அந்திமழை நேர்காணல்
- கொக்குவில் முதல் கனடா வரையிலான பயணம்: பெற்றது என்ன ? இழந்தது என்ன?
பயணத்தில் பெறும் அனுபவத்திற்கு ஈடு அதுதான். கொக்குவில என்ற சின்னக் கிராமத்தில் பிறந்த நான் பயணங்களின்போது நிறையக் கற்றுக்கொண்டேன். நூறு புத்தகங்கள் படிப்பதும் சரி ஒரு புதியவரை சந்திப்பதும் ஒன்றுதான். ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணாதிசயத்தை நான் பெற்றுக்கொள்ள முயல்வேன். உலகத்தின் தலை சிறந்த நாடக ஆசிரியரை ஒருமுறை சந்தித்தேன். அந்த நாடகத்தின் கதாநாயகன் ஒரு செங்கல்லை வீச, அது மேடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழவேண்டும். அந்தக் காட்சிக்காக 2000 தடவை ஒத்திக்கை பார்த்தார்கள். நான் கேட்டேன் ’கொஞ்சம் தள்ளி விழுந்தால் என்ன? யாருக்குத் தெரியப் போகிறது?’ அவர் சொன்னார் ’எனக்குத் தெரியுமே.’ ஒரு காரியத்தை எடுத்து முடித்தால் அது உன் மனதுக்கு திருப்தியை கொடுக்கவேண்டும். அந்த சம்பவம் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது. நாடு நாடாக அலைந்தபோது அடுத்துக் கற்றது பண்பு. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்.’
இழந்தது என்றால் என் கிராமத்தை. நான் விளையாடிய பூமியை. நான் படித்த பள்ளிக்கூடத்தை. நான் ஏறி விளையாடிய மரங்களை. என் நண்பர்களை. உறவுகளை. ஓர் இரவு உண்ணாமல் படுத்து தூங்கிவிட்டேன் என்பதற்காக நடு இரவில் என்னை எழுப்பி உணவூட்டிய பக்கத்து வீட்டு அன்னம்மா ஆச்சியை.
2) ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சூழலில் தற்போது நிலவும் ஈழ அரசியலையும் இலக்கியத்தையும் கவனிக்கிறீர்களா? அது பற்றிய தங்கள் கருத்து..
சங்க இலக்கியத்தில் போரும் காதலும் இருந்தது. காதல் இலக்கியம் தமிழில் தொடர்ந்தது. ஆனால் போரிலக்கியம் கிடையாது. ஈழத்துப் போருக்குப் பின்னர் கிடைத்த ஒரே ஆதாயம் நிறைய போர் இலக்கியங்கள் படைக்கப்பட்டதுதான். அவற்றின் தரமும் குறைந்ததாக இல்லை. உலகத்தரத்தில் பல படைப்புகள் வந்தபடியே உள்ளன. ஈழத்தில் இருந்தும் எழுதுகிறார்கள், புலம் பெயர்ந்த பின்னரும் எழுதுகிறார்கள். பிரமிப்பாக உள்ளது.
ஈழத்து அரசியல் பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. ’ஒரு நாடு என்றால் சண்டை. இரு நாடுகள் என்றால் சமாதானம்.’ இதை அரசியல் பெரியவர்கள் 50 வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிந்துபோவது பெரிய விசயமில்லை. சாதாரணமாகிவிட்டது. நான் சுடானில் வேலைசெய்தபோது அது ஒருநாடாக இருந்தது. இன்று இரண்டு நாடுகள். எரித்திரியா என்னும் புது நாடு எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக இயங்குகிறது. சமீபத்தில், 2008 ல் கொசோவோ என்னும் நாடு சேர்பியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகிவிட்டது. ஒரு தேசம் பிரிந்து போவது ஒன்றும் புதுமையானது அல்ல. சில பிரச்சினைகளுக்கு தீர்வு பிரிந்து போவதுதான்.
3) ஹார்வார்ட் தமிழ் இருக்கைப் பணிகளுக்கான நிதி 40 கோடி திரண்டுவிட்டது. இதற்கு நிதி திரட்டும் ஆட்சிக்குழு உறுப்பினர் என்கிற முறையில் அதற்காக உழைத்த அனுபவங்களைக் கூறுங்களேன்.. இன்னும் என்ன பணிகள் பாக்கி இருக்கின்றன? எப்போது அது தொடங்கும்?
பாரி மன்னன் முல்லைக்கு தேர் கொடுத்தான் என்று படித்திருப்பீர்கள். படைவீரன் ஒருவனுக்கு பாரி ஆணையிட்டிருந்தால் அவன் ஒரு மரத்தை கொண்டுவந்து நட்டிருப்பானே. அந்தக் கணம் பாரி சிந்திக்கும் நிலையில் இல்லை. முல்லைக்கொடி அலைக்கழிவதைப் பார்த்து அவர் மனம் துடிதுடித்தது. உடனே தேரை விட்டு இறங்கி நடந்தான்.
மருத்துவர்கள் ஜானகிராமனும், சம்பந்தமும் உணர்ச்சி வேகத்தில் உந்தப்பட்டு செயல்பட்டனர். 382 வருடங்களாக ஹார்வர்டில் தமிழ் அவமதிக்கப்பட்டதை அவர்களால் தாங்க முடியவில்லை. எப்படியும் தமிழ் இருக்கை தொடங்கவேண்டும் என்ற உத்வேகத்தில் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கினார்கள். அவர்கள் பணத்தைக் கொடுத்தபோது நான் அவர்களுடன் அங்கே நின்றேன். அந்த வரலாற்றுக் கணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
முதல் 20 மாதங்கள் எங்களுக்கு பெரும் ஏமாற்றம்தான். நன்கொடைகள் வரவில்லை, ஆனாலும் நாங்கள் முயற்சியை தளர்த்தவில்லை. திடீரென்று ஒரு திருப்பம் ஏற்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளிடம் தொடங்கிய இந்த எழுச்சி உலகம் முழுக்க வியாபித்தது. அமரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா, கொரியா, வியட்நாம், ஜப்பான், பொட்ஸ்வானா என நிதி வரத் தொடங்கியது. 6 மில்லியன் டொலர்கள் இலக்கை அடைந்துவிட்டாலும் தொடர்ந்து நிதி வந்து குவிகிறது. இனி பேராசிரியரை தேடும் வேலை ஆரம்பமாகும். ஹார்வர்ட் இருக்கும்வரை தமிழ் இருக்கை தொடரும்.
4) உலகெங்கும் இருந்து 26 நாடுகளைச் சேர்ந்த 9000 பேர் நிதியுதவி அமைத்து ஒரு தமிழ் இருக்கை அமைகிறது. ஓரிரு நிறுவனங்களே முழுத்தொகையும் பிற மொழிகளின் இருக்கை அமைய அளித்துள்ளன. ஆனால் தமிழுக்கு மட்டும் இந்த ஊர்கூடித் தேர் இழுக்கும் நிகழ்வின் முக்கியத்துவம் என்ன?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு மக்களை உலக ரீதியாக இணைத்தது ஹார்வர்ட் தமிழ் இருக்கைதான் என துணிவுடன் சொல்லமுடியும். சில பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் மதிய உணவுக்காசை, பிறந்தாளுக்கு கிடைத்த பணத்தை அப்படியே தமிழ் இருக்கைக்கு நன்கொடையாகத் தந்தார்கள்.இதை நினைக்கும்போதே நெஞ்சம் உருகுகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதனுடைய 382 வருட வரலாற்றில் இப்படியான ஓர் எழுச்சியை கண்டது கிடையாது. அதை அவர்களே சொல்கிறார்கள். ஒன்றிரண்டு செல்வந்தர்கள் பெருந்தொகை கொடுத்து இருக்கைகள் அமைப்பது பெரிய விசயமில்லை. ஆனால் உலகளாவிய முறையில் ஒரு மொழிபேசும் மக்கள் காட்டிய ஆர்வம் பலரையும் திக்குமுக்காட வைத்திருக்கிறது. பெருமை என்னவென்றால் இந்த இருக்கை உலகத் தமிழர்களுக்குச் சொந்தமானது. ஒரு டொலர் நன்கொடை கொடுத்தாலும் ஒரு மில்லியன் நன்கொடை கொடுத்தாலும் உங்கள் பெயர் ஹார்வர்டில் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும்.
5) சிறுகதைகளில் உருவாகும் வடிவ நேர்த்தியை கட்டுரைகளிலும் நீங்கள் கொண்டுவந்துவிடுகிறீர்கள்… புனைவு எழுதுவது அபுனைவு எழுதுவது இரண்டில் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமானது எது?
சிறுகதைகளோ கட்டுரைகளோ சுவாரஸ்யம் என்பது முக்கியம். ஒரு சிறுகதையை ஆரம்பித்தால் அதன் முடிவுவரை அது வாசகரை இழுத்துபிடித்து வைக்கவேண்டும். அல்லது அந்தச் சிறுகதை தோல்வியடைந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதேதான் கட்டுரைக்கும். ஒருவரும் கட்டுரையை பாதி படித்தால் போதும் என்று எழுதுவதில்லை. முழுவதும் படிக்கவேண்டும் என்றுதான் எழுதுகிறார்கள். ஆகவே அதைச் சுவாரஸ்யம் ஆக்குவது முக்கியம். கடினமான விசயம் என்றாலும் அதைச் சொல்லும் முறையில் சுவையை கூட்டலாம். இப்படியான சொல்முறையை ஆரம்பித்து வைத்தவர் நோர்மன் மெய்லர் என்ற அமெரிக்க எழுத்தாளர். ஒரு முறை அவர் ஓர் உண்மைச் சம்பவத்தை புத்தகமாக எழுதினார். அவருக்கு அபுனைவுப் பிரிவில் பரிசு கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அவருக்கு புனைவுப் பிரிவில் பரிசு வழங்கப்பட்டது. அதிலிருந்துதான் பலரும் கட்டுரையாக இருந்தாலும் அதை சுவையோடு எழுதவேண்டும் என்ற முக்கியத்தை உணர்ந்தார்கள். எனக்கு எழுதப் பிடிப்பது சிறுகதைதான். இதிலே கட்டற்ற கற்பனையை அவிழ்த்துவிடலாம். அந்த இன்பமே தனி.
6) பதினேழு ஆண்டுகளாக அறக்கட்டளை அமைத்து இயல் விருது வழங்கிவருகிறீர்கள்… இவ்விருது பெருமைக்குரிய ஒன்றாக காலப்போக்கில் மாறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த விருது வழங்கல் தொடர்பான சுவாரசியமான அனுபவங்கள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்
17 வருடங்களுக்கு முன்னர் நான் கனடாவுக்கு புலம் பெயர்ந்தபோது ஒரு விசயத்தை கண்டுபிடித்தேன். கனடாவில், தமிழ் படைப்பாளிகளுக்கு சில அமைப்புகள் விருதுகள் வழங்கின. அதுபோலவே இந்தியாவிலும், இலங்கையிலும், அமெரிக்காவிலும், மலேசியாவிலும் அந்தந்த வருடம் வெளியாகும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் உலகளாவிய ரீதியில் தமிழ் படைப்புகளுக்கு பரிசுகளோ பாராட்டுகளோ கிடையாது என்பது வருத்தத்துக்குரிய விசயம். நோபல் பரிசு போலவோ, புக்கர் சர்வதேச விருதுபோலவோ உலகத் தமிழ் பரப்பில் அமையும் விருது தேவை என்று உணர்ந்தேன். சில வருடங்களுக்கு முன் அல்பேனிய மொழியில் எழுதிய இஸ்மாயில் காதருக்கு புக்கர் சர்வதேச விருது கிடைத்தது. அல்பேனிய மொழி பேசுவோர் உலகத்தில் 5 மில்லியன் மக்கள்தான். அப்படியிருந்தும் நல்ல மொழிபெயர்ப்பினால் நூல் உலகக் கவனத்துக்கு வந்து விருதும் பெற்றது. அந்த விருது எழுத்தாளருக்கு கிடைத்த விருது அல்ல அல்பேனிய மொழிக்கு கிடைத்த விருது. சர்வதேசக் கவனத்தை இது கொண்டுவந்தது. தமிழ் இலக்கியத் தோட்டம் இதைத்தான் செய்கிறது. கனடாவின் பிரபல பத்திரிகையான Toronto Star தமிழ் இலக்கியத் தோட்ட விருதை தமிழின் கில்லர் பரிசு என்று பாராட்டியது. எங்கள் நடுவர் குழு உலகளாவிய ஐந்து நபர்களைக் கொண்டது. ஒவ்வொரு வருடமும் புது நடுவர் குழு அமைக்கப்படும். உலகத்தில் எங்கேயிருந்து ஒரு நல்ல தமிழ் படைப்பு வெளிவந்தாலும் அதை எழுதியவரை தேடிப்பிடித்து கௌரவிக்க தமிழ் இலக்கியத்தோட்டம் பெருமுயற்சி எடுக்கும்.
7) சமீபத்தில் கனடா பிரதமர் இந்தியா வந்திருந்தபோது தமிழர்கள் அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்தனர். கனடா தமிழர்களுக்கு அவர் நண்பராக அறியப்பட்டார். கனடாவில் வாழும் தமிழர்கள் முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளனரா?
பிரதமர் ஜஸ்டின் ரூடோ கனடிய தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றே சொல்லலாம். கனடிய நாடாளுமன்றத்தில் 338 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தமிழர், பெயர் கரி ஆனந்தசங்கரி. அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் 11 மாதங்களிலேயே நாடாளுமன்றத்தில் 2016 அக்டோபர் 5ம் தேதி அவர் கொண்டுவந்த தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கனடா நாடு இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடும். இது எத்தனை பெரிய சாதனை. ஜஸ்டின் ரூடோவின் அரசு இதைச் சாதித்தது.
கடந்த ஜூலை மாதம் கனடாவில் தமிழர் தெருவிழா கொண்டாடப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பங்குபற்றினார்கள். கனடிய பிரதமர் ரூடோ வேட்டி சால்வையில் வருகை தந்து விழாவை வாழ்த்தினார்.
எனது வீட்டுக்கு மிகச் சமீபமாக , நாங்கள் விட்டு வந்த நிலத்தை ஞாபகப்படுத்தும் முகமமாக ஒரு வீதிக்கு ‘வன்னி வீதி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கனடிய மையநீரோட்டத்தில் தமிழர்கள் இணைந்து பல துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். இது பெருமைதரும் விடயம்.
8) கனடிய நிலப்பரப்பு புதிதாக ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்திருக்கும். இது தொடர்பாக தங்கள் கேட்ட, பார்த்த, உணர்ந்த அனுபவங்களில் ஓரிரண்டு சொல்ல முடியுமா?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களை தமிழர்கள் கொண்டாடினார்கள். பனிநிலம் மட்டும் பாடப்படவில்லை. அதைப்பற்றி கனடாவில் பாடுகிறார்கள், எழுதுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். இந்த நாடு இயற்கையுடன் இணைந்து எப்படி வாழவேண்டும் என்பதை சொல்லித் தருகிறது. இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது வெளியே பனி கொட்டுகிறது. இந்த நாட்டுக்கு இயற்கையுடன் நெருங்கிய உறவு உண்டு. மிருகங்கள் பறவைகள்கூட சம உரிமையுடன் வாழ்வதைப் பார்க்கலாம். ’பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்’ தத்துவத்தை நேரே காணலாம். ரோட்டிலே வேகமாகப் போகும்போது 900 எடை மூஸ்மான் வீதியை கடக்கும். நூற்றுக்கணக்கான கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பொறுமையாக காத்து நிற்கும். கறுப்பு அணில்கள் வீதியிலே விளையாடும்போது வாகனங்கள் சத்தம் செய்யாது கடக்கவேண்டும். அல்லாவிடில் விதி மீறல் குற்றம்.
கனடா என்றால் ஆதிகுடிகள் மொழியில் ’கிராமம்’ என்று பொருள். ஆதிகுடிகளின் நாட்டை பறித்துக்கொண்டு அவர்களைத் துரத்திவிட்டோம். ஆனால் பெயரை எடுத்துக்கொண்டோம். இன்று ஆதிகுடிகளுக்கு பல நன்மைகள் வழங்கி பிராயச்சித்தம் தேடுகிறது கனடிய அரசு.
9) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தமிழரது தத்துவத்தை நேரடியாக அனுபவப்பட்டு உணர்ந்திருக்கும் எழுத்தாளராக உங்களைக் கருதுகிறோம்… அதுதான் பொதுத்தன்மையாக உங்கள் எழுத்துகளில் பிரதிபலிக்கிறது. அதுவே உங்களைத் தனித்தும் காட்டுகிறது… அதனாலேயே தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் சொத்தாக உங்களைக் கருதுகிறோம். தமிழர் என்ற அடையாளம் இருப்பினும் உலகக் குடிமகனாக தன்னை ஒருவர் உணர்கிற அனுபவத்தைக் கூறுங்கள்?
ஆதியில் தமிழர்கள் பயணம் செய்தார்கள். எகிப்து, சுமேரியா, ரோம், தாய்லாந்து, கம்போடியா என பல இடங்களுக்கும் பயணப்பட்டார்கள். சங்க இலக்கியத்தில் பொருள்தேடி கணவன் புறப்படும் செயல் அடிக்கடி பாடப்பட்டிருக்கும். பயணப்படும் ஒருவன்தான் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாடமுடியும். ‘நாடா கொன்றோ; காடா கொன்றோ’ எனப் பாடினார் அவ்வை மூதாட்டி. ஒரு நாட்டின் மேன்மை மலைகளாலோ, காடுகளினாலோ மற்றும் இயற்கை வளங்களாலோ மேன்மைப் படுவதில்லை. அங்கு வாழும் மக்களினாலேயே அது பாராட்டுப்பெறுகிறது.
தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி ஏ.கே செட்டியார். இவர் பயணப்படாத நாடே இல்லை என்று சொல்லலாம். பயணம் ஒருவரின் பார்வையை விரிவாக்குகிறது. இதயத்தை திறக்கிறது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. அன்புநெறிதான் மனித வாழ்வுக்கு தேவை என்பதை கண்டுபிடித்து எழுதுகிறார்.
அவர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அமெரிக்க தம்பதிகள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார். அவரும் தம்பதிகளுடன் மேசையில் அமர்ந்து உணவருந்தியபோது உணவு முடிந்துவிட்டது. கனவனுக்கும் மனைவிக்கும் தந்தி மொழி தெரியும். கணவர் விரல்களினால் ரகசியமாக மேசையில் மெதுவாக தட்டி ’வேறு உணவு இருக்கிறதா?’ என்று கேட்கிறார். மனைவி அதே முறையில் ’முடிந்துவிட்டது’ என்று பதில் கூறுகிறார். விருந்தாளிக்கும் தந்தி முறை தெரியும். அவர் மெள்ள மேசையில் தட்டினார். ’போதியது சாப்பிட்டேன். நன்றி’. இப்படி மேலான பண்பு உலகம் எங்கணும் நிறைந்திருக்கிறது.
10) 1964-லேயே முதல் சிறுகதைத் தொகுதியான அக்காவை வெளியிட்டுவிட்ட ஒரு எழுத்தாளராகிய நீங்கள், இன்று 2018-ல் தன் முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டு விட்டு உங்களை அணுகும் எழுத்தாளருக்கு என்ன சொல்வீர்கள்?
புது எழுத்தாளர்கள் முதல் தொகுப்புடன் வந்து முன்னுரை கேட்பார்கள். மறுத்தால் அடுத்தநாளே முகநூலில் திட்டி எழுதிவிடுவார்கள். அவர்கள் அப்படியொன்றும் புத்திமதி கேட்பதில்லை. அப்படித் தட்டித்தவறி யாராவது கேட்டால் நான் சொல்வதற்கு ஒன்றிருக்கிறது. ‘எங்கள் பழைய இலக்கியங்களை படியுங்கள். சங்க இலக்கியத்தில் இல்லாத ஒன்றை நீங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப் போவதில்லை. ’அரசனுக்குச் சொந்தமான அச்சம்தரும் யானையை ஆற்றிலே குளிப்பாட்ட அழைத்துச் செல்லும்போது பறை அடித்து எச்சரிக்கை செய்வீர்களே. பேரழகியான இந்தப் பெண் தெருவிலே நடக்கிறாள். ஆபத்தானவள். ஏன் பறையடித்து எச்சரிக்கை செய்யவில்லை?’ கலித்தொகை.
11) இலக்கியமோ தமிழ்சார்ந்த செயல்பாடுகளோ தாயகத்துக்கு வெளியே கனடா தமிழர்கள் தான் இன்று முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேற்குலகில் தமிழர்களைப் பொருத்தவரை கனடா நாடு இன்று முக்கிய வாழிடமாக உள்ளதன் காரணங்களைக் கூற இயலுமா?
தமிழர்கள் கனடா நாட்டுக்கு மிக நன்றியுடன் இருக்கிறார்கள். இங்கே தற்சமயம் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் அகதிகளை உலகம் ஒதுக்கியபோது கனடா நாடு கைநீட்டி வரவேற்றது. 1986ம் ஆண்டு 155 ஈழத்து அகதிகள் பல நாட்கள் கடலில் கப்பலில் தத்தளித்து நின்றபோது அவர்களை மீட்டெடுத்து கனடா வாழ்வு கொடுத்தது. அந்தக் கப்பலில் சாகக் கிடந்த ஒரு குழந்தை இன்று கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இழந்த நாட்டை ஈடுகட்ட இன்னொரு நாடு கிடைத்தது. இழந்த மொழியை கட்டியெழுப்ப கனடா அரசு உதவிசெய்கிறது. கனடிய அரசிடம் இருந்து எனக்கு கடிதம் வருகிறது. ’உங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டியெழுப்ப நிதிவசதி செய்யத் தயாராக இருக்கிறோம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.’ உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா?
12) சொந்தமாக நாடு இல்லாத மொழி அழிந்துவிடும் என்கிற கருத்தை பலமுறை கூறி இருக்கிறீர்கள். இன்று தமிழர்கள் உலகம் முழுக்க வியாபித்து, இணையம், சமூக ஊடகம் என உலகம் வலைப்பின்னலில் இணைந்திருக்கும் சூழலில் இந்த கருத்துக்கு மறுபரிசீலனை உண்டா?
ஒரே உதாரணத்தைதான் திரும்ப திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது. ஐஸ்லாண்ட் என்பது சிறிய நாடு. மக்கள் தொகை மூன்று லட்சம். இந்த நாடு ஐஸ்லாண்டிக் மொழியை வளர்க்கிறது. உலகில் எங்கே ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளிவந்தாலும் அதை உடனேயே ஐஸ்லாண்டிக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட அரசு உதவுகிறது. அந்த நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் இருக்கிறது. கொடி இருக்கிறது. ஐ.நாவில் சம இடம் இருக்கிறது. மைக்ரோசொஃப்ட் , அவர்கள் மொழியை முக்கியமான மொழிப்பட்டியலில் இருந்து நீக்கியபோது ஐஸ்லாண்ட் நாட்டின் தலைவர் பில்கேட்சுடன் வாதாடி ஐஸ்ட்லாண்டிக் மொழியை சேர்க்கவைத்தார். தமிழுக்காக வாதாட யார் இருக்கிறார்கள்? தமிழுக்கு ஒரு நாடு இல்லை. இருந்திருந்தால் ஹார்வார்டில் தமிழ் இருக்கை 100 வருடங்களுக்கு முன்னரே அமைந்திருக்கும். இங்கிலாந்து சேக்ஸ்பியரை பரப்புவதற்கு வருடம்தோறும் லட்சக்கணக்கான பவுண்டுகளை செலவழிக்கிறது. ஐஸ்லாண்ட் என்று ஒரு நாடு இருக்கும்வரை ஐஸ்லாண்டிக் மொழி வாழும். ஒரு நாடு இருந்தால் தமிழ் மொழியின் மதிப்பே தனிதான். அதற்கு உலக மேடையில் உரிய கௌரவம் கிடைக்கும். மேலும் செழித்து வாழும். புகழ் ஓங்கும்.
Hello. remarkable job. I did not imagine this. This is a great story. Thanks!
Hey very cool website!! Man .. Excellent .. Amazing .. I’ll bookmark your website and take the feeds also…I am happy to find a lot of useful info here in the post, we need work out more techniques in this regard, thanks for sharing. . . . . .
You are my breathing in, I have few blogs and very sporadically run out from to post : (.