சந்திப்போம்

சந்திப்போம்

அ.முத்துலிங்கம்

நான் செழியனை முதன்முதலில் சந்தித்தது 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் நடந்த ஒரு விழாவில். என்னை ’அண்ணை’ என்று அழைத்தார். கூச்சமாக இருந்தது. நீண்ட காலமாக என்னை அப்படி ஒருவரும் அழைத்தது கிடையாது. அவர் குரல் கனிவாகவும், குனிந்து கிட்டக் கேட்கவேண்டும் என்பதுபோல மிருதுவாகவும் இருந்தது. உடனேயே ஓர் அந்நியோன்யம் எங்களுக்கிடையில் உண்டாகிவிட்டது.  அந்த முதல் சந்திப்பே என்னை மயக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய ’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ புத்தகத்தை எடுத்து கையொப்பமிட்டு, தேதியை 2001 என்று எழுதி எனக்கு தந்தார். நான் செழியனை கவிஞர் என்றும் பாடகர் என்றும் அறிவேன். அந்தப் புத்தகத்தை கையில் பெற்றபோதுதான்  அவரை எழுத்தாளராக அறிய நேர்ந்தது. விடைபெறும்போது ‘அப்ப சந்திப்போம்’ என்றார். நானும் ‘சந்திப்போம்’ என்றேன்.

சில நாட்களில் மறுபடியும் அவரை சந்தித்தபோது அவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன். பகுதிநேர வேலை செய்துகொண்டே, உணவில் ஊட்டச்சத்து பற்றி ஏதோ ஒரு படிப்பு படிப்பதாக உற்சாகத்துடன் சொன்னதாக ஞாபகம்.  ’படியுங்கள், என்ன நடந்தாலும்  அதை மட்டும் கைவிடவேண்டாம்.’ என்றேன்.  அடுத்து வந்த ஐந்து வருடங்களில் எப்பொழுது, எங்கே சந்தித்தாலும்  அவரிடம் படிப்பைப் பற்றிக் கேட்டேன். அவரும் ’நிச்சயம் படிக்கிறேன்’ என்றார். பின்னர், இரண்டாவது ஐந்து வருடங்கள் அதே கேள்வியை கேட்டபோது ‘படிக்கத்தான் வேண்டும்’ என்றார். மூன்றாவது ஐந்து வருடங்கள் ’அண்ணை, பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனி எனக்கு படிப்பு தேவையில்லை’ என்றார், அதே உற்சாகத்துடன்.

அவர் தந்த புத்தகத்தை  வாசித்து முடித்துவிட்டு ஒருநாள் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் அபூர்வமாக டைரிக் குறிப்புகள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.  ஈழத்திலிருந்து  டைரிக் குறிப்புகள்  புத்தகமாக வெளிவந்து நான் படித்தது கிடையாது. இதுவோ, ஒரு போராளியின் டைரிக்குறிப்புகள். டிசெம்பர் 1986ல் ஆரம்பித்து தை மாதம் 1987ல் முடிவுக்கு வருகிறது. இரண்டே இரண்டு மாதங்கள்தான். ஒரு போராளி படும் பாடுகள், அவன் சந்திக்கும் சவால்கள், பொய்மைகள், துரோகங்கள், படுகொலைகள் என மிகத் தெளிவான வார்த்தைகளில் உண்மையாகப் பதியப்பட்ட எண்ண ஓட்டங்கள் அதில் காணப்படும்.  சோடிப்பதற்கோ அலங்காரம் செய்வதற்கோ ஒன்றுமில்லை. பச்சை உண்மை அப்படியே வார்த்தைகளாக மாறி ஒரு திகில் நாவல்போல பதிவாகிக் கிடந்தது.  உலகத்து போர் இலக்கியங்களில் இதற்கு மதிப்பான ஓர் இடம் இருக்கிறது என அவரிடம் சொன்னேன்.

கனடாவில் தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பை 2001ல் தொடங்கியபோது செழியன் எங்களுடன் இணைந்து முழுமூச்சாக உழைத்தார். ஆரம்பத்தில் இந்த இயக்கம் பல இன்னல்களைச் சந்தித்தது. அவருடைய ஆலோசனைகளும், செயல்பாடுகளும் இயக்கத்தை முன்னெடுப்பதில் பெரும் உதவியாக இருந்தன. அவருடைய உடல் நிலை சீராக இருந்த அத்தனை வருடங்களும் அவர் எங்களுடன் சேர்ந்து உழைத்தார். அதை மறக்க முடியாது.

செழியன் கவிதைகள் எழுதுவது மட்டுமல்ல அதை பாடலாகவும் பாடும் திறமை கொண்டவர். மேடைகளில் அவருடைய பாடல்களை இசையுடன் பாடி இருக்கிறார். தீவிரமான நாடகப் பிரியர். நாடகங்கள் எழுதி நடித்திருக்கிறார். அவருடைய கவிதைகள் சில இசையமைக்கப்பெற்று கனடாவில் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.

இவருடைய கவிதைகள் எளிமையானவை. சாதாரண மனிதர்களின் சாதாரண நிகழ்வுகள்தான் இவருடைய பாடு பொருள்.  அவற்றின் வீச்சு அகலமானது. சிக்கனமான வார்த்தைகளில் உனர்ச்சிகளைச் சொற்ப நேரத்தில் கொட்டிவிடும் தனித்தன்மையான படிமங்கள் அவை. கிராமத்து சொற்பிரயோகங்கள் அவ்வப்போது கவிதையின் செழுமையை கூட்டும்.  ’கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள்’ இவருடைய பிரபலமான கவிதை. மீன்குஞ்சுகள் மணலில் புரள்கின்றன. கோபுரத்தில் ஏறுகின்றன. பழுத்த இலைகளின் மேல் படுத்து உறங்குகின்றன. மீன்கள் என்ன செய்கின்றன என ஒவ்வொரு வரியும் சொல்லியபடியே நகரும். இறுதியில் கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள் மறுபடியும் திரும்பவில்லை என்று கவிதை முடியும். அப்பொழுதுதான் அவர் மீன்களைப்பற்றி பேசவில்லை என்பது புரியவரும்.

செழியனுடைய கவிதை ஒன்றை நான் பலதடவை படித்து ரசித்திருக்கிறேன். எத்தனை தடவை படித்தாலும் ஒவ்வொரு தடவையும் அது புதிதுபோலவே தோன்றும், சிலசமயம் புதிய ஒரு கருத்தும் கிடைக்கும். படித்து முடிக்கும்போது மனமும் கனமாகிவிடும்.

அவன் செத்துப்போய் விட்டான்

அவனுக்குப் பிரியமான துப்பாக்கியில்

இப்போ அவனது காதலி

சுடுவதற்கு பழகிவருகின்றாள்

மரணங்களை எதிர்கொண்டு

நாங்கள் காத்திருக்கின்றோம்

எங்கள் துப்பாக்கிகளுக்காக

புதிய தோழர்கள் காத்திருக்கின்றனர்.

பயிற்சி முடித்து விரைவில்

நீ திரும்பி வருவாயென

நம்புகிறேன்.

நீ வரும்போது

ஒருவேளை

நான் இல்லாமல் போகலாம்.

………………………………..

என் சமாதியில்

அழுகையின் ஒலி கேட்கவே கூடாது.

என் சமாதியில்

முட்களைத் தாங்கி

அழகிய பூச்செடி ஒன்று

துளிர்விட்டு வளரும்

நான் நம்புகிறேன்.

இந்தக் கவிதையை அவர் 23 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். இதைப் படிக்கும் அவரது மனைவி, பிள்ளைகள் மனம் என்ன பாடுபடும். அவர்களைத் தேற்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை. அவர்கள் மனம் சமாதானம் அடையட்டும். அவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

2001ல் அவர் கையெழுத்திட்டு தந்த ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ புத்தகத்தை இன்று திறந்து அதிலே எழுதியிருந்த கடைசிப் பக்கத்தின் இறுதிப் பந்தியை படித்தேன். அவர் பிறந்த நாட்டைவி விட்டு புது நாடு தேடி அகதியாகப் புறப்பட்ட தருணத்தை இப்படி விவரிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு படித்தபோதும், இப்போது படித்த போதும், அந்த வர்ணனை மனதைப் பிழிந்தது. ’என் தேசம். தந்தையர் வாழ்ந்த தாய்த் திருநாடு. தந்தையும் தாயும் கூடிக்குலவி வாழ்ந்த பொன்னாடு. விமானம் உயர உயரப் பறந்தது. என் தேசத்தில் இருந்து வந்த ஒளிக்கீற்றுகள். கண்சிமிட்டி விடைதருவதுபோல இருந்தது. இனிய தேசமே மறுபடியும் நான் வருவேன். மனிதன் எனும் இனம் எழுந்து வரும் நாளில் மறுபடி நான் வருவேன். ஒருவேளை என் முற்றாத கனவுகளோடு முதிர்ந்த வயதில் ஏதோ ஒரு நாட்டில் அகதியாய் அநாதைப் பிணமாய் பனிக்கட்டிகளுக்கு நடுவிலோ, இயந்திரங்களுக்கு அடியிலோ மரணித்துப் போகலாம். காற்றே, மரம், செடி கொடிகளே என் தலைமுறை மறுபடி இங்குதான் வேர்விட்டு இருதளிர் கரம் நீட்டி வளரும். என் புதல்வர்கள், அல்லது போனால் என் பேரர்களில் ஒருவர் வருவார்கள். இத்தாய்த் திருநாட்டை முத்தமிட வருவார்கள். இனிய தேசமே தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதும் தவறு செய்திருந்தால் தங்கள் கண்ணீரால் என் பாவங்களை இவர்கள் கழுவுவார்கள். தேசமே, என் தலைமுறையையாவது இங்கு வாழவிடு.’

பிறந்த நாட்டை விட்டு வெளியேறிய அந்தக் கணம் இவருடைய மனம் என்ன வேதனையுற்றிருக்கும், எத்தனை வலிகள் அங்கே மோதியிருக்கும் என்பதை இன்றுகூட எம்மால் உணர்வது கடினம்.  அவருடைய சந்ததியில் ஒருவர் மறுபடியும் ஈழத்துக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்கு உறுதியாக இருந்திருக்கிறது.

நான் அவரை கடைசியாக சந்தித்தது 2017 நவம்பர் 11ம் தேதி அன்று. தமிழ் பேராசிரியரும், எழுத்தாளருமான டேவிட் ஷுல்மனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய விருது விழாவில் செழியன் கலந்துகொண்டார். விழாவில் அத்தனை சனத்துக்கும் மத்தியில் என்னைத் தேடிக் கண்டுபிடித்து  கைகுலுக்கினார். அடையாளமே தெரியாதபடி மெலிந்து உருக்குலைந்து காணப்பட்டார். அன்று அவர் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டிருக்கவே கூடாது.  டேவிட் ஷுல்மனுடைய புத்தகம் பற்றி அவர் கேட்டார்.  நான் அவருடைய உடல்நிலை பற்றி விசாரித்தேன். பின்னர் வழக்கம்போல ‘அப்ப சந்திப்போம்’ என்று சிரித்தபடி கூறி  விடைபெற்றார். நானும் ’சந்திப்போம்’ என்றேன். எங்கே என்று அவர் சொல்லவில்லை. எப்பொழுது என்றும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.

END

 

About the author

2 comments

  • அவர் அகதியாகப் புறப்பட்ட தருணத்தை படித்த போது.. மனதை பிழந்துவிட்டது சோகம்.. கண்கள் கலங்கிவிட்டது..

  • “ஒரு மனிதனின் நாட்குறிப்பு“ இப்பொழுது தான் படித்தேன். படித்த இரண்டு நாட்களாக அதனைப் பற்றிய நினைவுதான். மனித உயிா் வாழ்வதற்கு இப்படியெல்லாம் கஷ்டங்கள் வருமா?. அனைத்து சோதனைகளையும் கடந்து அன்னிய தேசத்தில் அவா் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து அதுவும் அா்த்தம் உள்ள வாழ்வாக வாழ்ந்து… அவா் இன்று நம்மிடையே இல்லை என்றாலும். அவரது வாழ்வு அமரத்துவம் வாய்ந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவா் எழுதியது போல் ”ஒருவேளை என் முற்றாத கனவுகளோடு முதிர்ந்த வயதில் ஏதோ ஒரு நாட்டில் அகதியாய் அநாதைப் பிணமாய் பனிக்கட்டிகளுக்கு நடுவிலோ, இயந்திரங்களுக்கு அடியிலோ மரணித்துப் போகலாம்…” என்ன ஒரு தீா்க்க தாிசனம்.
    ”என் புதல்வர்கள், அல்லது போனால் என் பேரர்களில் ஒருவர் வருவார்கள். இத்தாய்த் திருநாட்டை முத்தமிட வருவார்கள். இனிய தேசமே தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதும் தவறு செய்திருந்தால் தங்கள் கண்ணீரால் என் பாவங்களை இவர்கள் கழுவுவார்கள். தேசமே, என் தலைமுறையையாவது இங்கு வாழவிடு.” இத விட தாய்நாட்டை நேசிக்கும் சிந்தனை வேண்டுமா?. செழியன் அவா்கள் உங்கள் ஆன்மா ஈழத்தில் சாந்தியடையட்டும்.

    மற்ற சகோதரா்கள் (மணி, சூாியன் போன்றவா்களின்) இன்றைய நிலை அறிய மனம் துடிக்கிறது…இதுவே கதாசிாியனின் மிகப் பொிய வெற்றி.
    இப்படிக்கு
    ராதாகிருஷ்

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta