும்போது நன்மைகளையும் பார்க்கவேண்டும்; தீமைகளையும் ஆராயவேண்டும். உலகமயமாக்கலை நிறுத்தலாம், உலகமயமாவதை நிறுத்த முடியாது.
- கொக்குவில் கிராமத்து நினைவுகளை அசைபோடுவதுண்டா ? திரும்பவும் அங்கே போவீர்களா?
’பதிஎழு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்’ என்று மதுரையை இளங்கோவடிகள் வர்ணிப்பார். மதுரையை விட்டு ஒருவரும் புலம் பெயர்வதில்லை. அப்படி சிறப்பான ஊர். அதுபோலத்தான் கொக்குவிலும் ஒருகாலத்தில் இருந்தது. அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து அங்கேயே நிறை வாழ்வு வாழ்ந்து மடிந்த மக்கள். அதிகாலையில் ஆண்கள் வயலுக்குச் செல்ல பெண்கள் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு நடுவிலே பூ வைப்பார்கள். பூ இருந்தால் வீட்டிலே கன்னிப்பெண் திருமணத்துக்கு காத்திருப்பதாக அர்த்தம்.
எங்கள் வீட்டில் 17 விதமான மாமரங்களும் பலவகை பலா மரங்களும் இருந்தன. பழத்தை வைத்து மரத்தை அறியும் திறமை எங்களுக்கு இருந்தது. பலவகை பழங்கள் இருந்தும் ’கறுத்தக் கொழும்பான்’ மரம் இல்லை. ஒரு மைல் தூரத்தில் ஒட்டுக்கன்று ஒன்று உருவாக்கினோம். தினம் நான் போய் அதற்குத் தண்ணீர் ஊற்றி வருவேன். ஒருநாள் அதை எடுத்து வந்து வீட்டிலே நட்டதும் அது புசுபுசுவென்று வளர்ந்து, கனி தரும் சமயம் போர் வந்தது. பதிஎழு அறியா ஊரிலிருந்து எல்லோரும் புலம் பெயர்ந்தார்கள். வெறுமையான வீட்டில் போராளிகளும், தளபதிகளும், தலைவர்களும் தங்கினார்கள். நான் குளித்த கிணற்றுத் தண்ணீரில் அவர்கள் குளித்தார்கள். நான் வைத்த கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை விரும்பிச் சாப்பிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
சமீபத்தில் கொக்குவிலுக்குப் போன நண்பர் நான் பிறந்து வளர்ந்த வீட்டைப் படம் பிடித்து வந்தார். உடைந்த கிணறு, முறிந்துபோன மரங்கள், சிதிலமான வீடு. என் மனதில் நிற்கும் படம் வேறு. அம்மா இடுப்பிலே கைகளை வைத்துக்கொண்டு அண்ணாந்து மாமரத்தைப் பார்க்கும் படம். அம்மாவின் முதுகுதான் தெரிகிறது. சோகமான முதுகு. எனக்கு அந்தக் காட்சியே போதுமானது. நான் ஏன் அங்கே போகவேண்டும்? அது என்னிடம்தானே இருக்கிறது.
- இலங்கை கடந்த கால்நூற்றாண்டுக்கும் அதிகமாகப் பிரச்னைகள் பற்றி எரியும் தேசமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், உங்கள் படைப்புகளின் வழியாக அந்த அரசியலை நீங்கள் ஒரு எல்லைக்கு மேல் பேசவில்லையே ஏன்?
என் ஐயா சாப்பிட உட்காருவார். அம்மா வாழை இலையில் சோறு படைத்து, 12 விதமான கறிவகைகள் பரிமாறியிருப்பார். ஐயா சொல்வார் ’இஞ்சிப் பச்சடி இல்லையா?’ இலையில் இருப்பதை ருசிப்பது அல்லவா முறை. ஓர் எழுத்தாளரின் படைப்பை அவர் எழுதியதை வைத்து மதிப்பிட வேண்டும். எழுதாதை வைத்து அல்ல.
சேக்ஸ்பியர் காலத்தில் இங்கிலாந்தில் கொள்ளை நோய் பரவியிருந்தது. அவருடைய 37 நாடகங்களில் ஒன்றில்கூட கொள்ளை நோய் பற்றிய குறிப்பு கிடையாது. ஓர் ஊரில் நாடகம் நடத்தும்போது அங்கே கொள்ளை நோய் வந்துவிடும். உடனே அடுத்த ஊருக்கு. பின்னர் அடுத்த ஊருக்கு என்று செல்வார். புதுமைப்பித்தன் காலத்தில் சுதந்திரப் போராட்டம் நடந்தது. அனால் அவர் கதைகளில் அது கிடையாது.
போர் ஆரம்பித்தபோதும், அது முடிந்தபோதும் நான் வெளிநாட்டில் இருந்தேன். எனினும் போர் பற்றிய கட்டுரைகளும், சிறுகதைகளும் அவ்வப்போது எழுதினேன். எந்த எல்லை மட்டும் போகவேண்டுமோ அந்த எல்லை மட்டும் போயிருக்கிறேன். புலம்பெயர்ந்து அலைதல் பற்றிய நாவலும் போர் சம்பந்தமானதுதான். அதன் பெயர் ’கடவுள் தொடங்கிய இடம்.’
- ஈழப் போரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர்களுக்கு போர் என்ன புதிதா? சங்க இலக்கியம் முழுக்க போரும், காதலும்தானே. காரவேலன் என்ற அரசன் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் யானைக் குகையில் செய்தி பொறித்து வைத்திருக்கிறான். தொடர்ந்து தன்னுடன் போர் தொடுத்துவந்த சேர சோழ பாண்டிய மன்னர்களை அவன் முறியடித்ததாக. பல ஆயிரம் வருடங்களாக தமிழர்கள் கண்டது போர்தான்.
மக்கள் தம் விடுதலைக்காக போரிடுவதும் காலம் காலமாக நடக்கிறது. எரித்திரியா போரிட்டு எதியோப்பியாவில் இருந்து பிரிந்தது. தெற்கு சூடானும் போரிட்டு இன்று தனி நாடாக இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து பங்களதேஷ் பிரிந்ததும் போரினால்தான். அமெரிக்க உள்நாட்டுப் போரில் தெற்கு தோற்கடிக்கப்பட்டது. 620,000 பேர் இறந்தார்கள். அதே அளவு மக்கள் காயப் பட்டார்கள். அமெரிக்கா போரினால் பிரியாமல் ஒரு தேசமாக தொடர்ந்தது. இப்பொழுது ஆராயும் சரித்திர ஆசிரியர்கள் சிலர் பிரிவுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கலாமே. இத்தனை அழிவு நேர்ந்திராது என்கிறார்கள்.
1995ம் ஆண்டு கனடாவில் கியூபெக் மாகாணம் வாக்கெடுப்பு நடத்தியது. தொடர்ந்து கனடாவின் அங்கமாக இருப்பது என்று மக்கள் முடிவெடுத்தார்கள். அல்லாவிட்டால் இன்று கியூபெக் ஒரு தனி நாடாக இருந்திருக்கும். சில மாதங்களுக்கு முன் மக்கள் வாக்குப்படி பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து போனது எல்லோரும் அறிந்ததே.
ஈழத்துப் போரை வாக்கெடுப்பின் மூலம் தடுத்திருக்கலாம். அது நடக்கவில்லை. போர் தொடங்கியது. ஆனால் பிரிவினை சாத்தியமாகவில்லை. போர்களில் வழக்கமாக நடப்பதுபோல இறுதியில் அதர்மம் தலைதூக்கியதுதான் மிகவும் கொடுமையானது.
- தமிழில் இனி வரும் காலத்தில் ஈழத்துப் படைப்புகளே தனித்து நிற்கும் என்று எஸ்.பொ கூறினார். சமகால இலக்கியச் சூழலைவைத்து அந்தக் கூற்றைப் பற்றிக் கருத்து சொல்ல முடியுமா? போருக்குப் பிந்தைய ஈழ இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கிறது? புதியவர்கள் நிறைய பேர் வந்துள்ளார்களே…
ஈழத்துப் போரில் கிடைத்த அழிவுகளை கணக்கிடவே முடியாது. ஆனால் வரவு என்று நினைத்தால் போர் இலக்கியம் என்று சொல்லலாம். உலகத்தில் எந்த நாட்டு இலக்கியத்துடனும் ஒப்பிடும் வகை நல்ல இலக்கியங்கள் வெளிவருகின்றன. ஒரு நண்பர் இதுபற்றி என்னிடம் கேட்டபோது ’ரயில் புறப்பட்டுவிட்டது’ என்று சொன்னேன். இனி நிறுத்தமுடியாது. அத்தனை வேகத்துடன், விட்டதைப் பிடிப்பதுபோல, படைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன.
ஒரு பிரச்சினை. புகழ் பெறவேண்டும் என்ற அவசரம் தெரிகிறது. ஹேர்மன் மெல்வில் என்பவர் எழுதிய மோபி டிக் நாவல் விற்கவே இல்லை. தோற்றுப்போன எழுத்தாளராக அவர் இறந்துபோனார். பல வருடங்கள் கழித்து அந்த நாவல் பேசப்பட்டது. இன்று அது உலகத்தர நாவல்களின் வரிசையில் 17வதாக இருக்கிறது. உரிய நேரத்தில் புகழ் வந்து தீரும்.
நான் மதிக்கும் சில எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லலாம் என்றிருக்கிறேன். ஆபத்து என்னவென்றால் எப்படியும் சில பெயர்கள் தவறிவிடும். அதற்காக முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சயந்தன், தமிழ்நதி, ஷோபாசக்தி, அ.இரவி, சி.புஷ்பராஜா, சாத்திரி, குணா கவியழகன், அப்பு, நிலாந்தன், தமிழினி, தேவகாந்தன், கருணாகரன், தீபச்செல்வன் ஆகிய பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. எஸ்.பொ சொன்னதுபோல ஈழத்து படைப்புகள் தனித்துத்தான் நிற்கின்றன. அவற்றின் மாட்சி பற்றி காலம்தான் பதில் சொல்லும்.
- புலம்பெயர்ந்த தமிழர்களில் அந்தந்த நாடுகளின் மொழிகளில் எழுதக்கூடியவர்கள் உருவாகியுள்ளார்களா?
உண்மைதான். அந்தந்த மொழிகளில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஆங்கிலம் , பிரெஞ்சு ஜேர்மன் மொழிகளில் எழுதுகிறார்கள். ஃபின்னிஷ் மொழியில் புலமை அடைந்த எழுத்தாளர்கூட இருக்கிறார். மொழிபெயர்ப்புகளும் நடக்கின்றன. தமிழ்ச் சிறுகதைகளை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈவ்லின் மாசிலாமணி என்ற பெண்மணி. இவருக்கு இந்த வருடம், கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்ட மொழிபெயர்ப்பு விருது கிடைக்கிறது. கனடாவில், ஈழத்தைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவர் எழுதிய ஆங்கிலச் சிறுகதையை சமீபத்தில் படித்தேன். மகிழ்ச்சியில் அப்படியே உறைந்துவிட்டேன். அத்துடன் துக்கமும் சேர்ந்தது. அவருடைய எழுத்து ஆங்கில இலக்கியத்தை அல்லவா செழுமைப் படுத்தும்; தமிழை அல்ல.
- ஈழத் தமிழர்கள் மத்தியில் (தமிழகத் தமிழர்களிடம் உள்ளதைப் போலவே) சாதி என்பது மிக ஆழமாகப் பதிந்துள்ளாது. அது புலம்பெயர்ந்தோர் மத்தியிலும்கூட துர்திஷ்ட வசமாக உயிர்த்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உங்களுக்கு தவறான செய்தி கிடைத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதி வித்தியாசம் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒரு போதும் வெறியாக மாறியதில்லை. புலம்பெயர்ந்தபோது சாதியும் புலம்பெயர்ந்தது. ஆனால் இன்று, ஒரு தலைமுறை கடந்த நிலையில், சாதி வித்தியாசம் எங்காவது அபூர்வமாகவே தென்படுகிறது. இங்கே கனடாவில் ஏறக்குறைய 60,000 தமிழ் மாணவ மாணவிகள் கல்வி கற்கிறார்கள். எந்தப் பள்ளிக்கூடத்திலும் போய் ஒரு மாணவனிடமோ, மாணவியிடமோ ’நீ என்ன சாதி?’ என்று கேட்கலாம். அவர்கள் பதில் ’சாதி என்றால் என்ன?’ என்றிருக்கும்.
நேற்று ஒரு விருந்துக்குப் போயிருந்தேன். அங்கே சமீபத்தில் மணமுடித்த தமிழ் தம்பதியினரை சந்தித்தேன். பெற்றோர்கள் பேசிச் செய்து வைத்த கல்யாணம். உங்கள் கேள்வி எனக்கு ஞாபகம் வந்தது. பெண்ணிடம் அவர் கணவனின் சாதி என்ன என்று கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. ஆணிடம் அவர் மனைவியின் சாதி என்னவென்று கேட்டேன். அம்மாவிடம் கேளுங்கள் என்றார்.
- உங்களது பயண அனுபவத்தில் மிகமுக்கியமானதாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
நான் 1970 களில் பயணம் புறப்பட்டுவிட்டேன். நான் வெளிநாடுகளில் பார்த்த முதல் ஆச்சரியங்கள். தானே கழுவிக்கொள்ளும் கழிவறைகள். வரிசையில் நின்றால் உன்முறை வந்தே தீரும். நீ உருவாக்கிய குப்பையை நீதான் அகற்றவேண்டும்.
நிறையக் கற்றுக்கொண்டது ஆப்பிரிக்காவில்தான். அங்கே வீடுகளுக்கு வேலிகள் கிடையாது. மரங்கள் மக்களுக்கு பொதுவானவை. உன் வீட்டு மாமரத்து பழங்களை வழிப்போக்கன் பறித்துப் போகலாம். கேட்கக்கூடது. உணவுக்காக நீ வேட்டையாடலாம்; கேளிக்கைக்காக அல்ல. ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம். அலுவலகம் முடிந்த பின்னர் கம்பனி தலைவரும் கடைநிலை ஊழியரும் ஒன்றாக அமர்ந்து உரையாடியபடி உணவருந்துவார்கள். முதுகிலே தட்டிப் பேசுவார்கள்.
- நாவல்கள் எழுதுவதில் அதிக கவனம் செலுத்தவில்லையே ஏன்?
ஓர் எழுத்தாளருக்கு இரண்டு நாவல்கள் அதிகமானவை. சிலர் ஒரு நாவலுக்கு மேல் எழுதவில்லையே. புதுமைப்பித்தன் அரை நாவல் எழுதினார். அருந்ததி ராய் ஒரு நாவல் மட்டுமே எழுதி உலகப் புகழ் அடைந்தார். Gone with the Wind நாவலை மார்கிரெட் மிச்செல் எழுதினார். அது அமெரிக்க எழுத்தையே மாற்றியது.
’உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ சுயசரிதைத் தன்மையான நாவல். இதை autofiction என்பார்கள். ’கடவுள் தொடங்கிய இடம்’ இன்னொரு நாவல். ஈழத்துப் போர் பற்றியும், புலம்பெயர் வாழ்க்கை பற்றியும் நிறைய நாவல்கள் வந்துவிட்டன. ஆனால் அகதியாகப் புறப்பட்ட ஒருவரின் பயண அலைச்சல் இலக்கியமாக வரவில்லை. அந்த இடைவெளியை நிரப்புவதுதான் இந்த நாவல். கொழும்பில் இருந்து புறப்பட்ட அகதி ஒருவன் கனடா போய்ச் சேர எட்டு வருடங்கள் ஆகின்றன. அவனுடைய பயணக்கதையை நாவல் சொல்கிறது. ஹோமரின் ஒடிசி இதிகாசத்தில் ஒடிசியஸ் என்ற கிரேக்க அரசன், திரோஜன் போர் முடிந்தபின் தன் நாட்டுக்கு திரும்புகிறான். அந்தப் பயணம் பத்து வருடங்கள் நீடிக்கிறது. அதுபோல என்று வைத்துக் கொள்ளலாம்.
- அகராதியில் இல்லாத சொற்களை படைப்பில் பயன்படுத்துவதில் உடன்பாடில்லாதது குறித்து ஒரு முறை நேர்காணலில் குறிப்பிடிருக்கிறீர்கள். வட்டாரச் சொல் அகராதிகளை உருவாக்குவதுதானே நியாயமாக இருக்கும். அதைப் பயன்படுத்தாமல் போகும்போது, அதில் பொதிந்துள்ள ஒரு நிலப்பகுதியின் வாழ்க்கைமுறை, கலாசாரம் பதிவின்றி போய்விடுமல்லவா?
வட்டார மொழியில் எழுதப்பட்ட நாவல்களைப் படிப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். ஒரு முறை முக்கியமான சொல் ஒன்று புரியாமல் பலரை தொலைபேசியில் அழைத்துப் பொருள் கேட்டதும் உண்டு. ஒருவருக்குமே தெரியவில்லை. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் மொழிபெயர்த்து வெளிவந்த ஆங்கில நாவலைப் படித்தபோது எனக்கு முற்றிலும் புரிந்தது. அதே நாவலை தமிழில் படித்தபோது புரியவில்லை. தொலைபேசியில் லக்ஷ்மியை அழைத்து அவருக்கு எப்படி வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்தது என்று கேட்டேன். அவர் ஆசிரியருடன் தான் பேசி பொருளை அறிந்து கொண்டதாகச் சொன்னார். ஒரு புத்தகத்தை புரிவதற்கு எல்லோராலும் ஆசிரியரை அழைத்து பொருள் கேட்க முடியுமா?
வட்டார மொழி புரிவதற்கு வட்டார மொழி அகராதியை வாங்கச் சொல்கிறார்கள். எந்த அகராதியை வாங்குவது? கரிசல்காடா, மதுரையா, ராமேஸ்வரமா, யாழ்ப்பாணமா அல்லது வன்னியா? ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒவ்வொரு வட்டார மொழி இருக்கிறதே. என்னுடைய அம்மா பேச்சில் பயன்படுத்திய சில வார்த்தைகள் இரண்டு வீதிகள் தள்ளி இருக்கும் ஒருவருக்குப் புரியாது. அப்படியிருக்க, எல்லாப் பிராந்தியங்களையும் உள்ளடக்கும் விதமாக வட்டாரமொழி அகராதியை உருவாக்க முடியுமா? ஒருமுறை நான் என் கட்டுரையில் ’கதிரை’ என்ற சொல்லை எழுதிவிட்டேன். ’கதிரை என்றால் என்ன?’ என்று கேட்டு பல மின்னஞ்சல்கள் வந்தன. ஈழத்துப் பேச்சுவழக்கில் இருக்கும் சொல் அது. நாற்காலி என்று பொருள். அகராதியிலும் உண்டு. இருந்தாலும் வாசகர்களுக்கு குழப்பம்.
வட்டார மொழியில் ஓர் எழுத்தாளர் எழுதுவது அவருடைய தேர்வு. நான் ஒன்றும் அதற்கு எதிரியல்ல. ஆனால் என்னைப்போன்ற ஒரு வாசகனுக்கு அரைகுறையாகப் புரிந்தால் போதாது. முழுவதுமாக புரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
- ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதில் தீவிரமாக இருக்கிறீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்?
நிற்கும் பஸ்சில் ஏறுவதிலும் பார்க்க ஓடும் பஸ்சில் ஏறினால் நீங்கள் நிச்சயம் உங்கள் இலக்கை அடைந்து விடுவீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜானகிராமனும், டாக்டர் திருஞானசம்பந்தமும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி ஹார்வார்ட் தமிழ் இருக்கையை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுடன் சேர்ந்து இயங்கி, தமிழ் இருக்கைக்காக நண்பர்களும், உலகத்து தமிழ் பற்றாளர்களும் உழைத்து வருகிறோம். நிதி சேகரிப்பு வேகமாக நடக்கிறது. விரைவில் 3 மில்லியன் டொலர்கள் தொகையை எட்டிவிடுவோம். எங்கள் இலக்கு 6 மில்லியன் டொலர்கள்.
உலக மொழிகளில் தமிழ் ஒன்றே சிறப்புத் தன்மை கொண்டது. பல ஆயிரம் ஆண்டுகள் முன்தோன்றி, உயர் இலக்கியம் படைத்து, இன்றும் வாழும் செம்மொழி தமிழ். யூத மத நூல் ஹீப்ருவில் எழுதப்பட்டது. கிறிஸ்துவ புனித நூல் கிரேக்கத்திலும் லத்தீனிலும் எழுதப்பட்டது. சமஸ்கிருதத்தில் வேதங்கள் எழுதப்பட்டன. அரேபிய மொழியில் இஸ்லாமிய புனித நூல் திருக்குர் ஆன் பதிவுசெய்யப்பட்டது. தமிழ் மொழியில் மிகவும் அரிய புத்த நூல்களும், சமண நூல்களும் கிறிஸ்துவ நூல்களும், இஸ்லாமிய நூல்களும், சைவ நூல்களும் உள்ளன. இத்தனை பெருமை இருந்தும், மற்றைய செம்மொழிகளுக்கு ஹார்வார்டில் இருக்கைகள் இருப்பதுபோல தமிழ் மொழிக்கு அமையவில்லை. Tamil is the only secular classical language that survived more than 2500 years. இது உலகளவில் தமிழுக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமதிப்பு.
ஒரு சில உலகத்துப் பெருந்தகைகள் பெருந்தொகை தந்து ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைப்பதில் பெருமை ஒன்றும் இல்லை. தமிழ் பற்றாளர்கள் அனைவரும் சேர்ந்து இதை உருவாக்கவேண்டும். அப்பொழுதுதான் அது உலக மக்களுக்கு சொந்தமானதாக அமையும். அதுதான் தமிழுக்கு பெருமை. தமிழர்களுக்கும் பெருமை. உலக மொழிகளுக்கு சரியாசனமாக ஓர் அரியாசனம் தமிழுக்கு அமையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
- உங்கள் கதைகளின் பிரதான சிறப்புகளில் ஒன்று உவமைகள். வாசகர்களுக்கு சிரமமான பல உணர்வுகளை எளிமையாக அதன் வழி கடத்திவிடுகிறீர்கள். உங்கள் வாசிப்பில் நீங்கள் வியந்த உவமைகள்?
சங்க இலக்கியங்களில் கிடைக்காத உவமையா? எல்லாமே அங்கேயிருந்துதான் ஆரம்பமாகின. ஒருவன் மார்பில் ஒரே இடத்தில் பல அம்புகள் தைத்து கிடக்கிறான். புநானூறுப் புலவன் அதை ’வண்டிச் சக்கரத்தின் ஆரங்கள் போல’ அம்புகள் பாய்ந்துள்ளன என்று வர்ணிக்கிறான். இன்னோர் இடத்தில் பெண் அணியும் தங்கமாலை மானின் நெற்றி போன்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது என்கிறான். என்ன அழகான உவமை. சமீபத்தில் நான் படித்தது. ’மிதிவெடி புதைத்த நிலத்தில் நடப்பதுபோல எச்சரிக்கையாக அவள் நடந்தாள்.’
- உங்களை வியக்கவைத்த (உங்கள் கதையினதாகவும் இருக்கலாம்) ஒரு கதையின் முதல்வரி?
பல இருக்கின்றன. முதல் வரி முக்கியம் என்று நினைப்பவன் நான். அழகாக அலங்கரிக்கப்பட்ட வாசல்போல அது உங்களை உள்ளிழுக்கும். ’முழுநாவலும் மனதில் உருவாகிவிட்டது. முதல் வரிக்காக காத்திருக்கிறேன்’ என்று சொன்ன எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். முக்கியமாக ஹெமிங்வே என்ற எழுத்தாளர் முதல் வரி கிடைக்காமல் பல நாட்கள் அவஸ்தைப்பட்டிருக்கிறார்.
சேக்கிழார் பெரிய புராணம் பாடத் தொடங்கியபோது அவருக்கு முதல் வரி அல்ல, முதல் சொல்லே கிடைக்கவில்லை. சிவபெருமான் ‘உலகெலாம்’ என எடுத்துக் கொடுத்து ஆரம்பித்து வைத்ததாக புராணங்கள் சொல்லும். நீங்கள் கேட்ட தொடக்க வரிகள் சில.
அப்பா தன் காதலியை அறிமுகப்படுத்தியபோது எனக்கு வயது எட்டு.
இருவரில் யாரை முதலில் கொல்வது என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
மனைவியின் பெயர் எழுதிய அட்டையை தூக்கிப் பிடித்தபடி அவன் விமான நிலையத்தில் காத்திருந்தான்.
நடு நிசியில் வந்து கதவைத் தட்டிய பேய் என்னுடைய பாஸ்வேர்டைக் கேட்டது.
பீரங்கியை இயக்கத் தெரிந்தவன் இறப்பதற்கு 5 நிமிடம் இருக்கும்போது பாடத் தொடங்கினான்.
- ஐம்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். போதும் என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா?
ஒவ்வொரு நாளும் தோன்றுகிறது. ஜெயகாந்தனைப்போல துணிச்சலுடன் பேனாவை மூடிவைக்க முடியவில்லை. இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோ பேசிய ஒரு கூட்டத்தில் நான் இருந்தேன். அவர் இனிமேல் தான் எழுதப் போவதில்லை என்ற அறிவிப்பை அன்று செய்தார். நான் திகைத்ததுபோல கூட்டமும் திடுக்கிட்டு நின்றது. அடுத்த வருடம் அவருடைய புத்தகம் ஒன்று வந்தது. அதற்கு அடுத்த வருடமும். அடுத்த வருடமும். அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை.
எழுத்தாளர்களுக்கு விசயங்கள் எழுதித் தீர்வதில்லை. சார்ல்ஸ் டிக்கின்ஸ் சொல்வார் ’நான் என் மூளைப் பாரத்தை இறக்கிவைக்க எழுதுகிறேன்’ என்று. ஏதாவது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கும். போதும் என்ற நிலை வராது. ஆனால் ’ஏலாது’ என்ற நிலை வரக்கூடும். அதுவரை எழுத வேண்டியதுதான்.
- உங்களது நம்பிக்கைக்கு உரிய விமர்சகர் யார்?
ஒரு முறை எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸிடம் கேள்வி கேட்டார்கள். ’நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?’ அவர் சொன்னார் ’அடுத்து வரும் 300 வருடங்கள் விமர்சகர்களுக்கு வேலை கொடுக்கத்தான்.’ தமிழில் இப்போதெல்லாம் அவரவர் புத்திக்குத் தோன்றியமாதிரி உடனேயே முகநூலிலும் இணையத்தளங்களிலும் கருத்து எழுதிவிடுகிறார்கள். முன்பெல்லாம் ஒன்றிரண்டு தரமான மதிப்பீடுகள் பத்திரிகைகளில் வரும். எழுத்தாளருக்கு அப்படியான மதிப்பீடுகள் உதவியாக இருக்கும். அவசரத்தில் எழுதியவை, ஆழமாகப் படித்து எழுதியதாக பெரும்பாலும் இருப்பதில்லை. ’தேதி முடிந்துபோன மருந்து. ஒரு பிரயோசனமும் இல்லை.’ என்று ஒருவர் புத்தக மதிப்புரை எழுதுகிறார். ‘எனக்கு இந்தப் புத்தகத்துக்கு முகநூலில் 1000 லைக் கிடைத்திருக்கிறது.’ இப்படி பெருமைப்படுகிறார் ஆசிரியர் ஒருவர். ஒரு புத்தக விமர்சனம் இப்படி வருகிறது. ‘என் வீட்டிலே உதவாத புத்தகங்களுக்கு என்று ஒரு புத்தகத்தட்டு வைத்திருக்கிறேன். அதிலே இந்தப் புத்தகத்தை அடுக்கினால் மற்றவை எல்லாம் கீழே இறங்கி ஓடிவிடும்.’ இப்படியான விமர்சனம் நல்லதா? ‘காமம் செப்பாது’ எழுதும் விமர்சனம் எல்லா எழுத்தாளர்களாலும் வரவேற்கப்படும்.
- எழுத்தை மட்டும் நம்பி வாழலாம் என்று என்றைக்காவது நினைத்துப் பார்த்ததுண்டா?
என்னுடைய புத்திக்கூர்மை எண் என் வயதிலும் பார்க்க குறைந்தது. ஒருமுறை அப்படி நினைத்ததுண்டு. நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்தபோது விஞ்ஞானப்பாடத்தை நிறுத்திவிட்டு தமிழ் படிக்கப் போகிறேன் என்று அண்ணருக்கு கடிதம் எழுதிவிட்டேன். அவர் கொழும்பிலிருந்து அடித்துப்பிடித்து அடுத்த ரயில் வண்டியில் என்னைப் பார்க்க வந்து கெஞ்சினார். ’நீ விஞ்ஞானப் படிப்பை முடி, அதற்குப் பிறகு என்னவும் செய்’ என்றார். மனது மாறி விஞ்ஞானம் படித்தேன். நான் விஞ்ஞானம் படிப்பதால் அண்ணருக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. இன்றும் அவரை நெகிழ்வுடன் நினைக்கிறேன்.
என்னுடைய முதல் கதைக்கு தினகரன் பத்திரிகை பத்து ரூபா தந்தது. முழு நேர எழுத்தாளனாக வாழ்க்கையை எப்படி ஓட்டியிருப்பேனோ தெரியாது. ஆங்கிலத்தில் வெளிவந்த என்னுடைய மூன்று கதைகளுக்கு கிடைத்த சன்மானம் என் வாழ்நாள் முழுக்க எழுதிய தமிழ் கதைகளுக்கு கிடைத்ததிலும் பார்க்க அதிகம்.
- உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
உண்டு. சடங்குகளில் நம்பிக்கை கிடையாது.
- கனவுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் படைப்புகளுக்கு அவற்றோடு ஏதேனும் தொடர்பிருக்கிறதா?
மிக அபூர்வமாகவே எனக்கு கனவுகள் வருகின்றன? என் மனைவிக்கு தினம் தினம் அகலமான விவரங்களுடன் கனவுகள் வரும். காலையில், தான் பார்த்த ஒரு திரைப்படத்தை விவரிப்பதுபோல சட்டகம் சட்டகமாகச் சொல்வார். சிலவேளை எனக்கு வரும் கனவு காலையில் மறந்துபோகும். ஒரேயொரு முறை வந்த கனவு இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு சிக்கலான கணிதத்தை எடுத்துக் கொண்டு பேராசிரியரிடம் சென்று விடை கேட்கிறேன். அவர் படிப்படியாக விளக்கி விடையை கண்டு பிடிக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது விடை சரியாகவே இருக்கிறது. ஒரு விசயம் மாத்திரம் புரியவே இல்லை. கணிதம் என் மூளையில் இருந்தது. பேராசிரியர் கொடுத்த விடையும் என் மூளையில் இருந்தே பிறந்தது. அப்படியானால் எனக்கு ஏன் அது தோன்றவில்லை? கணிதத்துடன் பேராசிரியரிடம் ஏன் போனேன்? பிரபஞ்ச மர்மங்களில் ஒன்று.
- தமிழர்களும் சினிமாவும் பிரிக்க முடியாதவை. சினிமா நடிகர்களில் நீங்கள் யாருடைய ரசிகர்?
நான் பாக்யராஜை சந்தித்தது கிடையாது. நேற்று அதிசயமாக அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. என்னுடைய ஒரு கட்டுரையை படித்துவிட்டு பாராட்டிப் பேசினார். மகிழ்ச்சியாகவிருந்தது. ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னர் பாக்யராஜ் நடித்த ’புதிய வார்ப்புகள்’ திரைப்படம் வெளிவந்தது. நான் அப்பொழுது ஆப்பிரிக்காவில் ஒரு குக்கிராமத்தில் இருந்தேன். என் வீட்டில் புதிதாக வாங்கிய வீடியோ ரிக்கார்டர் இருந்தது. அதில் முதன்முதலாகப் பார்த்தது புதிய வார்ப்புகள் படத்தைத்தான். என்னுடன் நாற்பது தமிழர்களும் நாலு ஆப்பிரிக்கர்களும் படத்தை பார்த்தார்கள். ஆப்பிரிக்காவில் வாழ்ந்த அத்தனை தமிழர்களும் அன்று என் வீட்டில்தான் என்று நினைக்கிறேன். திரைக் கதை அமைப்பதில் பாக்யராஜ் மன்னர். ஒவ்வொரு பத்து நிமிடமும் கதையில் ஒரு திருப்பம் இருக்கும். அவரை எனக்குப் பிடிக்கும். இவருடைய ரசிகன் நான் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எனக்கு ஒரு நடிகரும் இல்லை.
- ஓர் எழுத்தாளராக இயங்கிபடி அதிகமான நேர்காணலைச் செய்திருப்பவர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். எல்லோரிடமும் நீங்கள் கேட்க விரும்பும் ஒரு கேள்வி?
‘நீங்கள் எந்த விலங்காக இருக்கப் பிரியப்படுகிறீர்கள்?’ ஓர் எழுத்தாளரின் குணாதிசயத்தை அந்தப் பதிலை வைத்து அளந்துவிடலாம். என்னிடம் அதே கேள்வியை யாராவது கேட்டால் ’ஸ்லொத்’ என்று நான் பதில் சொல்வேன். ஒரு நாளைக்கு அது 20 மணித்தியாலம் மரத்திலே தூங்கும். மீதி நாலு மணி நேரம் அதே மரத்து இலைகளை உண்ணும். மறுபடியும் தூங்கப் போய்விடும். வாரத்தில் ஒரு நாள் மரத்திலிருந்து இறங்கினால் போதும். ஒரு மணிநேரத்தில் ஒரு மைல் தூரம் நடக்கும். எதிரிகள் குறைவு. பொறாமைப்படவைக்கும் வாழ்வு.
- பலரை நீங்கள் நேர்காணல் செய்தபோது சில வேடிக்கையான கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள். உங்களிடம் அப்படி மூன்று கேள்விகள்…
– அடுத்த ஜென்மத்தில் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்றால். யாராகப் பிறக்க விரும்புவீர்கள்?
வேறு யார்? என் மனைவியாகப் பிறக்க விருப்பம். என்னைப் போல ஒரு பாவிக்கு மனைவியாக வாய்த்து, அவர் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து ‘இடது பக்கம், வலது பக்கம், வேகம் கூடிவிட்டது, சிவப்பு விளக்கு’ போன்ற அரிய யோசனைகளை வழங்க ஆசை.
– இந்த நிமிடத்திலிருந்து இந்த உலகத்தில் முழுமுற்றான தலைவர் நீங்கள்தான் என்றால், நீங்கள் செய்யும் முதல் காரியம் என்ன?
புது வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பிப்பதுதான்.
– கடந்த காலத்திலிருந்து ஒருவரை உயிர்ப்பிக்க முடியும் என்றால் யாரை உயிர்த்தெழச் செய்வீர்கள்?
மோசஸ் உயிர்த்தெழுந்தால் நல்லது. இவர்தான் 3000 வருடங்களுக்கு முன்னர் எகிப்திலே இருந்து அடிமைகளை விடுதலை செய்து செங்கடலை கடந்து அழைத்துப்போனவர். வரலாற்றில் முதன்முதலாக ஓர் அரசனுடன் போராடி அடிமைகளை விடுவித்தவர். அதன் பின்னர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அடிமைகள் விடுதலைக்காக பேசியபோது அழுதவர் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ். பிறகு அமெரிக்காவும் அடிமை முறையை ஒழித்தது. அடிமைகள் ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர் என்ற முறையில் இவர் முக்கியமானவர்.
இப்போதுதான் அடிமைகள் இல்லையே. மோசஸ் திரும்பவும் பிறந்து என்னத்தை சாதிப்பார்? என்று நீங்கள் கேட்கலாம். மனிதகுலம் உலகில் வாழும் மட்டும் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுபவர்களும் இருப்பார்கள். அவருக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும்.
END