கோப்பிக் கடவுள்
அ.முத்துலிங்கம்
சில வாரங்களுக்கு முன் ஸ்டார்பக்ஸ் கோப்பிக் கடையில் இரண்டு கறுப்பின வாடிக்கையாளர்கள் போலீசாரினால் கைது செய்யப்பட்டனர். இது நடந்தது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஃபிலெடெல்ஃபியாவில். இந்த விவகாரம் நொடியில் ஆர்ப்பாட்டமாகி கறுப்பின மக்கள் ஒன்று திரண்டு போலீசாரின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து புரட்சி செய்தனர். ஸ்டார்க்பக்ஸ் நிர்வாகம் அநீதிக்கு பொறுப்பேற்று இனிமேல் இப்படி நடக்காது என உத்திரவாதம் அளித்தது. போலீசார் கைது செய்ததை படம்பிடித்த காணொளியை வெளியிட்டபோது அதை இரண்டு கோடி மக்கள் பார்த்தனர். இவை எல்லாம் பத்திரிகைகளில் வந்தன.
இதைப் படித்தபோது சிலமாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு விருந்தினராகப் போன ஒருத்தர் சொன்னது. பத்திரிகையில் வராத செய்தி இது. இன்று உலகம் முழுக்க வியாபித்து ஸ்டார்பக்ஸ் 27,500 கிளைகளைக் கொண்டிருக்கிறது. 240,000 ஊழியர்கள் வேலைசெய்கிறார்கள். இதன் வருமானம் வருடத்துக்கு 22 பில்லியன் டொலர்கள் என்று சொல்கிறார்கள். இதன் முகாமையாளர்களும், முக்கிய அதிகாரிகளும் வருடத்துக்கு ஒருமுறை மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
கொஸ்டாரிக்காவில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகத்தான் விருந்தினர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அங்கேதான் ஸ்டாபக்சுக்கு சொந்தமான பெரிய கோப்பித் தோட்டம் இருந்தது. கோப்பிச் செடிகளை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது போன்ற விசயங்களில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த நிகழ்வில் முக்கியமான அம்சம் என்னவென்றால் அதன் உரிமையாளரும் தலைவரும் நேரில் கலந்து கொள்கிறார் என்பதுதான். பணியாளர்கள் அவரைக் காண்பது மிக மிக அரிது. அவரைச் சந்திப்பது கடவுளை சந்திப்பதற்கு சமம் என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.
அன்று விமானத்தில் சனம் இல்லை. முதல் வகுப்பில் விருந்தினரும், இருபது இருபத்தியொரு வயது மதிக்கக்கூடிய ஓர் இளைஞனும்தான். அவன் சாதாரண உடை அணிந்திருந்தான். நன்றாகத் தோய்த்து சுருக்கம் நீங்காத, முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ். சாயம் போன டீசேர்ட். முதல் வகுப்பில் அவன் பயணிப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இவன் மாணவனா? விடுமுறை நாளாகவும் இல்லை. முதல் வகுப்பில் பயணப்படுவதால் பணக்காரனாக இருக்கவேண்டும். இப்படியெல்லாம் யோசித்தார்.
அந்த இளைஞனுக்கும் ஓர் ஆச்சரியம் இருந்தது. அவன் விருந்தினரைப் பார்த்தான். அவர் கனவான் போல உடையணிந்திருந்தார். முக்கியமான ஒரு சந்திப்புக்கு போகிறார் அல்லது அதை முடித்துவிட்டு திரும்புகிறார் என யூகித்தான். ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பாளராக அவர் பதவி வகிக்கலாம். விமானத்தில் ஏறிய நேரத்திலிருந்து மடிக்கணினியை திறந்து வைத்து அதிலே தட்டச்சு செய்தார். விமானப் பணிப்பெண் ஒவ்வொரு பத்து நிமிடமும் வந்து அவரிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என விசாரித்தாள். அவருடைய கிளாசில் பழரசம் முடியமுன்னர் மீண்டும் நிரப்பினாள். அடிக்கடி அவர் அந்த விமானத்தில் பயணம் செய்பவராக இருக்கவேண்டும்.
ஆனால் இளைஞனை ஆச்சரியப் படுத்தியது அதுவல்ல. அவர் கையிலே பிடித்திருந்த வழுவழுப்பான அட்டையில் கோப்பித் தோட்டப் படம் ஒன்று காணப்பட்டது. அதற்கு மேலே வலது பக்க மூலையில் ஸ்டார்பக்ஸின் சின்னம் கடும் பச்சை நிறத்தில் பொறித்திருந்தது. நீண்ட தலைமுடியில் கிரீடம் வைத்து, கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி நிற்கும் பெண். அவர் நிச்சயமாக ஸ்டார்பக்ஸில் வேலை செய்யும் உயர் அதிகாரியாக இருக்கவேண்டும் என முடிவு செய்தான். சட்டென்று கையை நீட்டி ‘ நான் ரியோ’ என்று தன்னை அறிமுகப் படுத்தினான். விருந்தினரும் கையை குலுக்கியபடி தன் பெயரைச் சொல்லிவிட்டு ரியோவை கூர்ந்து பார்த்தார். சிரித்த முகம். துணிச்சலான கண்கள். எவரையும் முதல் பார்வையிலேயே வசீகரித்துவிடும் முகம். அவனுக்குள் வார்த்தைகள் தோன்றி வெளியே வரத் துடித்துக் கொண்டிருப்பது உதடுகளில் தெரிந்தது.
‘நீங்கள் ஸ்டார்பக்ஸில் வேலைசெய்யும் அதிகாரியா?’ என்றான். அவன் குரலில் இருந்த மகிழ்ச்சி அவன் ஏதோ ஒரு பெரிய கண்டுபிடிப்பை செய்துவிட்டது போல இருந்தது. அவர் சிரித்தார். ‘ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’ ‘ஓ, நீங்கள் கையிலே பிடித்திருக்கும் அட்டையில் ஸ்டார்பக்ஸின் சின்னம் உள்ளது. ஓர் ஊகம்தான்’ என்றான். ‘ அப்படியெல்லாம் இல்லை. ஸ்டார்பக்ஸ் நடாத்தும் வருடாந்த நிகழ்வில் கலந்து கொள்ளப் போகிறேன்.’ அப்பொழுதுகூட தான் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டதை அவர் கூறவில்லை. ‘எங்கே விழா நடக்கிறது?’ ‘ கொஸ்டரிக்காதான். அங்கேதான் இந்த விமானத்தில் போய்க்கொண்டிருக்கிறேன்.’
‘என்ன? என்ன? கொஸ்டரிக்காவா? அங்கேயா இந்த விமானம் பறந்து கொண்டிருக்கிறது?’ பளிச்சென்று பளிங்குபோல வெள்ளையாக இருந்த அவன் முகம் அழுகிய வாழைப்பழம்போல கறுப்பாக மாறிவிட்டது. ’இது கலிஃபோர்னியாவிலுள்ள சான்ஹுசேக்கு அல்லவா போகிறது?’ சிறிது நேரம் யோசித்துவிட்டு, தன் பாக்கெட்டை துளாவி போர்டிங் அட்டையை உருவிச் சோதித்தான். பின்னர் சட்டென்று மௌனமாகி ஸ்டார்பக்ஸ் சின்னத்து பெண்போல இரண்டு கைகளையும் மேலே தூக்கி தலையைக் குனிந்து முழங்கால்களைப் பார்த்தான். அவனுக்கு தான் விட்ட பிழை நினைவுக்கு வந்தது.
ரியோவின் தகப்பன் பல வருடங்களாக அமெரிக்க விமானச் சேவையில் பணிபுரிகிறார். அந்தக் காரணத்தினால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இலவச விமானப் பயணச் சலுகை உண்டு. ரியோ இந்தச் சலுகையை அடிக்கடி பயன்படுத்துவான். ஒரேயொரு பிரச்சினைதான். விமானம் புறப்படுவதற்கு சில மணிநேரம் முன்னே கம்புயூட்டரில் சென்று எந்த எந்த விமானம் எங்கேயிருந்து எங்கே போகிறது. ஏதாவது இடம் காலியாக இருக்கிறதா என்று பார்த்து தன் இருக்கையை பதிவு செய்யவேண்டும். அப்படி பல நகரங்களுக்கு பயணித்திருக்கிறான். திரும்பும்போதும் காலியான விமானம் ஒன்றை பிடித்து திரும்பிவிடுவான். இது அவனுக்கு ஒரு விளையாட்டு மாதிரித்தான். இம்முறை ஒரு தவறு நடந்துவிட்டது. அவன் பதிவு செய்யும்போது கொஸ்டரிக்காவில் உள்ள சான்யுவானுக்கு போகும் விமானத்தில் பதிவு செய்துவிட்டான். ஓர் எழுத்துதான் வித்தியாசம். அவசரத்தில் அவன் தன் போர்டிங் அட்டையைக்கூட சரியாகக் கவனிக்கவில்லை.
விருந்தினர் அவன் சொன்னது முழுவதையும் பரிவுடன் கேட்டர். பின்னர் ’என்ன தயக்கம்? அடுத்த பிளேன் பிடித்து திரும்ப வேண்டியதுதானே?’ என்றார். ’ஆமாம், அப்படித்தான் செய்ய வேண்டும். என் நண்பர் அங்கே சான்ஹுசே விமான நிலயத்தில் எனக்காகக் காத்து நிற்பார். விமானம் தரை இறங்கியதும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுவேன். பெரிய நட்டம் ஒன்றுமில்லை.’ ஒருவாறு இளைஞன் தன்னையே தேற்றிக்கொண்டான்.
‘அது சரி. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மாணவரா அல்லது எங்காவது வேலை பார்க்கிறீர்களா?’
‘இரண்டும்தான். நான் நாலு வருடமாக ஸ்டார்பக்சில் வேலை செய்கிறேன். இப்பொழுது எனக்கு பாரிஸ்டாவாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். ஸ்டார்பக்சில் பச்சை நிற கவுண் போட்ட ஊழியர்கள் சாதாரணர். நான் மேற்பார்வையாளர், கறுப்பு மேலுடை அணிந்திருப்பேன்’ என்றான். ‘மாணவன் என்று சொன்னீர்களே?’ ’அதுவும் உண்மைதான். ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மேல்படிப்பு படிக்க விருப்பமானவர்களை ஊக்குவிக்கிறது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் கற்பதற்கு எனக்கு வசதி செய்து தந்திருக்கிறார் ஸ்டார்பக்ஸ் தலைவர். அவர் எங்களுக்கு கடவுள்மாதிரி. நான் அவரைச் சந்தித்தது கிடையாது’ என்றான் ஏக்கத்துடன்.
‘ஸ்டார்பக்ஸ் என்ற பெயரை உங்கள் நிறுவனம் எப்படி தேர்வு செய்தது? உங்களுக்கு தெரியுமா?’ இளைஞன் சொன்னான் ‘அது ஒன்றும் ரகசியம் இல்லை. மோபி டிக் நாவலில் வரும் ஒரு மாலுமியின் பெயர்.’ ‘ஓ, அது எனக்கு தெரியும். எப்படி அந்தப் பெயரை மட்டும் தேர்வு செய்தார்கள். கப்பல் தலைவனின் பெயரை தேர்வு செய்யவில்லையே?‘ ரியோ சொன்னான், ‘சமீபத்தில்தான் இணையத்தில் படித்தேன். St என்று தொடங்கும் எந்தப் பெயரும் அழகாக இருப்பதுடன் அந்தச் சத்தமே ஒரு வலிமையின் குறியீடாக இருக்கும். இதை ஆரம்பித்தவர்கள் முதல் இரண்டு எழுத்துகளை தீர்மானித்த பின்னர் பெயர்களைத் தேடி எடுத்தார்களாம்.’
’அப்படியா! இது நல்ல தகவல். இந்த நிறுவனத்தை தொடங்கியவர்கள் எத்தனை ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்கள்! அது சரி, தலைவரை சந்திக்க முடியாது என்று சொன்னீர்களே. சந்தித்தால் என்ன செய்வீர்கள்?’ ’செய்வீர்களா? என் மீதி ஆயுளை வாழ்வதில் அர்த்தமில்லை. வாழ்நாள் பயனை அடைந்துவிடுவேன்.’ ‘உங்களுக்கு தலைவரைச் சந்திக்க விருப்பமா?’ ’உண்மையாகவா?’ ’உண்மையாகத்தான். விமான நிலையத்திலிருந்து நேராக விழாவுக்குத்தான் போகிறேன். எனக்கு கார் அனுப்பியிருப்பார்கள். நீங்களும் என்னுடன் வரலாம். சந்திப்பு முடிந்த பின்னர் இன்று இரவே நீங்கள் விமானம் பிடித்து திரும்பிவிடலாம்.’ ’கனவுபோல இருக்கிறதே. என்னிடம் நல்ல மாற்று உடுப்புக்கூடக் கிடையாதே.’ ’அதனாலென்ன? என்னிடம் கூடத்தான் மாற்று உடுப்பு இல்லை. உங்கள் உடை நல்லாகத்தானே இருக்கிறது. உங்களுக்கு ஆச்சரியம் தருவதுபோல உங்கள் தலைவருக்கும் ஓர் ஆச்சரியம் கிட்டலாம் அல்லவா?’
ரியோ விருந்தினரைப் பார்த்துச் சொன்னான். ’என்னுடைய அம்மா நான் சிறுவயதாக இருந்தபோது சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. சிலவேளை தவறான ரயில் பிடித்து சரியான இடத்துக்குப் போய்ச் சேரலாம். பாருங்கள், தவறான பிளேன் பிடித்து இங்கே வந்தேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் நடக்க இருக்கிறது. எல்லாமே எப்பொழுதோ எழுதப்பட்டுவிட்டது, இல்லையா?’ என்றான். அவன் முகம் முழுக்க பரவசமாக மாற்றம் கொண்டிருந்தது.
விருந்தினருக்கு ஒரு நீண்ட கறுப்பு நிற பளபளக்கும் கார் விமான நிலையத்தில் காத்திருந்தது. அவருடன் ரியோவும் விழாவுக்கு போனான். ஸ்டார்பக்ஸ் தலைவர் பெருந்தன்மையாக ’அவன் யார், ஏன் வந்திருக்கிறான்’ போன்ற கேள்விகள் ஒன்றையும் எழுப்பவில்லை. விழா சிறப்பாக நடந்தது. வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் வெவ்வேறு நாடுகளின் பொறுப்பாளர்கள். விழா முடிவுக்கு வரும் சமயத்தில் இளைஞனை அறிமுகம் செய்ததோடு அவனைப் பற்றிய பற்றிய விவரங்களையும் விருந்தினர் தலைவருக்கு சொன்னார். அவர் வியப்பு மேலிட அவனைப் பார்த்தார். ரியோவின் தலைக்குள் இருதயம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தலைவர் ’மகிழ்ச்சி, மகிழ்ச்சி’ என்று இரண்டு தரம் சொல்லி அவன் பக்கம் தன் கையை நீட்டினார். பட்டுப்போல காற்றிலே அசையும் மெல்லிய துணியிலே தைத்த மடிப்புக் கலையாத ஆடையில் அவர் கம்பீரமாகக் காட்சியளித்தார். ரியோ அவசரமாக வலது கையில் இருந்த காப்பிக் கோப்பையை இடது கையுக்கு மாற்றிவிட்டு கையை நீட்டினான். எத்தனை முயன்றும் முகத்தில் இருந்த பதற்றத்தை அவனால் அகற்ற முடியவில்லை. கை நடுங்கியது. ஒரு துளி கோப்பி அவருடைய வெள்ளை உடுப்பில் தெறித்து கறுப்பு வட்டமாக மாறியது.
ரியோ நடுங்கிவிட்டான். ‘ஓ மன்னியுங்கள், மன்னியுங்கள்’ என்று கத்தினான். ‘இதில் என்ன? பல தடவை நடந்திருக்கிறது. உலகத்துக்கு கோப்பியை உற்பத்தி செய்வதிலும் பார்க்க அதை உடையில் கொட்டுவதில்தானே என் சாமர்த்தியத்தை இதுவரை காட்டி வந்திருக்கிறேன்’ என்றார் கடவுள்.
END