மோசமான விடைபெறுதல்

மோசமான விடைபெறுதல்

    லாரி டேவிட்

[சமீபத்தில் இந்தக் குறிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இது நேரடியான வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு அல்ல. தழுவல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எழுத்து எழுத்து என்று சொல்கிறோமே. இதுதான் எழுத்து. இலக்கியம் என்றும் சொல்லலாம். – அ.முத்துலிங்கம் ]

1942ம் ஆண்டு, ஜூன் 25. நான் போருக்குப் புறப்பட்ட நாள். உயர்நிலை பள்ளியில் படித்த காலத்திலிருந்து காதலித்து வந்த என் உயிர் கண்மணி அலிஸ் என்னை காரில் ஏற்றி ரயில் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றாள். அவளிடமிருந்து விடைபெறுவதுதான் என் நோக்கம். நாங்கள் ஆழமான காதலில் சிக்குப்பட்டு இருந்ததால் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவது என்பதை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

அலிஸ் காரை நிறுத்தியதும் நாங்கள் இறங்கி ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மௌனமாக ஸ்டேசனுக்குள் நுழைந்து நான் ரயில் ஏறவேண்டிய நடைமேடைக்கு  வந்து சேர்ந்தோம். எங்களுடைய இதயங்கள் வெடிப்பதற்கு தயாராக இருந்தன. ஒருவரை ஒருவர் ஆழமாக உற்று நோக்கினோம். பின்னர் அவள் பேசினாள். அந்தச் சம்பாசணையை என்னால் இன்றுகூட வார்த்தைக்கு வார்த்தை நினைவுக்கு கொண்டுவரமுடியும்.

‘சத்தியம் செய்துகொடு, நீ என்னிடம் திரும்ப வருவாய் என்று.’

‘சத்தியம்.’

‘நீ எனக்கு எழுதுவாய் என்று சத்தியம் செய்துகொடு.’

‘அதிலென்ன சந்தேகம். நான் எழுதுவேன்.’

‘ஒவ்வொரு நாளும்.‘

‘ஒவ்வொரு நாளுமா? ம் ம் நிச்சயம்  முயற்சி செய்வேன். உனக்குத் தெரியும்தானே நான் யுத்த முனையில்  மும்முரமாக இருப்பேன். நிச்சயமாக நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.’

‘என் சிநேகிதிக்கு பிரட் ஒவ்வொரு நாளும் எழுதுகிறானே.’

‘அப்படியா? அவன் ராணுவத்தில் பெரிய அதிகாரிக்கு உதவியாளன். அவனுக்கு ஒரு மேசை இருக்கிறது. நானோ போர்முனையில் இருப்பேன். எனக்கும் ஓர் அலுவலகத்தில் மேசை இருந்தால் நான் நாளுக்கு மூன்று கடிதங்கள் எழுதுவேன். இப்ப இதைப்பற்றி பேசும்போதுதான் யோசிக்கிறேன்.  எனக்கு கடிதம் எழுதுவதற்கு எங்கேயிருந்து இத்தனை பேப்பர் கிடைக்கும். என்னுடைய முதுகுப்பையில் ஒரு கட்டு பேப்பரை காவிக்கொண்டு என்னால் எப்படி நடக்கமுடியும்? இப்பொழுதே என் முதுகுப்பை தூக்க முடியாத அளவுக்கு பாரமாக இருக்கிறது. நான் தோட்டாக்களையும், நித்திரைப்பையையும், தண்ணீர் குடுவையையும் காவவேண்டும். இவற்றோடு ஒரு கட்டுப் பேப்பரையும் என்னால் சுமக்க முடியுமோ தெரியாது.’

’நான் பேப்பர் கட்டை காவச் சொல்கிறேனா? ஒரு சில வெறும் பேப்பருக்குகூட நான் தகுதியானவள் இல்லையா?’

’ஒரு சில வெறும் பேப்பருக்கு நிச்சயம் தகுதியானவள்தான். நீ எல்லாவற்றையும் தவறாக விளங்கிக் கொள்கிறாய். அது நல்ல கேள்விதான். இதை நான் அடியாழத்துக்குப்போய் ஆராயவேண்டும் என தீர்மானித்துவிட்டேன்.’ யன்னல் கண்ணாடியில் தெரிந்த என்னுடைய ராணுவச் சீருடை  பிம்பம் பார்ப்பதற்கு கம்பீரமாகத்தான் இருந்தது. 

’ஒரு பேனையாவது உன்னுடைய முதுகுப்பையில் இருக்கிறதா?’

’பேனை இருக்கிறது. நான் பொய் சொல்லக்கூடாது. எழுதும்போது இடைக்கிடை மை காய்ந்துவிடுகிறது. முதல் கடிதம் எழுதும்போதே மை முடிந்துபோகக்கூடிய சாத்தியம் இருக்கிறது.’

’சரி, இன்னொரு பேனை எடுத்துக்கொள். பல பேனைகள் கொண்டு போனாலும் நல்லதுதான்.’

‘நிச்சயமில்லை. போர்முனையில் பேனைகள் விற்பார்களா? சொல்வதற்கில்லை. உனக்கு தெரியும்தானே. எனக்கும் பேனைகளுக்குமான உறவு பற்றி. என்னுடைய சட்டையிலிருந்து அவை விழுந்தபடியே இருக்கும். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் ராணுவ கால்சட்டை பக்கெட்டுகள் உறுதியானவை. அவைக்கு சிப் கூட இருக்கலாம்.’

இப்படிச் சொல்லிக்கொண்டே வட்டமான இனிப்பை விடைபெறும் முத்தத்துக்கு தயார்செய்யும் விதமாக வாய்க்குள் எறிந்தேன். அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள்.

’இது என்ன பார்வை? ராணுவ கால்சட்டைக்கு சிப் இருப்பது நல்லது என்று நீ நினைக்கவில்லையா?’

‘உனக்கு எழுத விருப்பமே இல்லை என்பது தெரிகிறது.’

‘அலிஸ், நான் போர்களத்துக்கு போனவுடன் இதுபற்றி தீவிரமாகச் சிந்திப்பேன். எனக்கும் எழுத ஆர்வம்தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால்….’

‘எனக்குத் தெரியும். பேப்பரும், பேனையும்.’

‘சரி, அத்துடன் கால நேரம். நான் பகல் முழுக்க போர் முனையில் எதிரிகளை கொன்று குவித்துக் கொண்டே இருக்கலாம். எதிரிகளின் துப்பாக்கி என்னை நோக்கிச் சுடலாம். என்னுடைய சக ராணுவத்தினரையும் நான் காப்பாற்ற வேண்டி நேரலாம். தண்ணீர் குடுவையில் உள்ள தண்ணீர் முடிந்து போகலாம்.’

’நாள் முடிவில் நான் கூடாரத்துக்கு களைத்துப்போய், ஊத்தையாகத் திரும்பும்போது என் முதல் எண்ணம், நான் உண்மையாகச் சொல்கிறேன், ஆறுதலாக அமர்ந்து தகரடப்பாவில் வரும் உணவைச் சாப்பிட்டு ஓய்வெடுப்பதாகத்தான் இருக்கும்.’

‘தகர டப்பா உணவு என்றால் என்னவென்று எனக்குத் தெரியும்.’

’தகரடப்பா உணவுக்குப் பின்னர் ஒரு குளியல் பற்றி சிந்திக்கவேண்டி இருக்கும். நான் உடம்பை தூய்மையாக வைத்திருப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். இதுவெல்லாம் முடிந்த பின்னர் என் கையில் பேப்பரும், பென்சிலும் கிடைத்தால் நிச்சயம் எழுதுவேன். ஆனால் அநேகமாக அப்போது இருட்டாக இருக்கும். நான் என்ன செய்வேனென்றால் ஒரு கையால் ரோர்ச் வெளிச்சத்தை  அடித்துக்கொண்டு மற்றக் கையினால்  பேனையை பிடித்து எழுதுவேன். உனக்குத் தெரியும், அது எத்தனை கடினமான காரியம் என்று. ஆனால் அன்று காற்றடிக்குமானால் அதுகூடச் செய்ய முடியாது.’

‘ஓகே. போதும்.போதும். என்ன தெரியுமா? நீ எனக்கு எழுதவே வேண்டாம்.’

நான் ரயிலில் ஏறியாகவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. ஆனால் இப்படி மனக்குழப்பத்துடன் விடைபெற  எனக்கு விருப்பமில்லை. தயங்கினேன்.

‘கடவுளே!  நீ உண்மையில் விசயங்களை திருப்பிவிடுகிறாய். என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய உயிரையே என் தாய்நாட்டுக்காக தியாகம் செய்ய நான் முன்வந்திருக்கிறேன். நீ என்னவென்றால் எல்லாத்தையும் பின்தள்ளிவிட்டு எப்படியாவது ஒரு பேப்பரும் பேனையும் சம்பாதித்து உனக்கு நான் ஒரு நீண்ட கடிதம் எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறாய். எனக்கு ஏதோ பள்ளிக்கூட வாத்தியார் வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி கட்டளையிட்டது போல இருக்கிறது. நான் என்ன சேக்ஸ்பியரா? யாராவது ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதவேண்டும் என்றால் அது நீதான். உனக்கு நேரம் இருக்கிறது. ஒரு மேசையும் இருக்கிறது.’

என்னுடைய பையை தூக்கினேன். ’சரி, நான் புறப்படவேண்டும்.’  பிரிவு முத்தத்திற்காக தலையை குனிந்தேன். பாம்பு கொத்த வந்ததுபோல அவள் பின்னால் தலையை இழுத்தாள். சற்றும் எதிர்பாராத இந்த நடவடிக்கையால் நசுங்கிப்போய் தலையை ஆட்டிவிட்டு ரயிலுக்குள் ஏறினேன். உள்ளே உட்கார்ந்தபின் வெளியே தலையை நீட்டினேன்.

‘அலிஸ், இப்படியா நீ விடை கொடுப்பது?’

‘நான் உண்மையை சொல்கிறேன். எனக்கு நீ கடிதம் எழுதவே வேண்டாம்.’

‘ஓ, அப்படிச் சொல்லாதே!’

‘இதோ உன்னுடைய மோதிரம். எனக்கு இது வேண்டாம்.’

என் நெற்றியில் பள்ளம் உண்டாகும்படி அதை வீசி எறிந்தாள். நான் வட ஆப்பிரிக்காவுக்கு போய்ச் சேரும் வரை அந்த அடையாளம் நெற்றியில் மறையவே இல்லை.

ரயில் புறப்பட்டபோது நான் மறுபடியும் மன்றாடினேன். ‘அலிஸ், தயவுசெய்.’ அவள் அசையாமல் நின்றாள். ‘போய் வா.’

‘ஓகே, ஓகே அலிஸ் நான் எழுதுகிறேன்.’ ரயில் சத்தத்தை மீறிக் கூவினேன்.  ’நிச்சயம் எனக்கு யாராவது சில தாள்களும் ஒரு பேனையும் கடன் கொடுப்பார்கள்.’

‘உன் புஜத்தில் ஒரு துப்பாக்கி குண்டு பாயட்டும். அப்பொழுது உனக்கு எழுதவேண்டிய அவசியமே இராது.’ இப்படிச் சொன்னவாறே அவள் சட்டென்று திரும்பி நடந்தாள். நான் மறுபடியும் அவளை என் வாழ்நாளில் பார்க்கவே இல்லை.

கடைசியில் நான் பேப்பரைப் பற்றியும், பேனையைப் பற்றியும் சொன்னது அத்தனையும் உண்மையானது.  யுத்தமுனையில் போராடியவர்கள் எல்லாம் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று முறையிட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த பேப்பரும் கசங்கி சுருண்டுபோய் விட்டது. பேனை ஒன்றை கண்ணாலே காணவே முடியாது. அவை திருட்டுப் போய்க்கொண்டே இருந்தன. தபால் தலைபற்றி சொல்லவே தேவையில்லை.

தனிமையான ஓர் இரவில்  நான் ஒரு கையால் ரோர்ச் வெளிச்சத்தை அடித்தபடி மறுகையால் அலிசுக்கு கடிதம் எழுதினேன். அது பெரிய துயரகரமான சம்பவத்தை விளைவித்தது. ரோர்ச் வெளிச்சம் ஜேர்மன் படையினருக்கு எங்கள் ரகஸ்ய இருப்பிடத்தை காட்டிக் கொடுத்துவிட்டது. என்னுடைய படைத் தலைவரும், நான் யாருடைய பையிலிருந்து பேப்பரை திருடினேனோ அவரும், துப்பாக்கி சூட்டில் இறந்து போயினர். எனக்கு புஜத்தில் குண்டுக் காயம் பட்டு துப்பாக்கி தூக்குவது இயலாத காரியம் ஆகிவிட்டது. பேனையை தூக்குவது பற்றி பேசவே வேண்டாம்.

END

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta